கவிதை 25 / 77
வையம் தழைக்க
For the World to Flourish
வையம் தழைக்க
13.4.73 அன்று சென்னை வானொலியில்‘வையம் தழைக்க வாழ்த்துவோம்’ என்ற தலைப்பில்புத்தாண்டு நாளில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை உரை.
அன்பால் அறநெறியால்கல்வியால் உழவால்தொழிலால் கலைப்பெருக்கால்வையம் தழைக்க வாழ்த்த வந்தீர்வாழ்த்துகின்றேன் உம்மை நானும்!அன்பு - ‘ஆல்’அறநெறி - ‘ஆல்’கல்வி - ‘ஆல்’உழவு - ‘ஆல்’தொழில் - ‘ஆல்’கலைப்பெருக்கு - ‘ஆல்’ஆறுதலைப்பும் ‘ஆல்’ என்று முடிவதனால்‘ஆல்’களின் நடுவே நானோர் அரசானேன்!ஆலமரங்களின் நடுவே அரச மரமானேன்.வருடப் பிறப்பின்...
வருட.... பிறப்பு....வல்லியவள் உடல் வருட உடன் ஓர் பிறப்பெனிலோமெல்லியலாள் ஒல்லியாவாள்.....வருடம் பிறக்கட்டும்... வையகத்தீர்வருடம் ஒன்று பிறத்தல் வேண்டாம்!பங்குனியை விரட்டி விட்டுச் சித்திரையாள் பந்தாடுகின்றாள்இங்கவளின் ஆட்டமெலாம் எண்ணி ஒரு மாதம்தான்எங்கிருந்தோ ஒருத்தி வருவாள் வை, காசியென்றுஆ, நீயா என்று வியப்பதற்குள் ஆடி முடித்திடுவாள்-!திங்கள் தொறும் இந்தச் சதிராட்டம் தொடர்ந்துசெங்கமல இதழ்கள் போல் ஆண்டு உதிரும் பின் மலரும்!புத்தாண்டு இதுவென்போம் புகழ் தொடுப்போம்பத்தாண்டு காலத்திற்கு முன் நான் சிறைப் பறவைபல்கவிதை, நூல்கள் எலாம் எழுதுதற்கு அங்கே நிறைய நேரம்;இன்றோ நான் கொட்டில் மாடுபோல் கிடக்கின்றேன்;நன்றோ எனை இழுத்துக் கொம்பு சீவி இங்கெல்லாம்நிறுத்துவது?வானொலியாரைத்தான் கேட்கின்றேன்? ஏனய்யாவாய் திறக்க மறுக்கின்றீர்?கட்டாமல் விட்டாலும் இது கண்ணியம் தவறிமுட்டாத மாடென்ற துணிவுதானே உமக்கெல்லாம்?பரவாயில்லை-தட்டாமல் வந்திடுவேன் தமிழ்த்தீனி கண்டால் என நம்பித்தலைமை ஏற்க ஆணையிட்டீர்! நானோர் தும்பிதேன் வெள்ளம் கரை புரளும்திருமலியும் தமிழ்ப்பூக்கள் மணம் பரப்பும்ஊன் உள்ளம் எல்லாமே உருகும் வண்ணம்உலகத் தமிழ் மறையின் ஒலி முழங்கும்“ஏன் பள்ளம்” வாழ்வினிலே எனக் கேட்டுஏழைகளைச் சிரிக்க வைக்க வழி பிறக்கும்
மான் துள்ளும் சீர்மை கண்டுமனமொடியும் வேங்கை வீழபேன் திரியும் தலையோ காடு? வறுமைப்பேய் விலக எழுந்ததே தமிழர் நாடு!எனச் சங்கம் ஊதுதற்குஇங்குற்ற இளங்கவிகள் பாடல் கேட்போம்.
அன்பால்...
