கவிதை 21 / 58
பண்பாட்டுக்கு ஊனம் எனில் பார்க்கவும் விரும்பார்!
Where Culture Is Maimed, They Would Not Even Wish to Look!
கட்டிளங் காளையாக இருந்த போதேகயவராம் சில பகைவர் மூட்டிய தீயில்
கணுக்கால் தீய்ந்து காவலையுற்று விடுபட்டவன்கல்லணையால் புகழ் பெற்றுக் காவிரிக்கும் கரை அமைத்தவன்
உறையூர் பூம்புகார் எனஒப்பிலாத் தலைநகர் இரண்டு
கொண்ட கொண்டலாம் சோழன்கரிகாலன் புதல்வி கட்டழகுச் செல்வி
ஆதிமந்தியார் அவளும் ஓர் கவியரசிஅரங்கில் ஆடுகின்ற நாட்டியப் பேரரசி
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் எனமூன்று பேர் உடன்பிறப்புகள் அவளுக்கு ;
கரிகாலனுக்குப் பின் அவரிடையேகலக மேகம் உருவாகக் கூடாதென்று
ஆதிமந்தி அரும்பாடுபட்டும் பயனில்லை ;தமிழ் வழியை அவர்கள் தடமாகக் கொண்டாரெனினும் ;
தமிழர் வழி சென்று ஒற்றுமையின்றித்தான் செயல்பட்டார்.தன் வழியைக் காதல் வழியாய் அமைத்துக் கொள்ள
தமிழ்க் கலையரசி ஆதிமந்தி ; தடந்தோளான் சேர மன்னன்தழைக்கும் ஆட்டக்கலை வல்லான் ஆட்டனத்தி அன்பில் விழுந்தாள்.
அரண்மனையில் அந்த உண்மை பூட்டிக் கிடந்ததால்அணிமயிலும் தொலையிலுமுள்ள இளவரசர் பலர் - அவளைப்
பெண்பார்க்கக் குவிந்திட்டார் ; எவரையும் தன்கண்பார்க்க விரும்பாது எனத் தோழியிடம் தொடங்கி ;
விண் பரப்பை விஞ்சுகின்ற புகழ் பெற்ற கரிகாலன்வேறு யாரை விரும்புகிறாய் எனக் கேட்டதற்கு
“வீரர்கள் கூத்தாடி மகிழும் விழாக்களிலும்விலை மகளிரைத் தழுவியாடும் துணங்கைக்கூத்துகளிலும்
அவனை நான் கண்டதில்லை.ஆடற் கலை வல்ல பெண் தான் நானும் ;அஃதேபோல்இந்த வளையல்கள் நெகிழுமாறு என்இதயம் கவர்ந்த ஆடவனும்அக்கலையில் வல்லவனேயாகும்”
எனப் பொருள் தரும் பாடல் ஒன்றை“மள்ளர் குழீஇய” என்று துவங்கிமனப்பாடம் போல் சொல்லி முடித்தாள்.
அது கேட்ட கரிகாலன் ; ஆதிமந்தி-ஆட்டனத்தி மணவிழாச்சேதிதனை அனைத்து மன்னர்க்கும் அனுப்பிவைத்துநடத்திவைத்தான்.
பாதியில் முடிக்க வேண்டும் அவர்தம் காதல் வாழ்வையென்றுபஞ்சுக்காய் வெடித்தது போல் திகைத்துப் போய் - பல நாள்காத்திருந்த
பாதகர் ஒரிருவர் கூடி திட்டம் வகுத்தார்.பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் ;
பலாச்சுளை தின்னும்போது - எப்படிப்பார்த்துக் கொண்டிருக்கும் எட்டிக்காய் இதயங்கள் ?அதனாலே ;
தேன் கொடுக்குப் போன்றோர் ; அவர் காதல்தனைவாள் கொண்டு வெட்டுதற்கு
நாள் பார்த்துவிட்டார் ; நரி வேலை செய்து விட்டார்.நடனக் கலைப் பயிற்சி முடித்து விட்டு
காவிரியில் புதுப் புனல் விழா நிறைவுறும் வரையில்காதலிருவரும் ஆடிக் களித்து விட்டு, பின்னர்
நள்ளிரவுப் பள்ளியறைக் காவியமும் படித்து விட்டு - அந்தமுள்ளில்லா ரோஜாவை முத்தமிட்டவாறு
அணைத்துத் தழுவி அயர்ந்துறங்கி விட்ட போது ;ஆட்டனத்தியை கயிறு கொண்டு கட்டித் தூக்கி
ஆதிமந்தி விழித்துத் துரத்தியம் கூடஅவளையும் உதைத்துத் தள்ளி விட்டு ; “ஓ” வென
ஆர்ப்பரித்து ஓடுகின்ற காவிரியாற்றில்அந்தோ ; அவனைக் கயிற்றில் ஆடும் பந்தாக வீசி விட்டார்.
