கவிதை 55 / 58
நெடுஞ்செழியனும் நெடுநல்வாடையும்!
Nedunchezhiyan and Nedunalvadai!
நெடுஞ்செழியனும்நெடுநல்வாடையும்!
“தமிழ்ச் சங்கங்கள் மூன்று கண்டு,தமிழுக்குப் புரிந்தனர் நல்ல தொண்டு – எனப்
பாராட்டப் பெற்ற பாண்டியர் வரலாறு பற்றிபல ஏடுகள் படிக்கத் துடித்த போது
‘பாண்டிய நாட்டுத் தலைநகரம் எது?’ என்ற அய்யத்தைப்போக்கியவர்அறிஞர் “அய்யம்பெருமாள்” கோனார் என்பேன்.
அவர் எழுதிய நூலில்; முதற் சங்க காலத்தில்இன்றைய மதுரைக்குத் தெற்கே
பல காதம் தொலைவில் பழங்காலத் தென்மதுரைபாண்டிய நாட்டின் தலைநகராய் விளங்கியதாம்.
முதற் கடற்கோளால் தென்மதுரை அழிந்த பின்னர் ;முகிழ்த்த தலைநகரம் கவாடபுரமாம் –
அங்குதான் இடைச் சங்கம் இருந்ததெனவும் ;அதுவும் கடற்கோளால் அழிந்திடவே – அதன் பின்னர்
அதில் மூழ்கி மடியாதிருந்த மன்னன் முடத்திருமாறன்அமைத்த தலைநகரே இன்றுள்ள மதுரை மாநகரம் ஆகும்!
அத்தலைநகரில் அரியணை ஏறி; பாண்டிய வேந்தர்கள்ஆட்சி நடத்திய காட்சியையும் மாட்சியையும்; காண்போம்இப்போது!
★ ★ ★
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினைஅழகாக வகுத்துக் கொண்டு
அன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற இனம்அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்று
ஆயிரங்காலத்துப் பயிராக நமக்கு வாய்த்தஆன்றோர் செய் இலக்கியங்கள் சான்று கூறும்!
★ ★ ★
அதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டெனினும்,ஆரம் போல் கோத்தளித்தார் நக்கீரனார் ;
பத்துப் பாட்டுள் – ஒருமுத்துப் பாட்டாய்த் திகழ்கின்ற
“நெடுநல்வாடை” எனும் தமிழ் அமுதம்! அது ;நெடுஞ்செழிய பாண்டியனின் வீரம்சொல்லி,
நீண்ட நாள் அவன் பிரிவால் ஏங்குகின்றநேரிழையாள் கோப்பெருந்தேவி மனம் ;
நெருப்பாகச் சுடுகின்ற நிகழ்வைக் கூறி,அகம், புறம் எனும் வாழ்க்கை
அந்நாள் தமிழகத்தில்இகம், பரம் என்ற கூற்றுக்கே
எதிரிடையாய் இருந்த நிலைஎடுத்தியம்பும் நூலாகும்!
★ ★ ★
தலையாலங்கானத்துப் போர்க்களத்தில்தனிமையில் ஓர் இளைஞன் சிக்கினான் என்று
தவறாகக் கணக்கிட்ட ஏழு மன்னர்தடந்தோள் பழுதிபடத் தோற்றே போனார்!
அதன் பின்னர் நெடுஞ்செழியன்அன்றிலென வாழ்வோமென்று
அழகு மணிப்புறாவொன்றைஅரசியென ஏற்றுக்கொண்டான்....
இளவயதில் போர்முனையில்எழுவர் படை வீசிய வேல்வாள் பட்ட
விழுப்புண்கள் ஆறிப்போய்வடுக்களாய் மாறிப்போயிருப்பினும் – அவை;
பாண்டியன் மார்பகத்தில் – தங்கப்பதக்கம் போல் மின்னுவதாய்
எண்ணிக்கொண்டு எழிலரசி ;எண்ணாமலே கொடுத்திட்டாள் முத்தம் ; நித்தம்!
மனமுடித்து மஞ்சத்தில்மனங்கவர் அஞ்சுகத்தை
கண்ணோரம் பிரியாமல் இரவெல்லாம்கட்டிய கட்டுக் குலையாமல் இருப்பதற்கு
காலம் இடம் தரவில்லை.... போர்க்களங்களின் அழைப்போ பெரும் தொல்லை!
தலையாலங்கானப் போருக்குப் பின்னும் – அவன்தலைமையேற்று வென்றிட்டான் ;
“வேள் எவ்வி”யெனும் மன்னவனின் மிழலைக் கோட்டம்!வாள்வீரர் முத்துவேளிர்க்குரிய
முடியினைப் பறித்து – அவர்தம்முத்துக் கூற்றமும் கவர்ந்திட்டான்!
