பகுதி 44 / 102
காட்டில் பிறந்த கவிதை!
அச்சுப் பக்கம் 223–227 · ஸ்கேன் 236–240 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 238
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
காட்டில் பிறந்த
கவிதை!
'கரவீரம்' என்பதோர் சோழ நாட்டுச் சிற்றூர் - அங்கு
களவீரம் காட்டுகின்ற போர்மறவன் ஒருவனுண்டு! - அவன்,
கடுந்தோளால் மோதுண்டு கடல்மணலாய்ப் பொடியானோர்
கணக்கற்றோர் என்பதாலே "கடுந்தோள் கரவீரன்" என்று
புலிக்கொடி பிடித்த சோழப்படையினர், அவனைப்
புகழ்ந்து போற்றி மகிழ்ந்து வாழ்த்தினர்!
போர்வாளின் முனையால் மட்டும் தன் பெயர் பொறித்தல்
போதாதென்று
பூப்போன்ற தமிழ் பறித்துக் கவிமாலை தொடுத்திடவும் ஆசை
கொண்டான்!
ஈட்டியின் கூர்மையினைத் தடவிக் கொண்டிருந்த வீரன்;
எழுத்துக்களை விதைத்து சொற்கள் எனும் பயிர் வளர்த்தான்
அழகு தமிழ்க் கவிநெல்மணிகளை ஓலைக்கழனியிலே
அறுவடை செய்வதற்கும் ஆயத்தமாகி விட்டான்.
இயற்கையின் வார்ப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவன்
முன்னே வந்து ;
எமைப்பற்றிப் படைத்திடுக ஒரு பாடல் எனத் தவித்து
நின்றனவே!
நிலாப்பேடை நான் வானத்தில் இட்டுள்ள
நட்சத்திர முட்டைகளை எண்ணி எழுதென்று
ஒளிச்சிறகால் அவனைத் தழுவிக்கொண்டு
உயிரைத்தான் எடுத்தது விண்ணகத்து வட்ட மதி!
கிழக்குப் பூவாம் என்னை எழுதிட ஏன் தயக்கமென
வழக்கொன்று தொடுத்திட வந்துவிட்டது உதயக்கதிர்!
வெள்ளி உருக்கிக் குளிரூட்டி அருவியாய்ப் பொழியும்
புள்ளி மயில் உலாவும் மலைக்குன்றங்களோ
துள்ளி அவன் முன்னே குதித்தோடிச் சூழ்ந்து,
அள்ளிப் பருகிடுக எமதழகை என்றனவாம்!
ஒரு பந்தை எடுத்து வீசி ஆடிடும்போது
இரு பந்து குலுங்கக் குறுநகையால் கொல்லுகின்ற
மங்கையர் கூட்டம்; எழுதுக எமது
மான்விழிச் சாயல்'' என மறியல் நடத்தியதாம்!
வண்ணக் கிளிகள் வந்தன; அவனைச் சுற்றி
வட்டமிட்டு வரைக பாடல் எமைப்பற்றி என்றன!
அன்னத்தின் கூட்டமொன்று ஓடையில் படகாகி
சின்னக் கவிதை யொன்று எமைப்பற்றிப் பாடுக என
மிதந்ததே!
ஆயிரம் அழகுகளை அடுக்கிடும் இயற்கை; சிறப்புப்
பாயிரம் ஒன்றை விரும்பிக் கேட்டும் பயனிலை அவன்பால்!
காட்டுக்குள் சென்றான் - கற்பனை விரித்துப்
பாட்டுக்குக் கருப்பொருள் தேடிட முயன்றான்!
கன்னங் கருத்த மலையென எதிரே
களிறுகள் நின்று கம்பீரம் காட்டின!
கடைக்கண் பார்வையும் அதற்கெனச் செலவிட
'கடுந்தோள் கரவீரன்' எண்ணினான் இல்லை!
ஆர்த்தெழுந்த ஆண் சிங்கமொன்று
அடர்ந்த பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு
அட்டியேதும் உளதோ எனது பெருமிதத்தைக்
கட்டிவெல்லக் கவிதையாக ஆக்குதற்கு என்றதாம்!
உறைவிட்டெழுந்த வாள்போலக்
குகைவிட்டெழுந்த புலியொன்று
உன் கவிதைக்குச் சிறப்பளிக்க
என் கடுங்கோபம் போதாதோ என மடக்கியதாம்!
எமை எழுதென்று காலில் விழுந்த அழகையெலாம்
எழுதுதற்கு ஓலை எடுக்காத அக்கவிஞன்;
இறுதியிலே குரங்கின் இணையொன்றைக் கண்டு
உறுதி!உறுதி!என் கவிதை இவ்வுலகில்,
மறையாமல் வாழ்வது மிக உறுதியென
மார்தட்டிக்கொண்டு மலர்த்தமிழ்க் கவிதை யாத்தான்!
