கவிதை 14 / 77

பாரதிதாசன்

Bharathidasan

X

பாரதிதாசன்

8.12.68 அன்று பம்பாய் பாரதி கலை மன்றத்தில்"பாரதிதாசன்" என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையுரை
கண்ணை இமை காப்பது போல்என்னை என்றும் காப்பதற்குப் பம்பாயில் இருக்கின்ற தோழர்களேஎண்ணெயென இரத்தத்தைப் பெய்து தந்துதண்ணிலவாம் தமிழன்னை காக்கின்ற தீரர்களேவெட்டி வா என்றுரைத்தால்கட்டி வரும் வீரர்களேபெட்டிக்குள் இருக்கின்ற பணத்தை ஏழைஎடுத்தெடுத்துப் பார்த்து மகிழ்வதுபோல்எனை அழைத்தழைத்து மகிழ்கின்ற நண்பர்களேமலைஎலியாம் மாவீரன் சிவாஜி கண்டமராட்டியத்து மண் மீது நிலைகுலையா நேர்மையுடன் நேசமதை வைத்தவரே!அலைபாடுங் கடல் மல்லை அங்குண்டு தமிழ்நாட்டில்கலைபாடுங் காவியங்கள் கவின்பாடும் சிற்பங்கள்நஞ்சையுண்டு தஞ்சையிலே; அங்கு
நஞ்சையுண்ட சிவனார்க்குக் கோயில் உண்டுமாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்றுயானை கட்டிப் போரடித்த மதுரையுண்டு அங்குமீன் ஆட்சி நடத்தியதால் மீன்பொறித்த கொடியுண்டுமீனாட்சி அம்மைக்கும் வான்முட்டும் கோயிலுண்டுநெல்லையுண்டு சேலம் உண்டுகுற்றாலம் கோவையுண்டு வாழ்வில்தொல்லை கண்ட காரணத்தால்தாராவிதனில் வந்து பேராவி போக்குகின்றீர் நீர்மாதுங்கா வாழ்ந்தாலும் மனமெல்லாம் அங்கேதான்;இதைக் காதுங்காதும் வைத்தாற்போல் சொல்லுகிறேன்ஒருமைப்பாடு காண இந்தியாவும் நம்உரிமைப்பாடு காணத் தமிழகமும்உயர்தனிக் கொள்கையெனக் கொண்டுவிட்டோம்பயன்பல பெருக்குதற்குத் தொண்டு செய்வோம்இந்த முன்னுரையுடனே என்னுரை தொடங்குவேன்வந்திடுக பம்பாய்க்கென்று வருந்திமிக அழைத்ததாக நேற்று ரங்கா சொன்னார்வருந்தியபின் அழைத்தாரோ!அழைத்த பின்னர் வருந்தினாரோ? அறியோம் யாம்ஆனாலும் எடுத்தபணி முடிப்பதற்கு ஏறிவிட்டோம்பைந்தமிழால் சுவை கூட்டும் பம்பாய் வாழ் பெரியோரேசிங்கக் கவிஞன் பாரதி பேரால் கவியரங்கு
தங்கத் தமிழ் மன்றம் கண்டவரேமன்றேறி மணிக்கவிதை முழக்கவந்த கவிஞர்களேகுன்றேறி நீர் நிற்க முடியாது! முடியுமா?குன்று ஏறி நீர் நிற்க முடியுமா? புகழ்க்குன்றேறி நீர் நிற்க முடியாதென்றுஎன்றேனும் சொன்னேனா? இல்லைஇன்றேனும் சொன்னேனா?மாக்கவியென்று பாரதியைப் போற்றுகின்றார்.நான் ஒப்பவில்லை.அரைத்த மாக்கவியா பாரதியார்? இல்லை; இல்லையா (ப்)பணியாரக் கவியா?யாப்பு அணி ஆரக் கவியா?மாக்கவிதான்.அரி மாக்கவிதலைக்கவியவர்-புதுமைக்குத் தலைக்கவியவர் - நாட்டு விடு தலைக்கவியவர்தலைப்பாகை முறுக்கிவிட்ட குத்து மீசைநடுநடுங்கி எதிரிகளை ஓடவைக்கும் பார்வைப் பகலவனாம் பாரதியார்!தலைபாகைமுறுக்கிவிட்ட குத்துமீசைகைமுறுக்கி; விட்ட குத்து-மீசை நடுநடுங்க எதிரிகளை ஓட வைக்கும்பார்வைப் பகலவனாம் பாரதியார்!
