பகுதி 40 / 102
போர்த்திசை நோக்கிய புலிப்போத்து!
அச்சுப் பக்கம் 205–208 · ஸ்கேன் 218–221 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 220
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
போர்த்திசை
நோக்கிய
புலிப்போத்து!
விரைந்து வருவீர் வீரர்காள் எனவே
இரைந்தது முரசம்!
பறந்து வந்து படையினிற் குவிந்தனர்; உயிர்
துறந்து நாட்டைக் காத்திடும் மறவர்!
மறந்தும் இனிப் பிரிவதேயில்லை மலரே மணியே என்று
பிறந்தமேனியாய்ப் பிணைந்து கிடந்த காதலர் செவியைக்
கொட்டிய முரசின் சத்தம் தொட்டிட; காதலன்
விட்டுப் பிரிந்திடுவானே யென்று
அவனைக்
கெட்டியாய் அணைத்துக் கொண்டாள் கோதை!
முட்டிய மார்பகச் சுகத்தை ஒதுக்கி;
எழுந்தான் காளை! சிங்க ஏறென நிமிர்ந்து நோக்கி
எடுத்தான் வாளை!
பகைவர் உயிர் பறிக்கப் போகுமுன்னர் - இந்தப்
பாவை உயிர் பறித்துப் போகின்றீரே; நியாயந்தானா?
பாளைச் சிரிப்பெல்லாம் பயந்தோடிப் போக - அவன்
தாளைப் பற்றியவள் தழுதழுத்த குரலில் கேட்டாள்!
பூவிதழ்கள் பனித்துளியைத் தாங்காமல் பூமியிலே சிந்துவதைப்
போல்
பொன்னிமைகள் நீர்கொட்டத் துவண்டுவிட்ட தோகையினைத்
தழுவிக்கொண்டு
''உயிரும் உடலுமாய் ஒன்றாகி உறவு பூண்டோமெனினும்
உயிர் கொடுக்க வருக எனப் போர் முரசு ஒலித்துவிட்டால்
மண்ணைக் காத்து நமது மானம் காப்பதல்லால் - ஒரு
பெண்ணைக் காத்துக் கொண்டிருத்தல் சரியா; கண்ணே!
விண்ணைப் பார்த்துக்கொண்டே யிருந்திடுக; நமது
வெற்றிக்கொடி, உன்
கண்ணைப் பறிக்குமளவுக்கு உயர்ந்து பறப்பது கண்டு களித்திடுக!
களத்தில் நான்,
சாகாமல் இருந்தால் நம் சந்திப்பு மீண்டும் உண்டு; இல்லையேல்
- மனம்
நோகாமல் முத்தங்கள் என் சவத்திற்கு ஈந்து வீரத்தை
வாழ்த்திடுக'' என்றான்!
நீர்த்திரையால் மறைந்த விழி திறந்து பார்ப்பதற்குள்; அவன்
போர்த்திசை நோக்கிப் பாய்ந்துவிட்டான் புலிப்போத்தாய்!
கொடிகள் அலையெனக் காற்றில் அசைந்திடவே வானில்
இடிகள் ஆயிரம் எனவே படைகள் முழங்கிடவே - வீரர்,
முடிகள் களத்தின் குருதியில் நனைந்து மிதந்திடவே - மறவர்
குடியினர் நடத்திய போர்முனை புகுந்தான் வீரன் அவனே!
எதிர்த்து வந்த பகைப்புலத்தார் தலைகளையே
அறுத்தெறிந்து முன்னேறும் வேளையிலே - ஒரு
களிற்றின் மீது கைவாள் வீசி வீழ்த்திப் பின்னர்;
கரத்தினிலே வாளுருவிப் பார்த்தபோது,
வளைந்தும் நெளிந்தும் அந்த வாள் இருத்தல் கண்டான்! - அதன்
வளைவு போக்கிப் போரைத் தொடர்வதற்கு
வழியென்னவென்று திகைத்து நின்றான்!
நெளிந்த வாளை நிமிர்த்துதற்கு; அவன் நெஞ்சில்
விளைந்தது ஒரு தந்திரம் - அதனை
விரைந்து முடித்திட; உடனே
வீழ்ந்து கிடக்கும் யானையை அணுகினான்!
வீங்கிய மலையென வீழ்ந்திறந்த யானையின் மேல்நோக்கி
ஓங்கி உயர்ந்த இரு தந்தங்களிடையே; தன் கையினில்
தாங்கிய வாளையே நுழைத்து அழுத்தி அவ்வீரன் - பசும்
மூங்கில் ஒன்றை நிமிர்ப்பது போல் நிமிர்த்து விட்டான்!
மீண்டும் வாளேந்தி வருபவன் கையால் - இனியும்
மாண்டு மடிந்திடப் படைபலம் இல்லையென்று
மாற்றார் மருண்டோடிப் பிழைத்துக் கொண்டார்;
"தோற்றாரோ அத்தான்; நமைப்பிரிக்க நினைத்தோர்!
தொலைந்தாரோ அத்தான்" என்று -
தித்திப்பு முத்தம் தெவிட்டாமல் கொடுத்துத் திரும்பி வந்தவன் தோளில்
தொத்திக் கொண்டாள்; இருவரும் ஒட்டிக்கொண்டார்;
* “வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
நூலரி மாலை சூடிக், காலின்,
தமியன் வந்த மூதிலாளன்,
அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்கு இரிந்தானைப் பெயர்புறம் நகுமே."
மூல மேற்கோள்(புறநானூறு - பாடல் : 284
பாடியவர் : ஓரம்போகியார்)
பொருள் விளக்கம் :
வருகதில் வல் வருக = விரைந்தோடி வருக.
தமியன் வந்த மூதிலாளன் = தனியாக வந்த மறக்குடி மறவன்.
அருஞ்சமம் = பெரும் போர்.
ஒரு கை இரும்பிணத்து எயிறு = வெட்டி வீழ்த்தப்பட்ட
களிறின் தந்தம். மிறையாகத் திரிந்த = வளைந்து கோணிய.
இரிந்தான் = அஞ்சி ஓடியவன். புறம் நகம் = புறங்கண்டு
சிரிக்கும்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்