பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 38 / 102

காவிரிநாடன் கரிகாலன்!

அச்சுப் பக்கம் 195–200 · ஸ்கேன் 208213 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 210

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

காவிரிநாடன்

கரிகாலன்!

காவிரியாம் குமரிப் பெண்ணின் நுனிநாக்கைக்
கடலழகன் தன் அலைநாக்கால் தொட்டுத் தொட்டுச்
சுவைபார்த்துச் சுகம் பெற்றுக் குதித்தாடும்
பூவிரி சோலைப் பூம்புகார் மண்ணின் புகழ்மலிச் சோழன்
கரிகால் பெரும் பெயர் திருமாவளவன்
கருவில் தாயின் வயிற்றில் இருந்தபோதே
காலம்; அவன் தந்தையின் உயிரைப் பறித்துக் கொண்டதாம்!
கயவராம் அவன் தாயத்தார் சோழ பூமியைச் சுருட்டப்
பார்த்தார்!
வயிற்றில் துள்ளும் சிங்கக்குட்டியைப் பெற்று வளர்த்திட
வழியொன்று கண்டு சோழ மாதேவி, மாளிகை நீங்கி;
வைரநெஞ்சக் கிழவர் ஒருவரின் துணையைப் பெற்று
வஞ்சகர் காணா இடம் தேடி வாழ்ந்தனள் சிலநாள்!
நிறைமாதம் முடிவுற்று நிலவு நிகர்ப் பெண்ணரசி
பிறைமதி போல் பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தாள்
குறையிலாக் கொள்ளையழகுக் குழந்தைத் தங்கம்
உறையிடாக் கத்திபோல ஒளிவிட்ட தமிழச் சிங்கம்!
திருமாவளவன் எனத் திகழட்டும் அவன் பெயர் என்று
தெவிட்டாத முத்தங்கள் சுளையாய்த் தந்து - தன் கணவன்
உருவாக வந்துதித்த குலவிளக்கைத் தழுவி; மகனே நீ
உலகாளப் போவதுறுதியென வாழ்த்துரைத்தாள் அன்னை!
ஒளிந்திருந்த பேரரசி ஒரு மகனை ஈன்ற செய்தி
ஒதியமிலார் உள்ளத்துத் தாயத்தார் அறிந்திட்டார்! அவனை
ஒழிப்பதன்றி வேறு பணி இல்லையெனத் திட்டமிட்டு
ஓநாய்கள் முயல் கவ்வச் சூழ்வதுபோல் வட்டமிட்டார்!
உறையூர் அருகே சிற்றூர் ஒன்றில்; தங்களின்
உறுபகை வளர்வதை மோப்பம் கண்டு ஓடினார் ஆங்கே!

ஒரு நொடியில் வளவனையும் அவன் வாஞ்சைமிகு
அன்னையையும்
தருநிழலாய் இருந்திட்ட கிழவனையும் தீர்த்துக் கட்டத் தீயிட்டார்
வீட்டுக்கே!

வீரப்பால் குடித்துத் தொட்டிலிலே விழி மூடித் தூங்கும்

பிள்ளை

வெற்றிவேல் பிடித்துப் பகைவர்களை வீழ்த்துவதை

எண்ணியெண்ணி

விழிமூடிச் சற்றயர்ந்து உறங்கினாள் கிள்ளை ; அப்போது
வெறி கொண்டோர் இட்ட தீ வான்முட்ட எழுந்ததுவாம்!

