பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 51 / 102

நாடு வாழவும் நலிவு தீரவும்...

அச்சுப் பக்கம் 257–260 · ஸ்கேன் 269272 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 271

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

நாடு வாழவும் நலிவு தீரவும்...

காஞ்சியினை ஆண்டமன்னன் தொண்டைமான் இளந்திரையன்;
கவிதைபுனையும் ஆற்றலுடன் கடமையுணர்வு மிகவுடையோன்!
கடல்வழிவந்தவர் இக்காவலனின் முன்னோர் எனக் கதையுண்டு!
காதலில் தோய்ந்த சோழன்கிள்ளியும் நாகமகள் பீலிவளையும்;
பெற்றெடுத்த பிள்ளைக்கனியமுதாம் இளந்திரையன்
பிழைத்தெழுந்தான் கலம் மூழ்கிக் கடலில் என்றும் - அந்த
மாவீரனே காஞ்சியினைத் தலைநகராய்க்கொண்டு
தொண்டைநாட்டு மகுடம் புனைந்தானென்றும் “மணிமேகலை” இலக்கியம் கூறும்!

தொண்டைக்கொடியொன்று பற்றிக் கடலோரம் சேர்ந்ததனால்
தொண்டைமான் என்கின்ற அடைமொழி சார்ந்ததென்றும்;
திரையென்றால் அலையன்றோ; அத்திரைமீது மிதந்துவந்து
தரையாளும் இளம் மன்னனாய் வாய்த்ததாலே,
இளந்திரையன் எனும் சிறப்புப் பெயர் பெற்றானென்றும்
இனியதமிழ்க் காப்பியமாம் மணிமேகலை; மேலும் இயம்பும்!

இறையனார் அகப்பொருள் உரையுள் நக்கீரனார்
“இளந்திரையம்” எனும் நூல் இவன் இயற்றியது என்பார்!
அதியமான் நெடுமானஞ்சிக்காகத் தூதாக வந்து
ஒளவை வாதாடியதும் இத்தொண்டைமானிடம்தான் என்பர்!
நன்னூலுக்கு உரைகண்ட மயிலைநாதர்;
நல்லூராம் “திரையனதூர்” இவன்பேரால் அமைந்ததென்பார்!
நற்றிணையில் மூன்றுபாடல் இளந்திரையனின்
கற்றறி நெஞ்சக் கற்பனைக்கு எடுத்துக்காட்டாம்!

நாடாளும் மன்னர் பலர் இவன்பால் நட்புக்கொண்டு
நாடியிவன் மாளிகைக்கு விருந்தாக வந்திடுவர்; இவனோ

அவரையெல்லாம் வரவேற்று அவர்க்கு வேண்டுவன
வழங்கி -,
அரசுதனை நடத்துகின்ற அறவழி பலவும் அன்பாய்
விளக்கிடுவான்!

அவ்வாறு ஒருமுறை அவன் தந்த அரசியல் அறிவுரைதான்;
சவ்வாது மணங்கமழும் சங்கப்பாட்டாய் சாகாது
வாழுதென்பேன்!

“வண்டிக்காலாம் உருளையையும் - அதன் அச்சுத்
தண்டில்; பாரையும் கோத்தமைத்துப் புவியில்
செல்லும் வழி தெளிந்து செம்மை நெறி உணர்ந்து
ஒல்லும் வகையெல்லாம் ஒழுங்கான பாதையிலே
செலுத்திடும் வண்டியைப்போல் செங்கோலும்
சிறப்பெய்தி மாண்பு தரும்; செழுமை வரும்!
அல்லால்;
வண்டியைச் செலுத்துகின்ற மனிதன் - அதனைக்
கண்டவழி செலுத்தினாலோ ஆரக்கால் பதியும்
ஆழ்பகைச் சேற்றினிலே!
மனம் போன போக்கெல்லாம் மண்ணாள்வோர் சென்று
குணம் கெட்டுத் திரிவரேல் குட்டிச்சுவராகும் நாடு!
நலிவுற்ற மக்கள் வலிவற்ற ஆட்சி;
நாள்தோறும் பொலிவற்றுப்போகும் தொழில்கள் எனப் புதைந்துவிடும்;
எல்லாமே!”

இளந்திரையத் தொண்டைமான் மன்னன் அன்றைக்கு
எடுத்தாண்ட உவமையது என்றைக்கும் பொருந்துமன்றோ?
வளமிகு நாடு கண்டு மக்கள் வாழ்விலே புதுமை செய்ய
உளமது பக்குவப்படுதல் வேண்டும்; அந்த உண்மையை
உரைக்கும் பாடல் இஃதே!

“கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக் கூழ் அள்ளற்பட்டு, மிகப்பல
தீநோய் தலைத்தலைத் தருமே.”
முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Full-page colour illustration associated with நாடு வாழவும் நலிவு தீரவும்...

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 185
பாடியவர் : தொண்டைமான் இளந்திரையன்)

பொருள் விளக்கம் :

கால்பார் = வண்டிச் சக்கரமும் பாரும்.
சாகாடு = வண்டி. உகைப்போன் மாணின் = செலுத்துவோன்
செம்மையாக இருப்பின். ஆறு = வழியானது.
உய்த்தல் தேற்றான் = செலுத்தும் வகை அறியாதவன்.
பகைக்கூழ் அள்ளல் = ஆழ்ந்த பகைச் சேறு.
வைகல் = நாள்தோறும். தலைத்தலை = மென்மேலும்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்