பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 41 / 102

இங்கே வேண்டாம்... தங்கை இருக்கின்றாள்!

அச்சுப் பக்கம் 209–212 · ஸ்கேன் 222225 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 224

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

இங்கே வேண்டாம்...

தங்கை

இருக்கின்றாள்!

வெள்ளரிக்காய் விதைபோலச் சிரிக்கும் பல்லழகும் - பூவின்
கள் இனிக்கும் விதம் போல மழலைச் சொல்லழகும் கொண்டு
வெண்மணற் பரப்பில் ஒரு செந்தமிழ்ச் செல்வி
கண் மலர் மூடிக் கைமலர் கொண்டு,
புன்னைக் காய்களைப் புதைத்து விளையாடி; அவற்றில்
ஒன்றை மறந்து ஆங்கு விட்டுச் சென்றிட

அது

கன்றாய் வளர்ந்து இள மரமாய்ச் செழித்தது!
நெய்யும் பாலும் அப்புன்னையின் வேரில்
பெய்து வளர்த்தாள் பேரழகுப் பதுமை!
அன்னை வளர்த்ததோ, அழகு மகளை! மகளோ ;
புன்னை வளர்த்துப் பூரிப்பு கொண்டாள்.
ஒரு நாள் அன்னை; ஓவிய மகளை அன்புடன் நோக்கி;
'திருநாள் போலத் தினமும் புன்னையைச் சீராட்டும் புதல்வியே!
உன்னுடன் சேர்ந்து வளர்ந்து உயர்ந்து நிழல்தரு புன்னை;
உந்தன் இளைய உடன்பிறப்புப் போன்றதாம்!
உரைத்தேன் இதனை உவப்புடன்'' என்றாள்.
சுவைத்தேன் அருந்திய இன்பம் பெற்று,
செந்தமிழ்ச் செல்வி சிந்தை அணு ஒவ்வொன்றும்
சிலிர்த்திடக் குதித்து; அன்புப் புன்னையை ஆரத் தழுவி
தங்கை இனிமேல் நீதான் எனக்கு -

என்

தாயே இதனைச் சொன்னாள்'' என்றாள்! சொக்கி நின்றாள்!
மங்கை இவ்விதம் மலராய் விரிந்த முகத்துடன் நிற்க;
அங்கேயொரு கை அவள் கண்களைப் பொத்தித் திடுக்கிட
வைக்க
வலம்புரிச் சங்கம் இசையொலி எழுப்பும்
வளமிகு நெய்தல் நிலத்தின் தலைவனே ;
குலக்கொடி இமைகளை மூடித் தழுவினான் என்று, அந்த
விளக்கொளி விழியாள் ஒரு விநாடியில் உணர்ந்தாள்!

"வந்தாயோ கண்ணா" என்றாள்; "வரவில்லையென
நொந்தாயோ கண்ணே" என்றான்!
தந்தானே முத்தங்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக இரு
பந்தாடும் மார்பகத்தை; பாவை, அவன் மீது சாய்த்து,
''இங்கு வேறெதுவும் நடத்த வேண்டாம் அத்தான்; என்
தங்கையொருத்தி பார்த்துக்கொண்டிருக்கிறாள்'' - என்றாள்!
"எங்கு ஒளிந்துள்ளாள் உன் தங்கை? என்னேடி இது வியப்பு
எப்போது அவள் பிறந்தாள்? எனக் கேட்டான் தலைவன்!
புன்னையிளம் மரமிதனை நான் வளர்த்ததாலே ;
என்னோடு சேர்ந்து வளர்ந்த இந்தப் புன்னையினை - என்
தங்கையைப் போல் நினைக்குமாறு - என்
தாய் எனக்குக் கூறியுள்ளாள்; அதனாலே,
தட்டாதீர் என் பேச்சை - தழுவாதீர் இங்கென்னை!
கட்டாணி முத்தேயென்று கற்கண்டுப் பொடி தூவாதீர்!
கன்னத்தைப் பழமாகச் சுவைப்பதற்கும் - இன்னும்
என்னத்தை நான் சொல்ல; அவை அனைத்துக்கும்
நான் வளர்த்த இத்தங்கையின் முன்னே

எனை

நாணம் வந்து தடுப்பதாலே,
வான் பொழியும் ஒளி மழையில் - இன்பத்
தேன் பொழியும் திருவிழா நாம் நடத்துதற்கு
வேறு மரநிழலொன்றைத் தேடிச் செல்லலா"மென
ஏறு போன்றான் தோளைப்பற்றி
வீணையிசைப் பேச்சுக்காரி இழுத்துச் சென்றாள் - 'உன்
ஆணையதுவானால் அட்டியுண்டோ எனக்கு?" என்று
கொஞ்சிக் குலவியவள் கொடி இடை பற்றித் தன்
நெஞ்சகத்தில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான்!

* “வினையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
ஐநெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே."

மூல மேற்கோள்(நற்றிணை பாடல் : 172
பாடியவர் : (பெயர் தெரியவில்லை)

பொருள் விளக்கம் :

ஆயம் = தோழியர் கூட்டம். காழ்முளை = முற்றிய விதை.
அகைய = விட்டுச் செல்ல. நுவ்வை = உன் தங்கை.
விளரிசை = மெல்லிசை. கடுப்ப = ஒப்ப.
கோடு = சங்கு. நரல் = ஒலி

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்