கவிதை 56 / 58
பற்று கடந்தால், பற்றி எரியும் வெறியே!
When Attachment Goes Beyond Its Bounds, It Burns as Frenzy!
பற்று கடந்தால்,பற்றி எரியும் வெறியே!
கடல் கொண்ட முதல் தமிழ்ச் சங்கம் மதுரையில்நடத்தியவர்கள் பாண்டிய மன்னர்களாம்
காய்ச்சின வழுதி தொடங்கி, கடுங்கோன் ஈறாகஆய்வுரையாளர் எண்பத்தொன்பதின்மர் என்பார்!
முதல் சங்கமும், சங்கமிருந்த தென் மதுரையும்மூழ்கி விட்டக் காரணத்தால் இரண்டாம் சங்கமெனும்
இடைச் சங்கத்தை வெண்டேர்ச் செழியன் முதல்முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர்
தொடங்கி நடத்தினர் ; கவாடபுரத்தில் ; தொடர் அதிர்ச்சியாககடற்கோள் ; கவாடபுரத்தையும் விழுங்கிவிடவே ; அப்போது
அந்தப் பெரும் அழிவிலிருந்து மீண்டும் பிறந்தது போலபாண்டியன் முடத்திருமாறன் உயிர் பிழைத்தான்!
கடற்கோளின் கடுந்தாக்குதலில் காலிழந்து முடமான மன்னவனைமுடத்திருமாறன் என்றே சங்கத்துச் சான்றோர்களும்ஆன்றோர்களும்
சரித்திரமும் கூட அழைக்கத் தொடங்கியது அன்போடு, மிகப்பண்போடு!நிலந்தரு பாண்டியனுக்கு நிலமும் கடலும் தந்த பரிசன்றோஅந்தப் பட்டம்
சங்க காலப் பாண்டியருள் முடத்திருமாறனுக்கு அடுத்தவன்பல வேள்விகளை நடத்திய முதுகுடுமிப் பெருவழுதியாவான்
“பல்யாகசாலை” எனும் அடைமொழி பெற்று, ஆரிய நாகரிகம்பல நூற்றாண்டுகட்கு முன்பே படையெடுத்து விட்டமைக்குசான்றாம் அவன்!
முதுகுடுமி முடிந்து போட்டுக் கொண்டே யாகசாலைகளில்அகவு மேதும், இராஜசூயம் வேள்விகளைச் செய்த மன்னனை
காரிகிழார்; நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார் - எனும்கவிஞர் மூவர் வாழ்த்திப் பாடியுள்ளார் என்பது வரலாறு.
காரிகிழார்; தொண்டை நாட்டில் காரி எனும் ஊரினர் ;இப்போது ‘இராமகிரி’ என அழைக்கப்படும் இடமாம்!
நெடிய இமை கொண்டதால் நெட்டிமையார் என்றழைக்கப்பட்டகவிஞரும்;நெடும் பல்லியத்தனாரும் காரணப் பெயர்களே; கலை பல கற்று
இசை முழங்கும் வல்லவர் என்பதால் ; இவர் இப்பெயர்பெற்றாராம் -இவர்கள் அந்த முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி,
“உன் புகழ் வடக்கே பனி மூடிய இமயமலை தாண்டியும்தென் திசையில் குமரியாறு கடந்தும் -
கீழ்த் திசையில் சகரர் தோண்டிய சாகரம் மீறியும் -மேல் திசையில் பழங்கடலுக்கு மேற்கிலும்; உன் ஆட்சி,
மேம்படுவதாக எனவும் வாழ்த்துகின்றனர் -மேலும் அவர்கள் கடற் படை கொண்டவர்கள் என்றும்போற்றுகின்றனர்”
அவைப் புலவர்கள் மொழிந்த வாழ்த்தினையும்அவற்றில் பொதிந்திருந்த “நின் முடி நான்கு வேதங்கட்கும்உரிய”
எனும் வார்த்தைகளையும் கண்டுஅய்யம்பெருமாள் கோனார் ;
“அவ்வரசர் காலத்தே வைதீகம் பரவி விட்டது என அறியப்படும்”என்றுஅறுதியிட்டுக் கூறியுள்ளார்!