"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்" எனப்பாடும்அவன் சீற்றம் கண்டீரோ!"ஆடுவோமே பள்ளுப்பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே!"அடைவதற்குள் அறுதியிட்டுச் சொன்னவனாம்அடலேறு, மொழி பகரும் மன்னவனாம்அவனுக்குச் சின்னவனாம் இளம்மருது போன்றவனாம்.எடுத்தவுடன்"எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பிஏழுகடல் அவள் வண்ணமடா" என்றுபாரதி பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன்கனக சுப்பு ரத்தினம் என்று காததூரம் இருந்த பெயரைக்கவி பாரதிக்குத்தாசனென்று கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்களம்சென்று தமிழ்காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்கொண்டான்நிமிர்ந்த நோக்குநெரித்த புருவம்நீர்வீழ்ச்சி ஓசை-நெற் கதிர்க்கட்டு மீசைபாட்டெழுதும் வித்தையிலே பாரதி ரசவாதம் கற்றவனாம் - இவனைப் பார்அதிரசவாதம் கற்றவனாம்அதிரசவாதம் கற்றவனாம்அத்துணை இனிப்பு இவன் பாட்டில்!சஞ்சீவிபர்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச் சென்றுசங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்.காதலி "நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்" என்றாள்காதலன் "ஆகையால் ஓர் முத்தம் அச்சாரம் போடெ" ன்றான்!!அதிரச வாதமன்றோ - அஃது அவனுக்கே பழக்கமன்றோ!
"சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும் ஆறுதேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்திநெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?"வினாக்குறியா? வெடிக்கும் எரிமலையா?புரட்சிக்கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப்போதாதோ இவ்வரிகள்?"ஒரு மனிதன் தேவைக்கே இந்தத்தேசம்உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்'"முழுமனிதன் பாட்டன்றோ இப்பாட்டு; இதுகேட்டுஅழும் மனிதன் அரைமனிதன் குறை மனிதன்அரைகுறை மனிதன்"இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதிஇருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!"எனத் தொடங்கி;"சுருட்டுகின்றார் (சில பேர்கள்) தம் கையில்கிடைத்தவற்றை" என முடிக்கும்இவனோர்சுருட்டுக்கவிஞன் - புகைச் சுருட்டுக்கவிஞன் - இவன்புரட்டுக்கவிஞனாவான்;மூடப்பழக்கமெலாம் தலைகீழ்ப் புரட்டும் கவிஞனாவான்.அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணிவகுப்பு!அமைதியிலே உலகுவாழப் புதுவைக்குயில் கூவாதோ?"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"அமைதிக் கவிஞனாக அழைக்கின்றான் உலகத்தை'சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமய பேதம் வளர்த்தே தளர்வது நன்றா?"காந்தியார் கதறிய கருத்தினைக் கவிஞன்கனலிடை மெழுகென உருகியே கேட்பான்."பொய்யுரைப்போன் பயங்காளி பிறர்பூமி சுரண்டிடுவோன் - பெருச்சாளிவையக மக்கள் எல்லோரும் நலம்வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி"கருத்துக்கவிஞன்; சற்றுக் கருத்த கவிஞன்காலக்கவிஞன்; முக்காலக் கவிஞன்அவன் சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே!'