பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 50 / 102

பழி தீர்த்துப் பகை முடித்தாள்!

அச்சுப் பக்கம் 251–256 · ஸ்கேன் 263268 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 265

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பழி தீர்த்துப் பகை முடித்தாள்!

துள்ளி வரும் வேல் கொண்டும் - ஆவேசத்தை
அள்ளி வரும் வாள் கொண்டும்
பள்ளி செல்லாப் பருவத்து இளங்கொழுந்தும்
கிள்ளி எறிவேன் பகையை என்று
கிளர்ந்தெழுந்த காலம் அது - தமிழர்க்குத்
தங்கமென வாய்த்த காலம் - புலவர் பலர்
சங்கம் வளர்த்த காலம்! வீரர்
பொங்கும் புலியெனப் போர்க்களம் சென்றனர்
மங்கல மங்கையர் அவரை வாழ்த்தியே நின்றனர்.

காற்றடிக்கும் போதும் - அதில்
தமிழ் வீரம் வந்து மோதும்! கடலின்
அலை உயர்ந்து கிளம்பும் - அதில் தமிழன்
நிலை உயர்ந்து விளங்கும்!
அகிலின் புகை மணக்கும் - அதிலும்
தமிழின் புகழ் மணக்கும்!
முகிலிடை எழில் மதி தோன்றும் - அதில்
முத்தமிழ்க் காவிய நிதி தோன்றும்!

அவனிபுகழ் பெருநிலத்தை ஆண்டிருந்த
அசோக மன்னன் கூட தன்
ஆட்சிக்கு உட்படாதோர்
ஆற்றல் மிகு தென்புலத்தார் என்று சொன்ன;
தென்னகத்துத் திண்தோள் இனத்தாரில்
தீரம் நிறை கோசர் எனும் ஒரு பிரிவு!
வீரம் விளைக்கின்ற திறன் படைத்தோர்.
தூய்மை சேர் வாய்மைக்குப் பேர் பெற்றோர்.
துளுநாடு நீங்கிக் கீழ்க் கடல் வரையில்
அலைந்து திரிந்த போக்கினை நிறுத்தி
“நியமம்” “செல்லூர்”ப் பகுதியிலே நிலைத்ததாய் வரலாறு!

“செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம்”

அகநானூறு இலக்கியம் அறிவிக்கும் செய்தி இது.
“அன்னி”யென்றும் “மிஞிலி”யென்றும் அகப்பாட்டு;
அடலேறுத் தமிழ் வீரர் இருவரை அறிமுகம் செய்யும்.
இருவீரர் பெயர் இணைத்து இளையவள் ஒரு தமிழ் மகள்
புருவத்தை விழியைப் போர்க் கருவியாக்கிக் காளையரை

வீழ்த்துகின்ற

பருவத்தாள் எனினும், பண்புடைய திருக்குமரி!

தழுவத்தான் பலர் துடித்தார் - கோசர் சிலர் அவர்
தந்தையிடம் பெண் கேட்டார். மறுத்துவிட்டார்.
“அன்னிமிஞிலி” எனும் அழகு நங்கை
அமர்க்களத்தில் உயிர்நீத்த அன்னி யெனும் வீரன்போல்
அனல் உமிழும் கற்புடையாள்!
“ஆய் எயினன்” எனும் வீரனை வென்று வீழ்த்தி
நன்னனது ஊரினையும் தனதாக்கிக் கொண்ட
“மிஞிலி” எனும் வீரனைப் போல் உறுதி மிக்காள்!

நிலவுச் சித்திரம் போல் - நீரில்
உலவு நீள்விழிக் கெண்டை போல்
குலவிடும் கிள்ளைப் பெண்ணாள் - நற்
கலவிக்கு ஏற்ற கண்ணாள்
என நினைத்து இளித்து வந்த சில கோசர்களை
என்ன நினைத்தாய் என் மகளை எனக்கேட்டு
கன்னலடா என் செல்வி அதைக் கடுங்குரங்கின்
கையில் தரச் சம்மதியேன்! அவள்
எண்ணமெலாம் அழுந்தூரான் மீது அறியீரோ?
திதியன் எனும் அவ்வூர்க் காவலனே அவளுக்கும் காவலனாம்!
அடுத்தொருமுறை வருவது கூடாது - நான்
எடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டு நடந்திடுக உடனே
என்றார்!

வாய்மை நிறைக் கோசரிலும் வன்னெஞ்சம் கொண்டோர் சிலர்
வாழ்ந்திட்டார் என்பதுதான் வரலாறு! அவர்
வகுத்திட்டார் ஒரு திட்டம் வஞ்சியினைக் கைப்பற்ற!
பயற்றம் பயிர் விளையும் பாங்கான நிலங்கள் பல
நியமத்தில் நிலைத்திட்ட கோசர்க்கு உரிமைச் சொத்து!
பசுவொன்றே அன்னி மிஞிலியின் அன்பான குடும்பச் சொத்து!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

பயங்கரத் திட்டத்தால் அப்பசுவை விரட்டியடித்துத் - தங்கள்
பயற்றம் பயிர்க்காட்டில் மேயவிட்டார் சில கோசர்!
பசித்திருந்த பசுவுக்குப் பயிர்க்காட்டு மேய்ச்சலென்றால்
பாய்ந்து சென்று தின்னாமல் பயந்து கொண்டா ஓடிவிடும்?

பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையெல்லாம்
கூட்டாகச் சேர்த்துத் தின்று உப்புகின்ற
கொடும் ஆதிக்க வர்க்கத்தின் தொப்பையைப் போல்
இனியில்லை இடமென்ற அளவுக்கு உப்பியது அந்தப்
பசுவின் வயிறு!

