கவிதை 36 / 77
"சித்திரைத் திருநாள்" தலைமைக் கவிதை!
"Chithirai Festival" — Presiding Poem!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: “சித்திரைத் திருநாள்” தலைமைக் கவிதை
"சித்திரைத் திருநாள்"தலைமைக் கவிதை!
தமிழ்ப்புத்தாண்டு (14.4.90) தினத்தன்று முதல்வர் கலைஞர்அவர்கள் சென்னை தொலைக்காட்சியில் 'சித்திரைத் திருநாள்' என்றதலைப்பில் யாத்த தலைமைக் கவிதை வருமாறு:
★
உள்ளன்பு கொண்ட தமிழ் மக்களுக்கும்உயர் கவிதை படைக்க வந்த பெருமக்களுக்கும் — என்உயிரினு மேலான உடன் பிறப்புகட்கும்வணக்கமும் வாழ்த்தும் குவிக்கின்றேன்!
புத்தாண்டு வாழ்த்துரைக்க வருக என்றுதொலைக்காட்சி நிலையத்தார் தூது விடுத்தார்."தூ! தூ!! இவன் எதற்கு?" என்ற காலம் மாறிதூது விடுக்கும் காலம் தோன்றியது விந்தையன்றோ?
இங்கிருக்கும் கவிஞர்களின் அரங்கிற்குநான் தலைவனாம்! வேடிக்கை; நல்ல வேடிக்கை!இலக்கணமெனும் தாய்ப்பால் அருந்தாமல் — பசிஎடுத்த போதெல்லாம் புதுக் கவிதைப் புட்டிப்பால்குடித்திடும் குழந்தை நான்!
எனை அழைத்து கவியரங்கத் தலைமை ஏற்கச்செய்துள்ளார்!
ஏன் என்று யோசித்துப் பார்த்தபோது — நான்"வைகாசி" என் கவிதைக்கென கேட்க மாட்டேன்.வைகாசி!"வை காசி" என் கவிதைக்கென கேட்க மாட்டேன்.
அதனாலே —சித்திரைக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்துள்ளார்கள்!கவியரங்கில் பங்கு நீ பெற்றந்த சித்திரைப் பெண்ணுக்கு;ஆசி கூறென்பார்!பங்குனி பெற்ற அந்த சித்திரைப் பெண்ணுக்குஆசி கூறென்பார்!புரட்டாசி கூறமாட்டேன் என்பதாலே"புரட்டு ஆசி" கூற மாட்டேன் என்பதாலேதுணிந்தழைத்தார் போலும்!
மார்கழியாத் தாவணியுடன்மார் கழி!மார் கழியாத் தாவணியுடன்(காற்றாலோ, கையாலோ விலகாத தாவணியுடன்)மார் கழியாத் தாவணியுடன் ஆவணிப் பெண்ணாள்மரபு வழிக் குடும்ப மங்கை; எனைப் பார்த்துஆ நீயா? என்று... (ஆனி)ஆடித் தீர்த்தாள் தை தை என்றுஅனல் கொட்டு விழிகாட்டி!
எதற்காக?தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டாம்;அதற்காக!உண்மை தான் எனினும் அவள் உருகாமல்இருப்பதற்கு நான் சொன்னேன்தமிழர்க்கு ஓராண்டில் இரு புத்தாண்டு வருவதால்இரட்டிப்பு மகிழ்ச்சி தானே என்று!தளிர்ப் பெண்ணின் குளிர் முகத்தில் நிலவு கண்டேன்!
தழுவிக் கொண்டாள்! திகைக்காதீர்! மேலும்,மற்றொருத்தியா என்று!மாதம் தான்!மாதல்ல!!
புத்தாண்டு இவ்வாண்டு என்பதை விடப்புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு என்பதிலே பெருமகிழ்ச்சி!புது மனிதன் அம்பேத்கர் அவதரித்துபுதை குழியில் கிடந்தோரை எல்லாம்கை தூக்கி நடக்க விட்டு அவர் முகத்தில்கதிரொளியைப் பரவ விட்டவரலாற்றை; இந்த வண்ணமிகு திருநாளில்
வாழ்த்த வேண்டும்!வளர்க்க வேண்டும்; புதிய சிந்தனையை!
