கவிதை 5 / 77

வாளி மன்னன்

King Vali

X
வாளி மன்னன்
நற்சிந்தைப் பொற்குன்று கிட்கிந்தை நல்லோன்;மற்போரில் வாட்போரில் நிகரில்லா வல்லோன்!தற்கொண்டான் தனைப் பேணும் தமிழணங்கு தாரை;கற்கண்டு மொழியாலே களிப்பூட்டும் பாவை!பற்கொண்டாள் முத்தெடுத்து!விற்கொண்டாள் புருவத்தில்!சந்திரனும் கற்கின்றான் அவளிடத்தில்ஒளிகாட்டும் புதிய வித்தை!தோள் வலியால் வாள் வலியால் தொகை தொகையாய்ச்சூழ்கின்ற பகைமை எல்லாம்தூள் தூளாய்ப் போய் ஒடுங்கும் - தொல்லை நீங்கும்!வேள் பாரி, வழங்குவதில்! தமிழின்தாள் வீழ்ந்து வணங்குவதில் வள்ளுவனே! அந்தவல்லவனின் ஆட்சியிலே வறுமையில்லை! அதனாலேவாட்டமில்லை;நல்லவர்க்கும் களங்கமொன்று இருப்பதுவே இயற்கையன்றோ?கொல்ல வரும் மலைப்பாம்பு: கொடும் விலங்கு; கொள்கையிலாஎல்லையில்லாச் சுயநலத்தின் மொத்த உரு; முழுமூடம்;இழிபெயரோன் சுக்ரீவன் - இளையோனாய்ப் பிறந்து விட்டான்!அனுமன் எனும் ஓரமைச்சன் அவனுக்குப் பெருந்தோழன்;மனுவின் முறை வேண்டுமெனப் போராடும் மதக் குரங்கு!
கணுவிலெல்லாம் சுவைக்கின்ற கரும்பினிலேஅணு அணுவாய் வேப்பெண்ணெய் கலப்பதற்குத் திட்டம்யாத்தான்;தினை மாவாம் தென்தமிழை அழிப்பதற்குத் திசைகெட்டஆரியத்தின் துணைநின்ற துரோகி அவன்"அண்ணனையே சாய்த்துவிட்டால் அரியணை உன் காலடியில்அறிவாய் நீ சுக்ரீவா!" என மொழிந்து முட்டாளை முடுக்கிதருணமது பார்த்திருந்த இருவருமே கூடிப்பேசி விட்டான்.அவுணன் எனும் முரடன்தன்னை அண்ணன்பால் ஏவிவிட்டார்;மற்போரில் எனைவெல்வார் யாருமில்லை;மறுப்போர்கள் போட்டியிட வரலாமென்றுமார்தட்டி எதிர்நின்ற அவுணன் தன்னைப்புன்னகையால் வரவேற்றுப் போர்முரசு கொட்டிவிட்டான்:மண்ணாளும் மாமன்னன், மறத்தமிழர் குலவிளக்கு!எத்தனை நாள் நடக்குமிந்த மற்போர்?இருவருமே பெருவீரர்; எனப்பேசும் ஒரு கூட்டம்!மன்னனினும் வல்லவனாய்த் தோன்றுகிறான்;இன்னலேதும் வந்திடுமோ வேந்தனுக்கு? என ஏங்கும் ஒரு கூட்டம்!தோற்றத்தால் மலை போன்றான்;தோளிரண்டும் உரல் போன்றான்.தோற்றுத்தான் போவார் மன்னர்; எனத்துவளும் ஒரு கூட்டம்!அனைவருமே எதிர்பார்த்த அதிர்ச்சி ஏதும் நிகழாவண்ணம்அவுணனாம் பெருவீரன் ஓர் அடியில் மயங்கி வீழ்ந்தான்!அடுத்த அடி.... "அம்மாடி" ....."அப்பாடி"...!பின் அவனைப் பிடிப்பதற்கு ஆளில்லை....மலைக்குகையில் ஒளிந்து விட்டான்!சூழ்ச்சிதனை முடிக்காத சுக்ரீவன் அண்ணனிடம்"அவுணனைப் பிடித்து வந்து நாட்டுக்கு வேடிக்கை காட்டல் நன்று!
