பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 13 / 102

பிசிராந்தையார் 1

அச்சுப் பக்கம் 60–65 · ஸ்கேன் 7580 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 76

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பிசிராந்தையார் 1

குளத்து மீனைக் கொடிதனில் நீந்தச் செய்து
களத்தினிலே வெற்றிகளைக் குவித்திட்ட பாண்டி நாட்டு
மக்களுக்கு

உளத்திலொரு வருத்தமுண்டு; அஃதென்னவெனில்
வளத்தைப் பெருக்காமல் வரி பெருக்கி வருமானம் பெருக்க
முனையும்

வாள் மீசைக்காரன் அறிவுடை நம்பிப் பாண்டியனின்
வளைந்திட்ட ஆட்சிக்கோலை நிமிர்த்திட
வேண்டுமென்பதேயாகும்!

நாட்டு நிலையை எடுத்துரைத்துப் பாண்டிமன்னன் திருந்திடவே
நீட்டோலை கொண்டு பலர் அவனைச் சந்திக்கச் சென்று கால்
வலித்துத் திரும்பிவிட்டார்!

ஆடலரங்கம், இசையரங்கம்; அத்தாணிமண்டபத்தில்! அரசியுடன்
ஊடலரங்கம், கூடலரங்கம்; அனிச்சமலர் மஞ்சத்தில்!

ஏடு கொள்ளா இன்பத்தில் திளைத்திடலே
நாடு காக்கும் முறையென்று; நாலைந்து பேர்வழிகள்

அரசுத்துறையோர் அமர்ந்து கொண்டு
அறிவுடைநம்பியினை அடுத்தடுத்துக் கெடுக்கலானார்!

அரசன் எதைச்சொன்னாலும் ஆமாம் என்று
அவசரமாய்த் தலையாட்டி; அடடா! அருமை அருமையென

பாராட்டிப் போற்றிப்புகழ்ந்து அவனை இன்பச்சேற்றில்
தேரோட்ட வைத்து ஆட்சியினை வசமாய்ச் சிக்கவைத்தார்!

அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போன்றார் - சில
உற்றார் உறவினரும் அதுதான் சமயமென்று; தாம்

கற்ற வித்தை அனைத்தும் காட்டி நாட்டோரை வஞ்சிக்கும்
குற்றங்கள் கணக்கின்றிப் பெருக்கலானார்!

சோலைவனப் பாண்டிநாடு சொந்த நலம் நாடுவோரால்
பாலைவனப் பூமியாகும் எனப்பயந்த சான்றோர் பலர்;

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

காலைக்கதிர் உதித்தெழுந்து காரிருளும் தொலைவதற்கே
கடமையாற்ற முனைந்திடுவீர் எனக் கவிஞர் ஒருவரிடம் வேண்டி
நின்றார்!

பிசிர் எனும் பாண்டிநாட்டுச் சிற்றூரில்
பிறந்திட்ட ஆந்தை எனும் பெயருடையார் அக்கவிஞர்!

பிசிராந்தையார் என்று பெருமைமிகு வரலாற்றேட்டில்
பீடுநடைபோட்டு நட்புக்கோர் இலக்கணமாய் வாய்த்தவராம்!

கோப்பெருஞ்சோழன் எனும் மன்னனை நேரில் பாராமலே
அவன்
மாப்புகழ் கேள்வியுற்றுத் தன்னையவனுக்கு நண்பராய் வரித்துக்
கொண்டவராம்!

சொந்தநாடாம் பாண்டியநாட்டில் சோர்வுற்று மக்கள் எலாம்
நொந்துமிக இன்னலுற்றுத் தள்ளாடும் நிலைமாற்றத்

தன்னால் முடியுமென நம்பிக்கை தெரிவித்துத் துணிந்து
மண்ணாளும் அறிவுடைநம்பியினைச் சந்திக்கப் புறப்பட்டார்!

பார்வேந்தனாம்நம்பி; பாவாணர் பிசிராந்தை வரும் செய்தி
கேட்டு

பாவேந்தரை மனம் கோணச் செய்தல் பெருங்கேடாய்
முடியுமென அஞ்சி,

தமிழுக்கு மரியாதை செய்கின்ற பண்பாடு குன்றாத காரணத்தால்
தமிழ்க்கவியைத் தகுதியுடன் வரவேற்றுத் தலைதாழ்த்தி வணக்கம்
செய்தான்!

“செந்தமிழுக்கு நீ செய்கின்ற சிறப்புக்கு மகிழ்ச்சியெனினும்
செங்கோலைக் கொடுங்கோலாய் மாற்றுதல் நன்றோ மன்னா?

பந்தங்கள், சொந்தங்கள் எனச் சொல்லிக்கொண்டு - தீப்
பந்தங்களாய்ச் சுடுகின்றார் உன்பக்கமிருப்போர்; நாட்டோரை!
நல்லோரை!

அரசனை அன்றாடம் இன்பப்பொழுது கழிக்கச் செய்துவிட்டு
அரசியலைத் தமதாக்கி விளையாடும் அரசுத்துறையோர் தம்மை;

அடையாளம் தெரிந்துகொளல் வேண்டும் வேந்தே! உன்
அழிவுதனைத் தடுத்திடவும் அதனினும் மேலாக

அழியாமல் என்றும் நமதுநாட்டு நற்பெயரைக் காத்திடவும்
அறிவுரை சில கூறிடவே வந்துள்ளேன்; ஏற்பாயோ?”

