பகுதி 43 / 102
தாமரைப் பொய்கையில் (?) தவழ்ந்தது நிலவு!
அச்சுப் பக்கம் 217–222 · ஸ்கேன் 230–235 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 232
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
தாமரைப்
பொய்கையில் (?)
தவழ்ந்தது
நிலவு!
தண் புனல் வைகை தவழ்ந்திடும் மண்ணில்
பெண்குலக் கண்மணி பெருங்கோப் பெண்டு - விழுப்
புண்களை மார்பில் ஆரமாய் அணிந்த - தமிழ்ப்
பண்புடை வீரன் பூதப் பாண்டிய வேந்தனைக்
கொழுநனாய்க் கொண்டு குடும்ப விளக்காய்ப்
பழுதிலா மனையறப் பணிகளை ஏற்று
வழுவிலாப் புலமையும் பெற்றுத் திகழ்ந்தாள்!
எழுகதிர்தான் மன்னன்; முழுமதிதான் அவளேயாவாள்!
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் எனும் பெயர் - கொடி
முல்லையாய்ப் படர்ந்து, தமிழ்க் கொல்லையே மணந்தது!
பொதியமலைத் திதியனையும் பொய்யாத மையலூர் மாவனையும்
புகழ்பூத்த ஆந்தையுடன் அந்துவன் சாத்தனையும் ஆதன்
அழிசையையும்
வெகுண்டெழுந்து வீரம் விளைக்கின்ற இயக்கன் எனும்
வேங்கை நிகர்த்ததொரு தீரனையும்,
நண்பர்களாய்ப் பெற்றிருந்த பூதப் பாண்டியனின்
வண்மையினைக் கேள்வியுற்று வையகமே போற்றியதாம்!
நம் தமிழர் குலப் பழக்கம் ஒன்றுண்டே; அதுதான்
நமக்குள்ளே அழுக்காறு! போராட்டம்! அதனாலே களத்தினிலே
சிவப்பாறு!
சேரரென்றும் சோழரென்றும் பாண்டிய மன்னரென்றும் அவர்
வீரரென்றும் வித்தகப் புலவரென்றும் விரித்துரைக்கும்
வரலாறு; அவர்கள்
சேர்ந்தொருநாள் வாழ்ந்ததாகச் சொல்லவில்லை;
சோர்ந்துபோகும் நமதுள்ளம்; இனி அதைச் சொல்லுவதால்
பயனுமில்லை!
பூதப்பாண்டியனின் புகழ் கேட்டுப் பொறாமை யுற்றுப்
போர் முரசு ஒலிக்கலானார் சேர சோழ மன்னர் இருவர்!
'இருமன்னர் எதிர்ப்பதாலே அஞ்சுகின்றேன் மன்னா ;
அவர்பால்
பெரும்படைகள் உண்டென்று அறிவதாலே சற்று சிந்திப்பீர் கண்ணா என
திருமலியும் முகமுடைய பெருங்கோப் பெண்டு
கருவிழிகள் நீர்மேல் மிதக்க அவனைத் தடுத்துப் பார்த்தாள்!
"என்னை என்ன செய்யச் சொல்கின்றாய் தேவி?
பொன்னை, பொருளை, இப்பூமியை, உன்னைக் காப்பதற்கு;
முழங்கால் வளைத்து முடித்தலையை, மாற்றார் முன்
சாய்த்திடவோ; பின்
முகத்திலொரு மீசை எனக்கெதற்குச் செப்பிடுவாய்?
வாள் பிடித்துச் செத்து நெடும்புகழை ஏட்டில் நட்டலின்றி;
பிறர்
வால்பிடித்து வாழ்ந்து மறைந்தால் காரி உமிழுமே உலகம் நம்
கல்லறையில்!"
கனல் பறக்கச் சிங்க ஏறாய்ச் சிலிர்த்தவனின் தோள் சாய்ந்து;
அனல் தணித்து உம்மை அடிமையாகச் சொல்லவில்லை அத்தான் - இந்த
மணற்பரப்பில் "மண்டியிடல்'" எனும் சொற்றொடரை
மனிதரில் பதர்கூட எழுதிடத் தயங்கி நிற்பான்!
மாவீரர் நீங்கள் - மாற்றாரைப் புறங்காணச் செய்யுங்கள்
என்
மடிமீது தலைவைத்து விழுப்புண்களுக்கு மருந்து பெறத்
திரும்புங்கள்!
குவித்துக் கொண்டிருக்கும் உதடுகளும் இரு குன்றுகளும்
தவித்துக் கொண்டிருக்குமத்தான் ஒத்தடம் தந்திடவே!