இந்தியத் திருநாட்டு அரசியல் சாசனத்தைச்சிந்தனைக் கருவூலமாய்த் தந்தவர்க்கும் —விந்தியம் போல் எழுந்து நின்று, மொழி வெறிவீணர்களின் ஆதிக்கம் தடுத்து நின்றவர்க்கும்;ஆம்! அடலேறு மனிதர் அம்பேத்கருக்கும்அரிமா நெஞ்சப் பாரதி தாசருக்கும்நூற்றாண்டு கொண்டாடும் இந்த ஆண்டில்தோற்றோடிப் போகட்டும் தொல்லை தரும் தீய சக்தி!
"சாதியிலே மதங்களிலே சாத்திரச் சகதியிலேசாயாதீர் மனிதர்காள்" என்ற சான்றோன்வடலூர் வள்ளலார் வார்த்தைகளை மதித்தோ மில்லை!அவருக்குவான் மறைக்கத் தோரணம் கட்டிவிழா மட்டும் எடுக்கின்றோம்; வெட்கமில்லை!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு மென்றபெருமகனாம் வள்ளுவர்க்குச்
சிறப்பு மட்டும் செய்கின்றோம்; ஆனால் அவர்செப்பியதைச் செயல்படுத்த மறுத்து விட்டுப்பெற்றெடுத்த பெண்ணுக்கும் பிள்ளைகட்கும்உற்றார் உறவுக்குள் சம்பந்தம் தேடுகின்றோம்;— இந்தஊருக்கு உபதேசிகளால் கொண்ட கொள்கைக்குஎன்ன இலாபம்?உள்ளதைச் சொன்னால் உடலெரிந்து வருவதேன் கோபம்?சிந்தனையில் விளைந்த செல்வம் சீர்திருத்தக்கொள்கையெனில்;செயல்படாது அதனை விடுத்தல் பெருந்துரோகம்!துரோகத்தைப் போற்றித் துதிபாடித் தொழுவதற்குஎட்டப்பன் காலத்திற்கு முன்பிருந்தே பழகி விட்டதமிழர்களும் இருக்கின்றார் தமிழ்நாட்டில்! காரிஉமிழ்கின்றான் கட்டபொம்மன் என்றாலும்;கவலையில்லை அந்தக் காரியவாதிகளாம் - பகைவர்கால் பிடித்து வாழ்கின்ற மேதைகட்கு!கொள்கை என்றும் கோட்பாடென்றும்குரல்வளையை நெறித்தாலும் விடேன் என்றும்குன்றேறி முழக்கிவிட்டு — அதில்ஒன்றேனும் நிறைவேறச் செயல்படாமல்;மன்றேறி மாவீரன் போல் நிமிர்ந்து நின்றுமக்கள் முன்னே நடிப்பதனால் என்ன பயன்?வாக்கும் செயலும் ஒன்றாக இருந்தால் தான் — நாட்டில்பூக்கும் அரசு காய்த்துக் குலுங்கும்!