எனக்கேட்டு,

“காற்றடிக்கும் திசையினிலே கவிப்பாய் விரித்துப் படகோட்டி
போற்றிப் புகழ்ந்துகொண்டே தீங்குகளை மறைத்துச் சிலர்

போதுமான பரிசுகளைப் புவியாள்வோர்பால் பெற்றுச்செல்வர்!
- நானோ; உன்பால்
வாதுசெய்து நின்னாட்சிதனை வகைப்படுத்த வந்துள்ளேன்;
சீறிடாதே!” என்றுரைத்தார்.

“கல்லும் கசிந்துருகத் தமிழ்பாடும் கவியரசே!
அல்லும் பகலும் எனைச் சூழ்ந்திருப்போர்;

அறிவுரை எதுவும் கூறித் திருத்துவதற்குத் தகுதியின்றி
‘ஆம்’ என்றே அனைத்துக்கும் தலையசைத்துத் தரமிழந்து போனார்!

செறிவுநிறைத் திறம் வாய்ந்த பெரியீர் நீவிர்; இந்தச்
செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் செம்மைகாக்க வந்துள்ளீர்!

அறிவுடைநம்பியென எனக்குப் பெயர்மட்டும் இருந்தென்ன
பயன்!

அரசுக்குத் தேவை; இயற்றலும் ஈட்டலும் காத்து
வகுத்தலுமன்றோ?

இதனை மறந்து நடக்கின்ற ஆட்சிதனைக் கடிந்து
இடிப்பாரையில்லாத ஏமரா மன்னனாக இருந்துவிட்டேன்!

எடுத்துரைப்பீர்; என்ன செய்யவேண்டும் நான்? நீவிர்
தொடுத்துவைக்கும் அறிவுரையைத் தொழுதேற்றுச்
சூடிக்கொள்வேன்” என்றான்.

“மன்னா கேள்! ஒரு மாவுக்குக் குறைந்த நிலமாயினும்
மகசூல் கண்டு நெல்லை அறுவடை செய்து வந்து; அதனைக்

கவளம் கவளமாக யானைக்கே தருவதாயினும்; நல்ல
கவனமுடன் செயல்பட்டால் அவ்வுணவு பலநாளைக்கு
ஆகிவரும்!

அஃதன்றி;
நிலத்துக்குள் நீயே சென்று மேய்ந்துகொள்க என
நீள் துதிக்கை யானைக்கு உரிமை தந்தால் - பெருங்

கழனியின் நெல்மணிகள் யானையின் வாய்க்கு மட்டுமன்றி
காலுக்கும் தலைநாணி; மிதிபட்டுக் கழனியே படுபாழாகும்!

இரை கொள்ளும் யானைக்கே இவ்விலக்கணம்
பொருந்துமென்றால்
இறை கொள்ளும் அரசுக்கும் இதுவே பொருத்தமன்றோ?

தரையிலும் மீன் வாழுமென்று தண்ணீரை விட்டு நீ எடுக்கச்
சொன்னால்;

தடுத்துரைக்க வலுவின்றித் தலையாட்டும் பதுமைகளாய்;

அமைச்சர்களும், அரசுத்துறைப் பொறுப்பாளர்களும்
அமைந்துவிட்ட காரணத்தால் - அறிவில் நீ மெலிந்துவிட்டாய்

தொடர்கதையாய் இக்கதையே நீண்டுவிட்டால் - துன்பம்
படர்கதையாகித் தொன்மைமிகு சீர்வாய்ந்த சங்கத்திருநாடு மன்னா!
தாழ்ந்துபோகும்!

மக்களை வாட்டி வருத்தி வாங்குகின்ற வரிப்பொருள்தான்
ஆட்சியின் குறியென்றால்

மதயானை புகுந்த வயல்போல யாருக்கும் நலமின்றி
மண்மேடாகும் நாடு! அறிக!” என்றார்!

“விருந்தெனக் கவிபாடி எனை மேலும் கேளிக்கையில்
வீழ்த்துகின்ற பரிசில் கவிஞர் சிலர் போலன்றி - நீவிர்

மருந்தெனக் கவிதந்து என் மனம் மாற்றிப் போட்டுவிட்டீர்!
திருந்தினேன் இன்று முதல்; உமது திருவடிகள் அரண்மனையில்
பட்டதாலே!”

என்றான் மன்னன்;
வென்றார் புலவர்!

* “காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 184
பாடியவர் : பிசிராந்தையார்)

பொருள் விளக்கம் :

காய்நெல் = காய்த்த நெல்.
மா = நிலத்தின் அளவுகளில் ஒருவகை. செறு = கழனி.
தமித்து = தனியாக. நந்தும் = தழைக்கும்.
மெல்லியன் கிழவனாகி = அறிவால் வேந்தன் மெலிந்து.
வரிசை அறியாக் கல்லென் சுற்றம் = தரமறியாமல் (அரசன்)
விரும்புவதையே தாமும் கூறுகிற ஆரவாரமிகுந்த சுற்றத்தார்.
பரிவுதப = அன்புகெட.
பிண்டம் நச்சின் = பொருளை விரும்பினால். இறை = வரி.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்