அடையாளம் தெரியாத அற்பப் பதர்கள் ;தரையாளும் மன்னன் மகளைத் தவிக்க விட்டுத் தப்பி விட்டார்.
குறையேதுமில்லாத குளிர் நிலா முகத்தினாள்அலை மோதும் ஆற்றின் கரையோரம் ஓடுகின்றாள்
அவனாகக் கொதித்தபடி “அத்தான், அத்தான்” எனஅழுதழுது உள்ளம் வெடிக்கின்றாள்.
அவனோ ஆற்றின் சுழலில் கயிற்றுக்குள் அகப்பட்டுபுயல் காற்றில் சிக்கிய துரும்பாகத் துடிக்கின்றான்.
கரிகால் மன்னன் காதுக்குச் செய்தி எட்ட ; தன்கண்மணி ஆதிமந்தியைத் தேற்றுவதறியாது திகைக்கின்றான் -
அவளோ, ஆளனைக் கூவி யழைத்தவாறுஆற்றோரம் ஓடுகிறாள், ஓடுகிறாள்.
ஆவேச நடனம் ஆடுகிறாள், ஆடுகிறாள்.....அனல் வீழ்அல்லித் தண்டாய் வாடுகிறாள், வாடுகிறாள் - அந்தப்
பாதி ராத்திரி வேளையில் ஆற்றில்படகோட்டிடும் படகிழவி ஒருத்தி
பதைத் தோடிக் கரையில் வீழ்ந்திட்டபாவை ஆதி மந்தியின் முகம் திருப்பிப் பார்க்கின்றாள்
“பளீர் பளீர்” என மின்னல் தாக்குகிறது“சுளீர்” சவுக்கடி போல சுழன்றொலிக்கிறது இடியோசை.....
அரை விழி திறந்து நோக்கும்ஆதிமந்தியிடம் அக்கிழவி ;
“நீ தானே யம்மா - என் பேத்தியாம், உன்தோழி நிலவழகியிடம் - உன்னைப்பெண் பார்க்கப் பலரும் வந்த போது ;
“மள்ளர் குழீஇய விழவினாலும்,மகளிர் தழீஇய துணங்கையானும்,யாண்டும் காணேன் மாண் தக்கோனை ;யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக்கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்தபீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.”
என்று கவி பாடியவள் ?” எனக் கேட்டதும் ;
தன் பாட்டு, தனித் தமிழ்ப் பாட்டினைதள்ளாத கிழவி ஒப்புவித்தது கண்டு வியந்து
விம்மியழுது அவள் விழிகள் வடித்த கண்ணீர்வெற்றி கொண்டது காவிரியை எனலாம்.
பரிதாப மேவிட்டுப் படகோட்டிக் கிழவிபாசமுடன் தன் பெயரும் “காவேரி” என்றுரைத்து
பல்லில்லா பொக்கை வாயில் புன்னகை மலர ;பத்திரமாய்ப் பாதுகாத்து தன் குடிலில் ஆட்டனத்தியை
படுக்க வைத்திருக்கும் செய்தி கூறிபக்க மிருக்கும் அனைவரையும் மகிழ வைத்தாள்.
பாராளும் கரிகாலன் மருமகன் ஆட்டனத்தியை - தமிழ்ப்பாட்டாளும் ஆதிமந்தியிடம் ஒப்படைத்தாள்.
இருவரும் ஆடி மகிழ்ந்து -படகுக் கிழவியைப் பாடித் தொழுதார்.
கலையும் காதலும் அந் நாளிலேயேநிலை பெற்ற பண்பாடு தமிழர்க்கு என
அறிவிக்கும் காவியமேஆட்டனத்தி - ஆதிமந்தி!
★ ★ ★
குறிப்பு : ஆதிமந்தியாரும் - ஆட்டனத்தியும் ;ஒழுக்கமுடையோர் என்பது மட்டுமல்ல ;அதற்கு ஊனம் விளையும் இடத்தைக் கூடக்காண விரும்பார் என்பதே நமது பண்பாடு.