“சேரமான் யானைக்கட்சேய் இரும்பொறை” என்னும்வீரமா மன்னன் படையழித்து, அவனைச்
சிறைதனில் அடைத்துப் போட்டு விட்டான்!இவ்வாறு
மலை மலையாய் வெற்றி மாலை குவித்திடவேஅலை அலையாய்ப் படைகொண்டு ஆர்ப்பரித்துக் கிளம்பியதால்
குலை குலையாய்ப் பழமிருந்தும் உண்ண முடியாமல்நிலைகுலைந்து துடிக்கின்ற பறவையைப் போல்
பாண்டிமாதேவியவள் பதைத்திட்டாள்....பகல் இரவுப் பொழுதுகளை நகர்த்த முடியாமல் கண்ணீர்வடித்திட்டாள்!
வாடையெனில் குளிர் காற்று தாக்குமன்றோ!ஆடை போர்த்தாவிடினும் ஆண்மகனின் மேனி போர்த்தி
ஆரணங்கும்; ஆரணங்கின் மேனி போர்த்திஆடவனும்; அக்குளிர் காற்றை வெல்வாரன்றோ!
இங்கென்ன நிலையென்றால் பாண்டி மன்னன்பொங்குற்றே சென்றுவிட்டான் போர்முனைக்கு!
வீரம் விளைக்கின்ற வெம்மையிலே வாடைக் காற்றின்விண்மிரட்டல் பலிக்கவில்லை வேந்தனிடம்!
ஆனால் அரசியின் நிலையோ, அந்தோ! பரிதாபம்!பாட்டுப் புலவர் நக்கீரனார் பாடுகின்றார் ;
வாடைக் காற்றின் குளிர் தாங்க மாட்டாமல்வீட்டுக் கோழிகள் படும் பாட்டைப் பாரீர் என்று!
பெட்டையும் சேவலும் பெருவெளியில் திரிந்துஇட்டமுடன் இரைதேடித் தின்று மகிழ்ந்து
இன்பமாய்க் கழித்த நாளெல்லாம் சென்று ; இன்றுஇரவு பகலெது எனத் தெரியாது திகைத்து
அடைத்திருக்கும் பலகைக் கூண்டுகளுக்குள்ளேஅடுத்தடுத்துக் கடுக்கும் கால்களை மாறி மாறி வைக்குமாம்!
இவ்வண்ணம்கொல்லுகின்ற வாடையிலே – நெஞ்சில்
துள்ளுகின்ற காதலுடன்புள்ளிமயில் புரளுகின்றாள் ; படுக்கையிலே! – யாரும்
வெல்லவொண்ணா தமிழ் எடுத்து – “நெடுநல்வாடை” தீட்டுகிறார் நக்கீரனார்!
கொடுமுடியன்ன உயர்ந்த கோபுரம் – அதில்கொடிகளோ வானவில்லென வண்ணங் காட்டும்!
திண்ணிய நீலமணி நிறம்பார்ந்த தூண்களிலேவெள்ளியைத்தான் வெண்சாந்தாய்ப் பூசின்றோ ?
செம்பினால் படைத்திட்ட மதில் சுவரோ எனும்படிசெப்பரிய வலிவுடனே அமைத்திட்ட
செழியனது அரண்மனையைச்செந்தமிழால் சித்தரிக்கும் நக்கீரர் ;
சிந்தையெல்லாம் அவன் நினைவால் துவளுகின்றசெம்பருத்தி இதழ்ப் பெண்ணாள் பாண்டிராணி ;
படுத்திருக்கும் மஞ்சத்தைப்பாட்டால் காட்டுகின்றார் பார்த்திடுவீர்!
முரசுபோல் கால்கள் கொண்டமுரட்டுப் போர் யானையொன்று
முற்றாக நாற்பது வயது சென்றுபோர்த்தொழில் புரியுங்கால் இறந்துவிட – அதன்
கூர்த் தந்தம் இரண்டெடுத்து கோலச்சீர் தந்து அழகூட்டி அமைத்த கட்டில் – அதில்,
சூல் கொண்ட மகளிர் கொங்கைபால் கொண்டு வீங்கியது போல்
நாற்புறமும் திரண்டுருண்டநல்லழகுக் கலசங்களாம்!
முத்து மணிமாலைத் தொங்கல்களாம்!முல்லை மல்லிகை மலர் ஓவியமாம்!