விருந்து வரக்கண்ட மெல்லி முகம்போல்முல்லை அரும்பு மலர்ந்ததென்ன வேடிக்கைதெரிந்தவரைக் கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும்சிரிப்பதுதான் இதன் வாடிக்கை "இன்னொன்று கேளீர்:விழிக்கு இனியவள் ஒருத்தி ஆடுகின்றாள்.மொழிக்குச் சுவையேற்றித் தாசன் பாடுகின்றார்:-சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும் வானில் மிதக்கும் அவள் தாமரைக்கை!மேலும் வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு:சாடை புரிகின்ற விரல்.கண்கவரும் செம்பவளக்காம்பு"மற்றொன்று;"தொண்டையிலே ஒன்றுமே அடைக்க வில்லைதுணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான்அண்டையிலே மங்கைபோய் 'அத்தான்' என்றாள்அத்தானா தூங்கிடுவான்? (அருகில்) உட்கார்! என்றான்"அவருக்கே உரிய கேலி!அவர் கவிதைக்கே உரிய சுவை!உவமைக்கோர் கவிஞன் என்று
உரைக்கின்றார் பெருங்கவிஞர் ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல?"தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பன்னஇருள் தன் கட்டுக் குலைந்தது""சோற்றை அள்ளுங்கால் துவள் வாழைத் தண்டில் உறும்சாற்றைப் போலே வடியத்தக்க வண்ணம்ஊற்று நெய்யை"புரட்சியா? அமைதியா? பொங்கும் உவமையா?கருத்தா? தமிழ்ப் போதை தரும் சுவைத்தேனா?எதனை எது மிஞ்சுமென்று எவர் கூறி வாதிட்டாலும்ஒப்பமாட்டேன்; ஒன்றையொன்று மிஞ்சுமென்பேன்!ஏடெத்தனை அவர் தந்தார்!இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றி வைத்தார்இசையமுது பொழிந்து, அதற்குப் பாண்டியன் பரிசு பெற்றார்நமக்குக் குறிஞ்சித்திட்டுமுண்டுகுயில் இதழ் நடத்தும்போது அழகின் சிரிப்பாலே தமிழியக்கம் கவர்ந்துவிட்டார்.அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார் அவர்காதல் நினைவாலே கவிப்பெண்ணை வாடவிட்டுச்சாவின் எதிர்பாராமுத்தத்தால் பிரிந்துவிட்டார்...என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்துவிட்டார்..இரு கவியும் இறப்புலகின் சந்தித்துஎன்ன பேசியிருப்பாரென எண்ணுகின்றீர்?"நாம் தமிழ் நாட்டில் இன்றைக்கு இல்லையென்றுநம் மக்கள் பேசுகின்றார் - நம்புவதோ இதனை நாமும்?'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே'சிந்தைகவர் இந்தப் பாட்டினையே செயல்படுத்த மிக்கமனம்நொந்துதான் காத்திருந்தேன்; இன்று
விந்தை கண்டனையோ தம்பீ - நம்தந்தையர் நாட்டுக்குத் தமிழ்நாடெனப் பெயர் தந்தவர் அண்ணா!நாம் வாழ்கின்றோம் அங்கு! மெய்யலவோ?" என்றுபரவசத்தால் நடமாடும் பாரதிக்கு வணக்கம் சொல்லிப்பாவேந்தன் பகர்வான்"கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்கழையிடை ஏறிய சாறும்,பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப்பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் - தென்னைநல்கிய குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும் - தமிழைஎன்னுயிர் என்பேன் கண்டீர்!'என்றெழுதி வந்தேன்....