பகுதி 61 / 102
முரசு கட்டிலில் மோசுகீரனார்!
அச்சுப் பக்கம் 297–301 · ஸ்கேன் 309–313 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 311
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
முரசு கட்டிலில்
மோசுகீரனார்!
தும்பை மலர் எடுத்துச் சரம் தொடுத்துத்
தொங்க விட்ட நீர்வீழ்ச்சித் தாடி!
கம்பஞ் சோறுண்ணும் பழக்கத்தால் கடுகளவும்
கட்டுக் குலையாத நெடுநல் மேனி!
அம்பின் முனையும் தோற்றுவிடும்படியாக
அழகான கூர் விழிகள்!
அதோ வருகின்றார், அமுதத் தமிழ்மொழியே
அரும்புலவர் உருவெடுத்து வருவது போல்!
மோசுகீரனார் என்பது அவர் பெயர்; அவருடல் தழுவி
வீசுகின்ற தென்றல் கூடத் தமிழாய் மணக்கும்;
மூவேந்தராம் சேர சோழ பாண்டியர்க்கு - இந்தப்
பாவேந்தர் மீது தனி மதிப்பே உண்டென்பர்!
முடியேறியிருக்கும் மும்மன்னர் தலையினிலே - தமிழ்க்
குடியேறியிருக்கும் வரலாறு பல உண்டு இலக்கியத்தில்!
தமிழ் காக்கும் மூவரில் ஒருவன்
தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறையாம்!
பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்துப் பாடி - அவனைப்
பாராட்டி மகிழ்வித்த செயலுக்காக - அவன்
ஆண்டிருந்த நில முழுதும் கொடையாக
அரிசில் கிழார் எனும் புலவருக்குப் பரிசெனவே அறிவித்து
அதனைப் பெற அவர் மறுத்திடவே அவரையே தனக்கு
அறவுரை கூறும் அமைச்சராக ஆக்கிக்கொண்டான்!
செந்தமிழ்ப்பால் வைத்திருந்த பாசத்தாலே
செங்கோல் பிடித்திருந்த அவன் கையில்
சிலவேளை எழுதுகோலும் ஏறிக்கொண்டு
சிறப்புமிகு இலக்கியங்கள் படைத்ததுவாம்!
முதுகவிஞர் மோசுகீரனார்; மலர்க்குடத்தில்
மதுவருந்த வருகின்ற வண்டே போல்
மதிமன்னன் சேரமானைச் சந்திக்க
அதி தொலைவு நடந்து வந்து,
அரசனது மாளிகையை அடைந்து விட்டார்.
அயர்வுடனே மன்னன் உறங்குவது கேள்வியுற்று
அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார்.
அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு;
அதனாலே சுற்றுமுற்றும் பார்க்கலானார்
ஆங்கோர் இடம் படுப்பதற்குக் கிடைக்குமா என்று!
வீர முரசம் வைக்கின்ற கட்டிலொன்று
வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக் கண்டார்!
குருதி வழியும் போர் முகத்தில்
கொட்டுகின்ற முரசு வைக்கும்
கட்டிலென்று அறியாத புலவர் ஏறு
கண்ணுறங்க வசதியெனப் படுத்துக்கொண்டார்!
வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது
வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென
வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே
வெட்டி வீழ்த்தும் காலம் அது!
நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் - அந்தப்
போராட்டக் கள முரசை அகற்றியதால்
விபரம் தெரியா வித்தகப்புலவர் - அதில்
விழிகளை மூடி உறங்கலுற்றார்!
வெகு தொலைவு நடந்த களைப்பில்
வியர்வை முத்து உடலில் விளைய
மிகு உறக்கம் கொண்டு விட்டார்;
மெய் மறந்து குறட்டை விட்டார்!
மயில் அணைத்து மஞ்சத்தில் கிடந்த மன்னன்,
துயில் களைந்து எழுந்து விட்டான்!
மாளிகையின் முன்புறத்தில் உலவுதற்கு
மாமன்னன் வந்தபோது வியப்புற்று
முரசு கட்டிலருகே விரைந்தான் - ஆங்கு
மோசுகீரனார் உறங்குதல் கண்டான்!
“வாள் எடுத்து வந்திடவோ அரசே?”யென்று
ஆள் ஒருவன் வணங்கி நின்றான்...
போர் முரசம் வைக்கின்ற கட்டில் மீது
யார் ஒருவர் படுத்தாலும் அவரைத்
துண்டித்து உயிர் பறித்தல் - ஒரு
கண்டிப்பு ஆணையென இருப்பதாலே
மண்டியிட்ட வீரன், மன்னனது கண்ணசைவை
மரியாதையுடனே எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்!
[Full-page illustration; no printed literary text.]
அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்;
அவனது மொழியில் ஆத்திரம் வழியும்;
என்றந்த வீரன் நினைத்ததற்கு மாறாக
“எடுத்துவா விசிறியை!” என்றான் வேந்தன்!
காவலனோடிக் கொண்டுவந்த கவரியினைக்
கைகளில் ஏந்திக் கவிஞர் மீது
கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான்
நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன்!
களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில்
கவரி வீசுதலை மன்னன் நிறுத்திடவில்லை...
நெடுநேரம் கழிந்தபின்னர் எழுந்த புலவர்;
திடுமெனக் குதித்தார், கட்டிலில் இருந்து!
“மன்னவனே என்ன இது?” எனத் துடித்தார்! — “இந்தச்
சின்னவன் பெற்ற பேறு” என்றான், சேரன்!
“அரசு ஆணையை அறிவேன் எனினும்
முரசு கட்டிலென அறியாது படுத்தேன்.
ஆவி போக்கிடும் தண்டனையிருந்தும் — எனைக்
கூவியெழுப்பிக் கொல்லுதல் விடுத்து
கொற்றவனே தன் கையால் எனக்குக்
குளிர் சாமரம் வீசுகின்ற காட்சி என்னே?” என்றயர்ந்தார்
புலவர்!
“தமிழுக்குத் தொண்டு செய்தால் - அந்தத்
தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்ற
தன்னலத்தால்; தமிழேவடிவாக
என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு
நான் செய்த தொண்டு இஃதெ” என்றான் சேரன்!
தேன் பெய்த பழச்சாறாய்ப் பாட்டொன்றைப் பரிசாய்த்தந்தார்
புலவர்!
“மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத், தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூவும் சாலும், நற் றமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழுவுத்தோள் ஒச்சித், தண்ணென
வீசி யோயே, வியலிடம் கமழ,
இவண்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்,
வலம்படு குருசில், நீ ஈங்குஇது செயலே?
மூல மேற்கோள்(புறநானூறு பாடல் : 50
பாடியவர் : மோசுகீரனார்)
பொருள் விளக்கம் :
விசித்த = வலித்துப்பிணைத்த. வார்புறுவள்பின் = வாரப்பட்ட
வாரையுடைய. மைபடுமருங்குல் = கருமரத்தால் செய்த உறுதி
வாய்ந்த முரசின் பகுதி. மஞ்ஞை = மயில். மண்ணி வாரா
அளவை = நீராடி வருவதன் முன்னே. மென்பூஞ்சேக்கை =
மெல்லிய பூக்களையுடைய கட்டில். தெறு = வெகுளல்.
இருபாற்படுக்கும் = இரு கூறாகப் பிளக்கும். மதனுடை =
வலிமை வாய்ந்த. தண்ணென வீசியோய் = சாமரங்கொண்டு
குளிர வீசினாய். வலம்படு குருசில் = வெற்றியுடைய தலைவனே.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்