தேனே, மானேயென்று என் தேகமெல்லாம் முத்த மீந்தவர்க்கு
நானே தருகின்றேன் போர்வாளை; புறப்படுங்கள், பொல்லாப்
பகை வெட்டிச் சாய்க்க!''
பெருங்கோப்பெண்டு வழங்கிய படைக்கலன் பெற்றுக்
கொண்டு,
அருந்தமிழ்ப் பாண்டியன் அவளை அணைத்துப் பருகினான்;
இதழ் மது; மொண்டு! மொண்டு!
''வாளுறை விட்டு எழுந்தது பாரீர்! வீரர்காள்! என்
சூளுரை யொன்றும் கேட்பீர்!
பறையொலித்துப் படையெடுத்து வரும்
பகைவர் கூட்டம் புறமுதுகிட்டுப் பறந்தோடப்
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
போர் புரிந்து வெற்றி காண்போம்
அன்றிப்
போர்முனையில் மாற்றார் தோளில் வெற்றி மாலை
விழுந்ததெனில்;
பொன்னார் மேனியாள் என்னுயிர்த் துணைவி
மின்னார் இடையாள் இவளைப் பிரிவேன்!
அவைக்களத்தில் அறமறியாத் தீயோனை வைத்து
அநீதியிடை ஓர் அரசை நடத்திய கொடுங்கோலன் எனும்
பழியைக் கொள்வேன்!
சூழ்ந்திருந்து தோழமையால் எனை மகிழ்வித்த
ஆழ்ந்த நட்பாளர் அனைவரையும் இழந்திட்ட பாவியெனும்
பெயர் எடுப்பேன்!
மறுபிறவி என ஒன்றிருந்தால் பெரும்
மாசு வந்து என்னைப் பற்றிக்கொள்ள;
தென்புலம் காத்த மன்னவன் என்ற நிலைமாறிக் கொடியோரின்
வன்புலம் காத்திடும் வஞ்சகனாய்ப் பிறந்திடுவேன்!"
இவ்வாறு,
வாளோங்கிச் சூளுரைத்துக் களம் புகுந்த பாண்டியர் படையின்
தோளோங்கிற்று; தோற்றோடி விட்டார் பகைவர் எனினும்,
கடுங் காயக் கூட்டம் களத்திற் பட்டதாலே
பெருங்கோப்பெண்டின் மடியிற் படுத்து;
கடைசியாக ஒரு முத்தம் தந்தும், பெற்றும்
நடு
கல்லில் பாண்டி மன்னன் எழுத்தாய் வாழ்ந்தான்!
''வானில்லை; நிலவு தவழ்வதற்கு - அதனாலே இனி
நானில்லை, அவரில்லா உலகில்" என்று;
பூதப் பாண்டியன் தேவி புறப்பட்டாள் அவனைத் தொடர்ந்து!
'போகாதே தாயே!" என்று புலம்பிற்றுப் பாண்டிய நாடு!
பாண்டியர்க்கு வழித்தோன்றல் இல்லாத காரணத்தால்
நாட்டை
ஆண்டிடவே அவள் வாழவேண்டுமென்று இறைஞ்சி நின்றார்!
அவளோ;
''பல்சான்றீரே! பல்சான்றீரே என விளித்துக்
''கல் மனங் கொண்டென்னை வாழச் சொல்லாதீர்!
என்றும் தீரா என் சோகம் நீக்கிட,
எரிதழல் வீழ்ந்து என்னுயிர் போக்கிட
இன்றே துணிந்தேன்! இஃது இனிதே எனக்கு!
அன்றிலாய் இருந்த வாழ்வே போனபின்
நான்
தணலில் குளிப்பதை நீவிர் தடுப்பது எதற்கு?
தடந்தோள் மன்னர் மாய்ந்த பின்னர் எனக்கு;
தாமரைப் பொய்கையும்
இந்தத்
தணல்நிறை குழியும் ஒன்றேயாகும்!"
என்றாள் தேவி; அந்தத் தீயினில் தாவி!
"மடங்கலின் சினைஇ ........
................
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக;
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலிபுகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்,
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி, யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஓரீஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!''
மூல மேற்கோள்(புறநானூறு - பாடல் : 71
பாடியவர் : பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் )
“பல்சான்றீரே! பல்சான்றீரே!
................
................
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே!”
மூல மேற்கோள்(புறநானூறு பாடல் : 246
பாடியவர் : பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு)
பொருள் விளக்கம் :
மெலிகோல் =கொடுங்கோல். இழுக்கியான் =
இழந்தவனாவேன்.ஓரீஇ = நீக்கி.வன்புலம் = வறண்ட நிலம்.
ஈமம்=விறகு அடுக்கிய சுடலைத் தீ. வள் =வளம். நள் =
செறிந்த. ஓரற்று = ஒரே தன்மையானது.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்