கவிதை 57 / 58
உவமை அழகுக்கு உரிய பரிசு என்னவாம்!
What Prize Is Fitting for the Beauty of a Simile!
உவமை அழகுக்குஉரிய பரிசு என்னவாம்!
போர் புரியப் படைகளுடன் புறப்படும் வேந்தன்பகைவனது தலைநகரக் கோட்டை அரணை,
முற்றுகையிடுவதற்கு “உழிஞை” என்பெயராம்-அரணைப்பற்றி விடாமல் எதிர்த்து நின்று போரிடுதல் “நொச்சி”யாம்.
எதிரும் பகிருமாக இருபடையும் போரிடும் செயலை “தும்பை”என்பர்.எவர் வெற்றி பெறினும் அதனை ‘வாகை’ எனக் கூறிடுவர்!
மூவேந்தர் காலத்துப் போர்முறையில் - ஒவ்வொரு கட்டத்துக்கும்பாவேந்தர்கள் இட்டழைத்த பெயர் இவைதான் என்போம்!
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பெயரும் ஒரு மன்னன் ;‘கானப்பேர் கோயில்’ கோட்டைக்கு வானுயருவிய படைவீரருடன்
முற்றுகைப் போரிடச் சென்ற நிகழ்ச்சியையும்-அதற்குமுற்றுப் புள்ளி வைக்கப்பட்டதெவ்வாறு என்ற நிலையினையும்
பாண்டியரின் இந்த வரலாற்றுப் பகுதி விளக்குதல் காண்போம் ;பகைவரின் வியப்பா ? பாவலர் வியப்பா ? படித்தபின் உணர்வோம்!
★ ★ ★
சின்ன மருது, பெரிய மருது சிவகெங்கைச் சீமை ஆண்டு ;சிவந்த மண்ணின் வரலாற்றில் செங்குருதி மலராய்ப் பூத்த
சிங்க நெஞ்சு மாவீரர் இருவருக்கும் சிலைகள் இருக்கின்ற,காளையார்கோயிலுக்குப் பழங்காலத் தமிழகத்தில் ;
‘கானப்பேர்’ என்ற பெயர் உண்டு ; இன்னும் அது,மானப் போர் தொடுக்கின்ற மறவர் பூமி-அங்கு;
வேங்கை மார்பன் எனும் குறுநில வேள் வேந்தன்ஓங்கு புகழ் கொண்ட அரண் ஒன்று அமைத்து-அதனை
வெற்றி கொள்ள யாரால் முடியுமென அறைகூவல்விடுத்திருந்தான்.அணுவைத் துளைத்து அதற்குள் நுழையவும் கூடும்-ஆனால் அந்த
அரணுக்குள் நுழைதல் இயலாதென்றுஅடலேறு வீரரெல்லாம் திகைத்து நின்றார்!
அப்போது பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதி!அரிமா தான் போர்க்களத்தில்!
ஆனைகளைத் தாக்கிப் பந்தாடும் பலமுடையான்!அவன் வாளுக்குத் தப்பிப் பகைவர் உயிர் வாழ்தல் அரிதரிது!
ஆற்றல் பெருக்குடனே அறிவார்ந்த கலையுள்ளம் கொண்டதாலே ;அகநானூறு பாடல்களைத் தொகுத்தளித்துப் பெருமை பெற்றான்.
அணையாப் சுடர் விளக்காம் திருக்குறளின் நல்லபாடும்அரங்கேற்றுவிழா அவன் முன்னிலையில்தான் நடந்ததென்பார்!
ஒளவை ஒருநாள்; அவனும், சேரமான் மாரிவெண்கோவும் வீற்றிருந்த காட்சிகண்டு,அருந்தமிழ்க் கவியாரம் தொடுத்துச் சூட்டி,அங்கு மூவேந்தர் ஒற்றுமைக்கு வாழ்த்துரைத்தாள்.
கயற்கொடி கொண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிகயல் விழி மங்கையொருத்திக்குக் காதலனாம் - அந்தக்
காதற்கிழத்தியுடன் ஒருநாள் கட்டிலறைக்காவியம் படித்தபோது ; அவள்
கடைவிழியோரம் வினாக்குறியைத் தொங்கவிட்டு,“கண்ணாளா! எனக்கோர் ஐயம் போக்கிடுக” என்றாள்.
“என்ன கண்ணே ; உனக்கு ஐயம் ? அதோ நீந்துகின்றஅன்னத்தின் தூவி போல் மென்மை உனக்கு
எப்படி வந்ததென்று என்னைக் கேட்கின்றாயா ?-அல்லதுவண்டுகள் கொண்டு வந்து கொட்டாமலே உன் வாயிதழில்
மொண்டு குடிக்கின்றேனே தேன் ; அதுவந்தவிதம் தெரிந்து கொள்ள விரும்புகின்றாயா ?
