கவிதை 9 / 77
காதலா - வீரமா?
Love or Valour?
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: காதலா! - வீரமா?
காதலா - வீரமா?
4-8-68 அன்று சேலத்தில் 'தமிழர் வாழ்வில்சிறந்தது காதலா? வீரமா?' என்ற தலைப்பில்நடைபெற்ற கவிதைப் பட்டிமன்றம்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை முன்னுரை
ஏர் வரா வயல் தனிலே எது வரும்?புல் பூண்டு வரும்.ஏர் வரின் நெல் வளம் வரும்வானில்கார் வரா காலத்தில் எது வரும்?கடும் பஞ்சம் வரும்கார் வரின் இன்பக் கனி வரும்சேர்வரா 'அயன்' மலையில் எது வரும்?சேர்வராயன் மலையில் எது வரும்? இரும்பு வரும்.அனைவரும் சேர்வரின் நிலை வரும்அனைவரும் சேர்வர் இன்நிலை வரும்நிலை வரும்தேர் வரும் பலர் இழுத்தால்: அதுபோலத்தேன் இரும்பு வரும் சேலத்தில். இந்த
ஊர் வரும்போதெல்லாம் எண்ணுகின்றேன்.உருகாதோ இங்கிருக்கும் இரும்பென்று!கோரிக்கைசருகுநிலை அடைவதற்குள் நிறைவேற்றச் சொல்லிப்பெருகிவரும் ஆதரவைக் காட்டிடுவோம் பேரரசின்பால்!நாட்டு வளம் நகர்வளம் நல்லகாட்டுவளம் கனிவளம் சொல்ல வந்தேன்திரும்பிவிட்டேன் தேனிரும்பின் பக்கம்.தெரியாமல் போகவில்லை!
தேன் என்றால் காதல்இரும்பென்றால் வீரம்ஏன் என்று புரிகிறதா என் போக்கு இப்போது?நெய்தல் தொழில் புரிவோர் நிறைந்திருக்கும் சேலத்தில்நெய்தல் குறிஞ்சி முல்லை மருதம் பாலை யென்றுநிலம் வகுத்து வாழ்ந்திருந்த தமிழர்நிலை பாடிடவேகவிதை நெய்தல் தொழிலாய்க் கொண்டோர் வந்துள்ளார்.
பெய்தல் எப்போது மர்க்காராவில் மழை என்றும்-பாசனம்-செய்தல் தப்பாது நடத்தல் வேண்டுமென்றும்-மேட்டூர் நிறைவுஎய்தல் ஒன்றே குறியாய்க்கொண்டு திரியும் என்னைக் - கவிகொய்தல் வேண்டுமெனக் கூறிவிட்டார்.
காலத்தைக் கருத்தாலே வெல்லுகின்ற கவிஞர்களைக்கூட்டி வைத்துக் - கவிதைக்கோலத்தை வரைந்து காட்டக் கணபதியாம்சேலத்துத் தமிழ்மன்றத் தலைவரவர் கைவேலொத்திப் போர்புரியும் வீரம் மேலா?விழி வேலொத்திப் போர்புரியும் காதல் மேலா?எனும் வம்பை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றார்ஏலத்தின் மணம் வீசும் தமிழ்ச் சொல்லால்!
சேலொத்த பெண்ணாள் தரும்காதல் பெரிதென்பார் ஒரு பிரிவார்ஞாலத்துப் புகழ்மகுடம் வீரமென முழக்கிடுவார் மறுபிரிவார்இதற்கு நான் தலைவன் - இருவரிடைபாலத்தைப் போடுவதா, பகைத்தீயை மூட்டுவதா?பாலத்தைப் போடென்பீர் - பாதைகளைத் தா என்பீர்-சாலைக்கும் மந்திரியாய் ஆனதனால் நான்; நெடுஞ்இங்கு நான் சொல்லும் பாலம் - தமிழ்த்தேன் சிந்தும் கவிஞரிடைத்தொடக்கத்தில் போட்டுவிட்டால் - கருத்துமான் துள்ள வழியில்லை; இந்தஊன் தூங்கும்போதும்பேன் தூங்கா நம் தலையில்உள்ளிருக்கும் உறுப்புக்கு மூளையென்று பேர்!இல்லாதார் பலருண்டு - அவர்கள்இல்லாதார் உலகில்!இருந்தும் இல்லாதார் சிலருக்குஎள்ளிருக்கும் அளவுக்கு அஃதிருக்கும்; அதிலும் நிறையக்கள்ளிருக்கும்; அதனாலே கண்டபடி கிறுக்கும்.இவரோதலை நிறைய மூளை பெற்றுநிலை குலையாத் தன்மையுடன்அவை நடுவே வந்துள்ளார்.அவரிடையே பாலம் கட்டித் தமிழ்த்சமரினையே தடுக்க மாட்டேன்!புலவரிடை பகைமூண்டால் புதுமையுண்டு தமிழுக்கு; அதனால்கலக விதை விதைக்கின்றேன் கவிஞரிடை!பொறுத்திருப்போம் யார் வெல்வார் எனப் பார்ப்போம்.
