கவிதை 43 / 58
திராவிட இனத்தின் தமிழர் மரபு!
The Tamil Tradition of the Dravidian Race!
பகல் நேரக் கதிரொளியாய்ப்பரந்து விரிந்து வெளிச்சம் தந்த
பழந்தமிழ்ச் சோழர்களாம்பாண்டியர் பல்லவர் சேரர்களாம்
பயன்விளைக்கும் ஏர் முனையாய்ப்பகை சாய்க்கும் வாள் முனையாய்ப்
பாரினிலே புகழ் எய்திப் பின்னர்தேரினிலே அச்சாணி கழன்றாற் போல்
தேயமெங்கும் ஒற்றுமை கட்டுக்குலைந்துதேய்ந்திடும் நிலவின் கோட்டுப் பிறைகளாகி
குடுமிகளாக்க குறுநில மன்னராட்சிகளும் - அவைகுருவித் தலைப் பனங்காய் எனும் காட்சிகளும் -
செங்கோல் மட்டுமே உடைமையாய்க் கொண்டசிற்றரசர்கள் செய்யப்பட்ட ‘மாட்சி’(?)களும் -
இப்படிப் பல பிரிவுடனே களப்பிரர், கள்ளவரும் கலந்து,மூவேந்தர் முத்தரையர் கூட்டும் சேர்ந்து,
முரண்பட்ட சூழ்நிலைகள் முட்டியும் மோதியும் -முடிவாகப் பகை, படை, போர், அழிவு எனச் சிதைந்து,
“நேற்றிருந்தார் இன்றில்லை என்பது போல் - எம்மோடுவிற்றிருந்தார் எங்கு போனார்?” என்று வினவிடும் நிலையில்,
வேற்படை, வாட்படை, வேழப்படை, புரவிப் படையிருப்பினும்வேலைகள் அவற்றுக்குள்ளவற்றை வீர்பால் ஒப்படைத்துவிட்டு ;
வியர்வை நீக்கிடவும் - அயர்வைப் போக்கிடவும் - ஓய்வு கொண்டுஉல்லாசம் அனுபவிக்க ஓடிவிடும் ‘உத்தம’ தலைவர்களைவிடுத்து ;
யுத்த களத்தில் போராட உத்தி வகுத்துச்செயல்பட்டவர்களால் பெருவெற்றி கிட்டியது -
பெயருக்கு அரசராக இல்லாமல் - அவர்கள்பேரரசர்களாகவே விளங்கினர் -
வீரமும் வெற்றியும் கடையில் விற்றிடும் பொருள் என்றும்அதைப் பெறுவதற்குக் கூடக் கடவுள் அருள் தேவை என்றும்,
எண்ணுவோர், லட்சியத்தில் திண்ணியராய் இல்லாத காரணத்தால்கண்ணியம், கடமை, கட்டுப்பாடு கெட்டுப் போய் - அந்தக்
கெடு நிலைக்கான காரணங்கள் அனைத்தையும் போக்கிடநெடுநாள் காத்திராமல் பெருந்திறன் காட்டியதால்
இடைக்காலமென அறுநூறு ஆண்டுக் காலம் ;எடைக்கேற்ப தாராசுத் தட்டு மேலும் கீழும்
மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும்ஏறியும் இறங்குவதும் போல
தோன்றிய பல்லவ அரசில் துளிர்த்துப்பாண்டிய அரசில் செழித்த - இந்தத்
தமிழகத்தின் மறு மலர்ச்சி, மீண்டும்சங்க காலப் பெருமை பெற புத்துருக்கொண்ட சரித்திரத்தை ;
இங்கிருந்து தொடங்கிடுவோம்.இருண்டிருந்த சோழக் கிழக்குச்
சங்கின் வெண்மை வானில் பரவும் ; நம்வரலாறு, அந்த வான் மேவி ஒளிரும்!
★ ★ ★
அன்றந்தக் காலம் ஆலமரம் போல் தழைத்திருந்தமூவேந்தர் ஆட்சி ; முடிவிழந்த நிலை கி.பி. 350இல் ஆரம்பம்.
