பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 58 / 102

மறு பிறப்பு உண்டென்றால் மறக்க நேரிடுமோ?

அச்சுப் பக்கம் 284–286 · ஸ்கேன் 296298 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 297

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

மறு பிறப்பு

உண்டென்றால்

மறக்க

நேரிடுமோ?

மறுபிறப்பு மாந்தர்க்கு உண்டென நம்பிய
மங்கையொருத்தியின் காதல் நினைவினை;
மழைத் தமிழ்ப்புலவர் அம்மூவனார் என்பார்
மாம்பழக் கதுப்பென வழங்கினார் அன்று!

நற்றிணை நானூறு தொகுப்பில் ஒரு பாடலில்
கற்பினை அணியாய்ப் பூண்டவோர் அழகி;
காதலன் வருகைக்குக் கடுந்தவம் இருந்து
காதல் வெப்பத்தால் கண்ணீரில் குளித்தாள்!

“வருவதாய்ச் சொன்ன நாளும் முடிந்தது; வந்து
தருவதாய்ச் சொன்ன இன்பமும் தொலைந்தது!
மூங்கிலைப் போல் தோளென்று முத்தங்கள் தந்தார் - அது
ஏங்குதல் காணாமல் அவர் எங்கு சென்றார்?

மூடுகின்ற இமைகளுக்கு வேலையின்றி விழியிரண்டும்
காடு நோக்கி வழிபார்த்துக் கதிகலங்கிக் காத்திருக்கும்!
சேதி அறிந்து இந்தச் செந்தாமரை மொட்டுதனைச்
சேர்த்தணைத்துச் சுகம் அளிக்க வாராரோ?

அறிவும் என்னைக் கைவிட்டு அடியோடு விலகியது;
அந்திமாலைப் பொழுதுவர காதல் நோயோ பெருகியது!
அவரின்றி அணுப்பொழுதும் வாழ்வதிலோர் பயனில்லை;
சுவரின்றி இருக்கின்ற கூரைக்கு வீடென்று பெயருண்டோ?
விரலுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு இசைபொழிய
வீணைக்கென்று வேறொரு வழிதான் இனி ஏது?
இழுத்து, விட இருக்கின்ற மூச்சுப்பைகள் இரண்டில் ஒன்றை
இழந்தாலோ கவலையில்லை!”

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

இதயத்தில் சரிபாதி வெட்டுண்டு பிரிந்து போனால்
இறப்பதுதான் உயிர் இயற்கை!
இதயம்போல் இருந்தோம் நாங்கள்; அவரோ
உதயக் கதிர்! மேற்றிசையில் மறைந்து போனார்!
இருளகற்றி என்வாழ்வில் ஒளிப்பந்தல் வேய்வதற்கு
அருள் சுரந்து அவர் மீண்டும் எழாததுதான் ஏனோ?

மறப்பதற்கு முடியாது என்னால் - அதனால்
இறப்பதற்குத் துணிந்துவிட்டேன்! உயிர்
துறப்பதற்கு முன்னால் ஓர் அச்சம்! மறு
பிறப்பு உண்டென்று கூறுகின்றார்; சரி!
எப்பிறப்பு எடுத்தென்ன பயன் எனக்கு?
எனை அவருக்கென ஒப்படைத்துவிட்டேன்; எனவே
அப்பிறப்பும் அவரை மறக்காமல் வாழ்கின்ற
இப் பெண்பிறப்பே வாய்த்திடுமா? என எண்ணி;
நோவதாலே வலிமையில்லை நலிகின்றேன்;
சாவதற்கும் அஞ்சுவதால் மெலிகின்றேன்!”

என்று தலைமகள் தவித்த நிகழ்ச்சியை
நின்று நிலைக்கும் நற்றிணைப் பாடலில்,
அம்மூவனார் தொகுத்தளித்தார் - அதனைத்தமிழ்
அமுதமென அருந்திக் களித்திடுவோம் நாமே!

“தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தெளவின என்நீத்து
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப்பிறி தாகுவது ஆயின்
மறக்குவேன் கொல், என் காதலன் எனவே!”

மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 397
பாடியவர் : அம்மூவனார்)

பொருள் விளக்கம் :

அத்தம் = காடு அல்லது பாலை. வாள் = ஒளி.
தெளவுதல் = கெடுதல். என் நீத்து = எனைவிட்டு விலகி.
பிறிது = வேறு. மறக்குவேன் கொல் = மறந்துவிடுவேனோ?

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்