அண்ணாவே தொடர்வீர்" என்று குகைதன்னைக் காட்டினான் நின்று!தம்பியின் உள்ளமெலாம் தணல்மலை என்று சொன்னால்நம்பிட மறுக்கும் அண்ணன், நடந்திட்டான் குகையை நோக்கி!குகைக்குள்ளே போன சிங்கம் திரும்பாமல் சாவதற்குப்பகைக்குணத்தார் திட்டமிட்டார் - செய்துவிட்டார்!ஆனைகளைக் கொண்டு வந்து பாறைகளை உருட்டி வைத்துஅடைத்துவிட்டார் குகை வாயில்!அழித்துவிட்டோம் அரிமாவை என நினைப்பும்.அடைந்துவிட்டோம் அரியணையை என நகைப்பும்கொண்டவராய்க் கொலுவீற்றுக் கூறலானார்...."கிட்கிந்தைப் பெருமக்காள்! உம் தந்தை, என் அண்ணன்இறந்த சேதி பெருவிந்தை!எண்ணவே நோகுதெங்கள் சிந்தை!தந்திரமாய்ப் போராடி ஓட்டம் காட்டிஒப்பற்ற வீரன் தன்னை அந்தரத்திற்கனுப்பிவிட்டான்அவுணவீரன் - அய்யகோ! அவலம்! அவலம்!அழுவதால் பயனுமில்லை! ஆற்றுவார் யாருமில்லை!ஆண்டவனைத் தொழுவதே வேலையென்றுஆகிறேன் துறவியாக" எனச்சொல்லிப்பொய்க் கண்ணீர் பொல பொலவென உதிர்த்துவிட்டான்!"போகாதீர் இளையவரே! போகாதீர்!புவியாளும் உரிமைதனை நீர்பெற்றுஎமைக்காக்கும் பொறுப்பேற்பீர்!"எனப் புலம்பி வழி மறித்தார் - புரியாதோர் புவி மக்கள்!"மறுப்பதற்கு இயலவில்லை மந்திரியே! மாருதியே!மணிமகுடம் எடுத்துவாரும் - தலையில் மாட்டும்!பொறுப்பெதற்கு எனப்பார்த்தேன்! பொதுமக்கள் விட்டால்தானே?வெறுப்பதற்கு முடியவில்லை அண்ணன் நாட்டை!"
சூழ்ச்சியிலே திறன்மிக்க சுக்ரீவன் - மொழிகேட்டுச்சுற்றிநின்ற மாந்தரெல்லாம் மகிழுகின்றார்.சுறுசுறுப்பாய் முடிசூட்டும் காரியத்தில்சுழற்காற்றாய்ப் பறக்கின்றான் ஆஞ்சநேயன்-அவ்வமயம் புயற்காற்றாய்ப் பெரு நெருப்பாய்ப் புகுந்திட்டாள்-தாராதேவி!"முயற்கொம்பே முடியுனக்கு, சுக்ரீவா! தெரிந்து கொள்க!அயற் கொள்கை தமிழ்நாட்டில் பரவுதற்கு அனுமனுடன்கூடிக்கொண்டு அண்ணனையும் சாய்த்து விட்டாய்!தம்பியெனும் இலக்கணத்தின் விதிவிலக்கே!நம்பிக்கைத் துரோகி! உந்தன் ரத்தத்தில் உணர்வு இல்லை!தும்பிக்கு மலரிடத்தில் இருக்கின்ற பற்றுகூடத்தூய தமிழ்நாட்டின் மீதுனக்கு இல்லையென்பேன்.நாடாள வேட்கையென்று அண்ணனிடம் கேட்டிருந்தால்தாராளமாய்த் தந்துவிடும் தங்கமன்றோ என் கணவர்!போராடிப் பெறுவதற்கும் திறனில்லாக் களக்கோழை!தேர் போன்ற பேரரசின் சாரதியாய் அமர்ந்து விட்டாய் -தூ தூ! வெட்கம் - வெட்கம்!துணிவிருந்தால் தூக்கு வாளை!தோகையெந்தன் எதிர்ப்புக்குப் பதில் சொல்லி நாட்டை ஆளு!தொடை நடுங்கி அனுமன் எங்கே?"எனக் குமுறும் தாரையிடம், இழிகுணத்தான் சுக்ரீவன்"படைநடுங்கப் போர் புரியும் மாவீரன் மனைவியெனினும்இடைகுலுங்க நடை காட்டும் பெண்தானே நீ!அறையில்"அடைகாக்கும் பெட்டைக்கு அம்பலத்தில் வேலையில்லை-போ போ!" என்றான்."ஆரையடா சொன்னாய் அது?" எனக் கிளம்பித் தாரை,"அனற்பிழம்பாய் வார்த்தைகளைக் கொட்டலானாள்;"அடைகாக்கும் பெட்டையின் முட்டைக்குள்ளிருந்து வந்த