இன்றெல்லாத் தமிழர்களும் தமிழைத்தம் இன்னுயிராய்க் கொண்டுசென்றங்கு எட்டுத்திசை பரப்புதற்கு முனைந்தார் அய்ய!நாம் சாகவில்லை வாழ்கின்றோம் தாயகத்தில்!உண்மைதான் நீர் உரைத்த" தென்றான்.பாரதியும் தன் தாசனையே தழுவிக்கொண்டுபாரதிரச் சிரிக்கின்றான்இருவருமே பாடுகின்றார்"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு!இணைந்து நாமும் பாடிடுவோம்ஏற்றமிகு தமிழகத்தைக் கண்டிடுவோம்நாற்றமிகு சாதிப்பூசல் களைந்திடுவோம்ஆற்றல்மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழா எடுப்போம்விழா எடுக்கும் வேளையிலே அவர்தம்
விழாக்கருத்தைச் செவிமடுப்போம்.முதலில் உவமை யெனுந் தலைப்பினிலே ஒருவர் பாட வருகின்றார்என் நண்பர் தனி அன்பர்பொன் பூவும் மணமுடைத்து என்பாராம் தன் கவியால்பொருநை நதிப் பெருக்கனைய தமிழ் காட்டும்கருணை ஆனந்தக் கவிஞர்என் கேலிக்கு நற் கருவிவேலிக்கு ஓணான் போலச் சாட்சி சொல்வார் எனக்காககூலிக்கு மாரடிக்கும் கொள்கையில்லாக் குணக்குன்றுமுதன் முதலாய் பம்பாய்க்கு வந்துள்ளார்;நேற்றுத்தான் முதன் முதலாய் விமானமும் ஏறியுள்ளார்!சீராக அவர் ஏறியதும் 'சீட்பெல்ட்' டைத்தான் போடுமென்றேன்.நேராக எனைப்பார்த்துத் தன் இடுப்பு 'பெல்ட்' தனை இறுக்கிக் கொண்டார்!விமானப் பெண்ணாளும் விலாநோகச் சிரித்துவிட்டுவிடுவிடென மாட்டிவிட்டாள் விமானப் 'பெல்ட்டு தனை'பட்டிக்காட்டான் யானை பார்த்தது போல' என்பதுதானே பழமொழி!அதனை மாற்றிக் கொள்வீர் இவரைப் பார்த்து!பட்டிக்காட்டான் பம்பாய் பார்த்ததுபோல்;வந்திறங்கியவுடன் வாய்பிளந்து வானளாவிய மாடம் பார்த்தார்விமானக் கூடம் பார்த்தார்அதனாலே கையில் வைத்திருந்த விலை உயர் பொருள் ஒன்றைக்காணாமற் போக்கி விட்டார்!இவர்தான் அக் கவிஞர்
உள்ளங்கவர் பாவேந்தின் உவமை அழகெல்லாம்.கள்ளங் கபடமிலா என் நண்பர் பாடிடுவார்பள்ளம் போய் வீழ்கின்ற பாய்ச்சல் நீரதுபோல்வெள்ளம் காண்போம் தமிழ் நடையில்:
(கவிஞர் ஆனந்தம் 'உவமை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து; இன்பம் எனும் எழில் தலைப்பில்அன்பர் திரு. சுந்தரனார் பாடுகின்றார்புவியில் இன்பம் பொலிக என்றே கவியின் கனவால் சொன்ன கவிஞர்அரசியலில் எதிர் வரிசைதான் அவர் வரிசை என்றாலும் சிலர்போல அவர் எதிர்வரி 'சைத்தான்' இல்லை!புது வரிசை தமிழ்த் தாய்க்குப் படைத்திடுவார்மதுவரிசையில்லாமல் கவியெழுதும் மாண்புடையார்எளிய உடை எளிய நடை; பழங் கருத்து நெளிய விடாப் புதுமை நெஞ்சம்:புளிய மிலார் அடிபோலப் பாட்டடியால் என்றும்குளியலிலா அழுக்குமனம் திருத்திடுவார்.அவர் பாட்டு புறப்பாட்டு ஆனால் இன்றோ அகப்பாட்டு பாடுதற்கு அகப்பட்டுக் கொண்டார் இங்கே!இன்பமெனும் தலைப்பினிலே எழுத்தாரம் வழங்கிடவேஎன் நண்ப வந்திடுக:
(கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 'இன்பம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து. பெண்மை எனும் தலைப்பினிலேபெருமை மிகு கவி பாடஉண்மை மிகு உயர் தமிழர்வெண்மையுள்ளக் கணேசனார் வருகின்றார்வட்டி யின்றிக் கடன் வழங்காச் செட்டி நாட்டுச் செம்மல் இவர்சட்டை யில்லாத் திருஉருவம் - எதிர்ப்பைச் சட்டை செய்யாப் புகழ் உருவம்!கதர் அணியார் -கதர் அணியார்ந்த கட்டுடல் - கதர் அணியார்மல்லுக்கு நிற்பார் - தமிழ் பழித்த எதிரியுடன் மல்லுக்கு நிற்பார் - விடுதலைநெல்லுக்கு வியர்வை பாய்ச்சி இன்று சொல்லுக்குச் சுவையேற்ற வந்துள்ளார்கல்லுக்கும் உயிர் கொடுக்கும் கவித் தமிழால் கனிப்பாட்டு தந்திடுவார்இப்போது வந்திடுவார்:
(கவிஞர் சா.கணேசன் 'பெண்மை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து; அவை கூட்டி அமர்ந்ததற்குச் சுவை கூட்டல் வேண்டாமோஅதற்காக வருகின்றார் அப்துர் ரகுமான்ரவை போட்ட துப்பாக்கி வெடிப்பதுபோல்சொல் வெடிக்கும் - சுவை வடிக்கும்இவர் ஒரு வானம்பாடிஇருக்குமிடம் வாணியம்பாடி
பாரதிக்குத் தாசன் பாரதிதாசன் எனில்அந்தத் தாசர்க்குத் தாசர் இவர் தமிழ்க் கவிதை தீட்டுவதில்!குடமிட்ட தீபம் இவர் இனிமேல் குன்றிலிட்ட தீபந்தான்புடமிட்ட தங்கம் இவர் இனிமேல் புகழ்மீட்டு வீணையிவர்சுவைப்பாட்டு தந்திடுவார்சுவைத்திருப்பீர்; நான் குறுக்கேயில்லை:
(கவிஞர் அப்துர் ரகுமான் 'சுவை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நேற்றிரவு பம்பாய் நகர் விடுதி யொன்றில்போர்த்தியவாறு நான் தூங்குகின்றேன்"காத்திருந்தேன் கண்ணாளா வந்தாயோ" எனச் சொல்லிக்கரம்பிடித்தாள் கனவுலக மங்கை நல்லாள்"காரிகையுன் பேரென்ன?" எனக் கேட்கக் களிப்புடனே"முத்தம்மா" எனச் சொன்னாள்சொப்பனத்துச் சுந்தரியே சொல்லிடுக ஒரு விளக்கம்தப்பிதமாய் எண்ணாதே - முகம் பார்த்தால் முத்துச்சாமி போல் இருக்குதம்மா!அகம் மட்டும் ஆண்மை மாறிப் பெண்மையாகப்அவளும்... போனதுவோ!" எனக் கேட்டேன்;கலகலவெனச் சிரித்துவிட்டுக் கையால் மறைத்திருந்த மீசைதனைக் காட்டிவிட்டாள்!கண்டுகொண்டேன் கைகாரி அவள்தானென்றுதப்பிக்க வழியில்லாத் தையலவள்"அத்தானே ஒப்பிக்க இருக்கின்றேன் எனதுள்ளம் உம்மிடமே;ஆனால் மீசை வந்து ஆசைதனைக் கெடுக்கு" தென்றாள்"பூசை வைத்துப் போ என்றால் போமோ மீசை?பூவையே நீ புனர்ஜென்மம் எடுத்துப் புதுப்பெண்ணாக வா" என்றேன்.
போய்விட்டாள் விழித்துக் கொண்டேன்வேடிக்கைக் கனவு நேற்று விளைந்த விதம் நீர் அறிவீர்தமிழ் வேட்கை மிகு முத்துச்சாமிவிரைவினிலே பெண்ணாக மாறி, எனை மணக்க வேண்டுமென்றுவிரும்புவதாய் இம்மன்றில் தெரிவித்தார்மறு ஜென்ம வாழ்விருந்தால் எனை மணப்பதுறுதி யென்றார்அறிவீர் அன்றோ!அதை நினைத்துத் தூங்கி விட்டேன்அதனாலே கன்வு கண்டேன்மாரியப்பன் மாரியம்மாள் ஆகின்ற புரட்சியெல்லாம் நடக்கும்போதுமுத்துச்சாமி முத்தம்மாளாகிவிட்டால் எங்கள் அமைச்சரவையில் ஆரணங்கு இருவராவார்!அது நிற்க;பாவேந்தர் பாட்டாலே செய்த புரட்சி பாடிக்காட்ட என் தோழர் முத்து தனை அழைக்கின்றேன்நேற்று நினைவோடு நாணிக் கோணி வாராமல்நம்மிடையே வந்திடுவார் நற்றமிழைத் தந்திடுவார்;
(அமைச்சர் மா.முத்துச்சாமி 'புரட்சி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
