பகுதி 63 / 102
கள் உண்ட கடுவன்!
அச்சுப் பக்கம் 306–310 · ஸ்கேன் 318–322 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 319
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
கள் உண்ட கடுவன்!
கடுவன் என்றால் ஆண்குரங்காம்;
மந்தி எனிலோ பெண்குரங்காம்!
கடுவன் ஒருநாள், கற்பாறைச் சுனையருகே
கள்ள மதுவருந்திக் கண்ணுறங்கும்போது,
கபிலர்; அவ்வழி வந்தவர் கண்ணில் பட்டதாம்!
“ஆண்குரங்கா? மதுவருந்தியா? அதுவும்
அரசின் அனுமதியில்லாத் திருட்டு மதுவா?
இக்கணமே அதனை இழுத்துச் சென்று
இடுக சிறையில்!” எனச் சீறுகின்ற
சட்டம் எதனையும் அரசு இயற்றி - அதனைத் தன்
இட்டம் போல் வளைத்துக் கொள்ளும் காலமல்ல அது!
இருப்பினும் கபிலருக்கோர் ஆசை;
இக் கடுவன் எங்கிருந்து திருடியது மதுவை
என அறிவதற்கு ஆவலுற்றார்!
எழுப்பிக் கடுவனையே கேட்டுவிடலாமா என
எண்ணினார் எனினும் அஃதியலவில்லை!
ஏனெனில் அப்பொல்லாக் கடுவன்;
எண்ணிறந்த நாட்கள் அங்கே
பொன்னிற மலர்கள் உதிர்ந்துதிர்ந்து
கண்கவர் வண்ணம் உயர்ந்திருந்த
கவினுறு பூ மெத்தை யொன்றில்
உலகம் ஒன்றிருப்பதையே மறந்துவிட்டு
உடல் கிடத்தி மயங்கிப்போய் உறங்கியதாம்!
சலசலக்கும் அருவியோரம் மலைமீது
சந்தன மரக் கிளைகளிலே கடுவனும் மந்தியும்
‘சடுகுடு’ ஆட்டம் போட்டுப் பின்னர்
சங்கமித்தல் கண்டுள்ளார் - இன்றோ;
மந்தியும் கடுவனும் தாவிக் கொஞ்சி
அந்தி சாயும் நேரத்தில் போடும் ஆட்டம்
மறந்தது ஏனென்று வியந்து பார்த்தார்!
காலை முதல் கடுவனும் மந்தியும்
காடெல்லாம் காதல் புரிந்தலைந்து
[Full-page illustration; no printed literary text.]
மாலையிலே களைப்பு போக்க
மந்தியைத் தனிவிடுத்துக் கடுவன் மட்டும்
மயக்கத்தில் ஓய்வு கொள்ள
மருந்தொன்றைத் தேடிப்பிடித்து
மலைமீது குவிந்திருந்த மலர்மிசையில்
மல்லாந்து தூங்கியதாய்க் கருதிக் கொண்டார்!
மந்திக்குக் கடுவன் மதுவருந்தும் சேதி தெரிந்தால்
நிந்தித்துத் தன்னருகே அதனை நெருங்காதே எனத் தடுக்கும்!
அறிவுரைகள் கூறி அறவழி தவறாமல் நடப்பதற்கு
அடிக்கடி வற்புறுத்தி அதனாலே ஊடல் கொள்ளுகின்ற
மனைவிக்கு அஞ்சுகின்ற கணவனாக இருந்ததாலே
மந்திக்குத் தெரியாமல் கடுவன் மதுவருந்திக் கிடந்ததங்கே!
கடுவன் மதிமயங்கிக் கிடந்திட்ட காரணத்தைக்
கபிலர் கற்பனையால் ஊகித்தார் எனினும்,
காரூரும் வானம் சுழல்வது போலும்
நீரூரும் நில முழுதும் பறப்பது போலும்
தேரூர்ந்து வருகின்ற தென்றலென வந்து - நினைவின்
வேரூர்ந்து தடுமாறச் செய்கின்ற ‘தேறல்’தனை
கடுவனுக்குக் காய்ச்சிக் கொடுத்துக்
காசினியை மறக்கச் செய்ததுதான் யாரோ - இந்தக்
கடும் போதை ஏறுதற்குப் பயன்பட்டக்
கனிவகை, மரப்பட்டை எதுவோ எனக் கபிலர் திகைத்தார்!
