பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 57 / 102

ஒல்லையூரில் முல்லையோ?

அச்சுப் பக்கம் 280–283 · ஸ்கேன் 292295 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 293

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒல்லையூரில்

முல்லையோ?

முல்லைக்கூட்டம் பந்தலிட்டு மணக்கும் மூதூராம்
ஒல்லையூர் என்னும் புதுக்கோட்டை ஒலியமங்கலம்
கிழார் என்ற பெருமகனுக்குப் பிறந்த திருமகனாம்
கீர்த்திமிகு “பெருஞ்சாத்தன்” பெயருடைய மாவீரன்;

பாண்டியர்க்கும் சோழர்க்கும் நடக்கின்ற போரில் எல்லாம்
படைதிரட்டிப் பாண்டியர்க்கே வெற்றிகளைக் குவித்திடுவான்!
குன்றெடுக்கும் நெடுந்தோளும் கொடை பொழியும் கையும்
கொண்டுலவும் வல்லவனை
நல்ல வள்ளல்தனை;
செந்தமிழால் மாலைகட்டிப் புகழ்ந்துரைத்தார்;
நந்தமிழ்நாட்டுச் சான்றோரும், ஆன்றோரும்!
கொடியிற் புலி அசையும் சோழனது, குடவாயிற் பிறந்த
கீரத்தனார்,
தொடித்தலை விழுத்தண்டினார்; இவ்விரு புலவர்கள்!

நொடியிற் பகையொழிக்கும் இவன் வீரத்தையும்,
மிடிமை அகற்றும் இவன் ஈகை இதயத்தையும்;
நாடே புகழ்தல் கேட்டு மனமிக மகிழ்ந்தனர் - அவன்
நட்பை நாடிப்பெற்று நண்பர்களாய்த் திகழ்ந்தனர்!
பாண்டியன் பக்கம் நின்று சோழனை எதிர்த்தாலும் - அவன்
பண்பு நலங்கண்டு பாராட்டத் தவறாதவர் கீரத்தனார்!
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற
மனம் படைத்த பெருந்தகைப் பேரறிஞர் போலும் அப்புலவர்!
மாவீரன் பெருஞ்சாத்தன் நோய்வாய்ப்பட்டொரு நாள்
மரணத்தின் மடிதனிலே துயில்கொள்ளப் போனான் என்று
மலைபிளந்து வருகின்ற வேல் போல ஒரு செய்தி
மாத்தமிழர் நாடெங்கும் பரவிற்றாங்கே!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

அரண் போன்றான் வீழ்ந்தான் என்ற அதிர்ச்சியினால் தாக்குண்டு
அலை உயர்ந்தெழும்புகின்ற கடல் போலக் கொந்தளித்தார்
புலவர்!
குடவாயில் ஊர்நோக்கிச் செல்கின்ற வழியினிலே
கொடை வீரன் பெருஞ்சாத்தன் நாட்டுக்குள் நுழைந்தார்!
ஒல்லையூர்ப் பகுதி எல்லையிலே கால்பட்டதுமே - அங்கு
முல்லை மணம் கமழ்ந்தெங்கும் படர்ந்துள்ள கொடிகள் மீது
அவர் கண் பட்டதுவாம்!

“இடிமுழுங்கி எதிரிகளை வெற்றிகொள்ளும் சாத்தன் மறைந்த
பின்னர்
கொடிமுல்லைக்கென்ன அவசரமோ பூத்துக்குலுங்க?” என்று;
புயல்தாக்கிச் சீரழிந்த பூந்தோட்ட உளத்தினராய்
புலவர்பிரான் புலம்பலுற்றார்; பூத்திருக்கும் முல்லைநோக்கி!

“இளையவராம் வீரர் உனை எடுத்துச் சூடார் - எழில்
வளையணிந்த மங்கையரும் உன்பக்கம் வாரார்!
பரிசில் பெறப்பாடும் பாணனும் பாடினியும் கூடப்
பறித்தெடுத்து உன்னை யாழ்மீது அணிந்திடார்!
வீரன் சாத்தனை இழந்துவிட்டுத் துயர்மிகுந்து;
விழிநீர் பெருக்கி, ஊரே அழுதிடும்போழ்து;
ஒல்லையூர் நாட்டில் ஒருக்கணமும் சிந்திக்காமல்
முல்லையே நீ மலர்ந்தது ஏனோ; இரக்கமின்றி?”

இவ்வாறு புலவர் குடவாயிற் கீரத்தனார் -
இரங்கலுரைக்கும் செய்யுள் ஒன்றை இயற்றியதால்;
மறைந்திட்ட சாத்தன் எனும் ஆற்றலாளன்,
நிறைந்திருந்தான் மக்களது நெஞ்சத்தில்;
என்ற உண்மை எல்லார்க்கும் தெரிந்ததம்மா; எனவே
நன்றென்று வாழ்த்திடுவோம் நம்தமிழர் பண்பாடு!

“இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்
நல்யாழ் மடுப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி அணியாள்!
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 242
பாடியவர் : குடவாயில் கீரத்தனார்)

பொருள் விளக்கம் :

ஆடவர்க் கடந்த = வீரர்களை வென்ற. வல்வேல் = வலிமையான
வேல். பின்றை = பிறகு. மிடிமை = வறுமை.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்