பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 45 / 102

வாடைக் காற்றில் வாடிய காதலி!

அச்சுப் பக்கம் 228–231 · ஸ்கேன் 241244 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 242

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

வாடைக் காற்றில்

வாடிய காதலி!

"கண்ணல்லவோ, கனியல்லவோ --எழுதாத
பண்ணல்லவோ -என் நெஞ்சம்,
விண்ணல்லவோ; அதில் நீ
வெண்ணிலவல்லவோ! என்றென்னை
அழைத்திட்ட போது, அவன் வடித்திட்ட வார்த்தைகளோ;
அருவி தவழ்ச் சோலை அழகு மலர்க் கூட்டம்!
மதுக்குடங்கள் அழுந்தட்டும் மார்பில் என்று - அவன்
மணிக்கரத்தால் குறும்பு செய்து,
புதுச் சுவையை இதழுக்கு அளித்தபோது,
புவி முழுதும் தலைகீழாய்ச் சுழலக் கண்டேன்.
உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உன்னை
'இச்' சென்ற ஒலியோடு உதட்டால் சுவைக்கத்
தடையொன்று இருக்கலாமா? அன்பே!
உடையென்று அதற்குப் பேரா? - உடன்
விடை கொடுத்து அனுப்பு " என்றான் - அந்தப்
படை முகத்துப் பெருவீரன் பேச்சுக்குப்
பதில் பேச்சுப் பேசவில்லை நானும்! அதனால்
பஞ்சு பஞ்சாய்ப் போனதுவே மஞ்சம்!
'இகல்' என்றால் 'பகை' என்று பொருளாம்;
'பகல்' வந்தால் எமக்கு 'இகல்'தானே அன்று!
அகல் விளக்கே! ஆருயிரே!
புகல்வதுகேள்; பூங்குயிலே!
போர்முனையில் வில், வேல், வாள் எனும்
ஏர்பூட்டி வெற்றி விளைச்சல் நடத்திவிட்டு
வாடைநாள் தொடங்கு முன்னர், வடிவழகே!
ஓடைமலர் உனைக்காண ஓடிவருகின்றேன்''

என

நாள் குறித்து நான்மகிழ உறுதிமொழி
வாள் மீது ஆணையிட்டு அடித்துச் சொன்னார்.

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

'நாக்கு நுனியிரண்டும் பிணைந்து மீண்ட பின்னர்
வாக்குத் தவறாதீர் அத்தான்" என்று
கண்ணிரண்டின் கடை விழியும்;
மின்னுகின்ற துளிகளுடன் - அவனை
வழியனுப்பி வைத்த காட்சிக்கு; வான்பிறை போல்
வடுக்களாய் நிலைத்துவிட்ட அவன் நகக்குறி பற்குறியே சாட்சி!
சாட்சிகள் இத்தனை இருந்தென்ன;
சத்தியம் அத்தனை செய்தென்ன;
கோடையில் இளநீர் போன்றவளை
கூடிக் களித்திடக் கோமகனும்,
வாடைநாள் வந்தும் வரவில்லை - அவளோ
ஆடை நழுவிடப் புரளுகின்றாள்.
''பிரிந்திருக்க அவன் நாள் குறித்தபோதே,
பிடிவாதமாய் மறுத்துரைத்துத் தடுத்திருந்தால்;
காதல் நோயால்,
எரிந்திருக்கப் போவதில்லை இந்த மேனி - அது
தெரிந்திருக்க வேண்டாமோ அப்போதே என் கண்களுக்கு?"
இவ்வாறு,
தங்கச்சிலையாள் தன் கண்களைச் சினந்ததை
சங்கத் தமிழாய் இங்கே காண்போம்!

“நாண்இல மன்ற எம்கண்ணே - நாள் நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண்ணுறை அழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே”

மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் 35
பாடியவர் : கழார்க் கீரன் எயிற்றி)

விழியிரண்டுக்கும் வெட்கமில்லை என்பேன்
விரல்விட்டு நாள் எண்ணி வரும் வேளை குறித்து - அவன்
விடை கேட்டபோது
சரியென்று ஒப்பிவிட்டு; இன்று - இமய
கிரி விட்டு வழிகின்ற நதிபோல அழுதென்ன பயன்?

குறித்த நாளுக்குள் வருவேன் என்றும் - குளிர்
வருத்தும் வேளையில் கூடியிருப்பேன் என்றும் - நீரில்
பதித்த வார்த்தைகள் நிற்காததாலே பிரிவில்
கனத்தது நெஞ்சம் - தகித்தது காமம்!
கருக்கொண்ட பச்சைப்பாம்பின் உடல் போன்று - பருத்த
கணுக்கொண்ட கரும்பின் அரும்பு மடல் அவிழ
துகில் போல வானமங்கையின் மேலாடும்
முகில் கூட்ட மழைத்துளிகள் படைக்கின்ற
வாடையெனும் குளிர்காற்றால் வாடுகின்றேன் என்
ஆடையினை அகற்றிடினும், வெப்பம் மூளும்; - அவன்

அருகிருந்தால்!

அவ்வாறு
இல்லாமல் அவன் பிரிந்திருப்பதற்கு - என்
பொல்லாத கண்களே விடையளித்தன அன்று!
நில்லாத அருவிபோல அழுவதேனோ இன்று?
கல்லாத கண்களே! கவிழ்ந்திடுக நாணத்தால் பூமி நோக்கி!''
மொழியழகி - விழியழகி - முத்துநகைப் பேரழகி
பொழிலழகை வெல்லுகின்ற புவியழகி;
அழுதழுது முகம் வீங்கியதால்
விழுதனைய நீர் இறங்கும் கன்னத்தில் கைவைத்துக்
கண்களே! நாணம் கொள்க!'' எனக்
கடுமையாய்ச் சொல் உதிர்த்த நிகழ்ச்சிக்குக்
கவிதை வடித்திட்ட புலவர் நெஞ்சம்
கற்பனையின் ஊற்றன்றோ!
தென்தமிழின் மணம்பரப்பும் - இளந்
தென்றல் காற்றன்றோ!

பொருள் விளக்கம் :

நாண்இலமன்ற = நாணமில்லாதனவாயின. நாள் நேர்பு = குறித்த
நாளில் வருவதாகக் கூறியதை ஒப்புதல்.
நுண்ணுறை அழிதுளி = முகிலில் இருந்து கரைந்து தூவுகின்ற
மழைத்துளி. பிரிந்திசினோர்க்கு அழல் = பிரிந்து சென்ற
தலைவன் பொருட்டு அழுதல். கனைத்த கரும்பு. = பருத்த
கரும்பு.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்