கவிதை 54 / 58
தலையாலங்கானத்துச் செருவென்றான்!
He Who Won the Battle of Talaiyalanganam!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: தலையாலங்கானத்துச் செரு வென்றான்!
தலையாலங்கானத்துச்செருவென்றான்!
“என் எழுத்தோவியங்கள் பலவற்றில் பாண்டியர் சிலர்ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர் என்பதால் மீண்டும் விரிவாக
அந்தப் பாண்டியர் வரலாறு கூறுவது விடுத்துகடைச் சங்க காலத்தும் அதற்குப் பின்னரும்
தங்க காலம் உருவாக்கிய பாண்டியர்வரலாறு தொடர்வோம்” எனக்
குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துக்கோபங் கொண்ட தம்பியார் சிலர் ;
“பரவாயில்லை எத்தனை முறை எழுதினாலும்படிக்கத் தெவிட்டுவதில்லை பழந்தமிழர் வரலாறு!
ஆண்டு பலவாயினும் மீண்டும் எழுதுக –வேண்டுகோள் தாண்டிச் செல்லாதீர்” என்று ;
தொலைபேசி வாயிலாகத் துளைத்தெடுக்கவே – அந்தத்தொல்லையிலும் ஒரு சுகம் கண்டு தொடங்குகின்றேன்
★ ★ ★
இளமைக் காலத்திலேயே எனக்கு அன்புமகன்நெடுஞ்செழியன் எனும் பெயர்கள் மீது ஒரு மயக்கம் –
இயக்கத்தில் அவர்கள் நேரடியாக ஈடுபடாத காலம்இளைஞனான நான் ஈடுபட்டிருந்ததாலே – ஆரூரில்
துண்டு வெளியிட்டாம் “முரசொலி” ஆண்டு விழா அழைப்பையேற்றுகண்டு நிகர் உரையில் எனைக் கவர்ந்தார்கள் இருவருமே அன்று!
நெடுஞ்செழியன் அன்புமகன் போல என் பெயரும் மாற்றிநெடுநாள் ஆசை நிறைவேற்றிக் கொள்ள ;
அருமை அண்ணன் அண்ணால் தங்கோ ஆலோசனையேற்று“அருட்செல்வம்” என மாற்றிக் கொள்ள அண்ணாவின் ஆணைவேண்ட ;
அவர் சொன்னார்; “ஏற்கனவே அறிமுகமாகிப் பரவிவிட்ட பெயர்அதனாலே இப்போது மாற்ற வேண்டாம்” என்று!
எண்ணிப் பார்த்தேன் நானும்எல்லா மதத்தினர்க்கும் என் பெயர் பொதுவாக இருப்பதாலும்
குறிப்பிட்ட ஒரு சாமி பெயராக இல்லாத காரணத்தாலும்குறுக்கிட்டு இப்போது மாற்ற வேண்டாமென
“கருணாநிதி” மாறாமலே இருந்து; கழகத்திலும் மாறாமல்இருந்து விட்டேன்.கருத்திலும், வலுவாக – தெளிவாக; ஈரோடு காஞ்சிப் பாசறையில்
போராடும் குணத்தையும் பெற்று “நிரந்தரப் போராளி”ஆகிவிட்டேன்.வேறாக இருந்து கட்சி வளர்த்தோர் வேறுபட்டு போனாலும்அவரைச்
சீரோடும் சிறப்போடும் வாழ்க என வாழ்த்தியிருக்கின்றேன் – என்சிந்தை கவர் நெடுஞ்செழியனாரின் நட்பும் அவ்வாறே – அவர்
மறைந்து விட்டார் எனக் கேட்டு டெல்லித் தலைநகர் விட்டு –அன்றிரவேஉடைந்து விட்ட உள்ளத்துடன் ஓடிச் சென்றேன் அவர் இல்லம்நாடி –
கொள்கையற்ற கூட்டமொன்று வாசலில் சூழ்ந்து நின்று என்னைக்கொச்சைப்படுத்தி கூச்சல் எழுப்பி இப்போது வந்து விட்டாயாஎன்று –
குடிலனைப் போல் குரோத உள்ளங் கொண்ட குள்ள மனிதர்கள்குக்கல்களாய்க் குரைத்துப் பார்த்துக் கடிக்கப் பாய்ந்தனர்.
