பகுதி 47 / 102
குறளனுக்கோர் கூனியுண்டு!
அச்சுப் பக்கம் 236–240 · ஸ்கேன் 249–253 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 250
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
குறளனுக்கோர்
கூனியுண்டு!
குதிகாலைத் தொடுகின்ற கூந்தல் கொண்ட
குமரிப் பெண் ஒருத்திக்கும்
அதிகாலைச் சூரியன் போல் ஒளிவீசும்
ஆணழகன் ஒருவனுக்கும்
காதல் முடிச்சொன்றைக் கச்சிதமாய்ப் போட்டு
கவியரசர், புவிமீது கவிதைகளைப் பொழிந்திடுவர்!
அன்னநடை, மின்னலிடைப் பூம்பாவை
அரும்பு மீசை, இரும்புத்தோள் இளங்காளை
கன்னல் நிகர் இதழ் பதித்துக் கட்டிலிலே
கலைபயிலும் காட்சியென்ன காணீர் எனக்
கற்பனையை மடையுடைத்த வெள்ளமாக்கிக்
கவிப்புலவர் காதற்கதை மொழிந்திடுவர்!
தங்கத்தை உருக்கி வார்த்த தகத்தகாய நங்கை அவளும்
சிங்கத்தின் பீடுநடை கற்றுலவும் நம்பி அவனும்
பொங்குற்ற காதலினால் ஒருயிராய் ஆகும் நிலையை
சங்கத்துக் காலந்தொட்டு சாற்றுகின்றார் தமிழ்ப் புலவர்!
இதற்கெல்லாம் மாறாக இளநாகனார் எனும் புலவர்,
இரு உருவங்களை இழுத்து நம் எதிரே நிறுத்தி
அழகென்றால் என்ன விலை? அது எங்கே விற்கும்?
அளந்து கொடுப்பார்களா? அல்லது நிறுத்துத் தருவார்களா?
எனக் கேட்கும் அவ்விருவர் இதயத்தில்
எழுந்த காதல்தனை விவரிக்கின்றார்!
குறளன் எனிலோ குள்ளன் என்றும்
கூனி எனிலோ மேனிவளைந்தவள் என்றும்
கோயில் எனிலோ மன்னன் மாளிகை என்றும்
கூறுவர் பொருளைத் தமிழில் அறிவீர்!
கோயிலொன்றில் கூனியும் குறளனும்
கொடுத்த பணிகள் முடித்துவிட்டு
அவரவர் இல்லம் திரும்பும் பொருட்டு
அரண்மனை வாயிலைக் கடந்து நடந்தனர்!
கூனியைக் கண்ட குறளன் நெஞ்சில்
கொழுந்துவிட்டு எரிந்தது காதல்! அதனை
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
அணைக்கத் தவித்த ஆழாக்கு மனிதன்; கூனியின்
அருகே நெருங்கிட நினைத்தான்!
கோலமிகு புறாக்கள் மட்டுமே காதல் கொள்ளுமா?
கொஞ்சு மொழிக் கிளிகளுக்கே இன்பம் சொந்தமா?
கோட்டான்கள் கூட உடலுறவு கொண்டு - தங்கள்
குலம் பெருக்கி வாழ்கின்ற வையமன்றோ இஃது!
அதனாலே,
குறளன் மனத்தில் கூனியின் நினைவும்
கூனியின் மனத்தில் குறளன் நினைவும்
கூடுகட்டி வாழ்ந்தன என்பது - இந்தக்
குவலயத்துக்கோர் அதிசயமல்ல!
குரங்கினமும் கோவேறு கழுதையினமும்
கொஞ்சி மகிழும் இன்ப பூமியிலே
குறளனும் கூனியுமட்டும் - உடலின்பம்
கொள்வதற்குத் தடை ஏதும் உளதோ?
உடலால் குள்ளமாயிருப்பதாலே - அவன்
உள்ளமும் வெறும் பள்ளமாய் இருந்திடுமோ!
வளைந்தவளாயிருக்கலாம் கூனி - நெஞ்சிற் காதல்,
நிறைந்தவளாயிருப்பதென்ன தீதா?
இதையெல்லாம் சிந்தித்துத்தானோ என்னவோ
இளநாகனாராம் இனிய சங்கப்புலவர்;
எடுத்தார் ஓலையினை - எழுதி
முடித்தார் “கூனி - குறளன்” காதல் உரையினை!
இதோ அது :-
குறளன் :-
கரைதனில் நிற்கின்ற மரத்தின் நிழல் - நீரின்
அலைதனில் வீழ்ந்து நெளிவது போல
தரைதனை நோக்கும் கூனுடல் கொண்டவளே!
தட்டாதே என் சொல்லை! சற்றே நின்றிடுக!
கூனி :-
“ஆண்டலைப்புள்” எனும் மனிதத் தலை கொண்ட
அதிசயக் கோழி ஈன்ற அற்புதக் குஞ்சே!