செந்தாமரையைப் பார்த்துச் செய்யப்பட்டது உன் முகமா ? அல்லதுசெவ்வமே! உன் முகம் பார்த்துத் தான் செந்தாமரை உருவானதோஎன்ற அய்யமா ?
செண்டு இரண்டும் தாங்காமல்-குளத்தில்கெண்டைக்குப் போட்ட தூண்டிலில் நெளிகின்ற புழுப் போல
நெளியும் இடை நிலைக்குமா ? அல்லதுஒளியுமிழும் உன் தந்தத் தொடைகள் அதனைத் தாக்கிநிறுத்துமா ?
உன் மனத்தில்விளைந்த ஐயமெல்லாம் இதுதானே ?” எனக் கேட்டவழுதியின்முன் ;
வளைந்த கதிர்போல தலை நாணிக் கொண்டு அவள் ;“என் மீது கவிதையெழுதிப் பரிசு பெறக் கேள்வி எழுப்பவில்லைநான்!
“எயில்” என்றால் இன்பத் தமிழில் பொருள் என்ன சொல்லுங்கள்”என்றாள்!
“அட, மட மயிலே! இது தெரியாதா ? அயலார் படை தடுக்க ;அரண் கட்டுகின்றோமே தலைநகரைச் சுற்றி -அதற்குப் பெயர்தான் “எயில்” என்றான் மன்னன்!
“எனக்கும் தெரியும் அது; ஆனாலும் ஒன்று!எவராலும் உடைக்க முடியாத “எயில்” ஒன்று இருக்கிறதாம் ;அதனை
இவராலும் நெருங்கவொண்ணாது என ஒரு வேந்தன்,இறுமாப்பு துள்ளப் பேசுவதை அறிவீரோ ?” எனக் கேட்டு
“இவராலும்” என்ற போது; வழுதியைச்சுட்டிக்காட்டிக் கட்டிக் கொண்டாள்!
“காதுவழி எனக்கும் எட்டியது அச்செய்திகானப் பேர் எனும் நகரில் கட்டியதாம் அந்த அரண்!-நமது
அவைப் புலவர் அய்யூர் மூலங்கிழார் அது குறித்துஅரியதோர் வண்ணனையே செய்துள்ளார்!
அதை நான் உனக்குச் சொல்லுகின்றேன் கேள் ;ஆண்டுகளின் வரிசையில் அதற்கு முதலிடமே பொருந்தும்!
நிலத்தின் ஆழத்தையும் கடந்த நெடியதோர் அகழியும்,நீலவானை நிமிர்ந்து தொடுகின்ற நிலையில் உயர்மதிலும்,அவ்வானில்
நிறைந்து கிடக்கும் விண்மீன்கள் போன்றுவிரைந்து செயலாற்றும் ஏவறை உச்சியும்,
கதிரவனின் ஒளிபுகவும் இடமின்றி மரம் செறிந்த காவற்காடும்,கணக்கிலாச் சிறுசிறு துணை அரண்களும் சூழ்ந்ததே
களிறுகள் ஆயிரம் முட்டினும் அசைந்திடாத கானப்பேர் எயில்!அதனை நம் புலவர் ;
கவித் தமிழால் கூறக் கேட்டு நான் பல முறையும்களிப்புற்றிருக்கின்றேன்” என்றான் மன்னன்!
முற்றுகையிட்டு எதிர்ப்பை மீறி அரணைச்சுற்றியுள்ள அகழியில் இறங்கி விட்டால்
மதில் மேலிருந்து கவண் கற்கள் அம்புமழை பொழியும்-அதனையும் கடந்து விட்டால் ;
காய்ச்சிய எண்ணெய் ஈயக் குழம்புகடகடவெனக் கீழ் நோக்கி வரும்!
எல்லாவற்றையும் சமாளித்து அரண் உச்சிஏறும்போது ஏணிகளை நொறுக்கி விடுவர்.
எறிய பிறகும் உலோகப் பறவை இயந்திர அலகுகளால்உச்சந்தலை குத்தப்படும்-
அவையனைத்துக்கும் தப்பித்தான்அரணுக்கு அடுத்த பக்கம் கோட்டைக்குள் இறங்கவேண்டும்.
‘பாண்டியர்க்கு நெடுந்தூரம் இருக்கின்ற பகையெல்லாம்தெரிகிறது ;கூண்டிலிட்ட புலி போல எதிரிகளைக் கொண்டு வருகின்றீர் ;ஆயினும்
பக்கத்தில் கானப்பேர் எனும் நகரில் அரண் அமைத்துபடை கொண்டு எவராலும் நெருங்க முடியாதென்று
உடைவாளை ஓங்கிக் கொண்டுஊர் அதிர ஒலிக்கின்றான், வேங்கை மார்பன்!
