கவிதை 3 / 77
இந்திரஜித்
Indrajit
இந்திரஜித்
மண்ணெலாம் வீரம் துள்ளும் - மாதர்கண்ணெலாம் கற்பு சொல்லும்;விண்ணிலே ஏறுகின்றகொடி நிழல் பகையை வெல்லும்; நாட்டுப்பண்ணெலாம் மானம் காட்டும்எண்ணிலாத் திறம் முகிழ்க்கும் மறவர் கோட்டம்-வெண்முகில் குடைபிடிக்கும்பொன் சுவர்க் கோட்டை மீதுதண்ணென முத்தமிட்டுத் தடங்கடல் தவமிருக்கும்இன்னுயிர் பெரிதேயல்ல இங்கு வாழ் மக்களுக்கு!மன்னுயிர் காப்பதுவே மாத்தமிழர் இலக்கணமாம் எனக்கூறும்தென்னிலங்கைப் பெருங்குடியின் வழிகாட்டி;தன்மானச் சுடர்விளக்கு - தமிழர் தலைவன்;எந்நாளும் புகழேட்டில் வாழுகின்ற இராவணன் காண்!மின்னலிடைப் பெருந்தேவி மண்டோதரி அவன் மனைவி-இருவரும்கன்னல்மொழி கேட்பதற்கு மகவொன்று வேண்டுமென்றுகடுந்தவங்கள் இயற்றாமல், கங்கையிலே ஆடாமல்,கனியொன்றைப் படைத்திட்டார் கட்டிலறைக் கவிபாடி!காதல் அருவியிலே கண்டெடுத்த புதுமலரை -ஆணழகைக் - களிப்புக் கடலாழ்ந்து பெற்றெடுத்தநித்திலத்தைக்
கண்ணொற்றி மகிழ்ந்திருந்தார்;கவலைகளை மறந்திருந்தார்.மாணிக்கமிழைத்த தொட்டில்மகவின் கால்பட்டு நொறுங்கிப் போகும்;மறுநாளே திருநாள் உண்டு - மகன்காட்டும் வீரம் கண்டு!உமிழ்கின்றான் வாய்நீர் என்றால் - அதனைஅமிழ்தென உண்ணுகின்றார் அன்னை தந்தை!தவழ்கின்றான் கூடத்தில் -பின்னே தமிழ்பாடித்தொடர்கின்றான் பெருவீரன்;"அகழ்கின்ற நிலந்தனிலே ஆணிப்பொன் மணிக்குலத்தை-எடுக்கின்றார்;புகழ்கின்ற குறளைப்போல் ஓர் குழவிக் கீடாமோஅவையெல்லாம்?இகழ்கின்றார் இல்லறத்தை இளித்தவாயர்! என் சொல்வேன்அவர் அறிவை!மகிழம்பூப் பிள்ளை தரும் பேரின்பம் மறுக்கின்றகாவியமும் இலக்கியமும் கள்ளி என்பேன்!கவைக்குவதவாக் காட்டுச் சுள்ளியென்பேன்!முக்கனியின் கூட்டன்றோ குழந்தை முத்தம்-முத்தமிழின் சுவையன்றோ அதன் முறுவல்!''எனக்கொஞ்சி, வஞ்சிதனை அணைத்துக் கொள்வான்."பார்க்கின்றான் குழந்தை" யெனப் பாவையும் விலகிக்கொள்வாள்'கோக்கின்றான் முத்தெடுத்துச் சிரிப்பாலே!' எனச் சொல்லி, 'உன்வாக்குண்டாம். நல்ல மனமுண்டாம், வாடா என் கண்ணே!"என்று கணைகளால்தாக்குண்ட தழும்பு மார்பில் தங்கத்தைத் தழுவிக்கொள்வான்.நுரைகடலில் பருவநாளில் உயர்கின்ற அலையைப் போலேதரைமீது காலூன்றித் தாவிப் பாய்ந்தான்.தளிர்மகன், மலை முகில் பிடிக்க என்று
