பகுதி 62 / 102
அடையாளம் தெரியாமல் அலையுதோ நெஞ்சம்!
அச்சுப் பக்கம் 302–305 · ஸ்கேன் 314–317 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 315
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
அடையாளம் தெரியாமல் அலையுதோ நெஞ்சம்!
“தமிழ்மண்ணின் மானம் காத்துப் பெருமை சேர்க்கக் கனல்
உமிழ்கின்ற கண்களுடன் களம் புகுந்தார் அவரும்!
கனக விசயர்களின் தலை நொறுங்கக் கல்லேற்றிக்
கண்ணகிக்குச் சிலை வடிப்பேன் வஞ்சியிலே என்று,
கடுஞ்சபதம் மேற்கொண்டு வடபுலமே சென்று
கொடுஞ்சொல் கயவர்களைப் புறங்கண்டு வென்று
செங்குட்டுவ மாமன்னன் வெற்றிக் கீர்த்தியினை
அங்குற்ற இமயத்து நெற்றியிலே வில்லாகப் பொறிக்கப்
பொங்குற்ற சிங்கமாகப் போருக்குப் போனார் என் தங்கம்
இங்குற்ற பெண் எனக்குப் பூரிக்குதங்கம் - எனினும்;
சங்கொத்த என் கழுத்தை வளைத்துப் - பனையின்
நுங்கொத்த உதடுகளால் என் கன்னத்தில் முத்தம் பதித்து;
“கண்ணே நீ கலங்காதே கனகவிசயர்களை வென்றவுடன் - சேர
மன்னருடன் புறப்பட்டு விரைந்தோடி வந்துன் மடியினிலே
வீழ்வேன்!
புண்களையே போரில் அணிகளாய்ப் பெற்ற என் மார்பில் - உன்
பூவிதழை ஒத்தியெடுத்துக் காயம் ஆற்றிடுவாய்!
விடை கொடு விழியாலே மொழியாலே;” என்று - சேரரின்
படை வீரர்களில் ஒருவராய் அவர் பயணப்பட்டபோது;
அணுப்பொழுதும் பிரிந்திருக்க மாட்டேன் என்றுரைத்து
என்நெஞ்சம்
[Full-page illustration; no printed literary text.]
அடம் பிடித்து அப்போதே அவரை நிழலாகத் தொடர்ந்ததம்மா!
உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் வீணைமீட்டி - என்
கச்சவிழ்த்துக் களிநடம்புரியக் கட்டிய மணாளன்தான்
வரவில்லை; அதனாலே,
கட்டிலுக்குத் துன்பமில்லை - என் கண்களுக்கும் தூக்கமில்லை!
வட்டிலிலே நாழிக்கணக்கு பார்க்கும் வேலையையும்
விட்டுவிட்டேன்!
தொட்டிழுத்தென்னை இன்பத்தேனில் தோய்ப்பவரைக்
கிட்டிகட்டி இழுத்துவரும் என்நெஞ்சம் என்றிருந்தேன்!
தான் மட்டும் தனித்துவரக் கூடாதென்று - என்நெஞ்சம்
தலைவனுடன் சேர்ந்து வர எண்ணித் தங்கிவிட்டதோ; அன்றி
அன்பிலாதார் அவர் என்று கண்டு, கவலை மிகக்கொண்டு
தெம்பின்றி மெதுவாக எனைநோக்கி வருகின்றதோ?
ஒருவேளை எனைநாடி வந்து எனை உற்றுப்பார்த்து;
பசலைபாய்ந்து
உடல் இளைத்துத் துரும்பான என் உருமாற்றத்தாலே;
அடையாளம் தெரியாமல்; “இவள் யாரோ ஒருத்தி” என்றும்
“அயலாள் இவள்” என்றும் திரும்பிப்போய் எனைத்தேடி
அலைகின்றதோ? நானறியேன்!”
வண்டுகள் மொய்த்துக் கிளறிய நறுமணத்தை
மென்காற்று
மொண்டெடுத்துக் கொணர்ந்திங்கே வீசி
மகிழ்வித்தபோது
வளையல் நெகிழ்ந்துவிழப் பிரிந்துபோன கணவன்;
மானமறவன்
வரவில்லையின்னும் என்ற வாட்டத்தோடும் - அவனோடு
தொடர்ந்திட்ட தனது அன்பு நெஞ்சம் கூடச் சோகம்
படர்ந்திட்ட அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லையெனும்
ஏக்கத்தோடும்,
‘நற்றிணை’யில் ஒரு நங்கை வெளியிட்ட பிரிவுத்துயரை
விற்றொழில் வேந்தன் செங்குட்டுவன் படையெடுப்புக்
காதையுடன்
இணைத்தளித்தேன்! இன்புற்றேன்! நான் சுவைத்த இந்த
இனிப்புத்தமிழ்ப் பழக் குலையை எளிய நடையில்
உமக்கும் தந்தேன்!
“குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக்
கண்களி பெறூஉம் கவின்பெறு காலை
எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து,
தொன்னலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி,
‘ஏதிலாட்டி இவள்’ எனப்
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே?”
மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 56
பாடியவர் : இளம் பெருவழுதி)
பொருள் விளக்கம் :
குரவு = குராமரம். சிறுநனை நறுவீ = சிறிய அரும்பு முதிர்ந்த
நறிய மலர். வளி = தென்றல்காற்று. எல்வளை = ஒளிமிக்க
வளையல். அல்லல் உறீஇயர் சென்ற = துன்பமுற்று அவர்பால்
சென்ற. உசா ஆய் = துணையாயிருந்து. நசை = விருப்பம்.
தொன்னலன் = பழைய நலன் (எழில்). ஏதிலாட்டி = அயலாள்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்