பகுதி 14 / 102
பிசிராந்தையார் 2
அச்சுப் பக்கம் 66–69 · ஸ்கேன் 81–84 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 82
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
பிசிராந்தையார் 2
பேசுமொழி தமிழ்மொழி என்றதாலும்; பேசியவர்
பிசிராந்தைப் பெருமகனார் என்றதாலும்
மாசு மருவின்றி இனி ஆட்சி நடக்குமென
மன்னன் உறுதிமொழி தந்ததோடு
தந்திட்ட மொழி தவறாது காத்திடவும் செய்தான்
தரணியிலே தன்புகழ் பூத்திடவும் செய்தான்.
அறிவுடைநம்பிக்கோர் அறிவு விளக்காக அமைந்திட்ட
தெளிவுடைச் செந்தமிழ்ப் பேரொளியாம் பிசிராந்தை;
சோழநாட்டு வேந்தன் கோப்பெருஞ்சோழன்பால்
சொல்லாலே நெய்வதற்கு இயலாத அன்புதனைக்
கொண்டிருந்தார்
கவிபுனையும் ஆற்றல், கற்றாரைப் போற்றுகின்ற பாங்கு,
புவியெங்கும் மெச்சுகின்ற கொடைத் திறம்,
கண்ணிமை போல் நாட்டுக்குக் காவல்,
தண்ணிலவை மிஞ்சுகின்ற தகைசால் உள்ளம்;
கோப்பெருஞ்சோழனிடம் குடிகொண்ட இக்குணங்கள்
குளிர்புனல் இதயக் கவிஞரை ஈர்த்தது மிகவே!
பிறந்த இடமாம் பிசிர் எனும் ஊரில் - நிழல்
அடர்ந்த தோப்பில் நெறியுடைக் கவிஞர் ஒருநாள்;
ஆய்வுக்குரிய பல்பொருள் குறித்து - சிந்தனை
அசைபோட்டவாறு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அன்னச் சேவல் ஒன்று இறக்கைகள் விரித்து
ஆகாயவெளியிற் பறந்து செல்வதைக் கண்டார் புலவர்!
ஆருயிர் நண்பன் சோழனைக்குறித்துப் பாடலொன்று;
யாத்திடும் ஆசை நிறைவேற வேண்டுமென்று,
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.
அன்னச்சேவலை மையமாய் வைத்து - அழகுறப்பாடல்
கன்னல் தமிழில் கற்பனையூற்றாய் எழுதியோர் புலவர்!
“அன்னச் சேவலே! அன்னச் சேவலே!” என அழைத்து
இன்னலுற்றுள்ள தன் நெஞ்சைத் திறந்து காட்டி,
மன்னவன் பெருங்கோ கிள்ளியெனும் கோப்பெருஞ்சோழன்
இன்னமும் காணும் வாய்ப்பினைப் பெறவில்லையே யென்ற
மனப்புயல் ஒருபுறம், அடக்கிக்கொண்டு - அவன்
மாப்புகழ்பற்றி எடுத்துரைத்தார்!
கோக்காமல் முத்துக்கள் மாலையாவதில்லை - ஆனால்
பார்க்காமலே சோழனும் புலவரும் நட்பின் ஆரமாய்த் திகழ
தமிழே மணியாய் - தமிழ் உணர்வே இழையாய் ஆனதுவாம்!
தடந்தோள் சோழனின் கொடையும் அன்பும் பாட்டின் கருவாய்
அமைந்ததுவாம்!
“அன்னச்சேவலே! அன்னச்சேவலே! நீயோ
கன்னிக் குமரியின் முனையிலேயிருந்து
அயிரைமீனைக் கொத்திய அலகுடன் - வெகு
உயரம் விண்ணில் பறந்தவாறு,
பனிமலை நிறைந்த வடக்கு திசைக்குப்
பயணம் செய்கிறாய்; நின் பயணம் வெல்க!
கடக்கும் வழியில் என் கண்மணிச்சேவலே! - பகை
அடக்கும் சோழன் தலைநகர் உளது!
கோழியூர் எனப்படும் உறையூர் நகரே - எனது
கோப்பெருஞ்சோழனுக்குரிய தலைநகர்!
மேழிச்செல்வம் கோழைபடாது எனும் கொள்கையுடனே
மேன்மையாய் நாட்டைக் காக்கும் மன்னவன்!
வலக்கரம் வழங்குவது இடக்கரம் அறியாமல்
வழங்கிடும் தென்னவன்!
வழியில் நீயும் நின் பெடையுடன் சென்றால் - சோழன்
விழியில் அன்பின் ஒளியினைக் காண்பாய்!
இடையில் எவரும் தடுத்து நிறுத்தினால்
பெடையுடன் நீயும் திரும்பிடல் வேண்டாம்!
இறைவனாம் சோழன் செவியில் விழுமாறு
உறையூர்க் காவலர்பால் உரக்கக் கூறிடு!
ஆந்தையார் எனும் புலவர் வாழ் பிசிர் எனும் ஊரைச்
சார்ந்தோர் நாங்கள் எனச் சாற்றுவாயாகில்;
அரசனே ஓடிவந்துமை வரவேற்று வாழ்த்தி
அணிமணி பலவும் நின் பேடைக் களிப்பான்!
ஏனெனில் அத்துணை நட்பு அவனுக்கென்னிடம் உண்டு
தேன் எனில் தெவிட்டிவிடும்; இதுவோ எம்
இருவரிடை என்றுமே தெவிட்டாத நட்பு.”
* “அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழநன் னாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங்கோக்கிள்ளி கேட்க, ‘இரும்பிசிர்
ஆந்தை அடியுறை’ எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே -”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 67
பாடியவர் : பிசிராந்தையார்)
பொருள் விளக்கம் :
ஆடுகொள் வென்றி அடுபோர் = கொன்று குவிக்கும் போர்க்
களத்தில் வெற்றிவாகை சூடுகிற.
கையறுபு இனைய = செயலற்று வருந்திட.
அயிரை = ஒருவகை மீன்.
குறும்பறை = பேடையெனப்படும் பெண்பறவை.
மாண்ட = மாட்சிமையுடைய.
நன்கலம் = அணிகலன்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்