எங்கள் நட்பின் ஆழம் தெரியாமல் நன்றி கெட்டுக் கூவிப்பிதற்றினர்.அங்கும் பொறுமை காட்டி இறுதி மரியாதை செலுத்தி வந்தேன்.
நோய்ப்பகைவர் முகாமுக்கு நாவலர் சென்று விட்டாலும்நெடுஞ்செழியன் என்ற தனி நண்பர் மீதும் – அந்தத் தமிழ்ப் பெயர்மீதும்
நிகரற்ற பாசம் கொண்ட என் நெஞ்சம்; தமிழகவரலாற்று ஏடுகளிலும் நெடுஞ்செழியன், கரிகாலன்,
செங்குட்டுவன் எனும் பெயர்கள் வரும் போதெல்லாம் – என்செம்மொழிக் கவிதையில் அவர்கள் திருப்பெயர் இடம் பெறவே
விருப்புற்று தம்பிமார்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றேன்‘மீண்டும் வரட்டுமென்று’ மீட்டிய வீணைக்குப் பதிலாக ;
நீட்டும் கவிதை வரிகள், இதோ ;காலப் பேழையில் இரு பகுதிகளாக!
★ ★ ★
சேரனும், சோழனும், எழினியும், திதியனும்இருங்கோ வேண்மான் எனும் ஐவருடன்பொருநனும், மற்றும் எருமையூரனும் இணைந்தபோர்முனையில் எழுவர் படையை மோதிடவே,இளங்காளை நெடுஞ்செழியன் புறப்பட்டான்களங்கண்டான், வென்றிட்டான் என்றும் – பகைவர்முரசு கவர்ந்து முடித்திட்ட சூளுரையால்அரசர்க்கரசனாய் ஆனான் என்றும்,அகமகிழ்ந்து கூறுகின்ற செய்தி ஒன்றைஅகநானூறில் பாடுகின்றார் அரும்புலவர் நக்கீரர்!
“கதிரவனும் நிலவும் சேர்ந்த மண்டீது வீழ்ந்தாற்போல்களம் பட்டார் சேர சோழ மாமன்னர்” என்றுபுலவர் கல்லாடனார், புறப்பாடல் ஒன்றின் மூலம்புலமிக்க பாண்டிய இளவந்தனைப் போற்றுகின்றார்!
“ஒருவரோடு ஒருவர் போரிடுதலும் – அந்தஇருவரில் ஒருவர் வீழ்தலும் இயற்கை!எழுவரை ஒருவன் மடக்கி அடக்கிடப்பழுதறப் போர் புரிந்தான் என்பதும்எழுவரும் தோற்றார்இவன் ஒருவனே வென்றான் என்பதும்இவ்வுலகிலோர் புதுமை என்பேன்” என்று,இடைக்குன்றார்க்கிழார் எனும் புலவர்,எழுத்தில் வடித்தார் பாண்டிய இளவலின் வெற்றியை!
தமிழ் மன்னர்களே தங்களுக்குள் முட்டி மோதியதைத்தாங்கொணாக் கவலையுடன் குடபுலவியனார் எனும் புலவர்,“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்” என்றார்!
தடந்தோள் பாண்டியனே இறுதியில் வென்றான் – எனவேதழுவிடத் துடித்தார் அவனை உடனே!வேட்டுவர்கள் புலி பிடிக்கும் பொறியைப் போல்விரிந்து பார்த்த செழியனின் வீர மார்பைவிரைந்து சென்று தழுவிட விரும்புகின்றேன் எனவித்தாரத் தமிழ் முழக்கும் அப்புலவர் ; அவனதுமுத்தார மார்பைத் தழுவிக் கொண்டார்!
தலையாலங்கானத்துப் போர்க்களத்தை – அத்தமிழ்ப் புலவர் வாணிக்கும் விதம் பாரீர்!
கடும்பகை எதிர்த்துக் கணைகள் பறந்திடதிடுமெனச் சாய்ந்தன எதிரியின் யானைகள்!வீழ்ந்த யானையின் துதிக்கையை அதன் வாயுடன்வீர மறவர் வாளால் வெட்டிட ; அவை துண்டாகிக்களத்தினில் பரவிக் கிடந்திட்ட காட்சி ;கழனியோர்த்துக் கலப்பைகள் போல் விளங்கிற்றாமே!படைத் தலைவர் பல்லோர் மாண்டு மடிந்திட – அவர்பக்கத்தே தம்புதல்வர் மரணமெய்திக் கிடந்தது கண்டு,நெற்றித் தோலும் சுருங்கிய மூதாட்டியர் பலர்சுற்றி நின்று அழுது புலம்பினர் எனினும்
வெற்றி இதனினும் வேறொன்று உளதோ எனவீர மைந்தரைப் பெற்றதற்குப் பெருமையுற்றனர்!