சொன்னதைச் செய்வதற்கும்செய்வதைச் சொல்வதற்கும்ஓர் அரசு உமதரசு நடப்பதாலேசீர் பெருக உழைத்திடுவோம் என்றும்;தேர்க்காலின் அச்சாணி போன்றஏர்ப்பின்னால் தேசம் இருத்தலே பொருத்தமென்றும்;
எழில்மிகு நகர்கள், ஊர்கள், ஏக்கமிலாச் சமுதாயம் —தொழில் வளம் பெருகினால் தோன்றிடுமென்றும்,தீய நோய் பல களைந்து தெளிந்த நல்வாழ்வு காணதூய நோக்குடன் திட்டங்கள் தேவை என்றும்;பாயும் புலியாய் அரசினர் இருந்தால்பதுக்கல் எலிகள் அழுந்துவர் என்றும்;
இடுப்பொடிந்து கல்வியிலும் வேலை வாய்ப்பினிலும்துடுப்பில்லாப் படகுகளாய்த் தத்தளித்தோர் வாழ்வு;
இட ஒதுக்கீட்டுப் புரட்சிகர மாற்றங்களால்இனி வரும் காலத்தில் வளம் பெற்றுத் திகழுமென்றும்;
எட்டாவது வரை படித்த ஏழை வீட்டு இளஞ்சிட்டுஎட்டாப் பழமடியோ இல்வாழ்க்கை என ஏங்கியதை— மாற்றி விட்டுதட்டாமல் அவள் கழுத்தில் தாலியேற் வைப்பதற்குதந்திடும் ஐயாயிரம் தவமின்றிப் பெற்ற வரமென்றும்;
குடும்பத் தலைவரை இழந்து குமுறிக் கதறிஇடும்பைகூர் வறுமையினால் வாடுவோர்க்கு — அரசுதரும் தொகை தான் அவர்தம் கண்ணீர் துடைக்கும்அரும் தொகையாய் அமையும் என்றும்;
முட்டையுடன் குழந்தைகட்குச் சத்துணவு — வெறும்பெட்டைகளாய்ப் பெண்களை எண்ணாதீர் என்றுமுப்பது விழுக்காடு முதல் கட்டச் சலுகை என்றும்முடிவாக ஆணுக்கும் பெண்ணுக்கும்('அர்த்த நாரீஸ்வர' உரிமை கிட்டுமென்றும்;(அதாவது பாதி பாதி - 50 சதவிகிதம்)பெண்ணுரிமை வழங்கினால் தான் பேசுந்திருநாட்டுமண்ணுரிமை நிலைக்கு மென்றுரைத்துபெற்றோர் உடைமையில் பாதி பெண்மகவுக்குமெனப்பெருமை மிகு சம உரிமைச் சட்டமென்றும்;
கருவுற்ற ஏழைப் பெண்கள், கலப்பு மணத் தம்பதியர்கைம்பெண்ணை மணம் புரிந்தோர், ஊனமுற்றோர்தொழுநோய் இரவலர்,பொருளற்றுத் திருவற்றுத் திகைத்திடாமல் — நாம்புரவலராய் நின்றவரைப் போற்றுவோமென்றும்.
ஆண்டுக்கு மூன்று பண்டிகைகளில்அய்ந்து கிலோ அரிசி இலவசமென்றும்,ஆதிதிராவிடர் பழங்குடியினர்க்கு மட்டுமின்றிஅடி மட்டத்தில் உழல்கின்ற மிகப் பிற்பட்டோர்— சீர் மரபினர்
குடியிருக்க வீட்டு மனை இலவசமாய்க்கொடுத்திடுவோம் கையகப் படுத்தி யென்றும்;குடி நீர் இல்லா சிற்றூர் இல்லை எனும்புது நிலை காணப் பணி புரிவோம் என்றும்;வானமே கூரையாய் பூமியே பாயாய்வாழ்ந்தது போதும்!மீனவர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்திடதிட மிகு வீடுகள் தினமும் கட்டிடும்திட்டத்தை மீண்டும் தொடருவோம் என்றும்;நாடு காத்தும் மொழி காத்தும் நலிவுற்ற தியாகிகட்குநல நிதி மற்றும் வசதி வாய்ப்புகள் தருவது என்றும்;கல்விச் சாலைகள் சென்றிடு மாணவர்க்குப் பேருந்தில்கட்டணச் சலுகை வாரி வழங்குவ தென்றும்;அரசு ஊழியர், ஆலைத் தொழிலாளர், ஆசிரியர் நெசவாளிஅனைத்துப் பாட்டாளி மக்கள் உழவர்கள் என்றேஆவி நிகர்த்தவர் நியாயக் கோரிக்கை ஏற்றுதாவித் துயர் களையத் தயாராயிருப்போம் என்றும்;வெல்லம் போல் இனிக்கின்ற சொல்லால் அல்ல —சொல்லுக்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற— ஆட்சி இது!
அதனால் தான்,சிந்தனை வளர்ப்போம் — செயல் படுவோம் —சீர்பெருக்கிச் சீலம் காத்திடுவோம் — என்றும்;உள்ளத்தில் உண்மை ஒளி கொண்டுஉருக்கைப் போல் உறுதி மிகக் கொண்டுஉரிமைகளைப் பெற்றிடுவோம் என்றும்;உலகத்தைக் கற்றிடுவோம் என்றும்;கவிதைக்குச் சுதந்திரம் அளிக்கும்கவிஞன் நான் தலைப்புகள் தந்தேன்.தலைப்புகளில்
பாடவருவோர் —
வெற்றித் தமிழ்பற்றிப் புகழ்உச்சிக் கவிகற்றுப் புவிசுற்றிச் சுழல்கவிஞர்கள்!
