கவிதை 34 / 77
சமுதாயப் பார்வைகள்...!
Views of Society...!
சமுதாயப் பார்வைகள்...!
‘ஆனந்த விகடன்’ பொன்விழாவையொட்டி 7.1.80 அன்றுநடந்த கவியரங்கிற்கு தலைமை ஏற்றுத் தந்த கவிதை.★
வணக்கம்,கற்பனையாம் நூலெடுத்துதமிழ்த்தறியில் கவிதைகளைநெய்து வந்த கவிஞர்களே,வணக்கம்.
என்றும் தமிழ்பால் அன்புடனே - இந்தமன்றம் வந்த பெரியோரே,வணக்கம்,
பாட்டுத்தேன் சுவைக்கபறந்து வந்த வண்டினங்காள்!வாசனை மலர்கள் நாங்கள்வரவேற்று வணங்குகின்றோம் - அன்புதுறக்காத மனிதர் வாசனை - என்றும்மறக்காத மனிதர் நாங்கள்!
இறக்காத புகழுக்குரியார் - அவரால்சிறக்காத செயல் தான் உண்டோ?செருக்கான சொற்கள் பஞ்சம் - யாரும்வெறுக்காத வாசன் நெஞ்சம்!
தருக்கோடு நிமிர்ந்ததில்லை வாசன் தலை!தகுதியற்றோர் முன் வளைந்த தில்லை அந்தத் தலை!
★ ★ ★
எத்தனையோ வழிகளிலே வளர்க்கின்றோம்; கரும்புச்சத்தனைய சுவைமிக்க தமிழ்மொழியை!முத்தனைய நகைச்சுவையால், கட்டுரையால், கதைகளாலே - பூங்கொத்தனைய புதுமை தவழ் விகடனையே வளர்த்த தெவர்?அவர் இன்று நம்மோடில்லை - ஆனாலும் அவர் வைத்தசுவர் உண்டு சித்திரமுண்டு - இதய விழிகளாலேபருகிடுவோம் மொண்டு!
★ ★ ★
ஆனந்த விகடனுக்கு அகவை ஐம்பதாமே? இல்லை;அதிலும் ஓர் திருத்தமுண்டு; ஐம்பத்திரண்டே உண்மை;வாய்மையுள்ள விகடனாரே; வம்புக்குத் தான் கேட்கின்றேன்;‘வயதை நீர் குறைத்துச் சொல்வதாலே என்ன லாபம்? - இன்னும்வாய்ப்பு தேடி அலைகின்றீரோ திரையுலகில்? - உமக்குவயது முதிர முதிரத் தான் வைரம் பாய்கின்றதுவண்ணமிகு பாத்திரங்களேற்று எண்ணத்தைப் பொழிகின்றீர்-தண்ணிலவு, தகத்தகாயச் சூரியன், விண்மீன்கள் இவை;தம் வயது கோடி கோடி ஆண்டென்று கூறுவதைக் கேளீரோ...அவைபோல் நீவீர் வாழ்க பல்லாண்டு!....கண்மணியே! கருமணியே! கருத்தோடு சிரிக்க வைக்கும்பொன்மணியே! புதுமணியே! புகழ்மணியே!பன்மணித் திரள் போலப் பண்பார்ந்த நடைபழகிநெல்மணிக் குவியலாக வாசக உழவர்களை மகிழ்விப்பாய்!பெண்மணி; உன்னைக் கண்டால் பெறுகின்ற உற்சாகம்தான்
கண் எதிர் காஞ்சிபுரம் சேலை கண்டும் பெறுவதில்லை...!வித்துவான்கள் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர்விகடனைத் தான் புரட்டிப் பார்ப்பார்; விமர்சனத்தை...!
வித்தகர்கள் நூலுக்கு மதிப்புரையும் - அன்றுவிகடன் இதழ் தந்தால் தான் பெருமை கொள்வார்!கேலிச் சித்திரம்கூட - விகடன் ஏட்டில்மாலியின் கைபட்டு உயிர்பெற்றுப் பேசக் கண்டோம்!....
பல்கிப் பெருகும் சொல்வளச் சுனைகளாய்க்கல்கியின் கதைகளோ கருத்தைக் கவரும்!
கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் - அதைச்சொல்கையிலே பண்பாடு தேவை யென்றுசெய்கையிலே காட்டியவன் விகடன் தானே;பொய்கையிலும் நீர்ப்பாசி மிதப்பதுண்டுஅதுபோலசில நேரம் குறையும் உண்டு - ஆனால் குற்றம் இல்லை.தமிழ்நாடு தமிழருக்கே என்ற போதுஎலி வளை எலிகளுக்கே என்றான் விகடன்!....பகுத்தறிவுப் போட்டிதனை பழங்காலத்தில் நடத்தினாலும்பஞ்சாங்கத்து சோதிடத்தில் வல்லவன்தான்விகடன் போலும்!...அதனால் தான் அவன் சொன்னபடிஎலி வளையாய் இருக்கின்ற தமிழகத்தைக் காண்கின்றோம்!எலி வளையில் எலிகளைத் தான் காணவில்லை....எட்டுக்கால் பூச்சி, பாம்பு, தேள், பூரான்எல்லாமே அடிக்கும் கொட்டம் தாங்கவில்லை!சாதியெனும் பூச்சிக்கு எட்டுக்கால் - இல்லை, இல்லை....சரியாகச் சொல்லவில்லை நான்! எண்ண முடியாத கால்!பாதியில் வந்த பல கால் பூச்சியை
தேடி அழித்திட வேண்டாமோ?-பாம்பாய், தேளாய், நெளியும் வன்முறைபலி கொள்ளும் உயிர்கள் கொஞ்சேமா, சொல்வீர்....
★ ★ ★
ஆலமரத்துக்கு விழுது போன்றார்....பாலசுப்ரமணியன் - பரிவுடன் என்பால்விகடன் பொன்விழா வீறுடன் நடைபெறவீற்றிடுக தலைவராய் கவியரங்கிற்கென்றார்;ஒரு பதவியில் இருந்தால் தான் உனை மதிப்பேன் என்றில்லாமல்தெருப் புழுதியில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குன்றாதென்றுகருப்பும் சிவப்பும் கலந்த என்னை கனிவுடன் அழைத்தார்விருப்பு வெறுப்பிலா பாலுவின் பண்பைவிளக்கொளி என்பேன்; வியந்து போற்றுவேன்!
★ ★ ★
அதிர்ச்சி அடையாதீர்!ஆனந்த விகடனை நான் “காந்தாரி” என்பேன்....அம்மிக் குழவி இல்லாமலே இவள் நூறு பிள்ளைகளைப்பெற்றவள்!வயிற்றெரிச்சலில் பிறக்காத காரணத்தால்அத்தனை பிள்ளைகளும்தனித்தனி ஏடுகள் நடத்தும்தகுதியைப் பெற்றன!
★ ★ ★
கனம் சாஸ்திரிகள் - கனம் பிள்ளைவாள் -கனம் மந்திரியார் என்பது போல்-‘கனம்’ என்ற பெருமை விகடனுக்கு இல்லவே இல்லை-
காரணம் யாரும் விகடனை எடைபோட்டு நிறுக்கபழைய பேப்பர் கடைக்கு அனுப்புவதே இல்லை-‘பயிண்டு’ செய்து பத்திரமாய்ப் பாதுகாக்கும்போது‘பவுண்டு’ கிலோ கணக்கென்ற ‘கனம்’ தான் ஏது?
பெண்களின் கைகளில் இருக்கும்போது - அவர்கள்கண்களுக்கு ‘விகடன்’ ஓர் காதலன்!விட்டுப் பிரிய மனமின்றி அவர்தம்பட்டுப் புடவையோடு அணைத்திடுவார்!ஆண்களுக்கோ ‘விகடன்’ ஓர் ஆரணங்கு;அட்டையெனும் ‘ஜாக்கெட்’ அழகிலேயே அவர்கள்மயங்கிடுவர்!
‘விகடன்’ இன்று மாப்பிள்ளை! அதனால்:வேடிக்கை நலுங்கெல்லாம் வாடிக்கை:வீணாகக் கோபிக்கக் கூடாது!
‘விகடன்’ ஒரு டாக்டர் - இவன்அருகே யிருந்தால் - எல்லாநோயாளிக்கும் ஒரு ஆறுதல்!
‘விகடன்’ ஒரு ஊர்சுற்றி-எல்லா ரயில்களிலும் பஸ்களிலும்இவனைக் காணலாம்!
‘விகடன்’ ஒரு பைத்தியம்! - காரணம்?இவன் இருக்குமிடத்தைபத்து பேர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்!
