கவிதை 37 / 77
எழுத்துக்கள் மூன்று - எண்ணங்கள் மும்மூன்று
Three Letters — Thoughts Three Times Three
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: “எழுத்துக்கள் மூன்று - எண்ணங்கள் மும்மூன்று”
எழுத்துக்கள் மூன்று -எண்ணங்கள் மும்மூன்று
ஐம்பெரும் விழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில்"எழுத்துக்கள் மூன்று, எண்ணங்கள் மும்மூன்று" என்கிற தலைப்பில்நடைபெற்ற கவியரங்கில் முதல்வர் கலைஞர் அவர்கள் பாடிய தலைமைக் கவிதை.
★
பெரு விழா - திரு விழா; நமக்குஒரு விழா முப்பெரும் விழா!இந்த ஆண்டோ; மேலும்இரு விழா சேர்ந்துஐம்பெரும் விழா ஆயிற்று!
அய்யாஅண்ணாகழகம் பிறந்தநாள் விழாஅம்பேத்கர்பாவேந்தர்இருவர்க்கும் நூற்றாண்டு விழா;திராவிட இயக்கத்தின்தோற்றம் குறிக்கும் வைர விழா;மண்டல் குழு பரிந்துரையைமைய அரசு ஏற்றமைக்குமகத்தான வெற்றி விழா!
மனிதாபிமானி வி.பி.சிங்கிற்குமனமார்ந்த நன்றியினைத்தெரிவிக்கும் திரு விழா!விழா காண வந்துள்ளஅனைவர்க்கும் என் வணக்கம்.
அறிவியக்க அடலேறு இனமானப் பேராசிரியருக்கும்ஆருயிர் இளவல் நாஞ்சிலார்க்கும்அருமை நண்பர் அன்பிலுக்கும்மன்னைக்கும் மத்திய அமைச்சர் மாறனுக்கும்அமைச்சர் பெருமக்களுக்கும் — எங்கள்அவைத் தலைவர் தமிழ்க்குடிமகனார்க்கும்புதுக்கவிஞன் டி.ஆர்.பாலுவிற்கும்பழைய கவிஞர்கள் அனைவருக்கும்வணக்கம்!
எழுத்துக்கள் மூன்றுஎண்ணங்கள் மும்மூன்றெனகவியரங்கம் அமைத்திட்டார் — அதில்கழுத்துக்கு மேலே இருக்கும்தலையைப் போல் — என்னைத்தலைமை ஏற்கச் செய்திட்டார்.
தடந்தோள், கைகால், முண்டம்,கண், காது, மூக்கு, வாய், வயிறு.இருதயம், சுவாசப்பை எதுவுமின்றித்தலை மட்டும் தனியாக இயங்கிடுமோ?இயங்காது என்பதாலேஇந்த அங்கங்கள் எதுவும்இறுமாப்புக் கொள்வதில்லை.இவையெல்லாம்எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானமென்றுபண்பாகப் பணியாற்றும் பாங்கு காண்போம்.
என் அங்கங்களே!அன்புத் தங்கங்களே!என் உயிரினும் மேலானஅன்பு உடன்பிறப்புகளே!உண்மைதானே;நான் உரைப்பது!பிரதான உறுப்பு நான் தான் என்றுஅவதாரம் எடுத்த ஆண்டவன் போல்தலை, ஒரு நாளும் ஆணவம் கொண்டதில்லைஇந்தத் தலை ஆணவம் கொண்டதில்லை.நிலை தவறி அசைந்தது மில்லை.அதனாலே;தலையைத் தாங்கிகழுத்து முதல் கால் வரையில்கடமையாற்றிக் கண்ணியமுடன்கட்டுப்பாடு காத்திடும் காட்சியினைக்கழகமாய்க் கண்டு, மகிழ்ந்து,தலைதாழ்ந்து வணக்கம் செலுத்துகிறேன்.
