பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 42 / 102

பாரி மகளிர் பாடிய செய்யுள்

அச்சுப் பக்கம் 213–216 · ஸ்கேன் 226229 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 228

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பாரி மகளிர்

பாடிய செய்யுள்

வாள் கொண்டான் கையில்; வள்ளல் தன்மை கொண்டான் நெஞ்சில்!
வேள்பாரி யெனும் பெயர் கொண்டான் தமிழினத்து வரலாற்றில்!
மூவேந்தர் ஒன்று கூடி அவன் பறம்புமலை சூழ்ந்து
முற்றுகையிட்டார் எனினும் அஞ்சாமல் நின்றானன்றி
முழங்காலை மடித்துத் தொழுது போற்றித் தன்
முடிதனையே காத்துக்கொள்ள நினைத்தானில்லை!

பாரியெனும் மன்னவனைப் பகைவர் பலர்கூடி வென்றிடலாம்
எனினும்
வாரி வழங்குகின்ற அவன் வள்ளல் தன்மையினை வெல்வார்
யாருமிலர் என்பதாலே
மாறி மாறிப் பல்லாண்டு சுழன்றபோதும்
மாறிடாத பெயராகப் பாரியின் பெயர் நிலைத்ததிங்கே!
அவனை, வென்றார்! வீழ்த்தினார்! கொன்றார்! எனும்
அரசர் மூவர் பெயர் என்னவென அறிந்திடாது இவ்வையம்!
ஆனால் களம்பட்டு உயிர்விட்டான் எனினும் பாரியின் பெயர்
அழியாமல் மறையாமல் உயிரோடு உலவுதல் ஏன்?
மறவன் எனும் நிலை மட்டும் மன்பதையில் புகழ்
சேர்ப்பதில்லை!
மனிதனாகவும் வாழ்ந்திடல் வேண்டுமென்ற
அறநெறியை விட்டு அணுவளவும் பிறழாது - ஒருவன்
அளந்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும்தான்
வாழையடி வாழையென வருகின்ற சமுதாயத்து
வழித்தோன்றல்களின் பயணப்பாதையாகும்!
தேருக்கோர் அச்சாணி போல் - பறம்புமலைப்பக்கம் பல
ஊருக்கு மன்னவனாய்த் திகழ்ந்த பாரியினைப்
போருக்கு அழைத்துக் கொன்ற பின்னர்; அவன்
புதல்வியர் இருவரைக் கவர்ந்திட எண்ணிய வேந்தர் மூவரின்

கண்களை மறைத்துக் கபிலர் எனும் புலவர் பிரான் அந்தப்
பெண்களைத் தனது பொறுப்பில் காத்திடத் துணிந்து
முனைந்தார்.
நண்பர்க்கு நல்வாழ்வு வாய்த்தபோது அருகிருந்து

சுவைத்துவிட்டுத்

துன்பத்தால் துயருறும்போழ்து தொலைவில் ஓடுதல்
துரோகமென்பதை
எண்ணியும் பார்க்கா பிறவிகள் சிலபேர்
புண்ணியவான்களாய் வேடம் புனையும் இப்புவியில்
தமிழாய்ந்த தமிழ் மகனாம் கபிலர் பிரானை
அமிழ்தாக நினைத்து மகிழ்ந்து; அவர்
அருகிருக்கும் நேரமெல்லாம் குளிர்
தரு விரிக்கும் நிழலின் கீழ் இருப்பது போல் உணர்ந்த பாரி
சிறகொடிந்த பறவைகளாய் செல்வ மகளிர்தமை விடுத்துச்
செத்துவிட்ட செய்தி வந்தவுடன் கபிலப் புலவர் சில
நொடியில்
சிறகானார் பாரிமகளிர் இருவர்க்கும் அதனாலே மூவருமே
பறந்து போனார்.
பாரி பெற்ற முத்திரண்டைப் பத்திரமாய்ப் பாதுகாக்கப்
பரிவு காட்டும் மாந்தரிடம் ஒப்படைத்தார்; ஓரிரு நாள்!
ஒளிபடைத்த மணி யிரண்டும் ஒப்பற்ற அழகுப் பேழை.
உளிபடாச் சிலையைப் போல உருக்கொண்டு மணக்கும் தாழை.
மாரிக்கிடையே வானைக் கீறுகின்ற மின்னல் போல
பாரிக்கு மகளாய் வாய்த்தோர் விளங்கலானார்.
தங்கியிருந்த இல்லத்து மேல்தளத்தில் அமர்ந்தவாறு
பொங்கி வழியும் பால் பானை வாய் போலத் தோன்றுகின்ற
முழு நிலவின் ஒளி வெள்ளம் பாய்ந்து பரவுவதை - ஒரு
பழுதில்லா எழிலுடைய பாரி மகளிர் பார்த்தனர் விண்ணில்!
அழுதழுது முற்றிலும் வற்றியிருந்தனவாம் நீர்த்துளிகள்
கண்ணில்!
ஆனாலும் அவர் நெஞ்சில் வற்றாத தமிழ் ஊற்றுப் பெருகி
அற்றைத் திங்கள் வெண்ணிலவில்" என்ற பாட்டாய்
எழுந்ததுவாம், உளமுருகி!
"கடந்த திங்கள் இற்றை நாளில் கடைந்தெடுத்த வெண்ணெய் போல்
எழுந்த நிலா வானில் திரிந்தபோது எங்களிருவருடன்
பழுத்த மரப் பாரியாம் எங்கள் தந்தை
சிரித்த முகத்துடனே அருகிருந்தார்.

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

இற்றைத் திங்கள் வெண்ணிலவில் எங்கள் தந்தையுமில்லை;
கொற்றவர் மூவர் எமது குன்றமும் வென்றதால்
தந்தையை இழந்து தாயகம் இழந்து
தவிக்கிறோம் இன்று தனிமையில் நின்று''
பாரி மகளிர் பாடலைக் கேட்டு மனமிக நொந்து
பரிவுடன் அவர்தம் கூந்தலைக் கோதி
பாவலர் கபிலர்... ஆறுதல் சொன்னார்; உம்
காவலராகக் கணவர் வாய்ப்பர் என்று தேறுதல் சொன்னார்...
திங்கள் ஒன்றுக்கு முன்னர் இருந்த குன்றமும் இல்லை
எங்கள் தந்தையும் இல்லை என் செய்க' என
தங்கப் பதுமைகள் இரண்டும்
துயரத்
தணலில் வீழ்ந்து தத்தளித்த நிலையையும்
சங்கப்பாடலாய்த் தந்தனர் நமக்கு
சோகப் பாடல் எனினும் - அதிலோர்
சுவையைக் கண்டோம்; சுளைத்தமிழ் உண்டோம் அன்றோ?

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 112
பாடியவர் : பாரி மகளிர்)

பொருள் விளக்கம் :

அற்றைத் திங்கள் = கடந்த மாதம்! இற்றை = இன்றைய.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்