ஆள் பிடித்தால் பிடி ஒன்றிருக்கும் குறளன் உனக்கு;
அழகியென்னை நெருங்குதற்குத் தகுதியுண்டோ?
குறளன் :
கொழு பூட்டிய கலப்பையைப் போல்
கூன் விழுந்தும் மேலெழுந்தும் திகழ்கின்ற
பழுதற்ற உன்னழகு மயக்குதடி என்னை!
ஏன் மௌனம் காட்டுகின்றாய்? உன்
எண்ணத்தைக் கூறிவிடு! அல்லால்
எனை நீயே கொன்று விடு!
கூனி :-
கலப்பையைப் போலிருக்கின்றேனா? - என்ன
காலம் பார்த்தாயா - என்னை நீ கேலி செய்ய?
தூக்கி நிறுத்திய
சூதாடும் சதுரங்கப் பலகை உயரம் இருக்கின்ற நீயா
வாதாடுவது என்னுடைய அழகு பற்றி?
ஆண்பிள்ளை நீ அறிந்திருக்க வேண்டாமா; ஓர்
ஆரணங்கைக் கூடலுக்கு அழைக்கும் விதம் இதுதானா?
காளை நீ திமிர் கொண்டு விட்டதாலே
வேளை நேரம் கூடப் பார்க்கத் தேவையில்லை
என்கின்றாயா?
குறளன் :
உரித்த கொக்கு போல் உடலழகு கொண்டவளே!
உனை மார்புறத் தழுவினாலோ உன் கூனல்
நெஞ்சில் குத்தும்!
இச்சையுடன் பின்புறமாய்த் தழுவிடிலோ
“கிச்சு கிச்சு” மூட்டுமடி உன் முதுகுக் கூனல்!
பரவாயில்லையெனில் ஒன்று செய்வோம்;
பக்கம் பக்கம் நின்று பசியாறத் தழுவிக் கொள்வோம்!
கூனி :-
அரை மனிதன் நீ என்பதறியாமல் - என்ன
உரை நிகழ்த்தி விட்டாய் என்னிடத்தில்!
மரம் தழுவும் கொடி போல எனைத் தழுவப் பலர்
வரம் கேட்டு வருவது தெரியாமல்
என்ன குறை என்னிடத்தில் கண்டுவிட்டாய் - அதனால்
இன்னல் தரும் வார்த்தைகளைக் கூறிவிட்டாய்!
ஆமையொன்று எழுந்து நிற்பது போல்
ஆகாயமளாவ உயர்ந்து நிற்பவனே...
ஆகாகா!... காமன் போல் நடை வேறா? நல்ல
அழகுதான் போ போ!...
குறளன் :
இனி உன்னை இகழ மாட்டேன்...
இழிமொழிகள் உதிர்க்க மாட்டேன் - இதை
ஆணையிட்டுச் சொல்கின்றேன்; ஆருயிரே!
அரண்மனைக்குள் வந்திடுக; நாமிருவர்
தழுவிடவே தகுந்த இடம் பார்த்துள்ளேன்; என
தங்க மயிலே! தயங்காமல் வந்திடுக!
கூனி :-
நானும் உன்னை இனி ஏளனம் புரியமாட்டேன்...
தேனும் பாலும் போலத் தழுவி மகிழ்வோம் அன்பே!
அரண்மனையாம் அரசனது கோயிலுக்குள்
அணைத்து நாம் இன்பமுற்றால் - அதைக் காண்போர்;
பேய்களிரண்டு கட்டிப் புரண்டு
பிணைந்து கலவி செய்வதாகப் பேசிடுவர்!
அதனாலே
அடுத்திருக்கும் சோலைக்குள் போய்விடுவோம்.
அங்கு நாமிருவர்; ஓலைநறுக்கினை எழுதிச் சுருளாக்கி
கெட்டியாய் அரக்கு முத்திரையிட்டாற்போல்
ஒட்டிக் கிடப்போம் வந்திடுக!
கூனியின் அழைப்பு கேட்டுக்
குறளன் என்ன ஆனான்?
குதித்தோடி அவளைத் தூக்கிக் கொண்டான்!
கொத்து மலர்ச் சோலைக்குள்
கொள்ளை இன்பம் மொண்டுவிட்டார்!
“குறளன் - கூனி” என்பதெல்லாம் உடலில்தான்!
குலவி மகிழும் உள்ளமிரண்டுக்குள்
குள்ளமில்லை - நல்ல உயரம்!
கூனல் இல்லை - வானம் பார்த்த நோக்கு!
“என் நோற்றனை கொல்லோ? -
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
................
................
................
................
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்து விட்டாங்கு”
மூல மேற்கோள்(கலித்தொகை : பாடல் : 94
பாடியவர் : மருதன் இளநாகனார்)
மூல மேற்கோள்(குறிப்பு : உரையாடல் போன்ற முழுப்பாடலும்
43 வரிகள் கொண்டு அமைந்ததாகும்)
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்