தலையில் பாயும் ரத்தம் தான்காலுக்கும் பாய்கிறது — ஆனாலும் பிரமனின்தலையிற் பிறந்தோர் உயர்ந்த குலத்தோர் என்றும்,தொடையிற் பிறந்தோர் வைசிய வருண மென்றும்,காலில் தோன்றிய நாம் கடைநிலை சாதி யென்றும்,வகுத்தனர் வருணாசிரம தருமம் என்றால்;பிரமனின் ரத்த ஓட்டத்தில் மட்டும்ஏன் இத்தனை கோளாறு?
பிரமன் என்ன ஆணா? பெண்ணா?பெண் என்றே வைத்துக் கொண்டாலும்உடல் முழுவதும் கருப்பையைத் தைத்துக் கொண்டாபிள்ளை பெற்றாள்?
புளுகித் தொலைப்பதற்கும் ஓர் அளவு வேண்டும்.பொல்லாத புராணங்கள் அபத்தமெனஅறிய வேண்டும்.
இதை யெல்லாம் சொன்னால்இறைவன் கோபிப்பான்உனக்கு அற்ப ஆயுள்எனச் சாபம் இடுவான்!இதை விட வேகமாகஇந்த விஷயத்தைப் புட்டு வைத்தஅய்யா பெரியாருக்குஅகவை தொண்ணூற்றி ஐந்து!கண் மூடி வழக்கமெல்லாம்மண் மூடிப் போக எனகல்லறைக்குப் போகும் வரைகர்ச்சித்த பெரியாருக்குப் பிறந்த நாள்!
கட்டித் தங்கமாய் பகுத்தறிவுக் கருத்தைத்தந்தார் அவர்! அதைப்பெட்டியில் வைத்துப் பூட்டாமல்அணிமணி செய்து,தமிழர்க்குச் சூட்டியவர் அண்ணா!கசப்பு மருந்துஉயிர் காக்கும் மருந்து எனசுயமரியாதைச் சூரணம் தயாரித்தவர் பெரியார் — அதைகனியிடை கலந்து, தமிழ்த் தேனில் தோய்த்துப்பிணி அகலத் தந்தவர் அண்ணா!
நுதல் அகன்ற அறிவரசன் அண்ணா; கழகத்தின்முதல் மாநில மாநாட்டைச் சென்னையிலேஆண்டு ஐம்பத்தி ரெண்டில்கூட்டிய வேளையிலே — மாநாட்டுக்கு
அவரைத் தலைவராக வழி மொழிந்துநான் பேசிய போது தான்;மூன்றெழுத்துக்குள்ள மகிமையேமுகில் கிழித்து வெளிக் கிளம்பும்முழு நிலவாக ஒளி விட்டதம்மா!
மூன்று கடல் சூழ்ந்த தமிழ் நிலத்தில்மும்முரசு கொட்டி மூன்று கொடிகட்டிமுக்கனியாம் முத்தமிழை வளர்த்தமூவேந்தர் பரம்பரையில் வந்தவர்கள் நாம் — நமதுமொழிக்குப் பெயர் "தமிழ்" — மூன்றெழுத்து!தமிழர்க்குரிய தனிப் "பண்பு" — மூன்றெழுத்து!பண்பில் எழுந்திடும் "அன்பு" மூன்றெழுத்து!அன்பில் விளையும் "காதல்" மூன்றெழுத்து!காதலர் விரும்பும் "வீரம்" மூன்றெழுத்து!வீரர்கள் விழுப்புண் ஏந்தும் "களம்" மூன்றெழுத்து!களத்தில் காணும் "வெற்றி" மூன்றெழுத்து!வெற்றிக்கு விதையான "அறிவு" மூன்றெழுத்து!அந்த அறிவுப் பெட்டகமாய் வந்துதித்த"அண்ணா" மூன்றெழுத்து!அந்த அண்ணன் கண்டகழகமும் "தி.மு.க." — மூன்றெழுத்து!அன்று நான் இவ்வாறுபேசியதைத் தொடர்ந்து தான்;மூன்றெழுத்திலே ஒரு மூச்சிருக்கும்பாடலே வந்தது!இன்று; எழுத்துக்கள்மூன்றுஎண்ணங்கள் மும்மூன்றும்பாட்டரங்கில் வந்துளதே!