இவர் தரும்
நற்றமிழ்ப்பொற்குவைகற்றறிவாளர்பெற்றிடும்வாய்ப்பினால்அற்றது தீமை எனஉற்றது வாய்மை எனஇலக்கியத் தமிழ்க் கொடிஇப் பூமியில் நடுவோம்!அறிவியல் தமிழால்வான விளிம்பினைத்தொடுவோம்!
முதலில்
அரசு மணிமேகலைஇந்த அரசு, மணிமேகலையாக இருந்தால்அட்சய பாத்திரம் கொண்டுஅள்ள அள்ளக் குறையாமல்அனைவர்க்கும்அனுதினமும்அமுது படைத்திருப்போம்!
பரவாயில்லை
அட்சய பாத்திர மில்லாமலேஐந்து கோடித் தமிழ் மக்களைஅரவணைத்து நல்வாழ்வு நல்கிடஅன்றாடம் சிந்தனை செய்வோம்!அந்தச் சிந்தனை பற்றி அரசு மணிமேகலையின்அரிய கவிதை இப்போது கேட்போம்!
அடுத்து
கவியரசு பொன்னி வளவன்.காவிரிக்குப் பொன்னி யென்று பெயருண்டு!அந்தச் சிக்கல் தீர் எப்படிச்செயல்படுவதென இருந்திடும் போது;வருகின்றாள் பொன்னி! என்ன கருத்துதருகிறாள் எனப் பார்ப்போம்!
அடுத்து
நிர்மலா சுரேஷ்தலைப்பென்ன தெரியுமா?சீர் பற்றியது!பெண்ணுக்குரிய தலைப்பு!சீர்வரிசை பெருக்குதல் பற்றி
சிந்திக்காமல் —நாட்டின் சீர்பெருக நல்லகருத்துக்கள் வழங்குவார் எனநம்புவோமாக!
அடுத்து.
விலை உயர்ந்த கவியரசுவைரமும் முத்தும்!தலைப்போ "சீலம் காத்திடுவோம்."சீலம் காத்துச் சீர்பெருக்கிச் செப்பனிட்டசெந்தமிழ் நாட்டை நாம் கயவர்க்குஏலப் பொருளாய் விட்டு விட்டால்மானம் போம்! மனித சாதி என்ற நாமம் போம்!காலம் அளித்த பரிசு அண்ணல் காந்திகாஞ்சி அளித்த பரிசு அறிஞர் அண்ணா — இவருடன்சீலம் வகுத்த பெரியார் வழி நிற்பதற்கும்ஓலமிடும் ஒதிய மிலார் மனிதர்களின்விழி திறப்பதற்கும்பாடுவார் இவர்! பருகிடுவோம் சுவையை!
அடுத்து.
கவிஞர் தமிழன்பன்தொலைக்காட்சியில்செய்தி வாசிப்பவர்செந்தமிழை சுவாசிப்பவர்உரிமைகள் பெற்றிட இவர்உரைப்பது என்ன?வாசிக்கட்டும்! உரிமைகள்சுவாசிக்கட்டும்!
அடுத்து,
கவிக்கோ அப்துல் ரகுமான்கவியரங்கின் கலகலப்பு மனிதர்...
பளபளப்பு இருக்கும்போது மட்டும்நம் பக்கத்திலும்,பரபரப்பான நேரத்தில் பல காத தூரத்திலும் —இருப்பவரல்ல இந்த எஃகுக் கவிஞர்!இவர் உலகத்தைக் கற்றிடுவோம் எனஉரைத்திட வருகின்றார்!கற்றிடுவாரோ? அல்லது சுற்றிடுவாரோ?கவனித்துப் பார்த்திடுவோம்!