குளிர்மொழி சிந்தி நின்றாள் - கோப்பெருந்தேவியவள்!"வேகங்கொள் வீரனுக்குப் பிறந்த செல்வம்காகம் போல் கோழிபோல் வாழ்ந்திடுமோ?-'மோகங்கொள் உயிர் மீது' எனச் சொன்னால் கேட்டிடுமோ?சாகவே அஞ்சாது பாய்ந்திட்டான் வெண்முகிலின் மேலே!ஆகவே அவன் பேரை மேகநாதன் என்பேன் இனிமேலே!"இலங்கைத் திருநகரின் இளவலுக்குப் பேர் சூட்டும் திருநாள்-சதங்கை ஒலிக்கின்ற மயிலினங்கள் ஆட்டமுடன் நடைபெற்றஅந்நாளில் எழில்மகனை அணைத்துக் கொண்டுஇந்நாடு ஆளவந்த குலவிளக்கே வாழ்கவென்றுவடித்து நின்றான் இன்பக்கண்ணீர் சிரித்து நின்றார் மாதரெல்லாம்;பெருநாள்!பாளை தெறித்ததுபோல் படித்து நின்றார் இளவலின் முகத்தினிலேவீரத்தை - மறவ ரெல்லாம்!மணவீட்டில், 'பாலி'யிலே வளர்கின்ற தானியம்போல்மளமளென வளர்ந்திட்டான் மேகநாதன் மண்மீதொருமலைபோல!இரட்டிப்பாய் எட்டாண்டு முடிவதற்குள் அடவி சென்றுஇருசிங்கம் பிடித்து வந்து மாளிகையில் நாய்போலக்காவல் வைத்தான்!இருபதாம் ஆண்டினிலே இரும்புத்தூண் ஒன்றை ஒரே கையால்உடைத்துப் போட்டான்!இலங்கையிலே பகைநுழையா அரண் அமைத்தான்.இலக்கியத் தமிழுக்கு எழிலான மன்றம் கண்டான்.அப்போது, இந்திரனாம் தேவமன்னன் இவனோடு போரிட்டுத் தோற்றதாலேஇந்திரஜித்தனெனும் பெயருக்குத் தகுதியானான்."இனியவளே! என்னமுதே! நம்மகனின் பெருமைகளால்இதயத்தில் புது எழுச்சி! புது உணர்ச்சி! புது இளமைதிரும்புதடி -
கனிமொழியே! அதன் நினைவாய்ப் பழமுத்தம் தந்திடடி!-தனி நின்றால் தாங்கவில்லை காதல் தொல்லை!" எனக்சொல்லிக்கண்டுவிட்டான் முல்லைப்பல்லை! தமிழ்க்கொல்லைக்காவலனாம் இராவணனைத் தழுவி நின்று;''என்னுயிரே! அத்தானே! ஒன்று சொல்வேன்;வண்ணமலர் முதிர்ந்தபின்பு பழமேயாகும் -அந்நிலையை நோக்கித்தான் நடக்கின்றோம் நாமிருவர்உண்மையன்றோ?வெண்ணிலவுக் காலந்தன்னில் நாம்பட்ட பாடுகளைஎண்ணிக் கொண்டுதண்ணமுதாம் மகனுக்குக் காதல் துணையொன்றைக்காலத்தில் நாடுதலே நலமாகும்" எனச் சொன்னாள்வண்டமரும் பூங்குழலாள் மண்டோதரி! அதுகேட்டு இராவணன்'ஆம்' என்று தலையசைத்தான் - ஆனாலும் விடவில்லை -அன்றிரவை இருவருமே வென்றிருந்தார்;உதயத்தின் ஒளிபட்டு எழுந்திருந்தார் - அந்தச்சமயத்தில் ஓர் தோழி ஓடிவந்தாள்;மாம்பழப் பெண்ணொருத்தி மேகநாதன் மாளிகையில்ஆம்பற்கொடி போல நாணமுடன் நிற்கின்ற சேதிகேட்டார்!அதிசயத்தால் திகைத்துப்போனார் பெற்றோர்கள் - ஆனாலும்அதிரசத்தைச் சுவைப்பதுபோல் மன்னன் மகிழ்ந்து,"ஆருயிரே! நீ போய்ப் பார்த்துவா உன் மருமகளை! அவள்தார்வேந்தன் மகளோ? - தளிர்க் கொடியோ?கார்குழலாளேர்? - நம் கண்மணிக்கு ஏற்றவளோ?என்பதெல்லாம் அறிந்துவா ஓர் நொடியில்" என்றான்.அவள் சென்றாள் - பின்வந்தாள்!"என்னடி கண்ணாட்டி! பொன்னடி பூமியில் படாமல் பறக்கின்றாய்?சொல்லடி சுவைத்தமிழே!'' எனச் செவிநீட்டித் துடித்திடும்ஆளனிடம்
