பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 39 / 102

இசையாகிவிட்டவள்!

அச்சுப் பக்கம் 201–204 · ஸ்கேன் 214217 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 216

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

இசையாகிவிட்டவள்!

மணம் புரிந்து இல்வாழ்வு நடத்துகின்ற - தன்
மனங்கவர்ந்த தலைவியினைக் காண்பதற்கு
மாலைப்பொழுதொன்றில் தோழியொருத்தி - அவள்
மனைநாடி ஆவல்மிக ஓடோடி வந்தாள்!
இல்லத்துக் கதவு கொஞ்சம் திறந்திருத்தல் கண்டு
மெல்லத் தன் கைகளாலே மேலும் சிறிது தள்ள; அங்கு
கண்ட காட்சியினால் கையது கொண்டு கண்ணது பொத்தி
காந்தள் விரல் இடுக்கால் கடைவிழி போக்கித் தலைகவிழ்ந்தாள்!
கூடத்தில் விரித்திருக்கும் பாய் ஒன்றில்
ஆடை திருத்தல் பற்றிக் கவலையின்றி - கோயில்
மாடத்துப் புறாப் போன்றாள் அவள் தலைவி படுத்திருக்க; அவள்
மேடிட்ட மார்பகத்தில் முகம் புதைத்துக் கணவன்;

அதற்கு

குழந்தைபோல் குறும்புத்தனம் பல செய்ய
உடந்தையாய் இருந்த தலைவி; உயிர்த்தோழி வருதல் கண்டு
இலந்தைப் பழ மேனியினைத் துகிலால் மூடித் திடுமென
எழுந்தனள் எனினும் அவளை அவன் விடவே இல்லை!
கட்டித் தழுவிக் காமதாகம் முழுமையாய்த் தணித்துக்கொள்ள
எட்டியவள் எழிலிடையைப் பற்றிக்கொண்டு - உடலில்
ஒட்டிக்கொண்டிருந்த மிச்சம்மீதி துணியினையும்
தொட்டிழுத்துத் துகிலுரியத் தொடங்கிவிட்டான்.
"விடுங்கள் என்னை" யென்று விழிமீன்கள் இரண்டும் துள்ள
கடுங்கோபமுற்றவள் போல அவன் கையைத் தள்ளி;
"தோழி; நீ எப்போது வந்தாய்!" என்று தழுவிக்கொண்டாள்!
'வாழி; நீ பல்லாண்டு!" என உரைத்தவாறு தோழியவள்;
'தலைவனுக்குத் தலைசாய்க்கத் தலையணையில்லாக் காரணத்தால்
தலைவியின் மார்பகத்தில் முகம் புதைத்துக் கிடந்தபோது
வந்துவிட்டேன்" என்று வக்கணையாய்ப் பேசிக்கொண்டே
'குந்துதற்கு இங்கே அனுமதி உண்டா?" என்றாள்.

அவசரமாய்

ஆடையுடுத்தி ஆணழகன் நிமிர்ந்து நின்று அவளைப் பார்த்து;
"கோடை வெயில் காமத்தைத் தாங்காமல் - குளிர்

ஓடையில் நான் குளித்தெழ முனைந்தபோது;
சாடை தெரிந்து ஒதுங்காமல் எங்கு வந்தாய்?" என்று கேலி
செய்தான்!
குறும்பாகப் பேசுவதில் குமரருக்கு ஈடு கொடுக்கும்
கோதையாம் அத்தோழி; கொஞ்சமும் அஞ்சாமல் அவனை
நோக்கி.
"கரும்பனைய தலைவியைச் சந்திக்க முடியாமல்
கார்த்திகைப் பிறை காண்பதுபோல் என்றோ ஒருநாள்;
காணுகின்ற நிலையாலே பெருங் கவலை நீயுற்று
கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த காட்சியினை
அன்று நாங்கள் பார்த்துப் பார்த்து பரிதாபமுற்று
அந்தோ பாபம் என அடிக்கடி பேசிக் கொண்டோம்!
ஆனால் இன்றோ
அயிரை மீன் அடர்ந்து நீந்தும் அழகுறு பொய்கையிலே,
ஆம்பல் மலர் பறிக்க இறங்கிடுவோர்
அப் பொய்கை நீரின் நடுவிலே நின்றுகொண்டு
'அப்பப்பா; தாகவிடாய் தாங்கவில்லை' என்பது போல்
அணுப்போதும் பிரியாமல் தலைவி அருகிருக்க
அவசரம் ஏன்; நேரம் - காலம் -தெரியாமல்" எனக் கேட்டாள்..
"தாகம் தணிப்பதற்குத் தகுந்த நேரம் எதுவென்று; உன்
தலைவியிடம் குறித்துக் கூறிவிட்டுப் போ! அதனையவள்
மனப்பாடம் செய்து வைத்தாலும் சரி அல்லால்,
மண்சுவரில் எழுதி வைத்தாலும் சரி; சொல்லுக்குச்
சுவை கூட்டிப் பேசுகின்ற பாவாய்; ஓருண்மை நீ அறிக!
சொல்லிவிட்டு வருவதல்ல இன்ப உணர்வு " என்றுரைத்தான்
தலைவன்.
"இன்று நீ தவிக்கின்ற தன்மையினைப் பார்க்குங்கால்
அன்று களவொழுக்கத்தில் தலைவிதனைக் காண முடியாமல்

உனைக்

கொன்று குவித்த இன்ப உணர்வுத் தூண்டுதலை எப்படித்தான்
மென்று விழுங்கி வாழ்ந்தாயோ என எண்ணி
வருந்துகின்றேன்" என உரைத்து;
அவன் பதிலுக்குக் காத்திராமல்
அந்தப் பைங்கிளியாள் பறந்தே விட்டாள்!
மூடாமல் இருந்த கதவுதனை மூடித் தாழிட்டு
பாடாமல் குறையிருந்த முழுப் பாட்டை முடிப்பதற்கு
முனைந்தான் தலைவன்!
இசையாமல் ஊடல் கொண்டாள் தலைவி எனினும்

பின்னர்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

இசையாமல் என்ன செய்வாள்? இசையாகிவிட்டாள்!

* “அயிரைபரந்த அம்தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு, இவள்
இடைமுலைக் கிடந்து, நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்: நோகோ யானே”

மூல மேற்கோள்(குறுந்தொகை - பாடல் : 178
பாடியவர் : நெடும்பல்லியத்தை (பெண்பாற்புலவர்)

பொருள் விளக்கம் :

தண் பழனம் =குளிர்ந்த பொய்கை.குறுநர்= பறிப்பவர்கள்.
நீர்வேட்டாங்கு = தாகவிடாய் கொண்டது போல. நடுங்கல் =
(விரகதாப) தடுமாற்றம்.தொழுது காண்பிறை = கார்த்திகைப்
பிறை. அரியமாகிய காலை = காண்பதற்கரிய களவுக் காலம்.
பெரிய நோன்றனிர் = பெரும் துன்பத்தை அடைந்திருப்பாய்.
நோகோ யானே = (யான் நோகு) அதனை எண்ணி
வருந்துகிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்