கவிதை 13 / 77

நீர்க் குடும்பம்

The Water Family

X

நீர்க் குடும்பம்

28.9.68 அன்று பரமத்தி வேலூர், கண்டர்கல்லூரிக் கவியரங்கில் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின் தலைமைக் கவிதையுரை
அவையோர்க்கு வணக்கம்கவி அரங்கேற வந்தவர்க்கும்,கண்டர் கல்லூரி கண்டவர்க்கும் வணக்கம்.ஆசிரியப் பெரியோர்க்கும்அன்பு மாணவர்க்கும் வணக்கம்.தொண்டர், பிள்ளைக்கறி யளித்தார் சிறுத்-தொண்டர் பிள்ளைக் கறியளித்தார்; இன்றுகண்டர், பிள்ளைக் கறிவளித்தார்.பிள்ளைக்கு அறிவளித்தார்.புறந்தூய்மை நீரான் அமைவதற்குக் காவிரியும்அகந்தூய்மை வாய்மையாற் காணப்படக் கல்லூரியும்பொருத்தமாய்க் கொண்டவரைக் கொடை பொழிலெனக் கூறிடுவோம்,என்றுமே கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.ஈரமுள்ள இடத்தில்தான் ஈகையுண்டாம் - காவிரிதீரமுள்ள இவ்விடத்தில் ஈரமுண்டு
ஈதலுண்டு இசைபட வாழ்தலுண்டாம்நீர்க் குடும்பம் எனும் தலைப்பில்நெடிய புகழ்க் கவிமக்கள் பாடுகின்றார்;நீர், குடும்பத்தின் உறவன்றோ எனச் சொல்லிநீர் எழுத்துக் கவியெழுதும் எனைப்பிடித்து - அணிசீர் எழுத்துப் புலவரிடை நிறுத்தி விட்டார்.
கார் எழுத்து மழையாகும்; மழையின்பார் எழுத்து ஆறாகும்;ஆற்றின்நேர் எழுத்தே குளமென்போம்; கிணறென்போம்!இதற்கெல்லாம் வேர் எழுத்துக் கடலென்பார்தலையில் யார் எழுத்து என நைவார், விடுவார் கண்ணீர்பார்; எழுத்தை மாற்றுகின்றேன் எனச் சொல்வார்;வியர்வைப் போர் எழுத்தால் விதியை வெல்வார்வானக் கிழவன் இருமுதலே இடியென்றும்வாடிப் பிதுங்கும் அவன் கண்ணொளியே மின்னலென்றும்அவன் வடிக்கின்ற கோழை எச்சில்தான் மழையே என்றும்வர்ணித்தால் நோய் மழையை வரவேற்க ஒப்போம்வாலிபர்க்குப் பிடித்தமான உவமை சொல்வேன்வானத்து மீன் பெண்கள்; கூட்டுப் பேச்சே இடிக்குமுறல்;அவர் வாளொத்த கண்வீச்சே மின்னல் கீற்று;வட்டமதிக் காதலன்மேல் தெளிக்கின்ற பன்னீரே மழைத் துளியாம்வீரர்க்குப் பொருத்தமான உவமை யெனில்இருவீரர் நெஞ்சங்கள் மோதுவதே இடிமுழக்கம்
பெருவீரர் வேல் உராய்தல் விண்ணின் மின்னல்பலவீரர் பொழியும் செந்நீர் மழையே யாகும்.பொதுவில் வானகமே போர்க் களமாம்போர்க்களமெனினும், போகக்களமெனினும்பொல்லா நோய்க்களமெனினும் - உழவின்நல்லார் மழை தரும் வானத்தை 'மானம்' என்றார் கொச்சையாக!பொருத்தம்தானே?மழையில் நாம் நனைந்தது போதும்கடலருகே வந்திடுவோம்.