அடிநாள் தொட்டு அடிமைகளாய் தொழும்பர்களாய்ஆதிக்கக் காரர்களின் சவாரிக் குதிரைகளாய்
தாழ்த்தப்பட்டோர் அல்லலுற்றுத்தணல் வீழ் மெழுகாய்த்தவிதவித்துக் கிடந்த நிலை மாற்றதகத் தகாயச் சூரியனாய் எழுந்தான்ஒருவன் — அந்தத்தகைசான்ற அறிஞனுக்குப் பெயர் தான் அம்பேத்கர்!சாதியாவதேதடா சமயமாவதேதடாசாதியும் சமயமும் சாற்றிடும் மனிதர்காள்!ஆண்டவன் படைப்பில் ஆயிரம் பேதம்அவன் செயல் எனிலோ,தோண்டுவம் அந்தஆண்டவன் கண்களை வாரீர் என்றே;மாண்டிடும் புழுக்களாம் மனிதரைக் காத்து,அவர்மீண்டிடப் போர்க்கொடி உயர்த்திய மேலோன்!இனித் தகுதியில்லை உமக்கு;எமை அடக்கி ஆள!தனித் தொகுதி ஒன்றுதான்எம் நிலை மாற்றுமென்று;புயலாய்ச் சீறிபூகம்பமாய்க் குலுங்கிப்புரட்சி செய்தபுதிய புத்தன்!அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருத்துக்கள்அனைத்தும் இணைத்துஅழகின் சிரிப்பாய்அனலின் தகிப்பாய்கவிதைகள் தந்த பாரதிதாசன்;எரிமலைக் குழம்பை வேலில் தோய்த்து,இலட்சியக் கவிதைகள் வடித்த புலவன்!புரட்சி என்ற சொல்லுக்கு உண்மைப்பொருளைப் புரியவைக்கும் அவன் பாடல்!
உவமைகள் தென்றலேறி பவனி வரும்.உண்மைகள் விரிவானாய் ஒளி வெள்ளம் பாய்ச்சும்.தமிழுக்கு மகன் அவன்! தமிழாகவே மலர்ந்தவன்!அமிழ்துக்கு நிகரான பாக்கள்!அத்தனையும் மகரந்தப் பூக்கள்!
(இதோ அழகின் சிரிப்பில் புரட்சிக் கவிஞன் பாடுகிறான்புறாக்களைப் பற்றி)
"இட்டதோர் தாமரைப் பூஇதழ் விரித்திருத்தல் போலேவட்டமாய்ப் புறாக்கள் கூடிஇரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்வெட்டில்லை; குத்துமில்லை;வேறு வேறு இருந்த ருந்தும்கட்டில்லை; கீழ் மேல் என்னும்கண் மூடி வழக்கமில்லை."
(புறாக்கள் ஒழுக்கம் பற்றிப் பாவேந்தர் கூறுகிறார்.)
"அவள் தனி; ஒப்ப வில்லை;அவன் அவள் வருந்தும் வண்ணம்தவறிழைக்கின்றான்" இந்தத்தகாச் செயல் தன்னை, அன்புதவழ்கின்ற புறாக்கள் தம்மில்ஒரு சில தறுதலைகள்கவலைசேர் மக்களின் பால்கற்றுக் கொண்டிருத்தல் கூடும்."
இருளையும் அழகென இயம்பிய புலவன்இவனன்றி யாருளர்? கண்டு சொல்வீர்!
(இருள் எங்கெங்கே இருக்கிறதாம் - அங்கெல்லாம்இல்லாவிட்டால் அழகு நிறைவு அடையாதாம்.)
"உயர்ந்துள்ள அழகு மூக்கின்இருபுறம் உறைவாய்; மங்கைகயல் விழிக்கடையில் உள்ளாய்;காதின் நடுப்புறத்தும்,அயலிலும் சூழ்வாய் பெண்ணின்முகத்தினில் அடையாளத்தைஇயக்குவாய் இருளே! உன் சீர்ஓவியர் அறிந்திருப்பார்."