"மல்லிகையே வெண்சங்காய் வண்டூத" எனப் பாட;
"அல்ல அல்ல புகழேந்தி!" என எழுந்து ஒட்டக்கூத்தர்துள்ளி வந்து கேட்டாராம்:-"கிள்ளிய பின்னன்றோ மலர்க்காம்பில் சங்கூத இயலுமய்யா!வெள்ளிய இதழ் மீது வண்டூதல் விந்தையன்றோ?"இது கேட்டுப் புகழேந்தி உடன் மறுத்துக்"கூத்தரே! என் பதில் கேளுமய்யா!மது குடித்த மயக்கத்தில் முன் பின் தெரியாமல்வண்டு ஊதிற்று!" என்றாராம்.
அந்தப் பெரும்புலவர் சண்டையினால்மேலும் இருபாட்டுத் தமிழுக்குக் கிடைத்ததன்றோ?அதனாலேபாவலர்காள், பகைவளர்ப்பேன் உங்களிடை பாடுங்கள்பந்தயத்துக் குதிரைகளை முடுக்குதல் போல்பந்தலிலே இருப்போரே முழக்கிடுங்கள்.நன்றாகவெந்தயத்தைச் சுவைத்ததுபோல் இருக்கும் சில பாட்டுஇவர் பாட்டில்செந்தழலைக் கக்குகின்ற வீரம் காண்போம்செந்தமிழில் காதல் சொல்லும் பாங்கு காண்போம்.
ஒரு கூறாய் உறவாடும் உயிரனையார்இரு கூறாய்ப் பிரிந்திங்கே மோதுகின்றார் பின்னர்.ஒட்டுமா பழம் உறவு? எனக் கேட்பீர்ஒட்டுமாம் பழ உறவு!ஒட்டு மாம்பழ உறவு சேலத்தில் இயற்கை.அதனாலே, பின்ஒட்டும் உறவுடையார் - இவண்வெட்டும் குத்தும் நடத்திடுவார்வெட்டு குத்து என்றதும்; ஆகா, தலைவரேவீரம் பற்றிப் புகழந்து விட்டார் என வீரத்தால் துள்ளாதீர்!கண்வெட்டு காதலிலும் உண்டு - நெஞ்சில்குத்துகின்ற உடற்கட்டே காதலுக்குத் தைப்பொங்கல்
அந்தக் காதல் எனும் தலைப்பினிலே போராடஅன்பன் வருகின்றார்! தலைமையன்பன் தமிழன்பன்;என்பு தோல் போர்த்த உடம்புக்கு அன்பன்றோ உண்மை உயிர்?பண்பு சால் நமது நண்பர் நம் பழைய ஊர்க்காரர்;ஈரோடு!காவிரியில் நீராடும் பெண் மீது காதல் கொண்டுஅலைகள் போராடும் ஒன்றுக்கொன்று - அந்தஈரோடு தமிழன்பன்சீரோடு காதல் சொல்லிவேரொடு பலாக் கனிகள்தார் போடாச் செவ்வாழைப் பூக்கள்மார்போடு அணைத்துமகிழ் மயிற்பேடுகாளை தந்த வரிசையெலாம் பெற்றுத் தன்தந்த வரிசை காட்டுகின்ற பெண்ணல்ல.இரு வரிசை ஏற்றுஇருவர் இசைவேற்றுத் தம்இரு வரிசை விட்டுஒரு வரிசை யாவதற்கு ஒருப்பட்ட ஒளித்தங்கம்தரு வரிசை தருகின்ற தோட்டத்தில் - அவர்முறுவலிசை, முழங்குகின்ற காதல் இசை.அந்தப் பருவ இசை இல்லாமல் - வீரத்தின்கருவ இசை மேவுமோ? என்றுபுருவ மிசை உயர்த்திக் கேட்பார் - தமிழன்பன்துருவ மிசை நிற்கின்றார் ஈரணியாய்!