கடலென்றால் வைணவர்க்குத் திருமால் பள்ளி கொண்ட நினைவே தோன்றும்.உடலெங்கும் நீறுபூசுஞ் சைவர்க்குச்சிவன் நஞ்சுண்ட கதைதான் தோன்றும்படை கொண்டு அழிக்கவொண்ணாப் பூம்புகாரைகடல் தடையின்றி அழித்துவிட்ட வரலாறே நமக்குத் தோன்றும்.இத்தனையும் கூட்டிக் கழித்தால் இன்னும் எத்தனையோ நன்மைகளும் கடலால் உண்டாம்.முத்தனைய பற்கள் என்று - கரும்புச்சத்தனைய பெண் பேச்சுப் பேசுதற்கு முத்தினையே தந்ததுவும் கடலே அன்றோ!பருவ நிலமடந்தை உடுத்துகின்ற நீலப் பட்டாடைநிலாப் பெண்ணைத் தழுவுதற்கு அலைக்கரந் தூக்கும்,நெடுந்தோளன், நீலவண்ண ஆணழகன்.குலவுகின்ற காதலர்க்குக் கடலோரம் மணல்மெத்தைஉலவுகின்ற கவிஞர்க்குக் கற்பனைப் பரிசுக் கத்தை.கும்மிருட்டு மதியோர்க்குக் கரையோரம் தெரிவதெல்லாம் நண்டு நத்தை;கொட்டில் தும்பிட்ட மாடுகள்போல் நாவாய்கள் நிற்கும் துறைமுகத்தைக்காண்பதுவும் களிப்பதுவும் கடலால் அன்றோ!
கான்யூட் மன்னனது கர்வமடக்கியதால் பெருமையுற்று,காந்தி மகான் உப்புக் காய்ச்சியதால் அருமைபெற்றுவாஸ்கோட காமாவின் கலங்களுக்கு வழியும் விட்டு,வாணிபத்தில் கடல் கடந்த தமிழருக்கு முதல் வரலாறீந்து,பரந்த மனம் என்பதற்கு உவமையாகி.பலகாலம் அசைந்தாடும் ஊமையாகி,சிலகாலம் ஊழியாகி,உலகிற்குத் தீமையாகிப் பின்சினம் அடக்கும் துறவிபோல ஆமையாகிச்சீறும் அலை சுருக்கிக் கொள்வாய்;கடலே நின் சீரெல்லாம் சிறப்பெல்லாம் சொல்லப் போமோ?அதனாலே கடல் கடந்து ஆறடைவோம் வந்திடுவீர்.
மழையிடை வந்து மலையிடை தழுவிஇழை இடை வந்த பொன்துகில் போலத்தாழந் தழையிடை வந்து தலையினை நீட்டும்மடலதுபோல மாதர் குழலிடை வந்து கோலம் காட்டும்வகிடது போலக் களிநடை பூண்டுகாவினில் சென்று காவிரி யானாய்அணிமணி பூண்ட பெண்ணே யானாய்பெண்ணே என்றார் பெண்ணை என்றார்;நீ கைவைத்த இடமெல்லாம் களி நடமாடுவதால்வைகை என்றார் வளங் கொழிக்கச் சிந்து பாடுகின்றார்.கோதாவரியில்லை தமிழ்நாட்டில்கோதாய் வரியில்லை தமிழ்நாட்டில்!புஞ்சைக்குக் கோதாவரியில்லை தமிழ்நாட்டில்வெளிநாட்டுத் தமிழர்க்கு; வாழ்வு கொள் இடமுண்டு:வரையறுத்துச் செய்கின்றோம்.வணங்குகின்றோம் - ஆறே நீ வாழ்க நன்றுஆறு தலைப்பென்றே எனையழைத்தார் இங்குஏழு தலைப்பெழுதிப் பாடச் சொன்னார்; பாடுகின்றேன்.
அடுத்து கிணற்றுக்குச் சென்றிடுவோம்;
நான் கவியூரின் கிணற்றுத் தவளைநாட்டு வளப்பமறிவேன் - நும்போல்பாட்டு வளப்பமறியேன் அய்யா!நெடுவானம் மழைதர மறுத்துவிட்டால்ஆனாலும் நீளாறு, குளம், குட்டை, வறண்டுபோய் வாடிவிட்டால்தாகம் போக்க ஒரு குவளை தண்ணீரும் இல்லாமற் போய்விட்டால்உமிழ் நீரை உள்ளுக்குள் விழுங்குதல் போல்உரக்கேணி ஊற்றுக்கேணிஆழக்கேணி ஆற்றுக்கேணிஉடனடியாய்த் தோண்டுகின்றோம்கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது என்பாரேஅதன் பொருள் என்ன; புரிகிறதா?கிணறு வெட்ட மண் குவியும் - ஒரு பூதம்பூமிக்குள் அடைந்திருந்த 'காற்று' வெளிக் கிளம்பும் - மறுபூதம்பொங்கிவரும் புது 'நீர்' - அடுத்தபூதம்பொலிவுமிகு 'வான்' தெரியும் நீர் மீது - நாலாம் பூதம்புவியாளும் ஆதவனின் 'தீ'க்கதிரால் அந்நீரும் தூய்மையாகும் -ஐந்தாம் பூதம்இந்தப் பஞ்சபூதம் வருவதைத்தான் பழையவர்கள் அழகாய்ச் சொன்னார்;அறிவுப் பஞ்சைகளோ அலறுகின்றார் பூதமென்று!
