பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 16 / 102

பிசிராந்தையார் 4

அச்சுப் பக்கம் 76–80 · ஸ்கேன் 9195 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 92

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பிசிராந்தையார் 4

வாழ்க்கைக்கு ஒரு முடிவுரை எழுதிட முனைவோர்
வடக்கு திசை நோக்கி உண்ணாநோன்பிருந்து உயிர் விடுவர்!

வடக்கிருத்தல் எனும் பழங்கால நிகழ்வை - தமிழர்
வரலாற்று இலக்கியம் ஒரு வழக்கென உரைக்கும்!

ஆண்டநாள் ஆண்ட செந்தமிழ்ச் சோழன் - மைந்தரால்
மூண்ட போரினையெண்ணி மூடுபனி நெஞ்சுகொண்டான்!

வடக்கிருந்து மாண்டிடவே மன்னன் விழைந்தான் என்றும் - மன
வாட்டம் அறவே தீர அதுதான் மார்க்கமெனத் தேர்ந்தான்
என்றும்

தமிழகம் வாழ்புலவர் சிலர் கேள்வியுற்று - தங்களுயிர்
அமிழ்தல்ல என்றுரைத்து அவனோடு சென்றமர்ந்தார்!

வெல்லமெனக் கருதாமல் வேந்தன் பிரிவதற்குத் துணிந்த உயிர்
மெல்லக் கரைந்து மேனிமுற்றும் தளர்ந்தபோது - சிலர்;

கோப்பெருஞ்சோழப் பெருமகனை நோக்கி; “மன்னர்மன்னா!
பாப்புனையும் பைந்தமிழ்ப் பேராசான் பிசிராந்தையார்,

காணாமலே அகம்கோணாத நட்புஉன்பால் கொண்டவர் என்பாய் -
வாணாளும் முடிவடையப் போகின்றதே; இன்னும் அவர்
உன் வாராத காரணம்தான் என்ன?” என்றார்!

“அருகிருந்து உயிர்விடுவதாய்ச் சூளுரைத்துப் போனபோது
- திரும்ப
வருகின்றேன் என்றுரைத்த வார்த்தையிலே வாய்மையிலையோ!”
என்ற கேலியும் ஒலித்ததாங்கே!

சாவதற்குவந்த இடத்திலும் நண்பரது சான்றாண்மை குறித்துச்
சந்தேகம் எழுப்பியவர்பால் மன்னன் சீற்றம் கொண்டான்.

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

“கோல்கொண்டொருவன் கொலுவினிலே வீற்றிருக்கும்போது
கோடிசூரிய ஒளியை அவன் முகத்தினிலே காணுகிறேன்
என்றும்,

ஆல்போல் தழைத்து அருகுபோல் அவனாட்சி வேர் விடுக

என்றும்

பால்போல் தேன்போல் பருகத் தெவிட்டாப் பாராட்டு
வாழ்த்தெல்லாம் பொழிந்திடுவர்,

சூல்கொண்ட துன்பப்புயல் அவன் வாழ்வில் மேவிடுமாயின்
வேல்கொண்டே இதயத்தில் குத்திவிட்டு விலகியே ஓடிடுவர்!

கயவராய், கடையராய், காரிருள் அகம்படைத்த மனிதராய்க்
கருதி, அவர் நட்பைக் கால் தூசிக்கும் கீழாக ஒதுக்கிடலாம்!

குயவர் செய் மற்பாண்டமேனும் உடைந்தபின் சிறு பயன்
தருமெனலாம்!

குள்ளநரிக் குணம் கொண்டோர் நட்பாலே பெருந் தீமையே
கொடிகட்டிப் பறக்குமென்பேன்!

உள்ளமெலாம் சுயநலத்துச் சுரங்கமாக அமைந்ததாலே
பள்ளம் போய் வீழ்கின்ற தண்ணீர்போல் ஆகிவிடும் பலர்
நட்பு!

பாண்டிநாட்டுப் பழகுதமிழ்ச் சிற்றூராம் பிசிர் எனும் பதியில்
தோண்டியெடுத்திட்ட தங்கமாய்த் தோன்றிய ஆந்தையார்
நட்போ;

வாழுங்கால் வந்து தலைகாட்டி ஆடாவிடினும்
தாழுங்கால் தயங்காது ஓடிவந்து துணைநிற்கும் தூயநட்பு!

ஆன்றோரே! இதனை அறிவீர்!” என்றே விடையிறுத்த மன்னன்;
ஆவிதனை அடுத்தொருநாள் விடுத்தே நடுகல்லாய்
ஆகிவிட்டான்!

தாமதமாய் வந்தார் எனினும் பிசிராந்தை; ஆங்கு
தமது நண்பரது பக்கத்தில் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்ச்சியினை;

கண்ணகனார் எனும் புலவர், கண்ணீரை மலராக்கி
கவிதையாம் கவின்மாலையொன்று தொடுத்து அந்த
நடுகற்களுக்கே சூட்டுகின்றார்!

“பொன்னும் முத்தும் பவளமும் மணியும்
ஒன்றுக்கொன்று தொலைவில் விளையினும் - அவற்றை
மின்னும் அணியாய்க் கோத்திடும்போது

பின்னிப் பிணைந்திடும் நெருக்கம் போலவே
மன்னன் சோழன் உறையூர் தனிலும்
மாகவியாம் பிசிராந்தை பாண்டிய மண்ணிலும்

பசும் பொன்னைப் போல் முத்தைப் போல்
பல கல் தொலைவினிலே தனித்தனி பிறந்தார் எனினும்,
அணியாக ஆனபின்பு அருகருகே இருக்கின்ற மணிகள் போல - என்றும்
அணையாத நட்புக்கோர் விளக்கொளியாய் நடு கல்லாய்
அமைந்துவிட்டார்!

சான்றோர் என்றுமே சான்றோர் அருகிருப்பர்...
சான்றாண்மை இல்லாதார், வரலாற்றில் சருகாகி உதிர்ந்து
போவார்!”

கண்ணகனார் எழுதிவைத்த கவிதை ஏடு - சோழ
மன்னனுக்கும் பிசிராந்தைக் கவிஞருக்கு மட்டுமல்ல;
எண்ணமெலாம் தூய்மையாக நட்புக்கொள்வோர் அனைவருக்கும் - தேன்
கிண்ணமாகும்! தெவிட்டாத தெள்ளமுதமாகுமன்றோ?

* “தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வக்காலை நிற்பினும்,
அல்லற்காலை நில்லலன் மன்னே.”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 215
பாடியவர் : கோப்பெருஞ்சோழன்)

* “பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடைபுணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும்காலை,
ஒருவழித் தோன்றியாங்கு - என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 218
பாடியவர் : கண்ணகனார்)

பொருள் விளக்கம் :

தென்னம்பொருப்பன் = தென்திசைப் பொதிகைமலையையுடைய
பாண்டியநாட்டு மன்னன்.
என் உயிர்ஓம் புநன் = என் உயிருக்குத் துணை நிற்கும் நண்பன்.
செல்வக்காலை = வாழும் காலத்து.
அல்லற்காலை = இன்னல் வந்த காலத்து.
நில்லலன் = நிற்காமல் வருவான்.

இடைபடச் சேயவாயினும் = ஒன்றுக்கொன்று இடையே
தொலைவிலிருப்பினும்.
தொடைபுணர்ந்து = (அணியாக) கோக்கப்பட்டு.
அருவிலை நன்கலம் = அரியவிலையுடைய அணிகலன்.
பாலர்ஆப = பக்கத்தவர் ஆவர்.
சாலார் = சான்றோரல்லாதார்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்