அழகு, அழகு, அழகு என
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்
அழகுமகள் கொலுவீற்றிருக்கும் அவனியிலே
அலங்கோல முகங்கொண்ட குரங்கிரண்டு
அவன் சிந்தை கவர்ந்த விதம் எவ்வாறென
அறிவதற்கு நம் ஆவல் அலைமோதுவதால்
அவன் கண்ட காட்சியினை நாமும்கூட
அவன் யாத்த கவிதையினை விழியாய்க் கொண்டு
பார்த்து மகிழ்ந்திடுவோம் பாச உணர்வுதனைப்
பாட்டில் தீட்ட அவன் தேர்ந்தெடுத்த
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
பாத்திரத்தின் சிறப்புதனைப்
போற்றி வியந்திடுவோம்!
ஓங்கி வளர்ந்திருந்த மரமொன்றின் கிளையினிலே
ஒன்றிய அன்பால் உணர்வுகள் கலந்து
ஓர் இணைக் குரங்குகள் ஆணும் பெண்ணுமாய்;
உற்சாகம் மேலிட உட்கார்ந்திருந்தன!
அவைகள் ஈன்ற இளங்குட்டியொன்றும்
அன்னையின் மடியில் உறங்கிற்றாங்கே!
தந்தைக் குரங்கு தனது துணைக்கோர் முத்தம்
தந்த பின்னர் தாவிப் பாய்ந்தது வேறோர் கிளைக்கு!
தடம் பிறழ்ந்து தடுமாறி விட்டதாலே
'தடால்' என வீழ்ந்தது தரையின்மீது!
கணவன் குரங்கு வீழ்ந்த இடத்திற்குக்
கைக்குழந்தையுடன் கடுகி விரைந்தது தாய்க் குரங்கு!
மரக்கிளை விட்டு விழுந்த ஆணோ; மலைமுகடுதட்டி மண்டை பிளந்து
மரண மடிதனில் ஆழ்ந்து கிடந்தது.
மனம் எரிதழலாக மந்தி தவித்தது.
கனவிலும் தான் பிரியாக் கடுவனைப் பிரிந்து
கணமும் உயிர் வாழ்தல் இயலாதென்று
கண்ணீர் பெருக்கிக் கதறித் துடித்து
கைகளால் முகத்தில் அறைந்துகொண்டது!
பெற்ற குழந்தையோ காட்டில் வாழும் விதம்
கற்றிடவில்லை எனினும் என்ன; என்
உற்றார் உறவினர் அதனைப் பழக்குவர் எனவே
ஒப்படைப்பேன் உடனே அவரிடம் என ஓடி
உறுதுணையாய் இருப்பீர் என் மகவுக்கென
உரைத்தோர் முத்தம் குட்டிக் கீந்தது!
அதன்பின்னர்
மனைவியாய்த் தனையேற்று
மரக்கிளையில் மஞ்சம் கட்டி
மகவொன்றும் கையில் தந்த
மணவாளன் தனைப்பிரிந்து
துடிக்கின்ற வாழ்வுதனை விரும்பாத அவ்விலங்கு
துணைவனுடன் போய்ச்சேர முடிவுகட்டி
உச்சி மலைமீதொன்றில் வேகமாய் ஏறிச் சென்று
உருத்தெரியாமல் கீழ் வீழ்ந்து உயிர்தனை விட்டதம்மா!
அழகு கொழிக்கின்ற மாந்தரிடம் அன்பின் நிழல் கூட இல்லாத நிலையும் உண்டு!
அழகென்றால் என்ன விலை எனக் கேட்கும் குரங்கினத்தின்
அன்புப் பெருக்கு கண்டு உருகிவிட்டான் அக்கவிஞன்!
“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்...
.........................”
மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் : 69
பாடியவர் : கடுந்தோள் கரவீரன்)
பொருள் விளக்கம் :
கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றென = கரிய விழியும்
தாவும் தன்மையும் உடைய ஆண் குரங்கு மரணம் உற்றதென்று.
மந்தி =பெண்குரங்கு.
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி =வாழும் வகை
கற்றிடாத வலிய குட்டியை சுற்றத்திடம் சேர்த்துவிட்டு.
ஓங்குவரை = உயர்ந்த மலை. செகுக்கும் = போக்கிக் கொள்ளும்.
'கரவீரம்'' - சோழநாட்டில் திருவாரூருக்கு அருகிலுள்ள ஊர்
என்பதாக டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் குறிப்பு
ஒன்று கூறுகிறது.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்