குளம் உண்டு ஊருக்கு அழகாகஎனக்குளம் உண்டு கவிபாடுவதில்;பொதுப்பணியாற்றுவதில் எனக்கு உளம் உண்டு.மரைக்குளம் பேர் எழிலே - தா மரைக்குளம் பேர் எழிலேமறைக்குளம் திருக்குறளே!மறைக்கு உளம் திருக்குறளே!தீர்த்தக்குளம் - பாலம்தீர்த்தகுளம் பல உண்டு; அதிற் சில உயிர்தீர்த்த குளம் உண்டு.நீச்சற்குளம் நகர்ப்புறத்தில் - இன்னும்நீசர்குளம் சிற்றுாரில் இருக்கலாமா?கொள்மடையும் வடிமடையும் குளத்திற்குத் தேவை - அறிவுகொள்மடையும் அன்பு வடிமடையும் உளத்திற்குத் தேவை.எக்குளத்திற்கும் படித்துறைக் கல் வேண்டும்!எஃகு உளத்திற்கும் படித்திட உரைகல் வேண்டும்."அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவேஒட்டி யுறுவார் உறவு"என்று பாடிக் குளம் விட்டுக் கரையேறுகின்றேன்.
கடல் பெரிது காசினியில்மழை இனிது மன்பதைக்கேஆற்றின் புகழ் மிகவாகும் அவனியிலேகிணற்றுக்கும் கீர்த்தி பல உண்டென்போமேகுளமெல்லாம் குவலயத்தின் அமுதவாய்கள்;எல்லாம் சரி!இத்தனைக்கும் முகில் கூட்டம் கண்ணீர் வடித்தால் அன்றோமழையாகிக் கடல் பொங்கும்.ஆறு ஓடும் கேணி ஊறும் குளம் நிரம்பும்!காரிருள் ஏன் தொலைந்தது கனவின்பம் ஏன் கலைந்த தென்றுகாலைமலர் வடிக்கும் கண்ணீர் பனித்துளியாம்;தென்னம் பாளை வடிக்கும் கண்ணீர்தான் மதுச் சாறு.வாழை வடிக்கும் கண்ணீரே பால் ஆகும்ஏழை வடிக்கும் கண்ணீரோ வேல் ஆகும்வாள் ஆகும்.
'"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை'எனக் கூறி; வியர்வைக்கு விரைந்திடுவோம்சிப்பியின் வியர்வையிலே முத்து பிறக்கும் - ஒருசிற்பியின் வியர்வையிலே சிலை பிறக்கும்.உழவனின் வியர்வைலே பசி பறக்கும் -ஒருமழவனின் வியர்வையிலே பகைபறக்கும்.வலியோர்கள் வியர்வையெல்லாம் பன்னீராம் - மிருஎளியோர்கள் வியர்வையெல்லாம் செந்நீராம்.உலைக்களத்தில் கொட்டுகின்ற வியர்வைதனைத் தழல் உறிஞ்சும் -காதற் கலைக்களத்தில் கொட்டுகின்ற வியர்வையெலாம் சந்தனமாம் சவ்வாதாம்அதனை வியர்வை யென்றால் இலக்கியங்கள் ஒவ்வாதாம்அதனால் அது சவ்வாதாம்;இப்படி விரிந்த கடல் முதலாய் வியர்வைக் குளம் வரையில்செறிந்திடும் வர்ணனை செய்திடக் கவிஞர் சிறப்புடன் இங்கே இருந்திடும் போதுநானே அதிகம் பாடுதல் நன்றோ?தேனே கனியே தினையே அமுதேஊனே உயிரே தமிழே தாயேவணக்கம் சொன்னேன் வாழ்க நன்று!