உள்ளது உள்ளபடி உரைப்பதற்கு முன்வந்தாள் இலங்கைராணி,"சந்தன மரங்கடைந்து சிலைசெய்து,வெந்தழல் நிறமெடுத்து இதழ்பொருத்தி,இந்திர வில்லனைய புருவத்தின் கீழ்எழில்நீல மணியிரண்டை இமைக்குள் பதித்துச்,செந்தமிழ் மணக்கின்ற திருவாயை அசையச் செய்து,சந்ததம் புகழ்பாடும் பான்மையிலே உயிரூட்டிக் கொண்டுவந்தஅற்புதமாம்?அழகரசி! அமுதமொழி! அன்புமொழி!பழகுதமிழ்ச் சுவடியிலே வார்த்தையில்லை உவமை காட்ட!ஒன்று சொல்வேன்.
[Large reclining-figure illustration]
பதறாதீர் அதனைக் கேட்டுப் - பகைவனின் புதல்வி அன்னாள்!சிதறாமல் சிந்தாமல் நம்செல்வன் எடுத்துவந்த செந்நெற்கதிர்!நம்மைப்படைகொண்டு எதிர்த்துப்பார்த்து உயிர்தப்பி ஓடிவிட்டநாகன் மகள்!அவள் பெயர் சுலோச்சனையாம் - சுவைநிறைந்தபலாச்சுளையாம்! ஓர்நாள்
மணிமாடச் சோலையோரம் மங்கைநல்லாள் உலவுங்காலைபணியாரம் பார்த்துவிட்ட பூனைபோல் மேகநாதன் அங்குசென்றான்!தணியாத காதலாலே தவிக்கின்றேன் அன்பேயென்று,யார்க்கும் பணியாத தலைதாழ்த்திக் காதற்பிச்சை கேட்டு நின்றான்!''துணியாத காரணத்தால் முதலில் நான் துவங்கவில்லை-தூயவரே, உமது பேர் கேட்டுப் பலநாள் நான் தூங்கவில்லை.புலி நகம் அணியாத என் கழுத்தைப் பாரும் உடன் அதைக் கொண்டு வாரும்!இனி யாரும் எனக்கு வேண்டாம் இந்த அன்பிருந்தால் போதும்'' என்றாள்!உங்கள் மகன் சிங்கமன்றோ!பொங்கும் வேங்கைக்குப் பூனையா பிறந்துவிடும்?தங்கம் பெயர்த்தெடுத்துத் தோள்மீது தூக்கிக் கொண்டான்அங்கமெலாம் குளிரேற அவளுமே தொத்திக் கொண்டாள்;மங்கையுடல் தந்திட்ட புதுப்பலத்தால் நாகநாட்டுமதிற்சுவரைத் தாண்டி விட்டான்!நங்கை அவள் சொன்ன கதை இதுதான் மன்னா, அறிக" என்றாள்;அகமகிழ்ந்தாள்!கொடுங்கைத்தேர் பவனி வரும் வீதிகளில் விழாவெடுத்துஇலங்கைத் தீவின் மருமகளாய்ச் சுலோச்சனையைஆக்குவதே நலமென்றான் இராவணனும்;அவளும் நன்றென்றாள்!"திருப்பித்தா என்மகளை!" எனக்கேட்டு நாக நாட்டான்கிறுக்கிவிட்ட ஓலைதனைக் கிழித்துப் போட்டான் மேகநாதன்"அறுக்கின்றேன் அவன் தலையை" என சொல்லிப்பழியேற்றுக் காத்திருந்தான் நாகமாமன்!இந்நிலையில் இராவணனை அழிப்பதற்கு இழி சூழ்ச்சிமேற்கொண்டார் வடவாரியர்கள் - திராவிடனைத்தீர்த்துவிடத் திரைமறைவில் சதிக்கூத்து!
