பகுதி 15 / 102
பிசிராந்தையார் 3
அச்சுப் பக்கம் 70–75 · ஸ்கேன் 85–90 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 86
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
பிசிராந்தையார் 3
ஆந்தையார் சொற்கேட்டு அன்னச் சேவலார் - சோழ
வேந்தனிருக்குமிடம் சென்றாரோ இல்லையோ;
ஆருயிர் நண்பன் சிறப்பைச் செதுக்கிய மனநிறைவுடன்
அன்பு மனைவியிடம் புலவர் அதனைப் பாடிக்காட்டி மகிழ்ந்தார்!
“அன்னச் சேவல் கற்பனை மிக அருமை” என்றுரைத்தவாறு
அன்னம் படைத்திட்டாள் துணைவி; அவருக்கும்
பேரக்குழந்தைகட்கும்!
“முல்லை வரிசை இரண்டிங்கே சிரிக்கின்ற காட்சி பாராய்”
என்றார்!
வில்லையொத்த புருவம் விரித்து “எங்கே?” எனக் கேட்டாள்
துணைவி!
“பாவையுந்தன் பாளைச் சிரிப்போடு - இதோ
பச்சரிசிச் சோற்றின் சிரிப்பையுந்தான் முல்லையென்றேன்”
என்றார்!
“பார்த்துப் பேசுங்கள் கொஞ்சம்; பக்கத்தில் பேரக்
குழந்தைகள்” என்றாள்! “நமது மகன்;
வார்த்தெடுத்த வைரச்சிலைகளுக்கு இம்மொழி புரிய வயது
போதாது!
வளர்ந்த மகன், மனைவியுடன் வயலுக்குச் சென்றுளான்
- அவர்கள்
வருவதற்கு நேரமாகும்; அஞ்சாதே!” என்றார்.
“வந்துவிடுவார் இப்போது கொஞ்சாதீர்” என எச்சரித்தாள்!
- உடன் வாய் மூடிக்கொண்டார் புலவர்; அவள் வடித்திட்ட சோற்றாலே! - அது
போய்த் தொண்டையிலே அடைத்ததாலே
புரையேறிப் புலவர் தவித்தார்!
தையலோ தாவிப்பாய்ந்து கணவன் தலையிலே ஒரு
தட்டுத்தட்டிக்
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.
கையினால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபோது தழுவினார்;
நழுவி விட்டாள்!
கலகலவென ஒலிக்கின்ற சதங்கைபோலக் காதல் முதியோர்
களிப்பு மிகக் கொண்டவாறு சிரித்துவிட்டார்!
கரும்பின் அடிப்பாக இனிப்பைப்போல் மழலை கொட்டி - பிஞ்சுக்
கைகளையே தட்டிக்கொண்டு பேரன் பேர்த்தி சிரிக்கலுற்றார்!
மடையுடைத்தாற்போல் பொழிந்த மகிழ்ச்சிக்குத் திடுமென
தடைவிதித்தாற் போல் செவியில் விழுந்தது ஒரு செந்தழல்
செய்தி!
உறையூர் வேந்தன் கோப்பெருஞ்சோழனை எதிர்த்து - அவன்
உயிராய்ப் போற்றிய மைந்தர்கள் படை எடுத்தனர் என்றும்,
கிள்ளைமொழித் தமிழால் கவிபுனையும் சோழ மன்னவனோ
பிள்ளைகளின் செயலால் பெருந்துயரில் ஆழ்ந்திட்டான் என்றும்
வெள்ளை மலர் உள்ளத்தான் வேறு வழியே இன்றி
வீரவாளைக் கரமேந்திக் களம் காண எழுந்திட்டான் என்றும்
தந்தைக்கும் மைந்தர்க்கும் மூண்டுவிட்ட போராட்டம் குறித்த
விந்தைச் செய்தியினைக் கேட்டுப் பிசிராந்தைப் புலவர்
சந்தையில் தொலைத்துவிட்ட பொருளாயிற்றே தமது மகிழ்ச்சி
சிந்தை மிக நொந்து புறப்பட்டார் சோழநாடு!