கால் வலிக்க நின்று கடுவனின் ஆராய்ச்சியிலே
கனத்த சிந்தனையை ஓடவிட்ட காரணத்தால்,
கபிலருக்குச் சற்றே தாகம் எடுக்க;
அருவியின் நீரையள்ளிக் கையளவு
அருந்தித் தன் நாவை நனைத்தபோது;
புரியாமல் கிடந்த புதிருக்குப்
புலவர் விடை கண்டாரம்மா!
சுனைநீரில் சிறிதளவே பருகினார் எனினும் அச்
சுவைநீரோ அவர் நாடி நரம்பெல்லாம் “சுதி”யேற்றி
மயக்கமெனும் “சொர்க்க”த்தின்
மாளிகைக்கதவு வரை இழுத்தேகிற்று!
பெரும்பாடுபட்டுத் தன்னை விடுவித்துக்கொண்டு,
அரும்பாடல் ஒன்றியற்றி அகப்பாடல் தொகுப்பில் சேர்த்தார்!
குறிஞ்சி நாட்டுக் கொற்றவன் ஒருவனின்
கோலஞ்செய் மலைவளத்துச் சிறப்பைக் குறிக்கின்ற
அமிழ்தான அச் செய்யுள் சங்ககாலக் கடுந்
தமிழ்தான் எனினும் - அதன் கரும்பனைய
இனிமையினை உணர்வதற்காக - இதோ
எளிமையாக்கித் தருகின்றேன்:
இவ்வாறு
“பல்வேறு விலங்கினங்கள்
பசியாற எலாம் கொடுக்கும்
நல் வளமிகக் குலுங்கும்
மலைநாட்டுப் பெருமகனே!
பாறையில் ஊற்றெடுக்கும் சுனையில்
பளபளவென வளர்ந்தோங்கி நின்று
வழுவழுவெனச் செழித்து இலைவிரிந்த
வாழைமரக் குலைகளில் இருந்து
உதிர்ந்தோடி உருண்டு நைந்த பழங்களும்,
தமையுண்டார் பிற கனியுண்ணார் எனுமளவு
சுவை கொண்ட பலாச்சுளையின் தீஞ்சாறும்
கலந்திணைந்து, நீரில் தோய்ந்து, ஊறி மிதந்து
கதிர் ஒளி படுகின்ற வெம்மையாலே
‘ஊழ்படு தேறல்’ என உவகை பொங்கிட
உரைத்துக் குதித்திடும் வண்ணம்
எதிர்பாராமல் இயற்கையாகவே
இன்ப மயக்கம் தருகின்ற
கள்ளாக மாறித் ததும்ப - அதனைக்
கடுவனொன்று வெறும் நீர் எனக் கருதிக் குடித்து
கண்சுற்றி, மெய்மறந்து - அம்மலையில்
மிளகுக் கொடி படர்ந்துயர்ந்த
மிக மணக்கும் சந்தன மரமேற முடியாமல்
வாசமிகு மலர் குவிந்த தரைமேட்டில்
வசதியாகப் படுத்துறங்கும் காட்சி என்னே!”
இவ்வாறு
கபிலர் மலை நாட்டுச் செழுமையினை
கவிதை வரிகளாலே காட்டுகின்றார்! - நானும் அதைக்
கதையொன்றாய் உருவமைத்துக்
களிப்புடனே உம் கரத்தில் நீட்டுகின்றேன்; சுவைத்திடுக!
“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட, கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!”
மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 2
(களிற்றியானை நிரை)
பாடியவர் : கபிலர்)
பொருள் விளக்கம் :
கோழிலை = செழித்த இலை. கோள்முதிர் = காய்ப்பு மிகுந்த.
ஊழ்உறு = தானாக உதிர்ந்த.
ஊழ்படு தேறல் = தானாகவே உருவாகிய “தேறல்” எனும் மது.
கறிவளர் சாந்தம் = மிளகுக்கொடி படர்ந்த சந்தன மரம்.
நறுவீ அடுக்கம் = நறுமணமிக்க மலர் அடுக்கு.
குறியா இன்பம் = எதிர்பாராமல் இயற்கையாகவே கிடைக்கும்
இன்பம்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்