ஈரணியாய் நிற்கின்ற கவிஞரிடைச்சீரணிகள் தெரியாத நான் தலைவன்!ஜீரணியார் என் கருத்தை எனினும் சொல்லி வைத்தேன்.இருவர் அணி லாவணியா! இல்லை இல்லைஒன்று காதல் தாவணியாம்பிறிதொன்று வீரப் பேரணியாம் நான்
இடையில் ஏன் நிற்க வேண்டும்?இடையென்ன நிற்பதற்கு உரலா? என்பீர்உடுக்கென்பேன்; அந்த உடுக்கடித்துஆவேசத் தமிழ்மாரி வரவழைக்கும்துடுக்கான பூசாரி நான் இன்று!எடுத்திடுவீர் கவிதைக் கணைதொடுத்திடுவீர் கண்யமுடன்வாரும் நண்ப; தமிழ் அன்ப;இந்தப் போரும் நன்கு தொடங்கிடுக!
(கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும் நோய் பற்றிச்சோலைப் பூப்பறித்துச் சுவை மகரந்தப் பொடி சேர்த்துச்சேலைத் தலைப்பாலே மாதர் முகமூடும் அளவுக்குச்சிரிப்போடும் துடிப்போடும் காதல் குறிப்பேடு தயாரித்தார் தமிழன்பன் மிகப் பொறுப்போடுவாலிபர்கள் கேட்டிருந்தார் - சுறு சுறுப்போடுமாணவர்கள் சுவைத்திருந்தார் - கொஞ்சம் வெறுப்போடுமுதியவர்கள் தம்வயதை நொந்து கொண்டார்.மறுப்பேடு கொண்டிங்கே வருகின்றார் ஒருவர்;'காதலென்ன கத்தரிக்காய்?வீரம் தான் மிளகாய்!" என்றுமோதிடவே மத்தகத்தை ஆட்டுகின்றார்வாதிடவே வீர வழி காட்டுகின்றார்.
"இதற்கும் எங்குற்றான் உன்றன் மகன்?" எனக்கேட்ட வீரனிடம்பொங்குற்ற மகிழ்வோடு தாய்க் கிழவி
"புலி போன இடம் நானறியேன் போர்க்களம்தான்போயிருக்கும் - அப்புலி வாழ்ந்த குகையிதுதான்"எனத் தன் வயிற்றைக் காட்டி நின்றாள்!அந்தப் புறப்பாட்டு - புகழ்ப்பாட்டு -அருந்தமிழர் போற்றுகின்ற வீரப்பாட்டு -போர்க்களத்தில் வேலெறிந்து ஆனையினைக் கொன்றவீரன்;பகை எதிர்க்க வேறொரு வேல்தேடி அலுத்த பின்னர் -தன் மார்பினிலே தைத்திருக்கும் வேல் கண்டு மகிழ்ந்தானென்று கூறுகின்றகுறளே வீரம்!இவ்வாறெலாம்:ஆணிப்பொன் தமிழ் கொண்டு வாணியம்பாடியார் வாதிடுவார்.
ஊர்சொன்னால் பேர் சொல்ல வேண்டாமோ?ஓங்குபுகழ் அப்துர் ரகுமான் என்பார்வீங்கு திரைக்கடல் போன்ற சொல் வளத்தார்தீங்குதரும் எச்செயலும் - நாட்டில்மூங்கில் இலைப் பனிநீர் போல்தூங்கவிடாத் தூய்மையாளர்நீங்கவில்லை அவர் பாட்டு என்மனத்தில்; அவருக்குத்தாங்கவில்லை 'காதல்தான் பெரிது' என்ற வாதம், அதற்காகஏங்கவில்லை எழுந்துவிட்டார் சிங்கம்-விடமாட்டார் காதலை அவர்; அது வெற்றியடைய விடமாட்டார்!வீரப் போர் புரிந்திடவே வருகின்றார்.வாள் எடுப்பார் என அஞ்சாதீர்!தாள் எடுப்பார் - தான் கவி எழுதிய தாள் எடுப்பார்தகத்தகாய மின்வெட்டால் காதலுக்குப் பலத்த காயம் செய்திடுவார்.காதலிக்க நேரமில்லை என்பார்: இல்லை இல்லை!காதலிக்க வீரமில்லை என்பார்அந்தக் காதல் படும் பாட்டைக் காண்பதற்குக்
கண்ணல்ல; காது வேண்டும்.இந்தக்களப்போரில் காதற் சாவா?வீரச் சாவா?அதைநடிப்போரின் ஆற்றலிலே கண்டிடுவோம்!
