பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 64 / 102

ஒரு கோடி வாழ்த்துக் கூறிடுவோம்!

அச்சுப் பக்கம் 311–315 · ஸ்கேன் 323327 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 325

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒரு கோடி வாழ்த்துக் கூறிடுவோம்!

உளங்கவர் கலைக் காஞ்சியினைத் தலைநகராய்க் கொண்டு
உயர்ந்தோர் புகழ்த் தொண்டைமான் இளந்திரையன்
ஆண்டபோது;
அரும்பாரத் தமிழில் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பெரும்பாணாற்றுப்படை நூலை அவனுக்குப் படைத்து
மகிழ்ந்தார்!

கரிகால்வளவன் மீது பட்டினப்பாலை பாடியதால் - அதற்குப்
பரிசிலாகப் பதினாறு நூறாயிரம் பொன்பெற்றவர் இவரேதான்!
பத்துப்பாட்டில் இடம்பெறும் இவ்விரு பாடல் தொகுப்புகளும்
பழந்தமிழர் பண்பாடு வாழ்க்கைமுறை அனைத்தும் சொல்லி -
மனத்தை
ஆற்றுப்படுத்தி வழிகாட்டி இன்னார்பால் சென்றால் - நீவிர்
போற்றத்தகும் பரிசில்பெற்று இன்பம்பெறலாம் என்றுரைத்து;
ஊற்றுப்பெருக்கனைய உலகூட்டும் நல்லோரை வல்லோரை - அவர்
வீற்றிருந்து வாழ்கின்ற ஆள்கின்ற நிலப்பகுதிப் பெருவளத்தை;

- கனிச்

சாற்றுத் தமிழ்க் கவியாலே பாடிக் காணிக்கையாக்குதலே
ஆற்றுப்படை என ஆகுமென்பார் ஆன்றோர், சான்றோர்!

கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்

படையோ

காஞ்சிநகராண்ட கலைக்காவலன் தொண்டைமானின் ஊர்ச்சிறப்பும்,
மிடியிலார் ஆடவர்; மெல்லியலாரும் அவ்வாறே எனும்
பெருஞ் சிறப்பும்,
குடிப்பெருமை கூறுகின்ற தமிழ்க்குலச்சிறப்பும் கொண்டதோர்
புதையலாகும்!

ஆயமகள் ஒருத்தி ஆதவனுக்கு முன்னெழுந்து - மனையில்
அழகுறவே அலுவல்களை அயர்வின்றி ஆற்றும் பாங்கும்;
அதன்பின்னர் குடும்பத்தை நடத்தும் நலமும் - இல்லந்தேடி
அன்புடனே நாடி வரும் விருந்தினரை வரவேற்று வணங்கும்
பண்பும்;
அஃதன்றி அரிய உழைப்பாலே கிடைத்திடும் ஆதாயப்
பொருள்கொண்டு
அணிமணிகள் வாங்கிப் பூட்டிக்கொள்ள ஆசை
கொண்டலையாமல் கையில்
எஞ்சி நிற்கும் பொருள்தன்னைப் பொன்னாக்கிப் போட
விரும்பாமல்
எருமைகள் பசுக்கள் என மேலும் ஏராளம் வாங்கிக் குவித்து;
பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் என வாணிபத்தைப்
பல்கிப் பெருக்கிடும் பழக்கமும் உண்டாம் பழையநாள்
தமிழகத்தில் என்று;
கடியலூர் உருத்திரங் கண்ணனார் கருத்தாக விளக்கிச் சொல்லி
நமக்கு,
கணக்காக வளர்ச்சித் திட்டங்களுக்கான வழிகாட்டி
இருக்கின்றார்!

இதோ; அது:

“பாணர்காள்! பாணர்காள்! நான் பகர்வது
கேண்மின்; இவ்வூரில்,
பாவையொருத்தி விடியற்பறவை எழுவதற்கு முன்பே;
பகலவன் ஒளிக்கரம் படாமலே எழுந்துகொள்வாள்!
பவளம் போல் சிவந்த உதட்டுக்காரி; பார்ப்பதற்குப்
படு கவர்ச்சிக்காரி!
பண்புநலன் பரந்திருக்கும் முகமும், பரிவுடனே
விருந்தோம்பும் அகமும்
மங்கையவள்!
மண்பெருமை காக்கின்ற மாண்பும் கொண்ட
குடைக்காளான் போல் குவிந்து விரிந்துள்ள மத்து
கொண்டு
குமுறும் புலியோசையெழுமாறு கயிற்றால் கடைந்து;
தயிரை மோராக்கி வெண்ணெயினை நெய்யாய் மாற்றி
தலையினிலே சும்மாடு கட்டித் தூக்கிவைத்துக்கொண்டு;

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

மூங்கிலனைய தோளும் சிறு குழை அசையும் செவியும்
விளங்க
“மோரோ மோர்!” என்று தெருவில் விற்றுச் சேர்ந்த
பொருளில்
உணவுக்கான நெல்லும் பிறவும் சந்தையில் வாங்கி
உற்றார் களிக்க அவள் விருந்து வைப்பாள்!
வெண்ணெயும் நெய்யும் விற்ற விலைக்கு - அவளோ;
பொன்னையும் மணியையும் விரும்பி வாங்காமல்,
செய்தொழில் சிறப்புற்றோங்கிட மேலும்
சில எருமைகள் பசுக்கள் அவற்றின் கன்றுகள்
வாங்குவாள்!

அவள் மனை நாடி அருமைப் பாணர்காள்; நீவிர்
செல்வீராயின்;
அட்டியின்றி அவள் சமைத்துப் போடும் பசிய
தினைச்சோறு;
நண்டுகளின் வயிற்றில் உள்ள குஞ்சுகள்போல் தோன்றும் - அவள்
மொண்டு ஊற்றும் பாலுடனே அதனைப் பருகலாம்”
என்றார்!

ஒரு
காளானின் குடைபோலக் குவிந்த மத்துகொண்டு
கடைகின்றாளாம் கட்டித்தயிரை! கவிஞர் கூறுகின்றார்!
கடையும்போது கயிற்றால் எழுகின்ற ஒலியோ - ஒரு
காட்டில் உறுமுகின்ற புலிபோல முழங்கிடுமாம்!
பாணர்க்கு விருந்திடப் பாலுடன் கலந்துதரும் தினையோ
பார்ப்பதற்கு நண்டுவயிற்றுச் சினைக்குஞ்சுகள்போல்
தோன்றிடுமாம்!

உருத்திரங் கண்ணனார் கற்பனைக்கும் தமிழுக்கும்
ஒருகோடி வாழ்த்துக் கூறினும் அது போதாதன்றோ?

“நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை அன்ன கூம்பு முகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல் வரும் காதிற் பணைத்தோட்
குறுநெறிக்கொண்ட கூந்தலாய் மகள்
அளைவிலை உணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்”

மூல மேற்கோள்(பெரும்பாணாற்றுப்படை:
(155 முதல் 168 முடிய)
பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்)

பொருள் விளக்கம் :

ஆம்பி = குடைக்காளான். பூஞ்சுமட்டு = மெல்லிய சும்மாடு.
குழிசி = பானை. அளை = தயிர், மோர். கிளை = சுற்றம்.
அருத்தி = உண்ணச்செய்து. நல்லான் = நல்ல பசு.
நாகு = கன்று. ஞெண்டு = நண்டு. பார்ப்பு = குஞ்சு.
மூரல் = சோறு.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்