பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 60 / 102

பரிபாடல்- பன்மலர்ப் பூங்கா!

அச்சுப் பக்கம் 291–296 · ஸ்கேன் 303308 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 305

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பரிபாடல்- பன்மலர்ப் பூங்கா!

ஓங்கு பரிபாடல் என
ஒலிக்கின்ற சங்க நூலின்
காலத்தைக் கணக்கிட்ட ஆய்வறிஞர்
கடைச் சங்கக் காலமென்பார் - அதன்
காரணத்தை அறிவதற்குக் கடுமுயற்சி தேவையில்லை!

வடமொழி ஏடுகளில்
இடம் பிடித்த இதிகாச புராணமெல்லாம் - தமிழர்களின்
மரபென்றும் கலையென்றும்
மாண்புமிகு பண்பாட்டுச் செல்வமென்றும்
பரிபாடல் வரிகளிலே மெல்ல மெல்ல
பழத்தில் நுழை ஊசியென நுழைந்து
பக்குவமாய் ஊடுருவிப்
பழந்தமிழ் இலக்கியம் போல் காட்டிக்கொள்ளும்!

ஆயினும் ஒன்று சொல்வேன்!
ஆழ்கடல் முத்தெடுத்துக் கோத்திட்ட ஆரம்போல்,
ஒன்பான் மணிகளையும் ஒருசேரப் பதித்துவைத்து
ஒளிவீசும் பதக்கம்போல்,
அழகு தமிழ்ச் சொற்களை அடுக்கிவைத்து
அற்புதம்தான் புரிந்துள்ளார் அந்நாள் புலவர்!

“பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவாய் ஆம்பல்
கைபோற் பூத்த கமழ் குலைக்காந்தள்” என்று
மலைவளச் சிறப்பை உயர்த்திடும்
மலர்கள் குறித்துப் பாடல்கள் பல உண்டு; பரிபாடல் தொகுப்பில்!

“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல்லினர் நாகம் நறவஞ் சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரை” - என
சொல்லும் பாடல் வையை நதியினைப் பற்றி!

கரையின்றிப் பெருகியோடும்
காட்டாறு குறித்துப் பாடும்போதோ
“ஆடலறியா அரிவை போலவும்
ஊடலறியா உவகையள் போலவும்”
ஓடிடும் நதியென உவமை கூறிடும்!

எனவே,
ஓங்கு பரிபாடல் எனும்
உயர்தனிப் பொற்சுரங்கம் தன்னில்
புராணமெனும் மண்ணின் துகளும் கொட்டும்.
பொன்னாம் தமிழ்ப் பண்ணின் சுவையும் சொட்டும்.

கரை மோதி வருகின்ற வையை வெள்ளம்
கடுவேகம் காட்டி வருகின்ற ஒலியைக் கேட்டு
கண்கசக்கித் திடுக்கிட்டு விழித்தவர்கள் - இந்த
மண்மீது இருப்பதையே மறந்துவிட்டு
தேரிற் பூட்டும் குதிரைகளை வண்டியில் பூட்டி அது
தெரியாமல் மீண்டும் தேரிற் பூட்டுவர் எருதுகளை!

இப்படித்
திகைத்துத் தடுமாறி ஆடியோரைப் பரிபாடல்;
“திண்தேர்ப்புரவி வங்கம் பூட்டவும்
வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும்” என்று
தித்திக்கும் தமிழில் தீட்டிக் காட்டும்!

போராடப் போகின்ற வீரர் படைச் சிறப்பு பார்த்தலுத்துப் போயிருந்தால்
நீராடப் போகின்ற பெண்கள் நடையழகு காணலாமா?
பரிபாடலாம் ஒரு பலகணி வழியாக - அந்த
அரிவையர்தம் அழகெல்லாம் பருகலாமா?

அன்ன நடை - மிகச்
சின்ன இடை - சுவைக்
கன்னல் மொழி - உடல்
மின்னல் ஒளி!
கட்டுக்குலையாப்
பட்டுமேனியில் - வாழை
மொட்டிரண்டு
முளைத்துக் கொண்டு
ஆடவர் இதயம்
தொட்டிழுத்துத்
துளைத்துப் போடும்!

“ஆயிதழ் உண்கண் அலர் முகத் தாமரை
தாள் தாமரை தோள் தமனியக் கயமலர்
முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

தம்கைப் பதுமம் கொங்கைக் கயமுகை
செவ்வாய் ஆம்பல் செல்நீர்த் தாமரை” எனப்
போற்றிப் புகழ்கின்ற பரிபாடல் - அந்தப்
பொற்கொடியார் அங்கம் ஒவ்வொன்றும் மலர் என்றே பாடும்!
மலர்ந்த தாமரையாம் மங்கையின் மதிமுகம்!
மலராத் தாமரை மொக்காம் அவளின் மார்பகம்!
கைமட்டுமல்ல; அந்தக் காரிகையின்
கால்கூடத் தாமரையாம்!

கவிஞன் எழுத்தின்
கற்பனைப் பெருக்கை - ஒரு
கதை போல் இங்கே
காணலாம் வாரீர்!

