பகுதி 53 / 102
எமக்குத் தென்றல்; எதிரிக்கோ புயல்!
அச்சுப் பக்கம் 265–268 · ஸ்கேன் 277–280 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 279
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
எமக்குத் தென்றல்; எதிரிக்கோ புயல்!
மேகத்தைப் பிழிந்து நீரெடுத்து - மலைகளின்
தாகத்தைத் தீர்க்கின்ற குளிர்காற்று;
மெல்ல நடைபயிலும் மேன்மைமிகு தகடூர் நாட்டில்
வெல்லத் தமிழ் சுவைக்கும் அதியமான் நெடுமானஞ்சி வேந்தன்;
அத்தாணிமண்டபத்தில் வழக்கம்போல் ஆன்றோர் சான்றோர்
கொத்தான மீசைகொண்ட தளபதிகள் அமைச்சர் பெருமக்கள்,
அமர்ந்திருந்து நாட்டுவளம் பெருக்க அரிய கருத்துரைகள்
அள்ளிப்பொழிந்தபோது; அகமகிழ்ந்து பாராட்டிப் புகழ்ந்தேத்தி
அதியமான் நெடுமான் மன்னன் அனைவரையும்
வாழ்த்திநின்றான்!
அதுகண்டு ஒளவைப்பிராட்டியார் ஆனந்தக்கண்ணீர் ததும்ப;
முடிமன்னன் முகம்பார்த்து முறுவலித்துக் கவிதையொன்றை
முல்லைப்பூச்சரம்போலத் தொடுத்தெடுத்து என்றும் அழியாத
முத்தாரமாய்ப் பதியவைத்தாள் புறப்பாட்டில்! அந்தச்
சத்தான செய்யுள் தரும் உவமைநயம் உணர்ந்துமகிழ்க!
பற்றும் பாசமும் பரிவும் கொண்டு தன்னைச்
சுற்றியிருப்போர் யாவரேயாயினும் அவர்பால்
அதியமான் காட்டும் அன்பும் பண்பும், அத்துடன்
எளிமையாய்ப் பழகிடும் இனிமைத்தன்மையும் ஒரு
தலைவனுக்குரிய தகுதியாமன்றோ! இந்தத்
தமிழ்நிலம் பெற்ற பெருமையாமன்றோ!
நினைத்துப் பார்த்தாள் நெடுமானஞ்சியின் இனிய இயல்பை;
தேனில்
நனைத்துக் கோத்தாள் தமிழ்க்கனிகளைக் கவிதையாய்!
“இமைபோலும் இந்த நாடு காக்கும் காவல் அரணே!
எமையறிந்து எளிமையுடன் பழகும் தலைவா!
உனையெண்ணும் போதெனக்கு நான் கண்ட
யானையொன்றின் நினைவே மிகும்!
உவமையாக அதன் செயலை ஒப்பிடுதலே
உனக்குத்தகும்!
நீர்த்துறையில் இளைஞர்கூட்டம் நிறைந்து நின்று
தனது
நீண்ட தந்தத்தைக் கழுவிக் குளிப்பாட்டும் போழ்து;
பிஞ்சுப்பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள்போல
- அவர்கள்
அஞ்சுவதற்கெதுவுமின்றி எளிதாய்த்தோன்றும் அந்த யானை!
அதன் எளிய தன்மைபோல எமை அணுகிப் பழகும்
நீயும்;
மதம் கொண்டால் அந்த யானை மருண்டெழுந்து
கிளம்புதல் போல்
மாற்றாரின் படைகண்டால் மண்ணதிர விண்ணதிரப்
புயற்
காற்றாக மாறிடுவாய்! பகையொழிக்கச் சீறிடுவாய்!
இளஞ்சிறாருடன் நீர்த்துறையில் நிற்கின்ற யானைபோல
எம்மனோர் மனம் மகிழ எளியவனாய் நீ திகழ்ந்திடினும்;
எதிரிகளின் முன்னால் நீ கனல் கக்கி நிமிர்ந்து நின்று நோக்குங்கால்;
அதிரடிகள் எடுத்து வைக்கும் மதயானை போலன்றோ விளங்குகின்றாய்!”
அனுபவத்தில் ஒளவை கண்ட யானையின் செயலிரண்டினையும்
அதியமான் மன்னனுக்குப் பொருத்திப் பாடியதின் அழகே
அழகு!
“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும, எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே!”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 94
பாடியவர் : ஒளவையார்)
பொருள் விளக்கம் :
குறுமாக்கள் = இளம்பிள்ளைகள். கோடு = தந்தம்.
கழாஅலின் = கழுவுதல் காரணமாக.
கடாஅம் = யானைக்குப் பிடிக்கும் மதம். துன் = நெருக்கம்.
ஒன்னாதோர் = பகைவர்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்