பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 37 / 102

பிறந்த வீடும் புகுந்த வீடும்!

அச்சுப் பக்கம் 190–194 · ஸ்கேன் 203207 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 204

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பிறந்த வீடும்

புகுந்த வீடும்!

இமயத்தில் சேரன் எடுத்த கல்லில் - ஒரு சிலையை
ஏற்றமிகு கண்ணகிக்குச் செதுக்கிவிட்டு; மேலும்
எஞ்சியதில் இவன் மேனிதனைச் செதுக்கினரோ
எனும் விதத்தில் அமைந்த கை, கால், தோள்கள்! அந்தக்
கற்பரசி சிலைமீது சொறிந்த மலர்களிலே சிறந்த மலரின்
கவின் இதழ்களால் ஆனதுதான் அவளின் கன்னம்; அவர்கள்
இருவருமே ஒருவருக்கொருவர் தெவிட்டாத தேனின் கிண்ணம்!

இனி
இணைபிரியாதிருப்பதென இதயத்தில் பதித்துவிட்டார் காதல்
சின்னம்!

முற்றாமலிருக்கும்போதே அவர்தம் எண்ணத்தை முறித்துவிட
வேண்டுமென்று
பெற்றோர்கள் திட்டமிட்டார் - உற்றார் உறவினரைக் கூட்டி
விட்டார்!
"ஏழடுக்கு மாளிகையின் மேலடுக்கில் இருப்பவள் எமது மகள்;

அவனோ

எழிலுடையான் ஐயமில்லை; ஆனாலும் ஏழையன்றோ!
முத்துமணிக் குத்துவிளக்கை மாளிகை முற்றத்தில் வைப்பதன்றி
முட்டக்கூரையில்லா வீட்டுத் திண்ணையிலே வைப்பாருண்டோ?
இரும்பனைய உடலுடைய அடலேறு! மறுக்கவில்லை
ஆனாலும்,
துரும்பளவுப் பொன்சரடுசெய்து; நாங்கள் பெற்ற
கரும்பனைய திருமகளின் கழுத்தினிலே கட்டுதற்குக்
கடுகளவும் செல்வமில்லா கடைந்தெடுத்த வறியனன்றோ?
நெஞ்சஉறுதியிலே நிகரற்ற வீரனவன்! அட்டியில்லை! அதற்காக;
நெருப்பின் பீடத்திலோர் மெழுகுப்பதுமையினை
வைப்பாருண்டோ?

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

வஞ்சியெங்கள் குலமகளை வாஞ்சைமிகு வடிவழகை

அன்றாடம்

கஞ்சிக்குப் பாடுபடும் குடும்பத்தில் கண்ணீரில் மிதக்கவிட
ஒப்பமாட்டோம்!
அடி தோழி; இங்கேவா! அழகுமயில், சோலையிலே

இருக்கின்றாள்!

முடிவிதுதான் பெற்றோரும் உற்றாரும் எடுத்ததென அவளிடத்தே
கூறிவிடு!''
என்றுரைத்த செல்வச் செருக்குப் பெற்றோரின் ஆணைதனைச்
சென்றுரைத்து மனம் மாற்றக் கிளம்பிவிட்டாள் அவள் தோழி !
மலர்கூடித் தென்றலிசையில் மகிழ்ந்தாடும் வனந்தனிலே
அலர் தூற்றல் பற்றிக் கவலையின்றி வீற்றிருந்த அணங்கின்பால்
முகம் கோணிக்கொண்டு தோழி; முழுக் கதையும் கூறிவிட்டாள்!

தலைவிக்கு ;

அகம் நெருப்பாய்த் தகித்திடவே சூளுரைத்துப் பதில்

சொன்னாள்!