கண்ணே என்றலறிக் கயல்விழி பிதுங்க - தமிழ்
மண்ணின் வழித்தோன்றல் உறங்கும் தொட்டிலிலே
கணப்பொழுதும் தயங்காமல் கைநீட்டிப் பாய்ந்திட்டாள்...
கடுவேகம் காட்டி ஓர் ஈட்டி வந்ததை நெஞ்சிலேந்தி
சாய்ந்திட்டாள்!....
வாழ்வதற்கு இடந்தந்த வயதான கிழப் பெரியோன்; சோழ மண்
தாழ்வதற்கு இடமளிக்க மாட்டேன் எனச் சூளுரைத்து;
வாரியெடுத்துத் திருமாவளவனை வாகாய்த் தோளில் போட்டு
வாள் சுழற்றிப் பகை எதிர்த்து வாகை சூடிக் குழந்தையுடன்
தப்பிவிட்டான்!
கிழ வேங்கைப் போன திசை கிழக்கா மேற்கா எனத் திகைத்து
கிட்டியதை விட்டு விட்டோமே என்ற கவலையுடன்
கீழ்மைக் குணத் தாயத்தார் நாடு காடெல்லாம் அந்தக்
கிழவனிருக்குமிடம் அறிவதற்கு ஆளம்பு விடுத்திட்டார்!
தணலில் தங்கமாய் தாய் ஆனபோதிலும் - இவனைத்
தமிழர் தங்கமாய் ஆளாக்க வேண்டுமென்று
தள்ளாத வயதிலும் அந்த இனமானப் பெருங்கிழவன்;
தளராத உறுதி பூண்டு தடந்தோள் குலுக்கிக் கொண்டான்!
நெருப்பிடை நீந்தித் திருமாவளவனைத் தூக்கி
வெறுப்புறு பகைவர் சிலர் உயிரையும் போக்கி
பொறுப்புடை பணியினைக் கிழவன் ஆற்றியபோது - தீப்
பொறித் துகள் பட்டுக் குழந்தை வளவன் கால் சற்றுக்

கருகியதாம்!

கருகிய காலின் கறுப்புத் தழும்பும் - கிழவன்
கண்ணுக்கோர் அழகாய்த் தோன்றியதால்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

திருமாவளவன் கரிகால் பெருவளத்தான் என்று
திருத்தி அமைத்தான் சோழப்பிள்ளையின் பெயரை!
வழிவழி வந்த தோன்றல் வளர்கின்றான் என்று கேட்டு
விழிதனில் கனலை மறைத்து மொழிதனில் தேனைக் குழைத்து
வஞ்சகத் தாயத்தார் வரந்தரு முனிவர் போலே
நெஞ்சாரப் பொய்யுரைத்து நேர் எதிர் வந்து நின்றார்.
''பட்டத்து யானையிது நரியைப் போல் பதுங்கி இங்கே
பாட்டனே! உந்தன் பொறுப்பில் பலநாள் இருத்தல் தீது
பரம்பொருள் அருளைப் பெற்று பகர்கின்றோம் பயமே

வேண்டாம்

படையேதும் தேவையில்லை; எம்பால் பக்தி செலுத்தி,
நம்பியாம் கரிகால் வளவனை எம்மை
நம்பியே அனுப்பிடுக! அவன்
நாடாளும் நாளொன்றும் தொலைவில் இல்லை' என
நயம்பட நடிக்கலானார் நச்சுமனத் தாயத்தார்!

வீரரையும் விவேகமிழக்கச் செய்யும் முனிவர் வேடம்!-
விஷப்பேச்சில் ஒளிந்திருந்த விபரீதத் திட்டந்தன்னை
விளங்கிக்கொள்ள வழியின்றி முதுகிழவன்

அதனாலே

விடைகொடுத்து அனுப்பி வைத்தான் வாழ்த்துக் கூறி!
கால் தொட்டு வணக்கம் செய்து கண்ணீரை மலராய்க் கொட்டி
கரிகாலன் விடைபெற்றுக் கிழவனிடம் முத்தம் பெற்று
காவியுடைக் கயவர்களாம் முனிவர்பின்னால்
கையில் வாள் பிடித்துத் தலை நிமிர்ந்து புறப்பட்டான்!
வழி நெடுகக் கடவுள் பற்றிப் பல கதைகள்
வகைவகையாய் உபதேச அறநெறிகள்; சோழ
வழித்தோன்றல் கரிகாலன், வன்மனத்தோர் உரையினிலே
வசமிழந்து போய்விட்டான் அவர் வலையினிலே
வீழ்ந்துவிட்டான்!
''களைப்புற்றிருக்கின்றோம் அனைவருமே ; அதனாலே
கரிகால் வளவ; சற்றுக் கண்ணயர்வோம் " என்றவுடன்
களத்து மேடொன்றில் அவன் படுத்துறங்கிடவே ஒரு
கணத்தில் அவனை மயக்கமுறச் செய்து கடத்திவிட்டார்!
மூலிகையின் மயக்கச் சோர்வு நீங்கியவன்
முனிவர்கள் எங்கே எனத் திகைத்துத் தேட;

"மூளி பெற்ற மகனே! உன்னை மூடியிருப்பது

சிறைச்சாலையடா

மூச்சு விடாதே இனி உனக்கு முடியில்லை; உன் முடிவே

இங்கேதான்!"

