பகுதி 54 / 102
கிலு கிலுப்பை வழங்கும் கிறுகிறுப்பு!
அச்சுப் பக்கம் 269–272 · ஸ்கேன் 281–284 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 283
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
கிலு கிலுப்பை
வழங்கும்
கிறுகிறுப்பு!
தடையின்றிக் கொடை வழங்கும் சேர சோழ பாண்டியரை
கடையேழு வள்ளல்களைக் குறுநில மன்னவனாம்;
நல்லியக்கோடனுடன் ஒப்பிட்டுக்காட்டிப் பத்துப்பாட்டில்
நத்தத்தனார் பாடியதே சிறுபாணாற்றுப்படையாகும்!
பண்டொருநாள் ஓய்மாநாடெனப் பரந்த நிலந்தான்
திண்டிவனம் பகுதியாய்த் திரிந்ததெனத் தெளிவார் அறிஞர்!
இடைக்கழி நாட்டிற் பிறந்தார் இந்தப்புலவர் - இதனை
இன்றைய சென்னைக்கருகேயுள்ள நல்லூர் என்றும் நவில்வர்!
மாவிலங்கை, கிடங்கில், எயிற்பட்டினம், வேலூர், ஆமூர்
மாத்தமிழன் நல்லியக்கோடன் ஆட்சியிலே மணம் பரப்பியதை;
பாவலராம் நத்தத்தனார் விளக்கிடும் பாங்கே தனிச் சிறப்பாம்!
அந்த
நாவலரின் கற்பனையில் விளைந்திட்ட
சிறுபாணாற்றுப்படையினிலே;
உவமைகள் ஓடிவந்து கொஞ்சும் - ஊரின் வர்ணனையோ ஒன்றையொன்று மிஞ்சும்!
உப்பு வணிகர் ஓட்டி வருகின்ற வண்டிகளைத் தொடர்ந்து; புலவர்,
ஒப்புவமை காட்டித் தீட்டியுள்ள ஓரிருவரிகளிலே விழிபதிந்தால் - நமது
மொழி அருமை தெரியும் - முன்னோர் பெருமையெலாம் புரியும்! உலகில்
மூத்த குடிப்பிறந்தோர் தமிழர் என்ற வரலாறு விரியும்!
கொற்கைக் கடற்கரை நோக்கி விற்பனைக்கு உப்பு வாங்க;
கூட்டமாய் வண்டிகட்டி வருகின்றார் வணிக மக்கள்!
வலிய எருதுகள் பூட்டிய அந்த வண்டிகளுடன் முந்தி
வந்தவையோ அவர்கள் பிள்ளைபோல் வளர்த்த மந்திகளாம்!
கடற்கரையில் ஒதுங்கியுள்ள கிளிஞ்சல்களைக் காட்சியாக்கி
கற்பனைச் செழுமையாலே கவிஞர் மலையுச்சி ஏறிநின்று பாடுகின்றார்!
வாளின் வாய்போலும் கூர்மைகொள் வாயுடைக் கிளிஞ்சல்களாம் - அவற்றின்
வயிற்றுக்குள் முத்துக்களை இடுகின்றாராம் மழலைகளும்
அங்குவந்த மந்திகளும்!
கொற்கை முத்துக்களன்றோ; அதனாலே அவற்றுக்குப் பாவையரின்
பற்களையே ஒப்புவமை ஆக்குகின்றார் புலவர்!
“நல்கூர் நுசுப்பு” என மெலிந்திட்ட இடை எழிலுடனே,
மென்தோளும் முதுகும் சற்று மறையும் வண்ணம்;
ஐந்தாக வகுத்துப் பின்னி அசைகின்ற கூந்தல் கொண்ட
அழகுமிகு உப்புவாணிபப் பெண்கள் பெற்ற பிள்ளைகள் ஆங்கே;
கிளிஞ்சல்களில் முத்துக்களை இட்டுக் குலுக்கி மந்திகளுடன்;
கிலுகிலுப்பை ஆட்டுவதாய்க்கூறிக் கவி இதயக் கற்பனைக்கேயொரு
விறுவிறுப்பை உண்டாக்கி; இலக்கியம் சுவைப்போரை எல்லாம்
கிறுகிறுப்பில் ஆழ்த்திவிட்ட நத்தத்தனார் திறம்போற்றி
இன்பக்
மகிழ்வோம்!
“நோன்பகட்டு உமணர் ஒழுகையோடு வந்த
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள், புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்.....”
மூல மேற்கோள்(சிறுபாணாற்றுப்படை : 55 முதல் 61 முடிய
பாடியவர் : நல்லூர் நத்தத்தனார்)
பொருள் விளக்கம்:
நோன்பகட்டு உமணர் = வலிமையான எருதுகளுடன் வருகின்ற
உப்பு வணிகர். ஒழுகை = வண்டி.
மகாஅர் அன்ன = பிள்ளைகளைப் போன்ற. நகாஅர் = பல்.
நளிநீர் முத்தம் = செறிந்த நீரோட்டமுள்ள முத்து.
எருந்து = கிளிஞ்சல். நல்கூர் நுசுப்பு = மெலிந்த இடை.
உளர் இயல் ஐம்பால் = அசையும் தன்மையுடைய ஐந்துவகைப்
பின்னல் கூந்தல். உமட்டியர் = உப்பு வணிகப் பெண்டிர்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்