முதலில் முனைகின்றார் கடல் தாண்ட முருகுசுந்தரனார்பனைவெல்லம் போல் இனிக்கும் பாதருவார்கடற் பா தருவார்:
(கவிஞர் முருகுசுந்தரம் 'கடல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து மழை;நாவற்பழமென நல்லகவி உதிர்க்கின்ற
நடராசப் புலமை நம்பி, கவி மழை பொழிய வருகின்றார்;குடையிருந்தால் பிடித்துக் கொள்வீர்;
(கவிஞர் தி.கு. நடராசன் 'மழை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து ஆறு;நமதன்பர் தமிழன்பன்நாவினிக்கும் சொல் அன்பர் சொல்லம்பர்ஆறுதலைப்பூ அவருக்கு!ஆறு தலைப்பு அவருக்குதடையின்றி ஓடலாம் தமிழாறுஒலிபெருக்கித் தடையின்றி ஓடலாம் தமிழாறு:
(கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'ஆறு' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கிணறு;வெட்டுகின்றார் ராமராசன் கிணறொன்றுகட்டுகின்றார் கயிறொன்றில் தமிழ்க் குடத்தை;கொட்டுகின்றார் புது வெள்ளம்குடித்து மகிழ்வீர், நீர் குடித்து மகிழ்வீர்,கிணற்று நீர் குடித்து மகிழ்வீர்:
(கவிஞர் ராமராசன் 'கிணறு' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம்.மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்றார்சம்சாரம் புகவில்லை இன்றுவரைஅதற்காக மின்சாரம் தொட வேண்டாம்!என் தோழர் என்பதாலே எச்சரிக்கை செய்கின்றேன்..
அடுத்து குளம்:நண்பர் அக்பர் என்றும் அவுரங்கசீப் என்றும்அந்த நாளில் களம் கண்டார்அவர் வழியில் அப்துர் ரகுமான் குளம் கண்டார்அதனைச் சொல்ல அவரும் களம் கண்டார் - கவிக் களம் கண்டார்குளம் கண்டால் விடுவோமோ?கரையோரம் குந்திக் களைப்பாறிடுவோம்:
(கவிஞர் அப்துர் ரகுமான் 'குளம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கண்ணீர்:கந்தசாமி யெனும் தமிழ்க் கவியேறுநொந்த மனங்கொண்டு கண்ணீர்விடஇந்த அவைதனிலே வருகின்றார்;கவலையென்ன கேட்டிடுவோம்...முடிந்தால் குறை தீர்த்திடுவோம்:
(கவிஞர் கந்தசாமி 'கண்ணீர்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து வியர்வை;வெண் முத்து வியர்வைதனை எடுத்துக்காட்டநடுக் கண்ணொத்த கறுப்பு நிறம் தேவைதானே?பண்ணொத்துப் பாடுதற்கு வருகின்றார்பொன்னி வளவன்பொன்னொத்த பாவளவன்வியர்வை சொட்டப் பாடி - நம்அயர்வையெல்லாம் விரட்டப் போகின்றார்:
(கவிஞர் பொன்னிவளவன் 'வியர்வை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
"பாசனத்து மந்திரி என்றதனால்பயனுண்டு நீர்க் குடும்பத் தலைப்பால்; எனவேபறந்து வந்தேன் பரமத்தி வேலூர் நோக்கிபல தலைப்பில் பாவலர்கள் பாடிவிட்டார்ஒரு தலைப்பை ஒரு தலைப்பார் வம்புக்கிழுத்துநம் தலைப்பை நிறைவு செய்தார்.நம் தலைப் - பை - நிறைவு செய்தார்.ஒரு தலைப்பட்சமாய் நானும் தீர்ப்பொன்றும் வழங்க மாட்டேன்ஆனாலும் ஒன்றே ஒன்று;கடல் இருந்து மழை பெருகிஆறு ஓடிகிணறு குளம் நீர் நிறைய வேண்டும்.நீர்க் குடும்பத்தில் ஒன்று குறைய வேண்டும்;மற்றொன்று மறைய வேண்டும்.
வியர்வை குறைய வேண்டும் - வேலை செய்வோர்க்குவசதி பெருகுவதால் வியர்வை குறைய வேண்டும்.கண்ணீர் மறைய வேண்டும்.எல்லார்க்கும் இன்பம்என்றும் வேண்டுவதால் கண்ணீர் மறையவேண்டும்!
வணக்கம்.வாழ்க!

மூலமும் சான்றும்