(இருளை அறியாமைக்கு ஒப்பிட்டு - அறியாமை அறிவைத்தரும் - அறிவினால் அறியாமையைத் தர முடியாது எனவாதிடுகிறான் பாவேந்தன்.)
"அறிவென்றால் ஒளியாம், ஆம் ஆம்!அறியாமை இருளாம், ஆம் ஆம்!அறியாமை அறிவைச் செய்யும்அறியாமை அறிவால் உண்டா?"
(அதற்கு ஒரு நிகழ்ச்சி)
"சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;நள்ளிருள் விளக்குத் தேவை;நிறைவேற்ற நெருப்புக் குச்சிதேடினார்; கிடைக்கவில்லை.பெட்டியில் இருப்பதாகப்பேசினார்; சாவி இல்லை;எட்டுப் பேர் இதற்குள் தேளால்கொட்டப்பட்டுத் துடித்தார்;"கட்டாயம் தூய்மை வேண்டும்"என்னுமோர் அறிவு தன்னைஇட்டளித்திட்ட நல்லஇருளே உன் பெருமை என்னே!"
(புறாக்களைப் பற்றி இருளைப் பற்றி உவமை நயத்தோடும் நகைச்சுவை உணர்வோடும் பாடிய பாவேந்தன்;இதோ புரட்சிக் கவிஞனாய் சங்க நாதம் செய்கிறான்;பாருங்கள்)
"வடக்கினில் தமிழர் வாழ்வைவதக்கிப் பின் தெற்கில் வந்தேஇடக்கினைச் செய நினைத்தஎதிரியை அந்நாள் தொட்டே"அடக்கடா!" என்றுரைத்தஅறங்காக்கும் தமிழே! இங்குத்தடைக்கற்கள் உண்டென்றாலும்தடந்தோள் உண்டெனச் சிரித்தாய்!"
இந்தப் பாவேந்தன் பாட்டுப்பழுதாக வில்லை யெனமெய்ப்பிக்கத் தான்தென் கோடி மூலையிலேபொய்ப்பித்தர் மாயவாதம்;மண்டல் கமிஷனுக்கு எதிராகஎடுபடவில்லை யென்று;தெரிவித்தோம் தேசத்துக்கேஅறிவிப்போம் அகிலத்துக்கும்!
வாழை மரம்; தன்னைவெட்டிக் கட்டியதை அறியாமல்வருவோரை வரவேற்கும் மண வீட்டில்!அது போல வடக்கில் உள்ள பிற்பட்டோர்அவர் நிலை அறியாது கிடக்கின்றார்.அதனாலே மண்டலுக்குஅங்குள்ள மாநிலத்தில் எதிர்ப்பதிகம் - ஆனால்இங்கு, சுண்டலுக்கு கையேந்திசூழ்ந்து நிற்கும் அடிமைக் கூட்டம் மிகக் குறைவு!
அது ஏன்? என்ற கேள்விக்குஇதோ விளக்கம்!
எழுபத்தி ஐந்து ஆண்டின் முன்னேஎழுந்தது பார் ஓர் இயக்கம் - சர் பிட்டிதியாகராயப் பெரியோன் கண்டதிராவிடப் பேரியக்கம்!உழுது பண்படுத்திஉரிய முறை நடவு நட்டுக் காவல் செய்தால்அறுவடையின்போதுஅழுது புலம்பத் தேவையில்லை.அந்நாள் தொட்டு இந்நாள் வரைபதப்படுத்தப்பட்ட நிலம் இது!பக்குவமடைந்த பூமி! அதுதிராவிட இயக்கம் திரட்டிய செல்வம்.நெல் விதைத்தால், தவறி இங்குப்புல் விளையாது!கல்வி வேலை வாய்ப்புகளில்சமூக அடிப்படையே தேவையென்னும்நல்லதோர் இட ஒதுக்கீடேநம் இயக்க முழக்கமாகும்!அதனாலே ஆதிக்க புரிக்கூச்சல் எல்லாம்அரவமொன்று தடி கண்டால்அடங்குதல் போல் அடங்கிப் போகும்.சிறு நரிகள் வால் தூக்கிபொருதிடுவோம் வருக எனில்சிங்க ஏறுகள் பாய்ந்தோடிகுகை இடுக்கில் பதுங்கிடுமோ?எலிகள் நடனம் ஆடுமிங்கே - அதற்குப்புலிகள் தாளம் போட்டிடுமோ?