இதோ! இங்கேயும் பத்துப்பேர் -இனிய தமிழ் எடுத்துப் பாட வந்துள்ளார்...என்னைச் சுற்றிப் பத்துப் பேர்
எனக் கொள்ளினும் ‘கொள்க!...நானும் ஓர் பைத்தியம் தானே தமிழ் என்றால்!...நாயாகப் பிறந்தாலும் தமிழ்த் தொண்டர் முன்தானேவால் குழைப்பேன்...வெறி நாயாக அலைந்தாலும் ‘தமிழ்’, ‘தமிழ்’ என்றுதானேநான் குரைப்பேன்! என்தாயாக இருக்கின்ற தமிழே! - தொட்டில்தாலாட்டாய் எனை வளர்த்த தமிழே!ஊன் கலந்து உயிர் கலந்துதேன் கலந்த பலாச்சுளை போல்தித்திக்கும் தமிழே!வான் கலந்தே என் மூச்சு கரையுமட்டும்நான் பிறந்த மண்ணுக்குக் கடமை செய்வேன்!அமுத மொழி தமிழுக்குப் பணி செய்யுங்கால்சமுதாய முற்போக்குப் பார்வையிலும் கூர்மை வேண்டும்!அதனால்தான் ‘விகடன்’ நம்மை ஆர்வமுடன்அழைக்கின்றான் “சமுதாயப் பார்வை”க்காக!
★ ★ ★
‘சமுதாயம்’ என்பது - பாபம்; ஒரு பரிதாபமான சொல்;அதன்மீது பழியைப் போட்டுஆயிர மாயிரம் அநீதிகளைகன்னி கழியாக் கயவர்கள் பிரசவிக்கிறார்கள்!அந்த அனாதைப் பிள்ளைகளோ;அராஜகக் கல்விக் கூடங்களில் சட்டம் படிக்கின்றனர்!
படிக்கும் சட்டங்கள் பயனற்றுப் போகாமல்வெடிக்கும் குண்டுகளாய் வேகமாய் மாறுகின்றன!வன்முறையன்றோ இஃதென்று கேட்டால் - வேறுநன்முறை என்ன கற்று தந்தது சமுதாயம்?
இந்தக் கேள்வி, நறுக்கென எழுகிறது!பாபம் சமுதாயம் - பரிதாபத்திற்குரிய சமுதாயம்!கன்னக் கோல் பிடிக்கின்ற திருடனும் - திருவிழாக் கூட்டத்தில்கத்தரிக்கோல் வைக்கின்ற சிறுவனும்கையும் களவுமாய்ப் பிடிபடும்போதுகடவுளே, நான் என்ன செய்வேன்?கண்ணிலா சமுதாயம் என்னைக் கள்வனாக்கிற்றுஎன்றுதான் கதறுகிறான்!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
மாடனைக் காடனைத் தெய்வமென்றுமனிதப் பிஞ்சுகள் தலையைக் கிள்ளியெடுத்துமாயாவி கொடுக்கும் நரபலி கண்டு - அடமாபாவி என அலறித் துடித்தால்-அவனும் சொல்கிறான்;நானென்ன செய்வேன்; இந்த நாசகார‘சமுதாயம்’ இப்படி என்னை ஆக்கிற்றென்று
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
பழங்காலச் சிலைகளின்கைகால் ஒடித்தும் முறித்தும்பலநாட்டு வாணிபம் நடத்தும்கொள்ளையன் கூடவெள்ளையாய்க் கூறுகிறான்‘சமுதாய’க் கொடுமையால்... இந்தச்சண்டாளத் தொழிலுக்கு வந்தேன் என்று!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
பச்சை விளக்கு காட்டப்படாத காரணத்தால்இச்சைக்கேற்ற இந்த விளக்கை
ஏற்றிக் கொண்டேன் என்கிறாள்;சிவப்பு விளக்குச் சீமாட்டி!...சீ! தூ! இஃதோர் பிழைப்பா என்றால்;தூ! தூ! இந்த ‘சமுதாயம்’ என்கிறாள்;பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
★ ★ ★
இதில்... மொத்தத்தில்என்னவோ ஓர் உண்மை முழுவெளிச்சம் காட்டத்தான் செய்கிறது.
சமுதாய முற்போக்கு அடித்தளம் கட்டாமல்சமதர்மப் பொருளாதார மாளிகை எழுப்பிசர்வதேச அரசியல் கலசங்கள் அமைத்தாலும் - அதுசடசட எனவே நொறுங்கி விழுந்திடும்இந்தச்சங்கடம் புரிந்தே விகடன் நம்மை“சமுதாயப் பார்வை” காணச் செய்கின்றான்!மனித மலர்க் கூட்டம் - தன் தோட்டத்திற்குப்புனித வேலி யொன்றைப் போட்டுக் கொண்டதுஅதன் பேர்தான் சமுதாயம்!