களப்பிரர் ஆட்சி சோழ நாட்டில் கி.பி. 575 வரையில்! அவர்க்குக்கட்டுண்டே கிடந்தனர் பாண்டியரும் சேரரும்.
பல்லவர் பரிபாலனம் கி.பி. 875 வரை எனப் பதிவு செய்தால்ஆறு நூற்றாண்டுகள் அடர்த்தியான இருண்டகாலமாகும்;சோழர்க்கு!
அந்த நிலையைத் தான் இன்றைய முகப்புரையாகஅகமிக நொந்து வடித்துள்ளேன்.
பாண்டியர் சோழர் பல்லவர் சேரர் ; தென்னகம்ஆண்டிருந்த ஒளி மிகு யுகத்தை இடையிலிழந்து,
அதன் பிறகே கி.பி. 850இல் உறையூர் அரச கட்டிலில்அமர்ந்திடும் வாய்ப்பு விஜயாலய சோழனுக்குக் கிட்டியதாம்!
அவன் முதலில் தனது முன்னோரைத் தொடர்ந்து பல்லவர்க்குநண்பனாகஅடங்கியே நடந்தான் எனப் பழைய வரலாறு கூறும்!
பாண்டியன் வரகுணன் என்பான் பல்லவர் மீது போர்தொடுத்தபோது,பல்லவன் அபராஜிதன் பக்கம் விஜயாலயன் நின்றான் - அதற்கு
வெகுமதியாக முத்தரையர் வசமிருந்த தஞ்சையை வென்று ;அதனைவிஜயாலயன் பெற்றுக் கொண்டு ; வெற்றியைப் பல்லவர்க்குத்தந்தான்.
பிற்காலச் சோழப் பேரரசைப் பிரசவித்த பெருமை;பொற்காலம் படைத்த சோழனாம் ஆதித்தனுக்கும் உண்டாம் -
விஜயாலயனின் வீரப் புதல்வன் ஆதித்த சோழன்விண்ணும் மண்ணும் அதிர நடந்த திருப்புறம்பியப் போரில் - தன்
திறமனைத்தும் காட்டி வெற்றி கண்டதைத் திசையெட்டும்புகழ்ந்தது.புறங்காட்ட வைத்தான் பின்னர் அபராஜிதனை என்றும் ; அவனது
தொண்டை மண்டலத்தையும் தோற்கடித்துத் தன்னைத்தொழுதிட வைத்தான் என்றும் வரலாறு புலம்பும்!
அரசியலில் தன்னலம் தலைதூக்குங்கால்அன்புக்கும் நட்புக்கும் நன்றி உணர்வுக்கும் ;
இடமளித்தல் “இராஜதந்திரம்” ஆகாது (?) என்பதற்கு ;இதோ “ஆலங்காட்டுப் பட்டயம்” பகருவதைப் பார்ப்போம்!
பாண்டியரை எதிர்க்கப் பல்லவ அபராஜிதனுடன்பக்கத் துணையிருந்து ; தஞ்சையையும் தனதாக்கிக் கொண்டு ; பின்னர்
பல்லவனையே தோற்கடித்து ஆதித்தன் தொண்டை நாட்டைப்பறித்துக் கொண்டான் என்பதோடு ;
கன்னியாகுமரிக் கல்வெட்டொன்று கண்ணீருடன் கூறுவது ;யாதெனில்,
“ஆனை மீதமர்ந்து போரிட்ட அபராஜித வர்மன் மீது
ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து கொன்று போட்டுக்கோதண்டராமன் எனும் பெயர் பெற்றான்” என்பதாகும்!
பல்லவர் மரபு, பாண்டியர், சோழர் மரபு என்றெல்லாம்சொல்லுபவர்க்குப் பதில் விளக்கமாக ஒரு செய்தி ;
கல்வெட்டொன்றின் சாட்சியாக ; ஆதித்த சோழன் மனைவி“பல்லவர் மரபில் வந்த பாவை” யெனும் போது ; திராவிடஇனத்தின்
எல்லா மரபும் தமிழ் மரபு தான் எனும் தெளிவு - வரலாற்றுவல்லார் உள்ளத்தில் தோன்றல் தேவை அல்லவா ?