எனக் கூறி
“தமிழினத்தார் தன்மானம் மிக்குடையார் - பகைவர்க்குத்
தலைதாழ்த்தும் நிலை வந்தால் தயங்காமல் உயிர் துறப்பார்!
இமிழ் கடல் தாண்டியும் புகழ் மணம் பரப்பி - நல்ல
அகில், மிளகு, முத்து வாணிபம் புரிவார்!
இலக்கிய மேதைகள், இனிய நற்கவிஞர்கள்
இயற்கையைப் போற்றுவர், எழில் மாடம் அமைப்பர்!
இனத்தின் மேன்மை ஏட்டில் நாட்டுவர்
இறைமாட்சி தவறாது இந்நிலமிசை ஆள்வர்!
கல்தோன்றி மண்தோன்றாப் பழங்காலத்தின்
முன்தோன்றி மூத்த குடிமக்களும் தமிழரே ஆவர்!
எல்லாம் சரிதான்; ஆனால் ஒன்று -
பொல்லா உட்பகைப் புயலில் சிக்கி
கொல்லாமற் கொல்லும் வேற்றுமையென்னும்
குழியினில் வீழ்ந்திடும் குணங்கொண்ட இனமும் தமிழினமே!”
இவ்வாறு எண்ணமிட்டு நடந்திட்ட பிசிராந்தை - சோணாட்டுத்
தகராறு குறித்துத் தகவலறிய நடுவழியில் முற்பட்டார்!
கோப்பெருஞ்சோழன் அமைத்திட்ட ஊர்ப் பொது
மன்றமொன்றில்
கூடியுள்ளனர் அவ்வூர்ச் சான்றோர் எனக் கேள்வியுற்று
வார்த்தையில் அடங்காப் பரபரப்புடனே இதயம் துடிக்கப்
போர்ப்புகை, அணைந்ததா என்றறிய அங்கு சென்றார்.
பொத்தியார், பூதநாகனார், நத்தத்தனார் மற்றும்
புல்லாற்றூர் எயிற்றியனார் எனும் புலவர் பெருமக்கள்
மன்றத்திலிருந்து குதித்தோடி வந்து, பிசிராந்தையாரை
மார்புறத் தழுவி வருவீர் வருவீர் என வாழ்த்திக் களித்தனர்!
“அங்கம் பதறி அகம் பதறி வந்துள்ளேன் அய்யா
சிங்கத்துக்கும் அதன் குட்டிகட்கும் மூண்ட போர்
என்ன ஆயிற்று?” என வினாக்குறியாய் நின்றார் புலவர்!
“ஏதொன்றும் தீங்காய் முடிந்திடவில்லை கேளீர்!”
இன்னலொன்று தோன்றிற்று அதனை இந்தப் பெருமகன்
மின்னலெனப் பாய்ந்து சென்று தடுத்துவிட்டார்.
குஞ்சுகள் மிதிப்பதாலே கோழியும் பதைக்கலாமோ எனக்கேட்டு
கொஞ்சுதமிழ்க் கவிதையாலே கோப்பெருஞ்சோழனையே குளிர்வித்துப்
போர் நிறுத்தம் செய்வதற்குக் காரணமான
புல்லாற்றூர் எயிற்றியனார் இவர்தான்” என்று
பொத்தியார் அறிமுகம் செய்துவைத்தார்!
பூரிப்பால் பிசிராந்தை துள்ளலானார் - பின்னர்;
நாத் திறம் கொண்ட நற்புலவர் கூட்டமதில்
பாத் திறம் காட்டிப் பலரும் கருத்துக்கனி உதிர்த்திட்டார்.
ஒரு கவிஞர் பிசிராந்தையாரை நோக்கி “புலவீர்!