புறாவினம் போலிருந்து பொல்லாத கழுகாக மாறிவிட்டான் ஓர்தம்பி -அனுமன் எனும் ஐந்தாம்படையொன்றை அனுப்பிவைத்தஇராமனுக்குஅறிவு புகட்டுகின்ற வழி கண்டான் மேகநாதன்!தீயிட்டு நகர் அழிக்க முயன்றவனின் வால் நறுக்கித் தோலைப்பதம்பார்த்து ஓட்டிவிட்டான்!தாவிற்றுத் துரோக வெள்ளம் இலங்கை மீது!....'காவிற்கு அழகில்லை பூவின்றி!பாவிற்கு அழகில்லை பொருளின்றி!
நாவிற்கு அழகில்லை நயமின்றி!அதனாலே இராமனிடம் இறங்கிப் பேசல் நலம்" என்றான்.குகனோடு ''எழுவரான" கொடிய வீடணன்! அது கேட்டு"நாகாக்கும் இலக்கணத்தை நன்றுரைத்தீர் சிற்றப்பா!நாடு காக்கும் போர் மூண்ட பின்னர்நம் தலைகாக்க மண்டியிடல் மரபல்ல - மானச் செயலல்லநடப்பீர்" என்றான்நடுக்கமிலா உளங்கொண்ட மேகநாதன்.துடுக்குமிகு வடநாட்டார் துவங்கி விட்டார் போராட்டம்!இடுக்கண் வருகின்ற நேரமெல்லாம் நகுகின்றஇந்நாட்டுப் பெருமக்கள் குதித்து விட்டார் சமர்க்களத்தில்;உடன்பிறந்தே கொல்லுகின்ற பிணியாக வந்திட்ட தம்பிசெயல்திடங்கொண்ட இராவணனின் சிந்தையெலாம் கலக்கிற்று;''புடம்போட்ட பொன்னே! நான் பெற்றெடுத்த கண்ணே!போருக்கு அனுப்புகின்றேன் உன்னை!போய்வா மகனே''என்றான்.''தினவெடுத்த தோளுக்குக் கிடைத்தது தீனி!தீயவர்க்குக் கட்டுவோம் சாவூர் ஏணி!''எனமுழக்கி எழுந்து விட்டான் காளை- என்றான்."தாய்நாடு காப்பதற்குத் தலைதருவேன் - பகைநாட்டுநாய்நுழைய வழிதிறக்கும் பாவிகட்குப் பாடம் சொல்வேன்!வருகின்றேன் என்றன் தாயே! வழியனுப்பி வையம்மா!தருகின்றேன் வெற்றிச் சேதி" - எனக்கூறிப் பறந்து போனான்.எதிர்ப்பட்டாள் அவன் துணைவி;புறப்பட்டேன் போருக்கென்றான்!"அரையாண்டும் முடியவில்லை மணவிழா நடந்து-தரையாண்டும் போதாமல் கடலாண்டு வருகின்ற மன்னர்மகனே! காதல்கரை தாண்டும் வழியின்றித் தவிக்கின்ற பேதையிடம் -போர்ப்பறை யாண்டு முழங்கிற் றென்றுபயணம் கூறல் நியாயமோ? சொல்க!" என்றாள்.
"விழுதுபோல் கண்ணீரைச் சிந்துவது அழகல்ல! வில்லால்உழுது வீரம் விளைக்கின்ற பரம்பரையில் பிறந்து விட்டோம்:தொழுது வாழ்வது அறிஞரையன்றிப் பகைவரையல்ல!பெண்கள்அழுது தடுப்பது ஆண்களின் கள்ளத்தையன்றிக் களம்புகுநிகழ்ச்சியையல்ல!பழுது வருவது உடல் பொருள் ஆவிக்கேயன்றிப் பழந்தமிழ்ப்பண்புக்கல்ல!பொழுது விடிந்ததும் புறப்பட விடை கொடுத்திடு" என்றான்,போர் முகங் காணத் துடித்திட்ட வேங்கை!