அரிமா வேட்டையினைச் சித்தரிக்கும்அரிய கலை நுட்பம் திகழ்கின்ற போர்வையுடன்,
அன்னத்தின் இறகெடுத்து செய்திட்டஅணை, தலையணை, சாயணை அனைத்தும் கொண்டபஞ்சணை! ஆனால்
“அணை” என்று சொல்லத்தான் அவனில்லை ; அதனாலேஅணையுடைத்துப் பெருகிற்று அரசியாரின் துன்ப வெள்ளம்!
அடி வருடினார் செவிலியர்கள்“அம்மையே உறங்குக” எனக் கூறி!
“அடி போடி வேலையில்லை உங்களுக்கு” – எனஅலறினாள் அரசியவள் மிகச் சீறி!
அங்கிருந்த வானவெளிச் சித்திரத்தில்அருகருகே சந்திரனும் ரோகிணியும்
அகலாமல் இருத்தல் கண்டுஅப்படி நான் நற்பேறு பெற்றேனில்லை
இப்படி ஏன் நலிகின்றேன் வீணேயென்று ;நீர் இமைகளிலே எட்டிப் பார்க்கும்
நீர்த்துளியை விரல் கொண்டே அவள்வழிந்தெறிந்தாள் எனினும்; கவலைதனை
அழித்தெழுத முடியாமல் அல்லற்பட்டாள்!இவ்விதம்,
மதுரையின் மாளிகையில் அரசியார்மது சுமந்து வண்டுக்கெனக் காத்திருக்கும்
மலர்க்கொடியாய்த் தவிக்கும்போது ;நெடுஞ்செழிய பாண்டியனின் நிலை என்ன ?
“நெடுநல் வாடை”யிலே காண வாரீர்!
காதலொன்றும் பாண்டியனின்கடமை உணர்வுக்குத் தடையாமில்லை!
கோப்பெருந்தேவியின் நினைவாலே – அவன்கொண்ட குறிக்கோள் தவறவில்லை!
வாடைக்காற்று அவன் பாசறைக்கும் வந்ததுண்டு! அதனாலேஅவன்;வாளேந்தும் போர் முகத்தை மறந்துவிட்டு,
வளையலேந்தும் கரம் நாடி ஓடவில்லை!இங்கு;
பாண்டியன் நள்ளிரவில் புறப்பட்டான் ; எதற்காக ?பஞ்சணையில் பரதவிக்கும் பத்தினியைப் பார்ப்பதற்கா ? இல்லை!இல்லை!
குன்றும் நடுங்குகின்ற கூதிர்காலத்தில்வடக்கிருந்து வீசுகின்ற குளிர் காற்றால்
தெற்கு நோக்கிச் சுடர் சாயும் தீவட்டி எனினும்வடக்கிலோர் பாசறையில் இருக்கும் மன்னன்
வாஞ்சைமிகு பாண்டிமாதேவிக்காகத் தெற்குத் திசைதிரும்பவில்லை!
வாடிக்கைப் பணியினை ஆற்றுதற்குவாளேந்தும் மறவர் சுடரேந்தி சூழ்ந்து வர
இடக்கோளில் இருந்து நழுவி விழும் மேலாடைதனைஇடப்புறக் கையால் தூக்கி அணைத்தவாறு,
வலியதோர் வாள்வீரன் தோளில் – தன்வலக்கையினைத் தோழமையுடன் போட்டுக் கொண்டு,
மழைத்துளிகள் வீழ்கின்ற நள்ளிரவில்மாவீரர் பலர்; காயமுற்றுப் படுத்திருக்கும்
பகுதியெல்லாம் சென்று பார்த்தான் - அவரைப்பரிவுடனே நலம் கேட்டு நன்றி கூறி அரவணைத்தான்!
பகல் போரில் பகைவர்களின் படையழித்து விரட்டும்போதுபுழுதுபட்ட தாள், கை, உடல்களுடன் படுகின்ற துயரமெல்லாம்
மறந்தனவாம்; தம் தலைவன் பணிப்பார்வை பட்டதாலே!காதலனைத் தேடிப் பேரரசி கலங்குகின்றாள் ; அவனோ,
கடமையினை ஆற்றுதற்குக்கால்கடுக்கச் சுற்றுகின்றான் ; பாசறையை!
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினைஅழகாக வகுத்துக் கொண்டு
அன்று தொட்டு வாழ்ந்து வரும் இனம்அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்பதற்கு
ஆதாரம் வேண்டுமெனில்அடடாவோ! “நெடுநல்வாடை” ஒன்று போதாதா ?
★ ★ ★
(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச்சிறப்பித்து சங்கப்புலவர் நக்கீரர் இயற்றிய “நெடுநல்வாடை”எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எளியநடையில் எழுதப்பட்டது, இது!)