(கவிஞர் அப்துர் ரகுமான் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;தித்திக்கும் காதலென்று செப்பிடவேதி.கு.நடராசன் வருகின்றார்.தலையில் கங்கையுடன் நடமாடும், காதல்கலையின் தெய்வமன்றோ நடராசர்?இதைச் சொன்னால் இந்த நடராசன்பார்த்தாயா, பரமசிவன் தலையிலே காதல் வைத்துப்பாதத்தில் வீரம் வைத்தார் என; அவர்காலடியில் கிடக்கின்ற மனிதனையே சாட்சியாக்கிக்கண்ணடிப்பார் - காதலிலே வென்று விட்டேன் என்று!ஆளிருப்பார் - வீரமாக; ஆனால் காதல் பேச்சு!முகத் திரண்டு தேள் இருக்கும்; மீசை அதன் பேராம் - குறிக்கோள் வேறிருக்கும்; என்றாலும் இங்குகூத்துக்குப் பாத்திரமாய் வந்துள்ளார்வாத்துக்கு அன்னமெனப் பேர்வைத்துவனப்புமிகும் பெண்களது நடையழகை உவமை சொல்லிஇனிப்பு மிகும் காதலிலே' எனச் சொல்வார்; இல்லறப்புளிப்புக்கு வழியில்லாப் பருவம், அவர்தவிப்புக்கு வழிவிடுவோம். வருக தம்பி!
(கவிஞர் தி.கு.நடராசன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;காதற் சேவல் தந்த அடியைவீரச் சேவல் திருப்பிக் கொடுக்கக்கடுகி வருகுது முருகுசுந்தர உருவில்கிளம்பி முருகெனிலோ அழகு; சுந்தரமும் அஃதே!இந்த அழகழகு;காதல் பற்றிப் பாடாமல்வீரம் பற்றிப் பாடுவது என்ன விந்தை?கத்திச் சுடர்சுற்றிச் சுழல்வற்றிப் பகைவெற்றித்திருபற்றிக் கவிகற்றுக் கொளமுத்துத் தமிழ்முருகுத் தமிழ் கேட்டிடுவோம்!
(கவிஞர் முருகுசுந்தரம் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;பொன்னி வளவன்.காதலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?நிறைய சம்பந்தம்;ஏனெனில் இதுவரையில் எங்கும் சம்பந்தம் போடவில்லை;அதனாலே இருக்கிறது சம்பந்தம், இவர் தமிழ்ப்பூவாரம் தொடுப்பதிலேதேவாரச் சம்பந்தர்.சர்க்கரைப் பேச்சாளர்! சதியாக அணுகிவிடில்
நக்கீரக் கொள்கையாளர் அவர் நாக்கை அறுப்பதிலே!காதல் பற்றிச் சொன்னாலும் கடுமையாகச் சொல்லிடுவார்.விரகதாப வேதனையை வீரமாக முரசறைவார்காதலரே வந்திடுககவிதை வரி தந்திடுக!
(கவிஞர் பொன்னிவளவன் 'காதல்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;ராஜேந்திரன்,பெயரிலே வீரமுண்டு; சரிதப் பெருமையும் என்றுமுண்டுகங்கை கொண்ட ராஜேந்திரன்சிவ கங்கை கண்ட ராஜேந்திரன்.நம் சிந்தையிலே நிற்பவராம்நெஞ்சில் சிலையாக இருப்பவராம்.இந்த நண்பர் வீரம் பற்றிப் பாடிடுவார்.என்பு தெரிகின்ற உடல் எனினும் எஃகுடையார் உள்ளத்தில்!அன்பு தவழ்கிற அருந் தோழர்முன்பு சொன்னதற்குப் பதில் சொல்லி ஒலித்திடுவார் தமிழ்வீரம்!