அன்பால் வையம் தழைப்பதற்கே வழிகூறிஎன்பும் உரியர் பிறர்க்கென்றார் வள்ளுவனார்உன்பால் கொண்ட காதல் அன்பால் - உன்அன்பால்...என்பால் நீ தந்திடுக உன்னை என்றுபூப் பால் அருந்துகின்ற வண்டினம் சூழ் ஓா புதர்பால்காமத் தகிப்பால் - ஓர் ஆண்பால் ஓர் பெண்பால்பேசிடக் காணுகின்றோம்அன்புதான் அதற்கு அடிப்படை எனினும்அதனையும் மிஞ்சும் அருமைத் தாயன்பு!கட்டில் பூ ஒருத்தி தன் கட்டுக்குள் இருந்தவனைஎட்டிக் காயாக்கிப் போட்டதுடன் - எனக்கோர்காணிக்கை வேண்டுமென்றாள், என்னவென்றான்.சட்டியின்றி வேகவைத்த பணியாரம் போன்றாள்அட்டியின்றித் தருவாயோ பரிசு என நழுவினாள்கட்டிக் கரும்பே கேள் கண்மூடித் திறப்பதற்குள்தருகின்றேன் எனத் தழுவினான்.வெட்டி வந்து உன் தாயின் இதயத்தை என் கையில்வைத்திடுக என்றாள்? அவனும் சென்றான்.பெட்டிக்குள் மணிபோல் வைத்து மகனைக் காப்பாற்றும்
ரொட்டி போல் கொத்தியே கொண்டோடி வந்தான்;எட்டி வைத்த அடி சறுக்கிக் கீழே வீழ்ந்தான்.“பட்ட அடி பலமோ மகனே? அய்யோ!” என்றுவெட்டுண்ட தாயாரின் இதயம்வெட்ட வெளியில் கிடந்து அலறியதாய்க் கதை உண்டு.அஃதன்றோ தாயன்பு?தாயன்பு தனி அன்பு -தங்கக் கனி அன்புநாயன்பு கூடக் காட்டாத நல்லோர் சிலர்இருக்கின்றார் உலகில்! அவர் வாழட்டும் நன்கு.புண்ணில் சீழ் ஒழுகும் தொழு நோயர்க்குப்புண்ணிய திருத்தலம் கட்டுகின்றோம்கண்ணில் ஒளி மங்கிய ஏழையர்க்குக்காசின்றிப் பார்வை வழங்குகின்றோம்.மண்ணில் நிகரிலாக் கோயில்கள் அவைதான்பொன்னிலோ செம்பிலோ ஆண்டவன் இல்லைஅவன்புகலிடம் அன்பிலே இதனை அறிந்திடுவீர்.
அறநெறியால்....
அன்புதான் அடிக்கல் நாட்டல்;அறநெறி மாளிகை அமைப்பதற்கே!அண்ணல் காந்தியும் அவர் வழி நேருவும்அண்ணா வாழ்ந்ததும் அறநெறி காக்கவே!எண்ணத் தொலையா பேதங்கள் அகற்றிச் சமத்துவவண்ணக் கலாபம் ஆடிடச் செய்வோம்
உழுபவர்க்கு நிலத்தில் சொந்தம்உழைப்பவர்க்குத் தொழிலில் சொந்தம் - இந்தஉரிமைக் குரலைச் செயல்படுத்துகின்றோம்உண்மை அறநெறி வகுத்திடுகின்றோம்.உதட்டில் அறநெறி - உளத்தால் சிறுநரிஉலவுதல் காண்பீர் - ஒதுங்குதல் நன்றாம்.
கல்வியால்....
நாலைந்து ஆண்டின் முன்னே நாற்பத்து மூன்று கோடிகல்விக்குச் செலவென்றால்நலமுடனே கல்வி தழைப்பதற்கு இவ்வாண்டுநூற்றெட்டுக் கோடி தருகின்றோம்.தொடக்கத்தில் புத்தகத்தில் உலகத்தைப் படித்துவிட்டால்தொடர்ந்து நாம் உலகத்தைப் புத்தகமாய்ப் படிக்க ஏலும்தொல்லை பல தாங்கிக் கொண்டு பெற்றோரும் அரசினரும்தொகை தொகையாய்க் கல்விக்கு வழங்குவதைஎண்ணிப் பார்த்து (மாணவர்)எல்லைமீறிப் போகாமல் கிளர்ச்சிகளைத் தவிர்த்தல் சேவைஎதிர்கால ஒளிவிளக்காய்த் திகழ்தல் தேவை.
உழவால்...
அழமாட்டாக் குறையாக அன்றொரு நாள்அரிசிக்கு வரிசை நின்றநிலைமாற்றிப் போட்டவர்கள் உழவரன்றோ?அன்று நம் கிடங்கு நிலையோ அந்தோ பரிதாபம்!அதற்கெதிராய் இன்று ஐம்பத்தைந்து லட்சம் டன்அரிசி மட்டும் உற்பத்தி!ஆதவர்க்கு முன் எழுந்து உழைக்கின்றஉழவர் குலத்தவர்க்கு ஏதும் நேரா வண்ணம்காக்கின்ற அரசு இது.
தொழிலால்...
எழிலுடைய தமிழகத்தின் பகுதியெங்கும்தொழிலுடைய மக்களையே காணல் வேண்டும்.மழையின்றி மின் வெட்டுத் தொல்லை - அது நம்பிழையன்று! நூல்இழையன்றி நெசவாளர் துயரம் - விரைவில்வழிகண்டு இடர் தவிர்க்க முனைவோம்தொழிலாளர் நலம் பேணும் அரசாக மிளிர்வோம்.
கலைப்பெருக்கால்...