முடிவுரை
நிறைவுரையாக நான் ஏதும் கூறாவிட்டால்குறை யொன்றும் நேராது எனினும்;ஒன்று கூற விரும்புகின்றேன்!சிங்கத் தமிழ் இளைஞர் கூட்டம் — நன்குசிந்தித்துச் செயல்படுவதற்கு; நான் எழுதியசங்கத் தமிழ் நூலில் ஒரு பகுதிஎடுத்துரைப்பேன்; ஏற்றிடுவீர்!
மந்த மாருதத் தாலாட்டில் உறங்குவதற்குமாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்!பணம்பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலேதினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர்செல்வத்தை!பிணம் தின்னும் கழுகு போல நீவிர்,பெருக்க வைக்கின்றீர்; உமது வயிற்றை!இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத்தள்ளி விட்டுபொருள் தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி!வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க்கொண்டோரேவார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!
இலையிலிட்டு உண்கின்றீர்?மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமாவைரத்தால் வறுவல் செய்து வைடூரிய அவியலுடன்முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்டஅரிசியையாஅதனைகுத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?
என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் — அதனைமறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்!பொதுமை மணம் கமழ வேண்டும் என்று;புவியில் நாம் முழுங்குகின்றோம் இன்று!புதுமையல்ல இம் முழக்கம், புலவர் பிரான் நக்கீரர்;புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார்,கேளீர்!
தென் கடல் சூழ் தரணி முழுவதுமே — தன்வெண்கொற்றக் குடையின் கீழ் வரவேண்டுமெனத்தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்,கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதல் போல்காடகத்தில் விலங்குகளை வேட்டையாடகண்ணுறக்கமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்றகல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்.மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! — அவரைமயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்கூழோ பொங்கலோ உண்டு களிக்கஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒருநாழித் தானியம் மட்டும் போதுமன்றோ?இப்படிஉண்பது நாழி, உடுப்பவை இரண்டேயெனும்உண்மைதனை உணர்ந்த பின்னும்,வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதி தானோ?உலகிற் பிறந்தோர் அனைவருக்கும்,உடல், உள்ளத் தேவையெல்லாம்ஒன்றாக இருக்கும் போது - இதனைநன்றாகச் சிந்திக்காமல்வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன்சேர்த்தல் வேண்டும்?பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல்வேண்டும்?
தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காணபகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக்கொள்கையினைவகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தான்வாழ்வெடுத்த பயனாகும்!தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர், அதனைத்தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில்நல்லோரெல்லாம்!
"தென் கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;செல்வத்துப் பயனே ஈதல்;துய்பேம் எனினே, தப்புந பலவே."(புறநாநூறு: பாடல் 189)
பதவியில் இல்லா காலத்தில் நான்பாடிய பாட்டாம் இஃது!
பதவி யொரு முள் மாலை! இலக்கியப்பணி எனக்கு முல்லைச் சரம்!பதவி யொரு நெடும் பள்ளம்! பொதுப்பணி எனக்குப் பொதிகைக் குன்றம்!மானமா? மகுடமா? எனக் கேட்டால்மானத்தை மட்டுமே மதிக்கின்ற மனிதன் நான்!கிரீடமா? தலையா? எனக் கேட்கும்போதுகிரீடமே போதுமென இளிக்கின்ற கிறுக்கனல்ல நான்!அதனால் தான் —உறவுக்குக் கை கொடுப்போம்உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றுரைத்துப் பதவித்துறவுக்கும் தயாராகப் பத்தாண்டுக்குமேல் கழித்தவன் நான்!பணி புரியும் வாய்ப்புத்தான் பதவி!பதவி, பவிசு, படாடோபம் எல்லாமே, ஊதியபலூனைப் போல் வெடித்து விடும்பண்பார்ந்த தொண்டொன்றேவானைப் போல் நிலைத்து நிற்கும்!இஃதறியாச் சில பேர்கள்பதவி யொன்றே பிறவி யெடுத்த பயன் என்றுகரையிலிட்ட மீனைப் போல் துடிக்கின்றார்!அவர்களுக்கும் சேர்த்துப் புத்தாண்டு வாழ்த்துக் கூறிஅறிஞர்க்கும், கவிஞர்க்கும்அனைத்துப் பிரிவு தோழர்க்கும்நன்றி கூறி அமைகின்றேன்!நல்வணக்கம் ஏற்றிடுக!