(கவிஞர் ராசேந்திரன் 'வீரம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;வீர வழக்கறிஞர் அப்துல் ரகுமானும்சாரமுள்ள வாதம் இரண்டொன்றைக் கூறிடுவார்;தீர்ப்பளிப்பேன் பின்னாலே!
(கவிஞர் அப்துல் ரகுமான் முடிவுரை பாடுகிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;காதல் வழக்கறிஞர் ஈரோடு தமிழன்பன்வாதம் செய்திடுவார்:என் தீர்ப்பு அதன் பின்னே!
(கவிஞர் தமிழன்பன் முடிவுரை பாடுகிறார்)
தலைவர் கலைஞரின் தீர்ப்புக் கவிதை:
பேரன்பு கொண்டோரே! பெரியோரே! இது வரையில்வெறும் வம்பு நடந்ததாய்க் கருதாதீர்: இதுவிறுவிறுப்பாய் நடந்த வம்புஇந்த வம்பு நாடெங்கும் நடைபெறவேநான் வாழ்த்தி மகிழ்கின்றேன்.வீரந்தான் பெரிதென்று வாதமிட்ட நண்பருக்குகாதல் என்றால் கசக்கும் பொருளல்ல.காதல்தான் பெரிதென்று வழக்காடும் நண்பர்கள்கோழையாய் இருந்திடலாம் குறையில்லை அதில் ஒன்றும்!ஆனால்கோழைகளைக் கோழைகள்தான் காதலிப்பர்"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்புல்லாளே ஆய மகள்" என முல்லைக்கலி முழக்குவதைமறந்திடவோ?பாய்ந்து வரும் காளையினை அடக்குவதில் - தான்மாய்ந்து போக நேரிடினும் அஞ்சாத மறவனையேமாலையிட்டாள் தமிழச்சிபெண்ணை அணைத்து மார்பகத்தில் முகம்வைப்பது போல் -காளைக் கொம்பிடையே தலை வைப்பீர் விழுப்
புண்ணைப் பெறுவதற்குஎனக் சொல்லி அது நடந்த பின்னால்மனம் ஒப்பி மணந்து கொண்டாள் தமிழப் பெண்ணாள்.அதற்காகக்காதல் காவியத்தில் வீரமன்றோ முதற்படியாய் இருந்ததென்றுவாதமிடல் சரியல்ல!காதல் அடைவதற்கேசாதலுக்கும் அஞ்சாத வீரம் கொண்டார்!இதை நினைத்தால்காதல் பெரிதென்றே தோன்றுமன்றோ!
"பொருதடக்கைவாளெங்கேமணிமார்பெங்கேபோர் முகத்தில் எவர் வரினும்புறங் கொடாதபருவயிரத் தோளெங்கே, எங்கே?" என்றுகலிங்கப் பரணி கர்ச்சிக்கும்."கலவிக் களியின் மயக்கத்தால்கலைபோ யகலக் கலைமதியின்நிலவைத் துகில் என்றெடுத்துடுப்பர்...."இந்தக் காதல் பாடலும் கலிங்கப் பரணிதான்-தென்று படைமுகம் நோக்கிப் புறப்பட்ட வீரன்பாவைத் துயர் கேட்டுருகித் திரும்பிய சேதியைப்பாலைக் கலி பகரும்"கைவேல் களிற்றொடு போக்கி வருபவனை'க்காட்டுகின்ற குறள்தான்கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்'' என்றுகாதல் தேன் பொழியும்."இன் நிழல் இன்மையான் வருந்தியமடப்பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை" யென்றுமானிடையே ஊறுகின்ற காதல்தனைத்தேனிடையே பழச்சுளை போல் தருகின்ற கலித்தொகைதான்வேங்கையுடன் பொருதுகின்ற வேழத்தின் வீரச் செயல் காட்டிக்குறிஞ்சிக்குச் சிறப்புக் கூறும்!