“தமிழன் என்றோர் இனம் உண்டு - தனியேஅவற்கோர் குணமுண்டு”நாமக்கல்லார் நவின்றது மறவோம்.நம் கலை, சிற்பம், காவியம் துறவோம்கலை தோய்ந்த நெஞ்சில்தான் - மக்கள்நிலை தோன்றும் - கருணை தோன்றும்இலை என்று சொன்னவுடன் - எதுவும்இலை என்று சொன்னவுடன் - ஏழையின்கண் காட்டும் ஏமாற்றச் சோகத்தைக்கலை காட்டும் உள்ளம்தான் புரிந்துகொள்ளும்!நிலையாட்சி இருப்பதற்கு - நெஞ்சில்கலையாட்சி இருத்தல் வேண்டும்.‘கலை ஆட்சி’ என்று கூவினாலும் - இந்தக்கலையாட்சி என்றும் கலையாத ஆட்சியாகக்காலமெல்லாம் நினைவில் நிற்பதற்கேகடற்கரையில் சிலையாட்சி காணுகின்றீர்!கல்லறையில் அண்ணா உறங்குவதும்கண்கலங்கப் பல்லாயிரவர் வணங்குவதும்
கலை உள்ளம் கண்ட படைப்பன்றோ?காவிரி புகும் பட்டினத்தில்கண்ணகி கதை கூறும் சிலைகளாலேகலைக்கூடம் கண்டதும் கலை நெஞ்சே!கடும் வேலை தலை நெறிக்கும் போதும் இந்தக்கவியரங்கத் தலைமைக்குத் துரத்தியதும் கலை வெறியே!காஞ்சி ஆண்ட மன்னவனும்கலை பயின்ற பல்லவனும் -தஞ்சை ஆண்ட சோழனும்-வஞ்சி ஆண்ட சேரனும்-கூடல் ஆண்ட பாண்டியனும்கோலமிகு கலைகளால்சீலமுற வாழ்ந்தனர்சிந்தையிலே நின்றனர்...கலை வாழ்க - தமிழ்மலை வாழ்க!கவி வாழ்க - இந்தப்புவி வாழ்க!எனக் கூறி அழைக்கின்றேன்அணி வரிசைக் கவிஞர்களை!
முதலில்,அரசு மணிமேகலைவெறும் மணிமேகலை என விளித்தால்துறவி மணிமேகலை எனத் தோன்றுமென்றுஅரசு மணிமேகலை என்றார்; இவர் தந்தை அரசுஎனக்கு மிக நெருக்கமாய் இருந்த நண்பர்-தரிசு நிலமாய் இருக்கின்ற உளம் திருத்த அன்புப்பரிசு வழங்க வருகின்ற மணியே வருக:
(கவிஞர் அரசு மணிமேகலை ‘அன்பால்’ என்றதலைப்பில் பாடி முடிக்கிறார்)
அடுத்து.அறம்பாட வருகின்றார் அன்பர் பொன்னடியார் - அவர்திறம் பாட நேரமில்லை!அவர் பாட நாம் மகிழ்வோம்:
(கவிஞர் பொன்னடியான் ‘அறநெறியால்’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)
அடுத்து,யான் பெற்ற இன்பம் வையம் பெறுக என்றுதான் பெற்ற கல்விதனைக் காட்டுதற்குவான் பெற்ற புகழோடு வருகின்றார் உசேன் புலவர்:
(கவிஞர் உசேன் ‘கல்வியால்’ என்ற தலைப்பில்பாடி முடிக்கிறார்)
அடுத்து.கழனியிலே உழைத்தால்தான்கதிர் விளையும் எனக் கூறிப்பழனியப்பக் கவிராயர் பாடுகின்றார்:
(கவிஞர் சாமிபழனியப்பன் ‘உழவால்’ என்றதலைப்பில் பாடி முடிக்கிறார்)
அடுத்து.எழிலாய்க் கவிதை ஆக்கும் தோழர்‘தொழிலால்’ என்று தொடங்கிடுவார்-கல்லை ஆ துரைப் புலவ!சொல் அய்யா ஓர் பாடல்:
(கவிஞர் கல்லை ஆ. துரை ‘தொழிலால்’ என்றதலைப்பில் பாடி முடிக்கிறார்)
இன்று பாடிய கவிஞர் துரைக்குநன்று திருமணம் நாளைக் காலையில்
சென்று வாழ்த்திட நேரமில்லை. அதனால்இன்றே வாழ்த்துவோம் அனைவரும் சேர்ந்தே!
அடுத்து;கலைப் பெருக்கால் கவிாட்டஅலைப் பெருக்காய்த் தமிழ்பாடஅழைக்கின்றேன் கபிலவாண:
(கவிஞர் கபிலவாணன் ‘கலைப்பெருக்கால்’என்ற தலைப்பில் பாடி முடிக்கிறார்)
முடிவுரை:
சொல்வதைச் செய்வோம்செய்வதைச் சொல்வோம்பொய்ம்மை தடுப்போம்வாய்மை வளர்ப்போம்ஏழைகள் சிரிப்பேஇன்பம் என்போம்எல்லோர்க்கும் எல்லாம்கிடைத்திட உழைப்போம்வையம் தழைக்கவறுமை தொலைப்போம்!
இதனைவருடம் ஒருமுறை பாடுதல் இன்றிவளையாப் பணியாய் வாழ்வினில் கொள்வோம்
வணக்கம்.