"இரவெல்லாம் பெய்த பெருமழையில் வயல் ஈரங்கண்டு
உரமேறிய பனைமரத்து நுகத்தடியைக் கொண்டு
ஆனைகளை ஏரில் பூட்டி ஆழமாய் உழுதுழுது
பானைகளில் அள்ளிவந்த வெள்ளிவிதை விதைத்துப்
பொன்னையே விளைச்சலாக என் பெற்றோர் குவித்திடினும்
என்னையொருவர்க்கு நானே தந்தபின்னர்;
வெள்ளியென்ன பொன்என்ன வைரமணி மாடமென்ன
கூடமென்ன
துள்ளியோடும் அருவிநிறைத் தோட்டமென்ன துரவென்ன;
வேண்டேன் எதுவும் நான் இந்தப் பிறந்தகத்தில்
தீண்டேன் ஒரு பொருளும் என்னிரு கரத்தாலே!
கோடிப் பொன் கொண்டுவருவேன் என்றெண்ணிக்
கொடியென்னைப் படரவிட அவரும் தோள் தந்தாரில்லை!
செங்கேழ்வரகின் பசுங்கதிர் கொய்து காத்து
செங்குன்றந்தனிலே நன்கு உலர்த்தி எடுத்து
ஊடுபதர் போக்கி, உதவினோர்க்குத் தவறாது உதவி
காடுதனில் வீழுகின்ற விறகுகளை பொறுக்கி வந்து -
உப்பின்றி வெந்த குப்பைக்கீரையுடன்;
உண்ணும் தட்டும் இரவலாய்ப் பெற்று - வரகுச்சோறு

ஒன்றுவிட்டு ஒருநாள் தின்று கிடக்கவும்;
உடுத்துதற்கு மாற்றுத்துணியுமின்றி
கிழிந்த சேலையே அணிந்திடக் கிடைக்கவும்
இழிந்ததோர் நிலையே எனக்கு வந்திடுமாயினும் ;
அழிந்திடாது எமது காதல் என்றுரைத்திடுக தோழி;
ஆளனிருக்குமிடமே எனக்கு அரண்மனை எனக் கூறிடுக ஓடி!
பிறந்த வீட்டில் செல்வப்பெருக்கம் இருக்கலாம் - எனினும்
புகுந்த வீட்டுக் கூழ்தான் அமுதமென விளக்கிடுக தோழி!
கணவனென ஒருத்தி வரித்தவருடன் வாழ்வதுதான்
கற்புநெறி வாழ்வென்றும் கண்ணியமிகு வாழ்வென்றும்
கணமும் இங்கு நின்றிடாமல் என் பெற்றோரிடம் சென்று
கழறிடுக தோழி! காற்றெனவே கிளம்பிடுக தோழி !
என்றவுடன்;
'இதற்குமேல் இங்கு எனக்கென்ன வேலை!" என்று
இறகு கட்டாமலே பறந்து போனாள் தோழி!
மகள் சொன்ன பதிலுரையில் தவறொன்றுமில்லையதனால்;
மறுப்பொன்றும் கூறாமல் பெற்றோரும் மணநாளைக்
குறித்துவிட்டார்!

* “இராமழை பெய்த ஈர ஈரத்துள்
பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி
வெள்ளி விரைத்துப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே
செங்கேழ் வரகுப் பசுங்கதிர் கொய்து
கன்று காத்துக் குன்றில் உணக்கி
ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க் குதவிக்
காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக்
குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை
இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச்
சோறது கொண்டு பீறல் அடைத்தே
ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்
நன்றே தோழிநம் கணவன் வாழ்வே.”

பொருள் விளக்கம் :

நுகம் = நுகத்தடி. ஈண்டிய = செல்வ மிகுந்த.
உணக்கி = காயவைத்து. இந்தனம்=விறகு. பாடு = விழுதல்.
தாலம் = உண்கலம். பரிவு = வருத்தம். பீறல் = சேலைக்கிழிவு.

மூலக் குறிப்புகுறிப்பு : சங்க இலக்கியத் தொகுப்புக்களில் இணைக்கப்படாமல்
விடுபட்டுப்போன பாடல் இதுவென்றும்; தமிழறிஞர்
தேவநேயப்பாவாணர் தேடியெடுத்துத் தந்ததென்றும்; இந்தப்
பாடலை என்னிடம் மதுரை யாதவர் கல்லூரி முதல்வர்
முனைவர் தமிழ்க்குடிமகன் தந்து "சங்கத்தமிழ்" எழுதிடச்
சொன்னார். அவருக்கு என் நன்றி. மு.க.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்