பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 49 / 102

பஞ்சணையில் அரசி; பாசறையில் மன்னன்!

அச்சுப் பக்கம் 245–250 · ஸ்கேன் 258262

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பஞ்சணையில் அரசி; பாசறையில் மன்னன்!

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை
அழகாக வகுத்துக்கொண்டு
அன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற இனம்
அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்று
ஆயிரங்காலத்துப் பயிராக நமக்கு வாய்த்த
ஆன்றோர் செய் இலக்கியங்கள் சான்று கூறும்!

அதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டெனினும்,
ஆரம் போல் கோத்தளித்தார் நக்கீரனார்;
பத்துப் பாட்டுள் - ஒரு
முத்துப் பாட்டாய்த் திகழ்கின்ற
“நெடுநல்வாடை” எனும் தமிழ் அமுதம்! அது;
நெடுஞ்செழிய பாண்டியனின் வீரம் சொல்லி,
நீண்ட நாள் அவன் பிரிவால் ஏங்குகின்ற
நேரிழையாள் கோப்பெருந்தேவி மனம்;
நெருப்பாகச் சுடுகின்ற நிகழ்வைக் கூறி,
அகம், புறம் எனும் வாழ்க்கை
அந்நாள் தமிழகத்தில்
இகம், பரம் என்ற கூற்றுக்கே
எதிரிடையாய் இருந்த நிலை
எடுத்தியம்பும் நூலாகும்!

தலையாலங்கானத்துப் போர்க்களத்தில்
தனிமையில் ஓர் இளைஞன் சிக்கினான் என்று
தவறாகக் கணக்கிட்ட ஏழு மன்னர்
தடந்தோள் புழுதிபடத் தோற்றே போனார்!
அதன் பின்னர் நெடுஞ்செழியன்
அன்றிலென வாழ்வோமென்று

அழகு மணிப்புறாவொன்றை
அரசியென ஏற்றுக்கொண்டான்.....
இளவயதில் போர்முனையில்
எழுவர்படை வீசிய வேல்வாள் பட்ட
விழுப்புண்கள் ஆறிப்போய்
வடுக்களாய் மாறிப்போயிருப்பினும் - அவை;
பாண்டியன் மார்பகத்தில் - தங்கப்
பதக்கம் போல் மின்னுவதாய்
எண்ணிக்கொண்டு எழிலரசி;
எண்ணாமலே கொடுத்திட்டாள் முத்தம்; நித்தம்!

மணமுடித்து மஞ்சத்தில்
மனங்கவர் அஞ்சுகத்தை
கணநேரம் பிரியாமல் இரவெல்லாம்
கட்டிய கட்டுக் குலையாமல் இருப்பதற்கு
காலம் இடம் தரவில்லை... போர்க்
களங்களின் அழைப்போ பெரும் தொல்லை!

தலையாலங்கானப் போருக்குப் பின்னும் - அவன்
தலைமையேற்று வென்றிட்டான்;
“வேள் எவ்வி”யெனும் மன்னவனின் மிழலைக் கோட்டம்!
வாள்வீரர் முத்துவேளிர்க்குரிய
முடியினைப் பறித்து - அவர்தம்
முத்துக் கூற்றமும் கவர்ந்திட்டான்!
“சேரமான் யானைக்கட்சேய் இரும்பொறை” என்னும்
வீரமா மன்னன் படையழித்து, அவனைச்
சிறைதனில் அடைத்துப் போட்டு விட்டான்!

இவ்வாறு
மலைமலையாய் வெற்றி மாலை குவித்திடவே
அலைஅலையாய்ப் படைகொண்டு ஆர்ப்பரித்துக் கிளம்பியதால்
குலைகுலையாய்ப் பழமிருந்தும் உண்ண முடியாமல்
நிலைகுலைந்து துடிக்கின்ற பறவையைப் போல
பாண்டிமாதேவியவள் பதைத்திட்டாள்.....
பகல் இரவுப் பொழுதுகளை நகர்த்த முடியாமல் கண்ணீர்
வடித்திட்டாள்!