சேவற்குஞ்சே! செயலற்ற ஆண்மகனே!சிறு நரியே! சிற்றெறும்பே!தாய்க்குலத்தை இகழ்வதற்குத் தடித்த நா படைத்தவனே!நாய்க் குலத்தின்பால் நன்றிக்குப் பொருள் கேட்டுத் தெரிந்து கொள்வாய்!நடைகட்டு இப்போது இதைவிட்டு எனப் பாய்ந்தாள்!உன் கொட்டத்தை அடக்குதற்கு ஆளில்லை எனத் துணிந்தாய்!பட்டத்து ராணியென மரியாதை பார்த்தால் அதைப்பயமென நினைத்தாய்!சட்டத்தின் துணை கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தாய்-துட்டப் பெண் உன்னைச் சிறையினிலே போட வேண்டும்-உடன் ஆகட்டும் காவலரே வேலை!" என்றுஉற்கை விழியிரண்டாலே உத்தரவு தந்திட்டான்.
"நிறுத்தடா தம்பி! நிலமாளப் புதிதாக வந்தவனே!உலுத்தையென எண்ணிவிட்டாய் பெண்ணை-சிறுத்தையெனப் பாய்ந்திடுவாள் அறிவாய்!கருத்தமலைக் குகையினிலே என்னைப் பாறைக்கதவாலே மூடிவிட்டோம் என்று களிப்பாலே துள்ளுகின்றாய், நன்று!கனவல்ல தம்பி இது; நான்தான் உன் அண்ணன்-காலஞ்செல்லாத கிட்கிந்தை மன்னன்ஆனையும் அனுமனும் அன்புள்ள தம்பியும்அடைத்திருந்த பாறைதனை உதைத்தெறிந்த விதந்தன்னைக்காட்டுகின்றேன் பாரீர்!" என்று கர்ச்சித்து உள் நுழைந்தான் வாளி மன்னன்.அண்ணனைக் கண்ட தம்பி, அனுமனுடன் மறைந்தோடிஆவி பிழைத்தோமென்று அடவியிலே திரியலானான்.அங்கொருநாள் .மனைவிதனைப் பறிகொடுத்த இராமன் எனும் "மாவீரன்"இலக்குமணத் தம்பியுடன் இளைப்பாற வந்தபோதுஇளநீர்கள் பரிமாறி உபசரித்தான் சுக்ரீவன்
"இருடிகளின் மனையென்றால் இனிய பானம் கிடைத்திருக்கும்.இருக்கட்டும் பரவாயில்லை." யென அருந்தினான் இராமபிரான்.பின்னர்,"இளங்கொங்கைத் துடியிடையாள் என்மனைவி - காமக்களம் புகுந்து வெற்றி காணும் கட்டழகி!சோம போதையிலே காணுகின்ற சுகமனைத்தும், அவள்பார்வையிலே காண்பதற்கு இயலுமென்பேன்!சீதையெனும் பேருடையாள்! செந்தாமரை மொட்டு தனம்!அவளில்லை இப்போது என்னிடத்தில்இருக்குமிடந்தேடி என்பசிக்கு அவளை இட்டுவரத் துணைவேண்டும்"எனக் கேட்டான்."துணை தருவோம் - படைதருவோம் - ஆயின் ஒன்!இணையில்லாப் போர்வீரன் என் அண்ணன்-வாட்போரில் மற்போரில் ஈடில்லை அவனுக்கு!வாளி எய்வதிலும் ஆளில்லை அவனை வெல்ல! அதனாலேவாளி யென்னும் சிறப்புப் பெயர் பெற்றோன்!வஞ்சகமாய் அவன் உயிரைப் போக்குதற்கு மார்க்கம் சொன்னால்வந்துவிடும் அவன் நாடு என் வசமாய்-அதன் பின்னர் உதவுகின்றேன்" எனச் சொன்னான் சுக்ரீவன்.திருநாட்டைப் பறிப்பதற்கு வகுத்தார்கள் சூழ்ச்சித் திட்டம்;இருள் மனத்தான் சுக்ரீவன் எழுந்து விட்டான் கிட்கிந்தைக்கே!அருள் முகத்தான் வாளிமன்னன் அமளிதன்னில் ஆருயிரின்சுருள் கூந்தல் வருடிக் கொண்டு சுகங் கண்டான்.வெளியே.பொருள் புரியா ஒரு கூச்சல்:"பொருதற்கு வருகின்றாயா?"என ஒலிகேட்டுப் படுக்கை விட்டு எழுந்த புலி,எதிர்நின்ற தம்பி கண்டு வியப்படைந்தான்!
