பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 48 / 102

குப்பைக் கோழியார்!

அச்சுப் பக்கம் 241–244 · ஸ்கேன் 254257 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 256

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

குப்பைக் கோழியார்!

காவலுக்கு நிற்கின்ற வீரனைப் போல்
கழுத்துயர்த்திக் கம்பீரம் காட்டுகின்ற
சேவலுக்குச் சினமூட்டிக் களத்திலிறக்கி - ஊரார்;
சிரித்து மகிழ்ந்து சேவல் போர் கண்டிடுவர்.
சிற்றூர் முதல் பேரூர் நகரங்கள் வரை - இந்தச்
சேவற் சண்டை காணும் வழக்கம், இன்று நேற்றல்ல;
கற்றோர் ஏத்தும் கலியும் அகமும் புறமும் பிறந்த
கடைச் சங்க காலத்துக்கு முன்பே தொடக்கம்!

ஆதாரங்களில் ஒன்று அழகு குறுந்தொகையிலுண்டு - அது;
அகத்துறைப் பாடலொன்றில் காணும் அடிக் கரும்பின் துண்டு!
பாதார விந்தம் வரை பருவத்தின் எழில் கொழிக்கும் பாவை;
படையெடுத்த காதல் நோயால் படுந்துயரம் பாரீர்!

“அன்றந்த முல்லைப் புதரிடையே ஆணழகன்; இரு
குன்றம் போல் தோளுடையான்; அரிமா நடை பயின்றான்!
சென்றங்குச் சேர்ந்து தழுவ முடியாமல் எனைக்
கொன்றிங்குச் சிறைப்படுத்திப் போட்டாளே; தாய்!
கண்களால் கண்டவுடன் என் கண்ணுக்கு மணியானான்!
‘கண்மணீ!’ என்றழைத்துக் கட்டித் தழுவிடவே
கருணை மனம் கொண்டு அவன்தான் வந்திருக்கலாகாதோ? - என்
கவலையெனும் நெருப்பாறு அவன் கைபட்டால்
நீர்வீழ்ச்சியாகாதோ?
என் செய்வேன்; என் நோய் தீர்க்கும் மருந்தாக அவனிருக்க
எதை நினைத்து நான் அழுவேன்? காதலெனும்
வன்செயலால் கடுந்தொல்லைக் காளானேன்!
மென்காற்றாம் என்னுள்ளம் புயலாக மாறியதே!
யார் தந்தும் வந்ததில்லை இத்துயரம் எனக்கு - இதனை
யார் வந்தும் தடுத்தென்னை வாழவிடப் போவதில்லை!”

தானாக வந்து தவிக்கவிடும் இத்துயரம்; அதுவே
தானாகப் போவதன்றி வேறு தடம் தெரியவில்லை!

சேவலைத் தயாரித்து சண்டைக்கு விடுவோர்
ஆவலாய் அதனை ஒன்றோடொன்று மோதவிடுவர்!
ஏவியவரே பின்னர் சண்டையை விலக்கி;
தாவிடும் சேவல்கள் தணற்சினம் தணிப்பர்!

தூண்டி விட்டுப் போர்புரியச் செய்திடவும் - எல்லை
தாண்டுமிடம் இரண்டு சேவல் விலக்கிடவும்
இடையிலே ஆட்கள் சிலர் இருப்பதுபோல்
மடை திறந்த என் துயரம் தீர்ப்பதற்கு யார் உளர்?

குப்பையிலே மேய்கின்ற கோழிகட்குள் போர் மூளும்!
கொக்கரித்து ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும்!
அந்தக் கோழிகளைத் தூண்டிவிட்டோர் யாருமில்லை; அங்கே
வந்துவிட்ட சண்டைதனை விலக்கிடவும் நாதியில்லை!

அதுபோல
“காதலால் துடித்திடுக” என்றென்னை எவருமே தூண்டவில்லை;

அக்

காதற் கனலென்னைத் தகிக்கும்போதும் யாரும் வந்து

தணிக்கவில்லை!

குப்பைக் கோழிகள் தமக்குள்ளே சண்டையிட்டுக்
கொத்திக்கொண்டு தாமே அழிவது போல்
அனுமதியின்றி என்னிதயம் புகுந்து
அணுஅணுவாய் எனைச் சீர்குலைக்கும்
அடங்காக் காதல் நோய் அகற்றி எந்தன்
அழிவைத் தடுத்திட எவருமிலையே” என்று புலம்பினாள்!

அந்தக்
குமரிப் பெண்ணின் குமுறும் நெஞ்சுக்குக்
குப்பைக் கோழிச் சண்டையினை உவமையாக்கிய
குறுந்தொகைப் புலவரின் பெயர் தெரியாக் காரணத்தால்
“குப்பைக் கோழியார்” என்றே அவரை அழைத்தனர்!
இப்படித் தமிழ் நிலத்தில் இனிய சுவை
இலக்கியங்கள் படைத்தோர் பெயர்கள் சில
எப்படியோ மறைந்தும் ஒழிந்தும் போயினுங் கூட
தப்பியதே தமிழ் இலக்கியம் பல எனக் களித்திடுவோம்!
களிப்பில் கூத்திடுவோம்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

“கண்தர வந்த காம ஒள்எரி
என்புஉற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்துஇடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலையான் உற்ற நோயே.”

மூல மேற்கோள்(குறுந்தொகை பாடல் : 305
பாடியவர் : குப்பைக்கோழியார்)

பொருள் விளக்கம் :

காம ஒள்எரி = காமமெனும் ஒளிபொருந்திய தீ.
முயங்கல் = அளவளாவுதல். அருங்காட்சியம் = காண்பதற்கு
முடியாதவளானேன். வந்துஅஞர் களைதல் = நாமிருக்குமிடம்
அவர் வந்து துயரம் களைவது. விளிவாங்கு விளியின்
அல்லது = தானே அழிந்துபோதலன்றி.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்