பகுதி 55 / 102
'இனம்' காட்டும் இயற்கைக் காட்சி!
அச்சுப் பக்கம் 273–275 · ஸ்கேன் 285–287 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 286
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
'இனம்' காட்டும் இயற்கைக் காட்சி!
இனியதோர் காதற்கதையினையே கூறவந்த அம்மூவனார்
இனம், இனத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிடில்
இன்னல்கள் ஆயிரம் எப்படியெல்லாம் விளையுமென்று
கன்னற் சுவையூறும் நற்றிணையில் கடற்கரைக் காட்சியொன்றைக்
காட்டுகின்றார்!
பொங்கியெழுந்து மோதுகின்ற அலைப்படைகள் பொருதிப்பொருதி
சங்கொதுங்கும் கடற்கரையின் மணற்பரப்பில்;
நாவல் மரத்துக் கனியொன்று உதிர்ந்து உருளக்கண்டு
ஆவலுடன் அதுவும் தன் இனந்தான் எனத்தவறாகக் கருதியதால்;
மண்டியதாம் அந்தக் கனியைச் சுற்றிச் சுற்றி
வண்டினங்கள்! என்னே மடமை? அப்போது;
நண்டொன்று நல்லபழம் கிடைத்ததென்று விரைந்தோடி
வண்டொன்றைக் காலில் பற்றிக்கொண்டதுவாம்!
இனமறியாக் குற்றத்தால் இடுக்கண்ணில் சிக்கிக்கொண்டு
மனம்பதறி அவ்வண்டு மாண்டுபோகும் நிலையைக்கண்டு;
மொய்த்திருந்த வண்டுக் கூட்டம் மேலெழுந்து பறந்தவாறு
முகம்வாடி அகம் நொந்து ஓசையிட்டுப் பூசல் புரிந்ததுவாம்!
வண்டென்று தெரியாமல், நாவல் பழமொன்று கிடைத்ததென்
நண்டும் மிக மகிழ்ந்து அதனைக் கவ்விக்கொண்டே விரைந்த நேரம்;
இனம் கண்டு கொள்ளாமல் நாவல் கனியை நெருங்கி
இக்கட்டில் மாட்டியதால் இன்னுயிரை இழக்கின்றேன் - என்றே
பாவம்; பளபளக்கும் அந்த வண்டு பதற்றாங்கே!
யாரும் துணைக்கில்லா அந்தவேளை; மின்னலென
[Full-page illustration; no printed literary text.]
உதவியொன்று நாரை உருவில் வந்ததம்மா - வண்டின்
உயிர்காக்கும் தோழன் போல் வந்த பறவையின் வாய்க்கு;
இரையாகித் தொலையவேண்டுமே என்றஞ்சி அந்த நண்டு
விரைவாக ஓடுதற்கு வண்டுதனை காலை விடுத்தெறிந்துவிட்டு,
வளைதேடி ஒரு நொடியில் கண்டுபிடித்துத் துள்ளி
ஒளிந்தேகி மறைந்ததனால் நண்டும் உயிர் பிழைத்துக்
கொண்டதுவாம்!
நல்லவேளை; நாரைமட்டும் தக்க சமயத்தில் வராதிருந்தால்
நாவல் பழத்தைத் தன்னினம் எனத் தடுமாறி ஏமாந்த வண்டின்
நாள் முடிந்து போயிருக்கும்! “நண்டின் பிடியினின்று விடுபட்டு
நமது இனத்தோழன் மீண்டான்!” என்று ஒலிகூட்டி; உற்சாக
விழா நடத்தியதாம் வண்டுக்கூட்டம்!
“இனம், இனத்தைத்தான் தெளிந்து தெரிதல் வேண்டும்;
அல்லால்,
மனம் நோகும் வகையில் தொல்லைவந்து துளைத்துவிடும்” என;
காதலரின் பிரிவுத்துயர் உருக்கமுடன் உரைக்கும்போதும்
கவிஞர்பிரான் அம்மூவனார் கவின்மிகு இயற்கைக் காட்சியுடன்
கலந்தளிக்கும் அறிவுரையை கற்பனையால் பெருக்கிப் பார்த்து
களிப்பொருபுறம் கொண்டேனாயினும்; கண்கள் மட்டும்
ஏனோ கலங்கினவே!
“பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரைதேர் நாரை எய்தி விடுக்கும்.”
மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 35.
பாடியவர் : அம்மூவனார்)
பொருள் விளக்கம் :
கிளைசெத்து = தமது இனமெனக் கருதி. அலவன் = நண்டு.
இமிழ் = ஒலி. அசாந்து = தளர்ந்து. பூசல் = போர்.
இரைதேர் = இரை தேடுகின்ற.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்