பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 52 / 102

அன்றைக்கே ஒரு கண்ணகி!

அச்சுப் பக்கம் 261–264 · ஸ்கேன் 273276 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 275

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

அன்றைக்கே ஒரு கண்ணகி!

சிலப்பதிகாரமெனும் செந்தமிழ்க் காப்பியத்தை
சேர இளவல் இளங்கோவடிகள் எழுதிடும் முன்பே;
செவிவழிக் கதையாய்ப் பழங்காலத்தில் பரவி;
சிறப்புற்றுலவிய கண்ணகியின் கதைக்கு,
சங்கத்தமிழில் சில புலவர்கள் படைத்துள
செய்யுள் மலர்களே தக்க சான்றாம்!

மலைத்தோள் படைத்தவனாம், மாளாது அள்ளி வழங்குவானாம்
மயிலுக்குப் பொன்னாடை பரிசாகத் தந்தவனாம்
பேரறிவுப் பெருமக்கள் பாராட்டிப் புகழ்ந்துரைத்த
“பேகன்” எனும் பெயர்படைத்த மன்னவனாம்! அவன்,
“கண்ணகி” என்கின்ற கட்டழகுப் பெட்டகத்தைக்
கற்பின் திருவுருவை - கண்ணியத்துக் களஞ்சியத்தைக்
கரம்பிடித்து இல்வாழ்வில் களிப்புற்றிருந்து பின்னர்
மரம் விட்டு மரம் தாவும் குரங்குமனம் கொண்டுவிட்டான்!

பிற்றைநாளில் “பழனி” யென்று ஆகிவிட்ட ஊர்தான்
அற்றைநாளில் “பொதினி” என அழைக்கப்பட்டு; ஆங்கே
ஆவியர் குடியிற்பிறந்த குறுநில மன்னர் பலரில்
காவியத்தில் ஏறும் தலைவனாகும் பேறு பெற்றவன்தான்
வையாவிக் கோப்பெரும் பேகன் எனும்
வள்ளலாவான்; பகைவர்க்கு வளையாத வீரனாவான்!

வளமிகு பகுதியிலும் வீணாய்ப் பொழிந்து வழிந்து
களர்நிலப் பகுதியிலும் பெருகிப் பெய்திடும்
மழையின் தன்மைபோல் பாகுபாடின்றிக் கொடையளிக்கும்
மனங்கொண்ட மன்னன் பேகனைக் குறித்து,

1.

“கொடைமடம் படுத வல்லது
படைமடம் படான்” என்று

பரணராம் பெரும்புலவர்
பாடிமகிழ்ந்தார் பார்புகழ் பெருமை!

இல்லாதார்க்கு மட்டுமன்றி இருப்போர்க்கும்
இனிய பரிசில் பல வழங்குவான் என்பதால்;
கொடைமடம் படுதல் என அதனைக் குறைத்துக் கூறினும்
படைமடம் படாமல் பகைவர் தகுதியறிந்து போரிடுவான்
தடைபடாத் தமிழருவித் தமிழால் பரணர்
கொடைமகன் சிறப்பைக் குன்றம் ஏற்றினார்!

என்று;
வல்லூறை எதிர்த்து வண்ணக்கிளி வென்றதுபோல்
நல்லூர்ப் பரத்தையெனும் ஒருத்தி பேகனை வீழ்த்திவிட்டாள்!
விழியிரண்டைக் கணைகளாக்கி அவன் நெஞ்சில் தாக்கி;
மொழியினிலே தேன்கலந்து தன் மடியடிமை ஆக்கி;
பன்னீரால் குளிப்பாட்டிப் பக்கத்தில் கிடத்திவைத்தாள்;

கண்ணகியோ,
கண்ணீரால் நனைந்திட்டாள்; கவலையே ஒரு வடிவானாள்!
மாளிகையின் நல்விளக்கு மதிப்பற்றுக் கிடக்கும் நிலை
மன்னவனை நினைத்தழுது ஒளிமங்கிப்போன நிலை
எடுத்துரைத்துக் கபிலர் எனும் தமிழ்க் கிழவர்;
தடுத்துரைத்தார் - பரத்தையின் தழுவல் விடுத்து;
விரைந்திடுக கண்ணகியாள் வீட்டுக்கென்று
வரைந்தளித்தார் சங்கப்பாடல் ஒன்று!

2.

அந்தப்
“இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்வாள்”
பொன்மானின் துயர்துடைக்கப் புறப்படுக மன்னா; என்றார்!

3.

“அருளா யாகலோ கொடிதே” என்று அவளுக்காக
அன்பு காட்டாவிடில் அது மிகக்கொடிது என்றார் பரணர்!

அரிசில் கிழார் எனும் கவிஞரோ அவனைப் பார்த்து;
பரிசில் பெற வந்தாராயினும் அதனை விடுத்து,
கலாபத்தின் தோகையெனும் கண்ணகியின் கூந்தலிலே
கமழ் மணப் புகையேற்றி களிப்பு துள்ள; அவள்,
கழுத்தினிலே மாலைசூடிக் கலந்து மகிழ ஒரு
கணத்தினிலே புரவிகளைத் தேரில் பூட்டிடுக என்றார்!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Full-page colour illustration associated with அன்றைக்கே ஒரு கண்ணகி!

4.

“கலிமயிற் கலாவங் கால் குவித்தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீ இத்
தண் கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே”

அரிசில் கிழாரை அடுத்து பெருங்குன்றூர் கிழார் எனும்
அன்னைத் தமிழ் ஈன்ற அரும்புலவர் ஒருவர்;
“ஆவியர் கோவே! உன் ஆருயிர்க் கண்ணகியின்
அல்லல்போக்கி அகமலர முகமலர அவளை அழைத்து;
வாழ்க்கை அளித்திட உடன் முன்வருவாயானால் - நீ
வழங்கும் பெரிய பரிசில் எமக்கு அதுவேயாகும்;

5.

“அதுமனெம் பரிசில் ஆவியர்கோவே”

என்று,
அவன்முன் நின்று கருணைகேட்டார் கண்ணகிக்காக!
புலவர்கள் உரைத்த மொழியால் தனது பொல்லாங்குணர்ந்து
பூட்டினான் தேரினை! பறந்தான் புயலாய்!
புதுவாழ்வு மீண்டும் பூத்தது என்று
மதுமலர்மங்கை, தென்றலாய் மாறினாள்!

மூலக் குறிப்புகுறிப்பு : 1, 2, 3, 4, 5 - புறநானூறுப் பாடல்களில் உள்ளவை.
(முறையே - பரணர், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் - ஆகிய நால்வர் பாடியவை)
பாடல்கள் - 142, 143, 144, 146, 147.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்