புராணமாம் ராமாயணக் காதையிலேஇராவணனின் அருஞ்செல்வன் இந்திரஜித்தன்சுவைமிகு காதலாலே சுலோச்சனை கணவனானான்.பகைப்படை மிகுந்தபோது தலையிழந்து வீரனானான்.தலையிழந்து போகுமுன்னேநிலை குலையச் செய்திட்டான் எதிரிகளை!நிகும்பலை கண்ட வீரன்பகைவரிடைப் பெருங் கும்பலை அழித்தபின்னர்மடியலானான் மறவனானான்மணிமகுட ராவணனின் மைந்தனானான்....பாரதத்தில் வத்சலையின் அத்தானாம் அபிமன்யுசத்தான முத்தங்கள் ஒன்று பத்து நூறாகமுத்தான வாயிதழில் வழங்கிடுவான்!கொத்தாகக் காதல் கனி பெற்றுக் கொள்வான் - அந்தமுற்றாத இளம்பிஞ்சுபோர் முனையில்பற்றாத உயிரே இல்லை - பின்னர்வற்றாத புகழோடு மாண்டு விட்டான்.குற்றால அருவி நிகர் குழல் கொண்டபொற்றாமரையின்பால் காதல்! அதற்காகவிற்றானோ வீரம்; களத்தில்? இல்லையில்லை - சிந்துபாடும்சிற்றாறாய் இருக்கின்றான் இதிகாசத்தில்.புவிமன்னன் பெற்ற பெண்ணைகவிமன்னன் பிள்ளை, ஆண்டான்!கவிமன்னன் பிள்ளையாண்டான்"அம்பிகாபதி - அமராவதி காதல்''
அன்றென்ன ஆயிற்று?வீர மரணம்தான்!அக்காலக் கதை எதற்கு-இக்கால எடுத்துக்காட்டு என்ன என்பீர்?எத்தனையோ உண்டதற்கு இயம்புகின்றேன்.
எட்டாவது எட்வர்டு காதலுக்கு முடிதுறந்தான் - அதனாலேஎட்டும் பெருமையெலாம் காதலுக்குக் கிட்டிடுமோ?மங்கை யவள் மடிவேண்டும் எனச் சொல்லக் காதல் போதும்முடிவேண்டாம் எனச் சொல்ல தீரம் வேண்டும்;தியாக உள்ளம் வேண்டும்;அவ்வளவேன் அப்பாவி "சீனி" யென்பான் அடுத்த வீட்டுச்''சோனி' மீது காதல் கொண்டுஅவசரமாய் வேலி தாண்டிக் குதிக்கின்றானே;அதுவுமொரு வீரமன்றோ?காதலுக்காக வீரம் - வீரரிடை காதல் -இரண்டையும் வெண்ணெய் மோர் போலப் பிரித்திடஎண்ணுவது பொருந்தாது.
காதலிலே தோல்வியுற்றோர் கழுத்தினிலே சுருக்கிட்டுத் தொங்குகின்றார்.காதலுக்கு மறுப்பிருந்தால்சாதலொன்றே வழியென்றுஆறுகுளம் தேடுகின்றார்.ஆவி தனைப் போக்கிக் கொள்ள!காதல் மட்டும் மேவுவதால் இச்செய்கை புரிகின்றார்காவலுக்கு வீரத்தை இணைத்துக் கொண்டால் அதுகடவுளெனக் காப்பாற்றும் காதலரை!''நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்நாட்டினர்தாம் வியந்து நன்றாம் என்பார்வீடகத்தே. கிணற்றோரத்தே, ஊரினிலே காதல் என்றால்
உறுமுகின்றார்-பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய்கின்றார்" எனப்பாரதியார் குற்றம் சாட்டியதும்"காதல் நெருப்பால் கடல் உன்பால் தாவிடுவேன்சாதி என்னும் சங்கிலி என் தாளைப் பிணைத்ததடி”பாரதிதாசனார் பாடியதும் என்றுகாதலில் வீரம் கலக்காத மனிதர்க் கன்றோ?ஆதலினால்மானிடரே காதல் செய்வீர்;வீரம் கலந்து காதல் செய்வீர்.வீரமில்லாக் காதலினால் விரக்தியுண்டுகாதலில்லா வீரத்தில் கடுமையுண்டுவாழ்வில் துணிவே இல்லை...வாழ்வில் கனிவே இல்லை...அவையோர்க்கு என் தீர்ப்பை அறிவிக்கின்றேன்:-காதலும் வீரமும் கட்டிப் பிறந்தஇரட்டைக் குழந்தை-இதற்குக் குடும்பக் கட்டுப்பாடில்லை;பெற்றிடுவீர் தாராளமாக!
வணக்கம்.
✤