அலிகளின் ஆர்ப்பாட்ட மெல்லாம்அதுகளைப் போல்அலிகளிடம் தான் செல்லும் — அந்தஆண் மக்களை அது எப்படி வெல்லும்?
சங்கந் தருதங்கத் தமிழ்வங்கக் கடல்பொங்கும் — இளம்சிங்கக் குரல்எங்கும் எழஒன்றே குலம்என்றே சொல்லிவாழ்ந்த இனம்;பண்டு தொட்டுக்கொண்டு கொடுத்த இனம்;உண்டு கொழுக்கவந்த கூட்டம்சிண்டு முடிந்துசீர் குலையவேஒரு சாதிதமிழ்ச் சாதிபல சாதியானதே! அதனால்பலவீனமானதே!!
சூழ்ச்சி வென்றதுசூது பலித்தது — இனிவீழ்ச்சியில்லை யெனவீணர்கள் பாடினர்!வெறி கொண்டு ஆடினர்!அறிவார் கல்வியில்அரசுப் பணிகளில்
பதுக்கிய இடமெல்லாம்தம்மதே என்றுவதக்கியே பிறரதுவாழ்வினைப் பறித்தஓர் பிரிவு மக்களிடம்போர் புரியத் தயங்கியதால்செதுக்கிய சிலைகளாய்ச்செயலற்றுக் கிடந்தோம் அன்று!நடக்கும் இருளைநகர்த்தும் பகல் போல்நாளும் வந்ததுகோளும் தொலைந்தது!ஒதுக்கியே தீர்வதுஒடுக்கப்பட்டோருக்குஇட ஒதுக்கீடு என;எதிர் நீச்சல் போட்டுஎழுந்து நின்றது;திராவிட இயக்கம்!தென்னக மயக்கம்தீர்க்க முனைந்தது!
தேடக்கிடைக்காத தெள்ளமுதாய்தேமதுரக் கீத இசையாய்தேன்பாகும் தினைமாவும் இணைந்த தொருதெவிட்டாத சுவை விருந்தாய்திக்கற்ற மக்களுக்குதிசை காட்டும் நிலவொளியாய்வாய்த்திட்ட நற்பேறுவாராது வந்த மாமணிவகுப்புவாரி விகிதாசாரம் — பிற்பட்டோர்வாழ்வுக்கு ஒரு வரப் பிரசாதம்!
வந்ததைத் தொலைப்போமோ? வஞ்சகவலைதனில் வீழ்வோமோ?வெந்ததைத் தின்று — வாயில்வந்ததை உளறும் மனிதர்தகுதி, திறமை என எழுதிப் பேசி;நயமாக நஞ்சைக் கலக்கின்றார்.நாட்டு மக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார்."அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ?"எனப் பாவேந்தன்கேட்டதைத் தான்;நானும் கேட்கின்றேன்!
ஆண்டவன் படைப்பில்அனைவரும் சமம் எனில்அவன், உயர்ஜாதிக்கு மட்டும்தங்கத்தால் மூளை செய்துதலைக்குள்ளே வைத்தானா?மற்ற சாதிக் கெல்லாம்மண்டைக்குள் இருப்பதென்ன?களிமண்ணா? சுண்ணாம்பா?
