பகுதி 59 / 102
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே!
அச்சுப் பக்கம் 287–290 · ஸ்கேன் 299–302 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 301
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே!
மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்!
பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை!
பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை!
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி!
வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டோரே;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?
என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்!
பொதுமை மணம் கமழவேண்டும் என்று;
புவியில் நாம் முழங்குகின்றோம் இன்று!
புதுமையல்ல இம் முழக்கம்; புலவர் பிரான் நக்கீரர்;
புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார்; கேளீர்
தெண் கடல் சூழ் தரணி முழுவதுமே - தன்
வெண்கொற்றக் குடையின்கீழ் வரவேண்டுமெனத்
தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்,
கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதல் போல்
காடகத்தில் விலங்குகளை வேட்டையாட
கண்ணுறக்கமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற
கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்,
மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்
கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! - அவரை
மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்
கூழோ பொங்கலோ உண்டு களிக்க
ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு
நாழித் தானியம் மட்டும் போதுமன்றோ?
இப்படி
உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?
உலகிற் பிறந்தோர் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும்போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?
தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பதுதான் வாழ்வெடுத்த
பயனாகும்!
தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர்; அதனைத்
தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில் நல்லோரெல்லாம்!
“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
[Full-page illustration; no printed literary text.]
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் 189
பாடியவர் : நக்கீரனார்)
பொருள் விளக்கம் :
தெண்கடல் வளாகம் = தெளிந்த கடல் நீர் சூழ்ந்த உலகம்.
ஒருமையோர் = தனியுரிமை வேண்டுபவர்.
துஞ்சான் = தூங்காதவன். கடுமா = விரைந்தோடக்கூடிய
விலங்கினம். துய்ப்பேமெனின் = யாமே அனுபவிப்போம்
எனின். தப்புந பலவே = பல தவறுகளுக்கிடமாகும்.
நாழி = தானிய அளவை.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்