அண்ணனின் பலமனைத்தும் அறிந்த தம்பிஅச்சமின்றித் தோள் தட்டி வருதல் கண்டு,ஐயத்தால் அரசி நைந்தாள் . ஆயின் என்?வீரனைத் தடுப்பதோ? விடைகொடுத்து அனுப்பி வைத்தாள்.விழியெல்லாம் நீர் பெருக வீழ்ந்து விட்டாள் பஞ்சணையில்!"மற்போரோ, விற்போரோ, வாட்போரோ?" எனக்கேட்ட மன்னனிடம்"மற்போரே வேண்டு" மென்றான் சுக்ரீவன்;இருமலைகள் மோதுதல்போல் மோதிக் கொண்டார்-இடியெனவே இருவருமே முழங்கலானார்!நொடிப்பொழுதில் போர் முடியும் எனக் கணக்குப் போட்டு விட்டான் வாளி மன்னன்!கையினிலே தம்பிதனைத் தூக்கி வைத்துக் கரகரவெனச்கைப்பந்தானான் வாளிக்குச் சுக்ரீவன்!சுழற்றி விட்டான் கணப்பொழுதில் உயிர்போகும் -வெற்றி, வாளிக்கே என்ற நிலை.மரப்புதரில் ஒளிந்திருந்த மாவீரன் ராமன்.வாளி மார்பகத்தில் குறி பார்த்து ஓரம்பு வீசஅணையுடைத்து எழுநீத்தம் போல அணி மார்பில் ரத்த வெள்ளம் பாய-நிலம் வெடித்துக் கிளம்புகின்ற நீரூற்றுப் போலநெஞ்சில் எழுகின்ற குருதியூற்று மேகத்தில்மோத;"ஆரடா மறைந்திருத்து தாக்கிய வீரன்?ஆகாகா ராமனோ? தர்மத்தின் தூதனோ?பாரடா தமிழ்ரத்தம் பாய்வதை மண்ணில்!ஏனடா திரிகின்றாய் வீரனாய் வீணில்?விழுப்புண் படுதலே வீரம் - அந்தச்செழிப்பில் உயர்வதே மானம்- மானம் பெரிதென்பவன் தமிழன்அதை மறுப்பவனெல்லாம் பகைவன்!பகைவனுடன் உறவாடும் தம்பி - அவனைப்பகுத்தறிவு உலகம் பாராது திரும்பி!....
உளுத்த வில்லை முறித்ததனால் புகழ் பெற்ற வீரன்!உத்தமியை மீட்பதற்குத் துணை தேடும் தீரன்!வெளுத்ததெல்லாம் பாலெனவே நம்புகின்ற தமிழர் - சிலர்இருத்தலினால் நடமாடும் சூரன்!எதிர் நின்று போர் புரியும் ஆற்றலில்லாக் கோழைபதர் நின்று நெல் அழிந்தால் பயன்தருமோ வாழ?நான் மாண்டு நீயிருந்தால் பரவிடுமோ வீரம்?"எனக் கேட்டான் வாளி மன்னன்-முரசறைந்தான் கேள்வியாலே!முடிப்பதற்குள் வீழ்ந்து விட்டான் பிணமாக!
செய்தி பரவியது - செந்தீ பற்றியதுசெந்தாமரையாள் தாராதேவி வீழ்ந்தாள் வந்து!"மன்னவரே! தழுவுதற்கு நானிருக்கமண்மாதைத் தழுவினீரோ?" என அழுதாள்; ஓலமிட்டாள்:ஓடுகின்ற குருதி ஆற்றைக் கண்ணீரால் வென்றாள்-கணவனுடன் சென்றாள்!தமிழ்நாட்டுப் பண்பு கண்டான்-தலைகுனிந்தான் ராமன்!

மூலமும் சான்றும்