கங்கையைப் போல்வடமொழியில் கவிதை தந்தவால்மீகி, வியாசனெல்லாம்பிரமதேவன் கால் பெற்ற.பிள்ளைகளே!வள்ளுவன் யார்? கம்பன் யார்?இளங்கோவடிகள், ஒட்டக் கூத்தன்இவரெல்லாம் யார்? யார்?பிரமன் தலையில்பிறந்ததில்லை இவர்கள்!ஆனாலும் தமிழ் மொழியின் இமயங்கள்!
நாற்பத்து மூன்று ஆண்டுகளாய்நாம் பெற்ற சுதந்திரத்தில்தகுதிக்கும் திறமைக்கும்தரப்பட்ட வாய்ப்புகளால்கிழித்த தென்ன?தைத்த தென்ன?கிழித்துத் தைத்தது தான் என்ன? என்ன? என்ன?எதற்காகத் திறமை;அது தேவையா என்று — நாம்என்றுமே கேட்டதில்லை!ஆனால்ஏகலைவன் வித்தை கற்கஎந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை! அவன்வில்லில் விஜயனையும் வெல்வான் என்று — கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்ற தென்ன நியாயம்?தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்தகுதி அவனுக்கேது எனச் சீறிதலை வெட்டிச் சாய்த்த கதைஇராம பிரான் வரலாறன்றோ?கட்டை விரலோ, தலையோஅவன்காணிக்கையாக -இந்நாளில் எவனும் கேட்டால்பட்டை உரியும் — சுடுகாட்டில் அவன்கட்டை வேகும் !"என்ன இது; என்றைக்கு மில்லாத வெப்பம்தலைமைக் கவிதையிலே?"எனக் கேட்கத் தோன்றுகிறதா?பிறகென்ன?முதலுக்கே மோசம் வந்த பின்னர்முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ?ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்கனமான பாறையொன்றை அவன் தலையில்உருட்டி விட எத்தனிக்கும்உலுத்தர்களைக் கண்டால்உதைக்கத் தான் வேண்டும்!ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்!ஆறிலும் சாவு தான் நூறிலும் சாவு தான்;ஆனது ஆகட்டுமே — இந்தஆட்சி தான் போகட்டுமே!
மகுடமின்றி வாழ முடியா மனிதர்களா நாம்?சிசுவாகப் பிறக்கும் போதேசிம்மாசனத்துடனா பிறந்தோம்;சீதை வில்லுடன் பிறந்தது போல்?கொற்றக் குடையா? கொள்கையா?எது வேண்டும் எனில், கொள்கையைவிற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்!ஆட்சி; வரும்! போகும்! நிலையல்ல!அய்யா அண்ணா வகுத்த கொள்கை;போகாது! வாழும் நிலையாக! எனவேஆட்சியில் இருப்பினும்இல்லாதிருப்பினும்தன்மானம் உயிரென மதிப்போம்.தமிழர் இனமானம் என்றுமே காப்போம்.கொண்ட குறிக்கோளைப் பழித்துக்கண்டபடி பேசும் பிறவிகளைப் பார்த்தால்"போடா வெங்காயம்!" என்பார்பெரியார், கோபத்தில்!"வளம் பெரிய தமிழ்நாட்டில்தமிழரல்லார் வால் நீட்டினால்உதை தான் கிடைத்திடும்"
என்றுரைப்பார் பாவேந்தர்!நாராசப் பேச்சாளர், ஆபாச எழுத்தாளர் — காணின்;நமது அண்ணா; "நடுங்கா நாக்கழகர் நரகல்நடையழகர்!" என நையாண்டி புரிந்திடுவார்!ஆத்திரம் தாங்காமல் தானே அம்பேத்கர்அரசியல் சட்டத்தையே தேவைப்படின்கொளுத்த வேண்டுமெனக் கொந்தளித்தார்!எந்தத் தலைமுறையும்இந்தத் தலைவர்கள் போல்இனியொரு முறை காண்பதில்லை!அந்தத் தலைவர்களின்எண்ணங்கள் வெற்றி பெறசூளுரைப்போம்!சுடர் முகம் தூக்குவோம்!இடர் பல வரினும்எதிர்த்து நிற்போம்!வெற்றி காண்போம்!