வாடையெனில் குளிர் காற்று தாக்குமன்றோ!
ஆடை போர்த்தாவிடினும் ஆண்மகனின் மேனி போர்த்தி
ஆரணங்கும்; ஆரணங்கின் மேனி போர்த்தி
ஆடவனும்; அக்குளிர் காற்றை வெல்வாரன்றோ!

இங்கென்ன நிலையென்றால் பாண்டி மன்னன்
பொங்குற்றே சென்றுவிட்டான் போர்முனைக்கு!
வீரம் விளைக்கின்ற வெம்மையிலே வாடைக்காற்றின்
வீண்மிரட்டல் பலிக்கவில்லை வேந்தனிடம்!

ஆனால் அரசியின் நிலையோ; அந்தோ! பரிதாபம்!
பாட்டுப் புலவர் நக்கீரனார் பாடுகின்றார்;
வாடைக் காற்றின் குளிர் தாங்க மாட்டாமல்
வீட்டுக் கோழிகள் படும் பாட்டைப் பாரீர் என்று!
பெட்டையும் சேவலும் பெருவெளியில் திரிந்து
இட்டமுடன் இரைதேடித் தின்று மகிழ்ந்து
இன்பமாய்க் கழித்த நாளெல்லாம் சென்று; இன்று
இரவெது பகலெது எனத் தெரியாது திகைத்து
அடைத்திருக்கும் பலகைக் கூண்டுகளுக்குள்ளே
அடுத்தடுத்துக் கடுக்கும் கால்களை மாறி மாறி வைக்குமாம்!

இவ்வண்ணம்
கொல்லுகின்ற வாடையிலே - நெஞ்சில்
துள்ளுகின்ற காதலுடன்
புள்ளிமயில் புரளுகின்றாள்; படுக்கையிலே! - யாரும்
வெல்லவொண்ணா தமிழ் எடுத்து - “நெடு
நல் வாடை” தீட்டுகின்றார் நக்கீரனார்!

கொடுமுடியன்ன உயர்ந்த கோபுரம் - அதில்
கொடிகளோ வானவில்லென வண்ணங் காட்டும்!
திண்ணிய நீலமணி நிறம்படர்ந்த தூண்களிலே
வெள்ளியைத்தான் வெண்சாந்தாய்ப் பூசினரோ?
செம்பினால் படைத்திட்ட மதில் சுவரோ எனும் படி
செப்பரிய வலிவுடனே அமைத்திட்ட
செழியனது அரண்மனையைச்
செந்தமிழால் சித்தரிக்கும் நக்கீரர்;
சிந்தையெலாம் அவன் நினைவால் துவளுகின்ற
செம்பருத்தி இதழ்ப் பெண்ணாள் பாண்டிராணி;
படுத்திருக்கும் மஞ்சத்தைப்
பாட்டாலே காட்டுகின்றார் பார்த்திடுவீர்!
முரசுபோல் கால்கள் கொண்ட
முரட்டுப் போர் யானையொன்று
முற்றாக நாற்பது வயது சென்று
போர்த்தொழில் புரியுங்கால் இறந்துவிட - அதன்
கூர்த் தந்தம் இரண்டெடுத்து கோலச்
சீர் தந்து அழகூட்டி அமைத்த கட்டில் - அதில்,

சூல் கொண்ட மகளிர் கொங்கை
பால் கொண்டு வீங்கியது போல்
நாற்புறமும் திரண்டுருண்ட
நல்லழகுக் கலசங்களாம்!
முத்து மணிமாலைத் தொங்கல்களாம்!
முல்லை மல்லிகை மலர் ஓவியமாம்!
அரிமா வேட்டையினைச் சித்தரிக்கும்
அரிய கலை நுட்பம் திகழ்கின்ற போர்வையுடன்,
அன்னத்தின் இறகெடுத்து செய்திட்ட
அணை, தலையணை, சாயணை அனைத்தும் கொண்ட பஞ்சணை!

ஆனால் அங்கு;
“அணை” என்று சொல்லத்தான் அவனில்லை; அதனாலே
அணையுடைத்துப் பெருகிற்று அரசியாரின் துன்ப வெள்ளம்!
அடி வருடினர் செவிலியர்கள்
“அம்மையே உறங்குக” எனக் கூறி!
“அடி போடி வேலையில்லை உங்களுக்கு”
அலறினாள் அரசியவள் மிகச் சீறி!