பூமியில் முதன் முதலாய்த் தான்றியது மனிதனல்லபுழு, பூச்சி, மீன், குரங்கு, மிருகங்கள், பறவை இனமே!பூர்வ ஜென்ம வாசனைக்குப் பொருள் விளக்கம்புரிகிறதா - இப்போது?...அடுத்த ஜென்மம், அதற்கு அடுத்த ஜென்மம் - என்பதெல்லாம்ஆயிரங்கோடி ஆண்டுக்குப்பின்மாறப்போகும் மனிதன் எடுக்கப் போகும் - ஜென்மம்தானே?..
நிலத்தில் உதித்தது மனித ஜாதி!நிச்சயமாய்ச் சொல்வேன் அப்போது ஒன்றே ஜாதி:நெருப்பைக் கண்டு, நீரைத் தடுத்து, குடும்பப்பொறுப்பையும் ஏற்ற பின்னர், சமூகம் பிறந்தது!....பிறந்த சமூகம் பரந்து விரிந்துபிரிவினை வரப்புடன் பெரிய சமுதாயம் ஆனது!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் - இந்தகுறள் மொழிக் கொப்ப குழுக்கள் அமைந்தன.குறுமதியாளர் குறுக்கே புகுந்துஅறநெறிக் கொவ்வா ஜாதிகள் கண்டனர்....அன்புளம் வீழ்ந்தது- வம்புகள் பெருகின!...அதன் விளைவு!அஞ்ஞான இருளில் மனிதனை மனிதன்தின்று வாழ்ந்தான்; இன்றோவிஞ்ஞான ஒளியில் மனிதனை மனிதன்கொன்று வாழ்கிறான்....!
அணி மலர்த் தோட்டம்தான் சமுதாயம் - எனினும்தனி மலர் ஒவ்வொன்றும் நறுமணம் தந்திடல் வேண்டும்...சிறு துளி தான் பெரு வெள்ளம்.... ஒவ்வொரு துளியும் விஷத் துளியாய் இருத்தல் நன்றோ?விஷத் துளியைத் தேன் துளியாய்விடியுமட்டும் குடிக்கின்றான் மதுவென்று! அதைவிலக்குதற்கும் சட்டங்கள் உண்டு - நாட்டில்'கலக்கலு'க்கும் ஆங்காங்கு திட்டங்கள் உண்டு!கலப்படத்தைத் தொழிலாகக் கொள்கின்றார்.களிமண் உருண்டைகளைத் தானியத்திற்குகலப்பு மணம் செய்கின்றார்:-இந்தக்-கலை கற்று நிலை கெட்டு நிற்போர் தான் - நல்ல
விலை பெற்று நம்நாட்டு நாணயத்தை விற்கின்றார்!வியாபார நாணயத்தை விற்கின்றார்!நலம் கெடுக்கும் நாடு கெடுக்கும்நச்சுச் செயல் புரியலாமா எனக் கேட்டால்...நாவசைத்து நமக்குச் சொல்வார்நான் என்ன செய்யட்டும், 'சமுதாயக்' கோளாறு என்று!
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!
ஆடு, மாடு, பன்றி முதல் கழுதை வரைஆடையிலே உரசிச் செல்லும்-ஆலயத்தைச் சுற்றி வரும்;ஆண்டவன் பெற்ற பிள்ளைஅரிஜன வகுப்பார் மட்டும்தீண்டினால் திருநீல கண்டம் என்பார்...சரிதானா இக்கொடுமை எனக் கேட்டால்சமுதாயத்தில் அன்று முதல் இருந்து வரும் நீதி என்பார்.
பாபம் சமுதாயம், பரிதாபத்திற்குரிய சமுதாயம்!நம் பார்வை பட வேண்டிய சமுதாயம் ...!
நான் நம்பவில்லை சிவனார் நெற்றிக்கண் திறந்த கதை!இருந்தாலும் இங்கிருக்கும்இழிவான சமுதாயத் தீமைகளைஎரித்துப் போட்டுச் சாம்பலாக்கநடக்க வேண்டும் அந்தக் கதை யென விரும்புகிறேன்....நாம் திறப்போம் நெற்றிக் கண்ணை!நாடு வாழ, நலிவு தீரநமது பார்வை சமுதாயத்தின் மீதுநன்றாகப் பாயட்டும்!கற்பனைக்
குன்றாக உயர்ந்து நிற்கும் கவிஞர்களேஒன்றாகக் குரல் உயர்த்தி,உரிமைகளைக் காத்திடுவோம்!உறவுகளைப் போற்றிடுவோம்!உண்மைகளைப் பேச வைப்போம்! - தீயஉள்ளங்களைத் தெளிய வைப்போம்!