பகுதி 56 / 102
வெறியாடும் வேலன் எதற்காக?
அச்சுப் பக்கம் 276–279 · ஸ்கேன் 288–291 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 289
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
வெறியாடும்
வேலன்
எதற்காக?
“பித்துப் பிடித்தவள் போல் இருக்கின்றாள் - நான்
பெற்றெடுத்த பொற்கொடியாள் - ஊன்றிவிட்ட
வித்துப் போல் விழியிரண்டும் அசைவற்றுப் பார்க்கின்றாள்;
வேலனை அழைத்து வந்து வெறி தணிக்க விரைவாய் தோழி!”
தலைவியினை ஈன்ற முதுபெருந்தாயொருத்தி - தோழியின்
தாடையைப் பிடித்து தயைபுரிக என்றுரைத்தாள்!
தமிழகத்தில் அந்நாளிலேயே வெறியென்னும் மருள் ஒன்று;
தாய்க்குலத்தின் நம்பிக்கையாயிருந்தமைக்கு இது சான்று!
வேலர் என்போர் அந்நாளில் வெறியாடிக் குறிசொல்வோர்;
விரட்டிடுவார் மருள் நோயை என்று தாய்மார்கள் செல்வர்!
காலமிக வேகமாக ஒளிபெற்றும் கருத்தை மட்டும்
அவர்
இருட்டாக்கும்
கண்மூடி வழக்கமின்னும் நம் தாயகத்தில் மறையவில்லை.
அன்னையின் வேண்டுகோளை அன்னநடைத் தலைவிக்குரைத்து;
“அழைத்து வரட்டுமா அந்த வேலனை” எனக்கேட்க; அவளோ
“அய்யகோ! வேண்டாமடி; அவன் வந்தால் ஒருவேளை - என்
அக நோய் இன்னதென அன்னைக்குத் தெரிய வைத்திடுவான்”;
எனத்தடுத்தாள்!
ஆயினும் அழகின் தாய் விடுவதாயில்லை -
மாயமென்ன மகளுக்குற்றதென மனமுடைந்தாள்!
“பாயில் படுப்பதில்லை - பாலும் குடிப்பதில்லை - என்றன்
பாவைக்கு வந்த துயர் எனக்கொன்றும் புரியவில்லை!
நள்ளிரவில் நான் விழித்துப் பார்க்கும் போதும்
புள்ளிமயில் புரளுகின்றாள் உறக்கமின்றி!
[Full-page illustration; no printed literary text.]
வெள்ளி முளைப்பதற்கு முன்பாகக் கண்மலர்ந்து
துள்ளியோடும் மானாக இருந்த மகள்;
பறித்துப் போட்ட அல்லித் தண்டுபோல் துவண்டு
பாழும் தரையினிலே கிடக்கின்றாள்! உடலை
முறித்துப் போட்டதுபோல் நெளிகின்றாள், வளைகின்றாள்!
முற்றிவிட்டதடி மருள் என்னும் வெறி நோய் அவளுக்கு
அதனாலே;
தட்டாதே என் சொல்லை! தாவிச் சென்றிடுக வேலனிடம்
தலைவி துயர் தீர்ப்பதற்கு தெய்வத்தின் முன் வெறியாட
தாய் நான் அழைப்பதாக வேண்டிக்கொண்டு - அவள்
நோய் நீக்க வேலனை ஒரு நொடியில் இழுத்து வருக” என்றாள்.
“வேலன் வந்து என்ன சொல்வான்? விழியிரண்டை
விண்ணோக்கி மேயவிட்டு - வெடி முழக்க ஒலியெழுப்பி
வீணான ஆரவாரம் ஏராளமாய்ச் செய்து; துரும்பைத்
தூணாக ஆக்கித் தெய்வத்தின் சேட்டையெனச் செப்பிடுவான்!”;
தோழியிதைத் தலைவியிடம் விளக்கிக் கூறி-;
“மேழிபட்டு மேலே வரும் அடிமண்ணைப் போல்
காமமெனும்
ஊழித்தீ வாட்டுகின்ற உண்மை ஒருநாள் வந்தே தீரும்!
அதனாலே
கோழிச் சிறகுக்குள் குஞ்சைப்போல் ஒளிக்காதே காதற்
களவியலை!
வெறியாடி நோய் தீர்க்கும் வேலனாம் பூசாரி தேவையில்லை;
நெறியோடு மணம்புரிய விழைகின்ற வீரனொருவன் மீது
குறியாக இருக்கின்றாய் நீ என்ற இரகசியத்தை
அறியாது புலம்புகின்ற அன்னைக்கு உணர்த்திடுவோம்!
மையுண்ட ஆய்மலர்க்கண் பசலை நிறம் படர்
மனம் கவர் சேய்மலை நாடன் செய்த நோய் இதுவென்று
கைவளையல் எல்லாமே கழன்று விழுவதற்கு முன்பு
கண்டிப்பாய் அன்னையிடம் சொல்லிவிடல் நன்று” என்றாள்!
தயங்கித் தயங்கித் தோழி போகாமல் நிற்பதையும்
மயங்கி மயங்கித் தலைவி பேசாமல் குனிவதையும்
தாய்ப்பறவை சரியாகப் புரிந்துகொண்டு - இனித்
தடையாக இருக்கமாட்டேனென்று தலையசைத்துப் பறந்ததுவே!
“அறியாமையின் ‘வெறி’ யென மயங்கி
அன்னையும் அருந்துய ருழந்தனள்; அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே - நிரையிதழ்
ஆய்மலர் உண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே!”
மூல மேற்கோள்(ஐங்குறுநூறு — (குறிஞ்சி) 242
பாடியவர் : கபிலர்)
பொருள் விளக்கம் :
வெறியென = தெய்வம் வருத்தியதென. உழந்தனள் = வருந்தக்
கலங்கினாள். எய்யாதுவிடுதல் = அறியாமல் விட்டுவிடல்.
ஆய்மலர் = தேர்ந்தெடுத்த சிறந்த மலர்.
சேய்மலை = அண்மையில் உள்ள மலை.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்