நமது வீரத்தை மறைமுகமாய்ப் பழித்த பின்னும்நமக்கென்ன என்றிருத்தல் நாணத்தகும் செயலன்றோ ?-என் இதய
ஆழத்தின் அடியிற் கிடந்த பல நாள்அய்யத்தை இன்றுமுற்றுப் போட்டுவிட்டேன் ; மதங் கொண்ட
வேழத்தைக் கூட எதிர்த்து மத்தகத்தைப் பிளந்தெறியும்மன்னருக்கு ;வேங்கைமார்பன் கட்டியுள்ள மதில் சுவரென்ன ; விந்திய மலைத்தொடரா ? அவன்
தோண்டியுள்ள அகழியோர் ஆழக் கடலாயினும் ; என்பாண்டியர்க்குத் தாண்டும் தொலைவு தானே!
பின் எதற்காகஅறைகூவல் விடுகின்ற வேங்கை மார்பன்ஆணவங் கண்டும் அடங்கிக் கிடக்க வேண்டும் ?
அரசர் இந்த அய்யத்தைப் போக்கிடுக- அதன் பிறகுசாசனமிடலாம்” என ஊடினாள்!- பாண்டியனோ,
எட்டிச் செல்ல முயன்றவளைக்கட்டியணைத்துக் கால்பின்னி நெய்தவாறு,
“காலை மலரட்டும் கானப் பேர் எயில் நோக்கிக்காலாட் களிறு புரவியுடன் தேர்ப்படை புறப்படக்
கட்டளையிடுகிறேன் ; கவலையை விடு! இப்போது துடிக்கின்றகையினை எடு” என்றான்- எடுத்துவிட்டாள்!
கண்ணிமைக்கும் பொழுதுக்குள் ஊடல் மறந்து-கதிர் விரியும் நேரம் வரை கூடல் தொடர்ந்தது!
மறுநாள்வாக்குறுதி தந்தவாறு பாண்டிமாதேவியின்நோக்கு நிறைவேறக் கிளம்பியது படை வரிசை!
கானப்பேர் எயில் என்னும் காவல்நிறை அரணை மோதி,கடுமைப் போர் நடத்திப் பின்னர் முற்றுகையை முடித்துவிட்டான்.
உக்கிரப் பெருவழுதியின் உறுதிமிகு தாக்குதலால்உருக்குலைந்து போயிற்று வேங்கை மார்பன் கோட்டைக் காவல்!
நெற்றித் திலகமிட்டு வழியனுப்பி வைத்த அரசிக்கு,வெற்றிச் சேதி சொல்வதற்குப் பாண்டி மன்னன் திரும்பி வந்தான்.
குத்துண்டு புண்பட்ட கோவேந்தன் மார்பகத்தில்ஒத்தடங்கள் ஒவ்வொன்றிக் கொடுத்திட்டாள் ; உடல் மேட்டால்!
ரத்தம் கசிந்திருக்கும் விழுப்புண்கள் எல்லாம்- அவள்முத்தங்கள் பெற்று முழுமையாக ஆறினவே!
★ ★ ★
சில நாள் சென்றுஅய்யூர் மூலங்கிழார் பாண்டியன் அவைக்கு வந்தார்.
அரசே! மதியாத பகைவரெல்லாம் உமை மதித்துப் புகழ்கின்றபெருமை என்னே!களம் சென்றால் வெற்றியன்றி வேறொன்று அறியாத வேந்தே!இன்று முதல் உம்மை ;
“கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி” எனகாவியங்கள் பாடட்டும்! கவியரங்கம் புகழட்டும்!
கதிர் உள்ளளவும் அப்பெயரே நிலைக்கட்டும்”எனப் புகன்றார்.
“நன்றி புலவரே!” எனப் பணிந்த வேந்தன் ; அவரைப் பார்த்துஇப்போரில்குன்றிவிட்ட வேங்கை மார்பன், கோபக் கனல் உமிழ
கானப்பேர் எயிலை மீட்பதற்கு மீண்டும்களம் அமைக்கப் போகின்றானா ? எனக் கேட்டான்.
அதற்கு அய்யூர் மூலங்கிழார் சொன்ன பதில்அரியதோர் உவமையினை அன்னைத்தமிழுக்கு வழங்கியது!
அஃதென்ன ?
உலைத் தீயில் கொல்லன் காய்ச்சிடும் இரும்பில்ஒரு துளி நீர் பட்டால் அந்நீரை மீட்டிடல் முடியுமா ?(அவ்வாறே)
உக்கிரப் பெருவழுதி வென்று விட்ட கானப்பேர் எயிலும்உலைக்களத்து இரும்பு உறிஞ்சிய நீர்த்துளியாய் ஆனது என்று
உமது பெருமையைப் பேசி- வேங்கை மார்பன்உளம் நொந்து நிற்கின்றான் என்றார்!- அந்தத்
தங்கப் புலவர் தந்த உவமை அழகுக்குத்தக்க பரிசு என்ன தருவதென்று புரியாமல்
தவித்திருப்பான் பாண்டியன் என்கின்றேன் நான் ;தவறுண்டா என் கருத்தில் ?
தமிழின் சுவை அறிந்தோரே! கூறிடுவீர்!