"கண்கள் விற்றுச் சித்திரம் வாங்குவதோ?" எனக்கேட்ட பாரதிக்குத் தாசன்பெண்கள் கொய்யாப்பழக் கூட்ட" மென்றுரைத்தான்."தனித்துக் கிடந்திடும் லாயம் அதில்தள்ளி யடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்திரவுண்டு - வீட்டில்காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டுமோ?எனக் கேட்டான்
"காதல் அடைதல் உயிர் இயற்கை - அதுகட்டில் அகப்படும் தன்மையதோ? அடிகோதை தொடங்கடி! என்று சொன்னான்இன்பம் கொள்ளை! கொள்ளை! கொள்ளை! மாந்தோப்பில்!'என்று மகிழ்ந்தவன்;''காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?"எனக் கேட்டான்எப்போது தெரியுமா?இப்போது தானே நாம் எனக் கேட்டான்குடும்பக் கட்டுப்பாடென்று கூறிகுசேலரைப் போல ஆகாதீர் எனப் பிரச்சாரம் புரிகின்றோம் பேரரசின் சார்பில்!பெருங்கவிஞன் பிள்ளைக் கட்டுப்பாடு தேவையெனமுப்பதாண்டுக் காலத்திற்கு முன்பாக முன்னேற்றக் கருத்துரைத்தான்.நாலைந்து பிள்ளைக்குத் தந்தையான ஒருவன்நடுநடுங்கித் திண்ணையிலே படுத்துக் கொண்டான்நங்கையவள் அவன் மனைவி வருகின்றாள்; இங்குகங்கையைப் போல் பிரவாகம் காட்டுகின்ற கவிஞன் நடை கேளுங்கள்:-"அருமனைவி என்னிடத்தில் மெதுவாக வந்தாள்;' அயர்ந்தீரோ?" என்றுரைத்தாள்; மலர்க் கரத்தால் தொட்டாள்!"தெருவினிலே பனி" என்றாள்; ஆமென்று சொன்னேன் !தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம், வார்த்தையென்ன தேவை?பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஓர் நாள்பட்ட கடன்காரர் வந்து படுத்துகின்ற நேரம்சித்தமெலாம் மூத்த பெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால் ஒரு கிழவி என்னிடத்தில் வந்து,முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்லமுகூர்த்தத்தில் உன் மனைவி பிள்ளை பெற்றாள் என்றானதொத்துநோய் ஏழ்மை, கடன்காரர் தொல்லை,தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!''அந்தப் பாரதிதாசன் பெண்ணைப் பெருமை செய்தான்-மண்ணைப் போல மிதிபடும் மானிடத்தைப் பார்த்து;''உன்னை விற்காதே!" என்றான்' எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்" எனஎக்காளக் குரல் கொடுத்தான்.காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி"யாய் நின்றான்"தொண்டு செய்து கிடப்பவன் ஆமை" என்றான்.தொகை தொகையாய்க் கவிச்சர விளக்கு ஏற்றி வைத்தான்பாரதிக்கு வாரிசாய்ப் பாரதிதாசனானான்தலைவர்க்கும் - கவிஞர்க்கும் பிற தகைமை சால் மேதைக்கும் - தமக்குப்பின்இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்.இன்று பார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையைப்பாரதிதாசன் வழித் தோன்றல்களைப் பார்க்கின்றோம்!கோகின்றார் சொல் முத்து... பல் கவிஞர்! (பல கவிஞர்)பல் இல்லாக் கவிஞர்களும்! (தேர்தல்)வாக்கென்றால் பாரதிக்கும் பாரதிதாசர்க்கும் வேறுநோக்கின்றி வழங்கிடுவார்....இரு கவியும் வருவரோ ஆள்வதற்கு நம் கவியரசை!இனியுமேன் வரவேண்டும் ஆள்வதற்கு?இப்போதே ஆள்கின்றார் நமதுள்ளம்!அவர் வாழ்க!அவர் புகழ் வாழ்க!வணக்கம் !

மூலமும் சான்றும்