நீரணி மாடத் தருகே
காலணியாம் சிலம்பு கொஞ்ச
நேரிழையர் கூட்டமொன்று
நீராடிக் களிப்பதற்கு நெருங்கிற்றாங்கே!
நிலவொளி போல் வெண்மை உடை ஒருத்திக்கு
நீலவான நிறமுள்ள உடையோ மற்றொருத்திக்கு
பச்சை வண்ண ஆடை நெகிழ ஒரு பாவை
பவள வண்ணச் சேலையுடன் பிறிதோர் பூவை!
பாடிப் பாடிப் பாய்புனல் ஆடினர்
ஆடியாடி அகமிகத் துள்ளினர்.

அப்போது

வையைப் புனலில் வழக்கமாய் நீராட்டும்
வாலிப யானையுடன் ஒரு பாகன் வந்திட்டான்.
வந்த யானையின் கண்ணில் பட்டது மடப்பிடியொன்று!
வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த களிறு
வாயைப் பிளந்து அந்தப் பெண்யானையைப் பார்த்து,
வழியை மறந்து தனியே நின்றது!
பாகன் பலமாய்க் குத்தி நகர்த்தியும்
யானை அசைந்திட மறுத்தே விட்டது.
காதல் கொண்ட களிற்றைக் கண்டு
கன்னி யானையும் காதை அசைத்தது! அசைத்தது!
கண்ணொடு கண்ணினை நோக்கிய பின்னர்
காதல் வாய்மொழி எதற்கெனக் கருதி
களிறும் நடந்தது மெதுவாக - அதன்
காதலி யானையும் மெல்லத் தொடர்ந்தது!
நிலை மறந்து காம மயக்கத்தில் சிக்குண்ட பெண்யானை
கண்ணில்,

நீரணி மாடத்து வேங்கையின் ஓவியம் ஒன்று
பட்டிடவே
உண்மை வேங்கை போல் ஓவியத்திறன்
அமைந்ததாலும்
உளத்தில் பெண் யானைக்கும் இன்ப மயக்கம்
இருந்ததாலும்
உயிர் வேங்கைதான் உடன் பாய்ந்து வந்து - தன்
உயிர் குடிக்கப் போகுதென்று அஞ்சியோடி
நீராடிக் கொண்டிருந்த பெண்களையும் கலங்கச் செய்து,
அவர்கள்
நிர்வாணக் கோலத்தில் நீருக்குள்ளிருந்து துள்ளி
நிலைகுலைய எழுந்தோட முயன்று பின்னர் நிலையறிந்து
நாணமுற்று நீருக்குள் சிதறலானார்!

காதலி யானைக்கு விளைந்த துன்பம் யாதோ என்று
களிற்று யானை முழக்கம் செய்து துதிக்கை தூக்கி
போருக்கு வாள் தூக்கிப் புறப்பட்ட தளபதி போல்
யாருக்கும் அடங்காமல் பிளிறிற்றங்கே!
பெரும்பாடுபட்டுப் பாகன் அங்குசத்தால் அடக்கப்
பார்த்து - அது
வெறும் பாடாய்ப் போனதினால் வேறு வழியின்றி
- அதன்
அருங்காதல் நிறைவேற்றப் பெண்யானையினை
அருகழைத்துக் கொண்டு வந்து அமைதி செய்து
விரிசல் கண்ட மரக்கலத்தின் பகுதியொன்றை
விரைவாகப் பிசின் வைத்துப் பழுது பார்த்த
மாலுமியின் திறமைக்கீடாய் - அந்த
மாவுத்தன் யானைகளின் அமளிதனை அடக்கிவிட்டு
மகளிர் கூட்ட நடுக்கத்தையும் போக்கினான் என்று
மாகவிஞர் “கரும்பிள்ளைப் பூதனார்”, பரிபாடலிலே
கூறுகின்றார்.

“மருத்துவன் நல்லச்சுதனார்” என்பவர்தான் - இந்த
மாம்பழப் பாடலுக்கு பாலையாழ்ப்பண் வகுத்துப்
பாடிய பாவலராம்!

“ஆங்க, அணிநிலை மாடத்து அணிநின்ற பாங்காம்
மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று
நடத்த நடவாது நிற்ப; மடப்பிடி
அன்னம் அனையாரோ டாயா நடைக்கரிமேல்
செல்மனம் மாலுறுப்பச் சென்றெழின் மாடத்துக்
கைபுனை விளர்வேங்கை காணிய வெருவுற்று
மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புறச்
செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதரக்
கங்கை மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி
நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து
வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச்
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதையும் கயிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும்
திசையறி நீகானும் போன்ம்”

மூல மேற்கோள்(பரிபாடல் : பாடல் : 10
பாடியவர் : கரும்பிள்ளைப் பூதனார்
பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்)

பொருள் விளக்கம் :

பசும்பிடி = பசுமையான இலை. இளமுகிழ் = இளம் அரும்பு.
மௌவல் = முல்லை. கழுநீர் = நீலோற்பலமலர்.
அரவிந்தம் = தாமரை. குல்லை = வெட்சி; துளசி.
வகுளம் = மகிழம்பூ. நறவம் = நறுமணம். வங்கம் = வண்டி.
பாண்டி = எருது. உண்கண் = மை எழுதிய கண்.
ஆயிதழ் = அழகிய இதழ். தமனியம் = பொன்.
மாலுற்று = காதல்கொண்டு. சிதைதர = சிதறிடுதல்.
தோட்டி = அங்குசம். இதை = கப்பலின் பாய்.
இரிய = பழுதுபட. பயின் = ஒட்டப்பயன்படும் பிசின்.
நீகான் = மாலுமி. மடப்பிடி = பெண்யானை.
வயக்கரி = ஆண்யானை.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்