முழங்கிற்று இவ்வாறு தாயத்தார் கூட்டம் முனிவர் வேடம்

கலைத்து!

மூடிற்று சிறைக்கதவை; ஆடிற்று மகிழ்ச்சியினால்!

முழுமதியும் முகில் கிழித்து வெளிவரும் என்பதறியா
மூடர்களே போய் வருக!' என உள்ளுக்குள் முணுமுணுத்தான்
கரிகாலன்!
அடைபட்ட கரிகாலன் அணையுடைத்த வெள்ளம்போல்
சிறையுடைத்துத் தப்பியதை எவ்வாறு செப்புகிறார்
கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் கவிஞர் என்பதையும்
படித்தேனாய் அருந்திடலாம் பட்டினப்பாலையெனும்
பாட்டினிலே!
காட்டுக்குள் சுதந்திரமாய்த் திரிந்த புலி; இருப்புக்
கூட்டுக்குள் சிக்கிக்கொண்டது போல்
கோட்டைச் சிறைக்குள்ளே சிக்கிக்கொண்ட கரிகாலன்
ஆட்டைப்போல் அடங்கிக் கிடக்கவில்லை!
ஆழ்குழியில் விழுந்துவிட்ட யானையொன்று
அக்குழியைத் தந்தத்தால் மண்தள்ளித் தூர்த்துவிட்டு
அஞ்சாமல் வெளியேறித் தன் இணையைத் தேடிக்
கொஞ்சாமல் கொஞ்சுகின்ற காட்சியினைக் கவிஞர்;

ஒரு

கரிகாலன் சிறை மீண்ட நிகழ்ச்சிக்குக்
கச்சிதமாய் உவமையாக்கிக் காட்டுகின்றார்!
களிறுபோல் திறமையுடன் வெளிவந்த காளை
கல்நெஞ்சத் தாயத்தாரை நோக்கி ஓங்கினான் வாளை!
புகார் நகரில்; உறையூரில் பறக்கின்ற
புலிக் கொடிக்குச் சொந்தக்காரன்
கட்டிளங் காளைக் கரிகால் சோழன் தானென்று ;
பட்டினப்பாலை பல கதை சொல்லும்!
காதலியைப் பிரிந்து காட்டுவழி செல்பவனோ
கரிகாலன் வேலினும் கொடியது அவ்வழி என்பானாம்!
காதலியின் தோளினைப் பற்றி கற்பனை செய்பவனோ
கரிகாலன் செங்கோலினும் குளிர்ந்தது எனக் கூறுவானாம்!

போர் மறவன் - புலிப்போத்து தமிழ்ப் புவியாண்ட
பெருமகனாம் கரிகால் பெருவளத்தான்
புகழ்பாடி வாழ்ந்திடுவோம் இனமானம்
போற்றி யென்றும் வென்றிடுவோம்!

(1) “........
கூருகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத் திருந்து பீடு காழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறிவாள் வாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி...''

(2) “.................
திருமாவளவன் தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே."

மூல மேற்கோள்(பட்டினப்பாலை பாடியவர் :
கடியலூர் உருத்திரங் கண்ணனார்)

பொருள் விளக்கம் :

கூர் உகிர் = கூரிய நகம். குருளை = புலிக்குட்டி.
பிறர்பிணி = பகைவரது கட்டுக்காவல். பீடுகாழ் = பெருமைக்
குரிய மன உரம். குழிகொன்று = குழியைத் தூர்த்து. பிடி =
பெண் யானை. நண்ணார் = பகைவர். தாயம் ஊழின் எய்தி =
தனது அரசுரிமையை முறையாகப் பெற்று. தாயத்தார் =
சொத்துரிமை கொண்டாடுவோர். தெவ்வர் = பகைவர்.
ஓக்கிய = பாய்ச்சிய.வெய்ய = கடுமையானது.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்