கருமை நிறம் மாறாத தலைமுடியும் தாடியும்; உமக்கு
அகவை அறுபதுக்கு மேலாகியும் கூட அப்படியே
அணுக்கூட நரைக்காமல் இருப்பது எப்படியோ?”
எனக்கேட்டார்!
* “விளக்குகிறேன் காரணத்தைக் கேட்பீர் அய்யா!
- குடும்ப
விளக்காக வாய்த்துள்ளார் மனைவி எனக்கு!
விளைவுதனைக் கழனியிலே பெருக்குகின்ற மகனோ
ஒருசிறிதும்
வளைவுதனைக் கொள்கையாகக் கொள்ளாத காளை!
அளவறிந்து அவன் பெற்றான் இருபிள்ளை; இரண்டுமே
அறிவார்ந்த அழகு தமிழ் மழலைக்கிள்ளை!
வளமான நெஞ்சுக்குள் வாஞ்சை நிறைத்து - எனது
உளமறிந்து செயல்புரியும் ஊழியரும் உண்டெனக்கு!
சிலந்தி வலை நூலினும் மெல்லிய சிறு தவறுகூட
செங்கோலின் மீது படரக்கூடாதெனச் சூளுரைத்துச்
சீலமுடன் நடக்கின்ற ஆட்சியினைப் பெற்றுள்ள
சிறப்பும் உண்டு எந்நாட்டு மக்களுக்கு!
அடியேன் பிறந்த அழகுமிகு சிற்றூர் பிசிர் எனும்
பதியில்
ஆன்றோரும் சான்றோரும் பெரும்பாலும்
நிறைந்துள்ளார்!
இத்தனை பெருமையும் ஒருசேரப் பெற்ற மகிழ்வால்
முத்தனைய நிறங்காட்டி என் முடியினிலே நரைதிரை
எதுவும்
முற்றுகையிடுவதற்கு முனையவில்லை - முடியவில்லை!
கற்றறிவாளரே! கவலையில்லா வாழ்க்கையினால்
கிடைத்திட்ட பலன் இது” வென்று பகன்றிட்ட
பாவலரின் இதயம்
உடைத்திட்ட செய்தியொன்று அப்போது வந்ததங்கே!
கிழக்குதித்த சூரியன்போல் நாடாண்ட சோழ மன்னன்;
தனக்குதித்த பிள்ளைகளின் எதிர்ப்பாலே மனமுடைந்து
வடக்கிருந்து உயிர் விடுவதற்குச் சென்றான் என்று
மடல்கத்தி போல ஓலையொன்றைக் கண்டார் கவிஞர்!
“இக்கணமே புறப்பட்டு இல்லம் சென்று விடைபெற்றுத்
திரும்புகின்றேன்.
இலக்கணமாய் நட்புக்கு வாழ்ந்த நாங்கள் இறப்புலகில்
பிரிவதில்லை!
வடக்கிருக்கச் சென்றுள்ள சோழனிடம் கூறிடுவீர்! - அவன்
அருகிருக்கப் பிசிராந்தை விரைவில் வருவானென்று!”
இதைச் சொல்லிப் புலவர்ஏறு இலையினின்றுதிர் பனிநீர்போல
இமை இரண்டில் விழிநீர் ததும்பப்
பதைப்புடனே பாண்டிநாடு பயணமானார்;
பாசமிகு மனைவிமக்கள் பேரன் பேர்த்தியிடம்
விடைபெறுவதற்கே!
* “யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 191
பாடியவர் : பிசிராந்தையார்)
பொருள் விளக்கம் :
யாண்டு = வயதைக் குறிக்கும் ஆண்டு.
மாண்ட = மாட்சிமையுள்ள.
நிரம்பினர் = அறிவு நிரம்ப உடையார். இளையர் = ஊழியர்.
அதன்தலை = அதற்கும் மேலாக.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்