"கொடிபோல எனை வளைத்துத் தோளில் போட்டுநெடியமதில் தாண்டும் போதும் அஞ்சவில்லை - நாளைவிடிவதை நினைத்தால் ஏனோ குலுங்குகின்றதத்தான் உள்ளம்?அவள் அழுதாள்! அவன் சொன்னான்:"இடியோசை கேட்கும் மழலை, கைகொட்டிச் சிரிக்கும் நாடு!'முடியாமை' என்ற சொல்லை அறியாத தமிழர் நாடு - இதைப்படியாமல் பேசலாமோ, பைங்கிளியே! என்னை உன்றன்மடியில் போடு"
ஆறுதலாய் அஞ்சா நெஞ்சன் உதிர்க்கின்ற வார்த்தைகளால்,தேறுதல் அடைதற்கு வழியின்றித் தவித்த பெண்ணாள்ஏறு தழுவும் அவன் மார்பில் எழில் மலராய் ஒட்டிக் கொண்டாள்"ரத்தச்சேறு படிகின்ற திண்மார்பில் முத்தமிடு" எனக் கேட்டான்;ஒன்றிரண்டு நூறாகப் பொழிந்து விட்டாள் முத்தமாரி-ஒளிந்திருந்த சந்திரனும் எட்டிப் பார்த்தான்-இணையில்லா வீரன் இந்திரஜித்தன் வெட்கிப்போனான்!
போருக்கு வருகின்றான் எனக் கேட்டார்."அணையில்லா நதி போல வருவானே" என்றார். "அவன்தேருக்குச் சாரதி நம் ஆள்தான்!
வீணுக்குப் பயம் வேண்டாம் விட்டொழிக!ஊருக்குள் போய் வருவேன் ஒற்றனாக!" எனக்கூறிஒளிந்து சென்றான் வீடணனும்!
"நெற்றி சுருங்காமல் நீல விழி கலங்காமல் நெடும்பகையைவெற்றி கொள்வீர் அத்தான்!பெற்றி நிறை தாயகத்தின் பெரும் நிதியே!கற்றறியா மூடர்கள் கைவரிசை காட்டுதற்குப்புற்றீசல் போல் புறப்பட்டு வருகின்றார் - என்கொற்றவனே! குலப்பெருமை காத்திடுவீர்!" எனப்போர்க்கோலம் பூண்டுவிட்ட வீரனுக்குத்தார் சூட்டித் திலகமிட்டாள்! வாழ்த்தி நின்றாள் வடிவழகிசுலோச்சனா தேவி!!
"இத்தரை மீதினில் எத்தரைப் புகவிடேன் - என்பத்தரை மாற்றே! முத்திரை ஒன் "றெனப் பெற்றுச் சென்றான்!
"நிகும்பலை என்னுமிடம் நெடியதோர் பாசறைகும்பலை அழித்திடும் கருவிகள் உண்டு!இந்திரஜித்தனின் பெரும்படை அதுதான்;தந்திரமாய் அதைத் தகர்த்திட வேண்டும்" இதைவீடணன் சொன்னான் வீணர்கள் முகாமில்!
ஆடினார் அனைவரும் ஆனந்த மிகுதியில்!போர்ப்படையுடனே புலிநிகர் தமிழன்புகுந்தான் நிகும்பலைப் பாசறை தன்னில்!யார்க்கும் தெரியாக் கருவிகள் எல்லாம்எடுத்தான் - கொடுத்தான் வீரர்கள் கையில்!ஆர்த்தது முரசம் பாசறை வெளியே!அதிர்ந்தது பாசறை எதிரிகள் வரவால்!குகைக்குள் திடுமெனச் சிக்கிய வீரன் - எரிமலைப்புகையைக் கக்கினான் சினந்தே!எங்கணும் எதிரிகள் சூழ்ந்தனர் அங்கே அங்கு நம்"சங்கையிலா என் சிற்றப்பன் செய்திட்ட வேலை இது!துரோகப் பங்கை முடித்திட்டான் - துணிக்கின்றேன் அவன் தலையை!"