முதுகுடுமிப் பெருவழுதி ஒரு போரினை முடித்துவெற்றி கண்ட பிறகு ; எவ்வாறு வெறி கொண்டு
பகைவர் நாட்டைப் பாழ்படுத்துவான் என்பதை‘நெட்டிமையார்’ பாடக் கேட்போம்.
“குடை நிழலில் குஞ்சரம் ஊர்ந்திடும் குடுமியே!படை கொண்டு நீ பிறர் மண்ணைக் கவர்ந்த பின்னர்,
அம்மண்ணை அவரிடமிருந்து பறித்து, உன் நாட்டுபாணர்கள் பொற்றாமரை சூடவும் - யானை கட்டி ஓட்டும்
தேர்களைச் செலுத்தவும்பயன்படுத்துவது நியாயமாகுமா ?”
எனக் கேட்புப் பாடலைத் தொடருகிறார்!
“தேர்கள் ஓடியதால் குழிகள் தோன்றிய தெருவில்ஏர் பூட்டி உழுவதற்குக் கழுதைகளைக் கட்டி ;
எதிரிகளின் எழில்மிகு மணி மாடங்களைஎதற்கும் பயன்படாது பாழ்படுத்தி விட்டாய்!
புள்ளினங்கள் ஒலிக்கும் அவர்தம் விளை நிலங்களில்புரவிகளின் குளம்படிகள் ஒலித்திடச் செய்து விட்டாய்!
பருத்த பாதமும், பயங்கரத் தந்தமும் படைத்தபகைவர்தம் யானைகளை களம் விட்டு குளம் வீழச் செய்துவிட்டாய்!”
பாடிய புலவர்களும்,பாட்டப்பட்ட மன்னர்களும்
சைவ சமயப் பற்றுடையார் என ஒரு புறம் ;வரலாற்றுக் குறிப்பும் வரைந்து விட்டு -
பகைவர்களை அவர்கள் பழி வாங்க கையாண்டபல்வேறு கொடுமைகளையும் எண்ணிப்பார்த்தால் ;
மண் பற்றையும் மதப் பற்றையும் கடந்துமண் வெறியும், மத வெறியும் கொண்டோர் ;
மத நல்லிணக்கம் விரும்பாதமனித நேயமற்றோரே ஆவர் என்பது,
மலையின் மேவிட்ட விளக்காகஒளிர்வது உணரலாம்!
★ ★ ★
மற்றுமொரு பாண்டியன் மதிவாணன் எனும் பெயரில்பற்று மிகக் கொண்டிருந்தான் நாடகத் தமிழ் மீது என்பது ;
அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைப் பாயிரம்வாயிலாக அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது!
மதிவாணன் ; பாண்டிய மன்னரில் ஒருவன்; அவன்கடைச் சங்கம் நிறுவியோர் வரிசையில் உள்ளவன்.
தமிழ்ப் புவி மெச்சக் கவியரங்கம் ஏறியுள்ளான் -அமிழ்தத் தமிழ் வெண்பா, நூற்பாக்களினால்
மதிவாணனின் நாடகத் தமிழ் பொலிவுற்றுப் புகழ் பெற்றதாம்!பல்லவமகேந்திரன் வடமொழியில் நாடகம் தீட்டினான் ; அதற்கும்
பழங்காலத்திலேயே பாண்டியன் மதிவாணன்அருந்தமிழ் நூல் ஒன்று; நாடகத் தமிழ் என எழுதி
தமிழன்னைக்குக் கணையாழியைச் சூட்டினான்.அடியார்க்கு நல்லார் காலம் வரை அக்கணையாழி - தமிழ்
அன்னையின் விரலை விட்டுக் கழலவுமில்லை ;அதனை யாரும் கழற்றவும் இல்லை.
ஆம்; அக்காலம் வரையில் அந்த நாடகத் தமிழ்வழக்கில் இருந்ததாக இலக்கிய வரலாறு கூறும்!