கனியில்லை என்று சொன்ன கிழவனது
கண்ணில்லை என ஆக்கிவிட்டால் - பின்னர்
துணையில்லை தோகைக்கு! எல்லோரும் அந்த
இணையில்லாப் பேரழகைப் பகிர்ந்து கொள்வோம்
இப்படித் திட்டமிட்ட இழி குணத்தார்;
செப்படி வித்தை காட்டிச் செயல்புரிந்தார்.

அன்னி மிஞிலியின் அப்பனைக் கூண்டிலேற்றி
அன்றந்தப் பயற்றங்காட்டில் பசுமேய்ந்த கதையைச் சொன்னார்.
ஊர்மன்றக் கோசர்களும் உண்மை என்ன உரைப்பீர் என்றார்!
கார்கொண்ட வானம் போல் முகம் கறுத்து அக்கிழவர்;

“யார் கண்டது என் பசு மேய்ந்ததை? என நான்
கேட்கமாட்டேன்;
பார் எதிர்ப்பினும் பொய் சொல்லாப் பரம்பரை நான்
பயற்றம் பயிரை என் பசு மேய்ந்தது உண்மையே!” என்றார்.

குற்றத்தை ஒத்துக் கொண்டான் - அதனால்

குத்திப் பெயர்த்திடுக அவன் கண்ணையென்று

கோசர்களின் மன்றத்தில் தீர்ப்புச் சொன்னார்.
அடுத்த கணம் அன்னி மிஞிலியின் தந்தையை இழுத்துச்

சென்றார்

பழுத்த கிழம் - பாவம்; அவர் கண் இரண்டும் பெயர்த்துச்

சென்றார்;

“பார்வையினை இழந்தீரோ அப்பா நீங்கள்!
பழிவாங்காமல் விட மாட்டேன் பாவிகளை”யென்று
போர் முரச ஒலியெழுப்பி மகள் அழுதாள்!

“கண்ணை அழித்துவிட்டு உன்னைக் களவாட எண்ணிவிட்டார்!
கற்பெனும் வாளேந்திய என் பெண்ணை நெருங்கிட
எவனுக்குத் துணிவுண்டு?”
தந்தை பேசி முடிப்பதற்குள் தணலில் நின்றவள் பதில் சொன்னாள்.

“உயிர் போன்ற தந்தையினைக் குருடாக ஆக்கியவர்தம்
உயிர் போகுமட்டும் - நான்
உண்கலத்தில் உண்ண மாட்டேன்.
உடை மாற்றம் செய்ய மாட்டேன்.
பழிவாங்கித் தீரும்வரை பசி தூக்கம் எதுவுமில்லை!
பகை முடிப்பேன்! பார்வையிழந்த தந்தைக்குப்
பலி கொடுப்பேன் எதிரிகளை!”

அன்னி மிஞிலியின் சூளுரை அடுத்த நாளே
அழுந்தூர்த் திதியனுக்கு எட்டியது.
கன்னியவளுக்கு உற்ற துயர் கேள்விப்பட்டுக்
கவலை கொண்டான். அவளைக் காணத் துடித்தான்.
செவியில் செய்தி நுழைந்ததைத் தொடர்ந்து
செந்தீப் பிழம்பென தன்னெதிர் நின்ற “அன்னி” யைக்
கண்டான்.

“கண்ணுக் கினியவளே! கருத்துக்கு ஏற்றவளே! உன் இதயப்
புண்ணுக்கு மருந்திட வகையறியேன் வழியறியேன்” என்று
நொந்தான்.

“குதிரைப் படையுண்டு உன் கோட்டையில் மன்னா!
குன்றனையத் தோளுண்டு உனக்கு என் கண்ணா!
அன்னி மிஞிலியாம் என்னை நீ காதலிப்பது உண்மையெனில்
அட்டியின்றிப் புறப்படுக போருக்குக் கோசர் மீது!
அந்தகராய் ஆக்கிவிட்டார் தந்தையினை - அந்த
அநியாயக்காரர்களை வீழ்த்த வேண்டும்.
கண்குத்திப் பாம்புகளைத் துண்டாடும் கீரியென்று
திண்தோள் திதியனைத் தேடி வந்தேன்” என உரைத்தாள்.

“வாளுறை விட்டு எழுந்தது பார்! என்
சூளுரை யொன்றும் அறிக அன்பே!
உன் தந்தையாம் - என் மாமனுக்கு ஊனம் விளைத்தோர்
உயிர் போக்கித் திரும்பிய பிறகே
உனைத் தீண்டும் என் கரங்கள்;”
ஆர்ப்பரித்தான் அழுந்தூரான்!

போர்ப்படை கிளம்பிற்று!
பொல்லாக் கோசர் உடல் நொறுங்கிற்று
நில்லா நெடுஞ்சுவர் போல் வீழ்ந்திறந்தார்.
விரும்பிய வாறு சூளுரை முடித்தாள்
திரும்பிய திதியனின் தோளில் சாய்ந்தாள்!
அரும்பிய காதல் அன்றே மலர்ந்தது!
அகநூல் பாடல் இதற்கு அடிப்படையானது.

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்,
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்,
இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப்,
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென,
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது,
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து,
அவர் இன்உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி.”

மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 262
பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

முதைபடு பசுங்காடு = பழைமையான பசுமையுள்ள காடு.
அரில்பவர் மயக்கி = பின்னிக் கிடக்கும் கொடிகளை அழித்து.
பகடு பல பூண்ட = எருது பூட்டிய. இடுமுறை = எருவிடுதல்.
பாசிலை அமன்ற பயறுஆ புக்கு = பச்சைப் பயற்றங் கொடியில்
பசு மேய்ந்திட. நவைத்த = கொடுமை புரிந்த.
வாலிது = தூய உடை.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்