சுழலும் வாளாய்ச் சுற்றினான் தேரில்!அழல் போல் கண்கள் தோற்றமளித்திடஆயிரம் ஆனை பலமுடன் எதிர்த்தான்கோபுரம் ஒன்று நடப்பது போலக்குன்றம் ஒன்று அசைவது போலப்புயலெனச் சீறிப் பொங்கு கடலாய் வந்தான்-கயல் விழி மாதிடம் கனிவு பேசிடும்கண்களோ அவைகள்?அயலவர் மரபை அறவே அழித்திடும்அனற்பொறி அவைகள்!தங்கச் சிலையைத் தழுவிடும் கரமோ?தருக்கர் தலையைக் கொய்திடும் கரமாம்!எங்கும் அவனே; எதிலும் அவனே!கங்குல் கிழிக்கும் கதிரும் அவனே!போர் முடித்து இராமனின் தலையறுக்கும் நேரம்தேர்ப்பாகன் சதியும் தொடங்கியது உடனே!சக்கரங்கள் அச்சாணி காணவில்லை - அக்கணமேதேட்டு சாய்ந்து வீழப் பதறிப் பாய்ந்தன குதிரைகள் நான்கும்!சிதறித் தெறித்தன கடைக்கால் முழுதும்!வஞ்சகத்தில் வீழ்ந்து விட்டான் மேகநாதன் -நஞ்சுமன வீடணனும் அவன் கை நறுக்கி விட்டான்.சிற்றப்பன் செய்திட்ட துரோகத்தை எண்ணிடவும்நேரமில்லை... இருகரமும் ரத்தப் பிரவாகமுடன்யுத்தம் செய்தான்!ஈட்டிதனை வாயில் கௌவி எதிரிகளை வாட்டுகின்றான்கூட்டமாகப் பகைவரெல்லாம் குழுமி விட்டார்இருகரமும் இழந்த நிலையில்பரபரவெனப் போராடும் ஆற்றல் தனைப்பகைவரும் போற்றுகின்றார்-பாவி வீடணன் ஒருவன் தவிர!குமரன் முன்னே!
வேலாலே கணையாலே பகைவீழ்த்த முடியாமல்காலாலே தலையாலே பலர் உயிரை மொண்டு விட்டான்!
போர்க்களத்தில் அத்தானின் கை அறுந்ததெனப்பூங்கொடியாள் சுலோச்சனையும் தெரிந்து கொண்டாள்-"தாவி அணைக்கின்ற கரமெங்கே?பாவிநான் எப்படித்தான் காண்பேனோ அத்தானை!"எனப் புலம்பி ஓடி வந்தாள்;தனியொருவன் ஆயிரம்பேர் நடு நின்றுதமிழ்வீரம் காட்டுகின்ற காட்சி கண்டாள்:"அத்தான்!" என்றாள் - "அன்பே" என்றான் - சற்று அயர்ந்தான்!அப்போது இலக்குவனாம் பெருங்கோழைதப்பாது கணையொன்றைத் தொடுத்து விட்டான் -"தாய்நாடு வாழ்க!" எனும் ஒலியோடுபாயில்லாக் கலம்போலப் போர்க்களத்தில் அசைந்தான்எப்போதோ பழிநினைத்த இழிகுணத்தான் நாகநாட்டான்இப்போது தீர்த்துக் கொண்டான் தலையறுத்துப் பழைய வஞ்சம்!"பைந்தமிழர் பொன்னேட்டில் இடம் பெற்றேன்;பைங்கிளியே வருகின்றேன்!" எனக் கூறித்தலைமட்டும் அவள் கையில் விழுந்துவிட...விலைமதியா இரத்தினமாம் சுலோச்சனையும் செத்து விட்டாள்!"எனக்கு வேறு உயிரில்லை போரில் இழப்பதற்கு" - எனக்கூறிச் சாய்ந்து விட்டான் இலங்கை வேந்தன்-ஆஎன் இறந்த பின்னர் இறப்பதற்கு மட்டுந்தான்நீள் இமையைத் திறந்திட்டாள் மண்டோதரி!
✤