நெடுஞ்செழிய பாண்டியனின் அவைக்களத்துப்பெரும்புலவர் மாங்குடி மருதனார் என்பவரோ ;கடும் போரிட்டுக் களவாகை சூடி வரும்காவலனாம் பாண்டியனின் திறம் வியந்துகளிப்புற்றார் எனினும் – அவன்களம் காணும் ஆசையிலே சூழ்வது கண்டுசலிப்புற்றார்!மாவீரன் பாண்டியனின்போர்த்தாகம் குறைக்க“மதுரைக் காஞ்சி” பெயரும் நூல் செய்தார் – அந்தமாங்குடி மருதனார் பாடிய புறப்பாட்டில் ;
“கடலைக் கிழித்துச் செல்லும் மரக்கலம் போல்களத்தில் ஊடுருவும் யானைப்படையின் பின்னேவேல்கொண்ட வீரர் அறுத்தெடுத்தகோள் கொண்ட மன்னர்தம் தலையை அடுப்பாக்கிகுருதிநீர் பொங்குகின்ற உலையில் – போரில்கொலையுண்டோர் தசையினைக் கொதிக்க வைத்துதோள்களாம் துடுப்பு கொண்டு துழாவிய உணவால் – களவேள்வி நடத்துகின்ற பாண்டியனே!” என்று,பலபடப் பாராட்டிவிட்டு – அவனதுபகைவரையும் புகழ்கின்றார்!
மாற்றார் எனும் பெயர் பெற்று – உன்னிடம்தோற்றார் எனினும்,விழுப்புண் பெற்று வீழ்ந்ததாலே ;வீரர் உலகில் என்றும் அவர் வாழ்கின்றாரே! எனஎதிர்த்தோர்க்கும் ஏற்றம் தந்துஉதிர்த்தார் கவி முத்துக்களை!
“வேந்தன் இனிப் போர் விடுத்துவாள்வீரர் வாழ்த்த வாழ்க!” என்றார்!
“வள்ளலாய் நின்று இல்லாதார்க்கு வாழ்வளித்திடுக!” என்றார்!“வளையல் அணி மகளிர் தரும் தேறல் உண்டு,வாழ்வெலாம் இன்பமும் அமைதியும் கொண்டு,வையம் போற்றிடத் திகழ்க!” என்றார்!“ஒழுக்கம் காப்பவரே உயர்ந்து வாழ்வோர் என்றும், அஃதிலார் ;உலகில் வாழ்வோர் என்படார் – என்றும்அறிக!” என்றார்!
தமிழ்ப் புலவர் கூட்டம் புகழ,தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் போற்ற,தலையாலங்கானத்தான் வாழ்ந்தான்!
மருதனார் இயற்றித் தந்த“மதுரைக்காஞ்சி” பெற்று – அந்தமாமன்னன் வாழ்ந்தான்!“நெடுநல்வாடை” தனை நக்கீரர் பாடி வழங்கநெடுஞ்செழிய இளவல் நெடிதுநாள் வாழ்ந்துநீள்புகழைத் தமிழ் நிலத்தில் நாட்டானே!
★ ★ ★
குறிப்பு:
அகநானூறு – பாடல் 36 – நக்கீரர் பாடியது.புறநானூறு – பாடல் 25 – கல்லாடனார் பாடியது.புறநானூறு – பாடல் 76 – இடைக்குன்றார்க் கிழார் பாடியது.புறநானூறு – பாடல் 19 – குடபுலவியனார் பாடியது.புறநானூறு – பாடல்கள் 24, 26 – மாங்குடி மருதனார் பாடியது.
(இப்புலவர் பெருமக்கள் தலையாலங்கானத்துச் செருவென்றபாண்டியன்நெடுஞ்செழியனைக் குறித்து இயற்றிய பாடல்கள் அடங்கியுள்ளகருத்துத் தொகுப்பே; பாண்டியர் வரலாற்றுத் தொகுப்பில் ஒருபகுதியாகும்.)