அங்கிருந்த வானவெளிச் சித்திரத்தில்
அருகருகே சந்திரனும் ரோகிணியும்
அகலாமல் இருத்தல் கண்டு
அப்படி நான் நற்பேறு பெற்றேனில்லை
இப்படி ஏன் நலிகின்றேன் வீணேயென்று;
நீள் இமைகளிலே எட்டிப் பார்க்கும்
நீர்த்துளியை விரல் கொண்டே அவள்
வழிந்தெறிந்தாள் எனினும்; கவலைதனை
அழித்தெழுத முடியாமல் அல்லற்பட்டாள்!

இவ்விதம்,
மதுரையின் மாளிகையில் அரசியார்
மது சுமந்து வண்டுக்கெனக் காத்திருக்கும்
மலர்க்கொடியாய்த் தவிக்கும்போது;
நெடுஞ்செழிய பாண்டியனின் நிலை என்ன?
“நெடுநல் வாடை”யிலே காணவாரீர்!
காதலொன்றும் பாண்டியனின்
கடமை உணர்வுக்குத் தடையாயில்லை!

கோப்பெருந்தேவியின் நினைவாலே - அவன்
கொண்ட குறிக்கோள் தவறவில்லை!
வாடைக்காற்று அவன் பாசறைக்கும் வந்ததுண்டு!
அதனாலே அவன்;
வாளேந்தும் போர் முகத்தை மறந்துவிட்டு,

வளையலேந்தும் கரம் நாடி ஓடவில்லை!
இங்கு;
பாண்டியன் நள்ளிரவில் புறப்பட்டான்; எதற்காக?
பஞ்சணையில் பரதவிக்கும் பத்தினியைப் பார்ப்பதற்கா?
குன்றும் நடுங்குகின்ற கூதிர்காலத்தில்
வடக்கிருந்து வீசுகின்ற குளிர் காற்றால்
தெற்கு நோக்கிச் சுடர் சாயும் தீவட்டி எனினும்
வடக்கிலோர் பாசறையில் இருக்கும் மன்னன்
இல்லை! இல்லை!
வாஞ்சைமிகு பாண்டிமாதேவிக்காகத் தெற்குத் திசை
வாடிக்கைப் பணியினை ஆற்றுதற்கு
திரும்பவில்லை!

வாளேந்தும் மறவர் சுடரேந்தி சூழ்ந்து வர
இடத்தோளில் இருந்து நழுவி விழும் மேலாடைதனை
இடப்புறக் கையால் தூக்கி அணைத்தவாறு,
வலியதோர் வாள்வீரன் தோளில் - தன்
வலக்கையினைத் தோழமையுடன் போட்டுக்கொண்டு,
மழைத்துளிகள் வீழ்கின்ற நள்ளிரவில்
மாவீரர் பலர், காயமுற்றுப் படுத்திருக்கும்
பகுதியெலாம் சென்று பார்த்தான் - அவரைப்
பரிவுடனே நலம் கேட்டு நன்றி கூறி அரவணைத்தான்!

பகல் போரில் பகைவர்களின் படையழித்து விரட்டும்போது
பழுதுபட்ட கால், கை, உடல்களுடன் படுகின்ற துயரமெலாம்
பறந்தனவாம்; தம் தலைவன் பனிப்பார்வை பட்டதாலே!
காதலனைத் தேடிப் பேரரசி கலங்குகின்றாள்; அவனோ,
கடமையினை ஆற்றுதற்குக் கால்கடுக்கச் சுற்றுகின்றான்;

பாசறையை!

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை
அழகாக வகுத்துக்கொண்டு
அன்று தொட்டு வாழ்ந்து வரும் இனம்
அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்பதற்கு
ஆதாரம் வேண்டுமெனில்
அட்டாவோ! “நெடுநல்வாடை” ஒன்று போதாதா?

மூலக் குறிப்பு(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச்
சிறப்பித்து சங்கப்புலவர் நக்கீரர் இயற்றிய “நெடுநல்வாடை”
எனும் இலக்கியத்தை அடிப்படையாகக்கொண்டு எளிய நடையில்
எழுதப்பட்டது, இது!)

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்