கவிதை 23 / 58
பெண்ணியத்தின் திண்மை கூறும் குண்டலகேசி!
Kundalakesi, Who Speaks the Strength of Feminism!
வணிகப் பெருவேந்தன் கோவலன் ; அவன் காதல் துணைவிவாய்மை நிறை நடனவல்லி மாதவி ; வாழ்வின் திருவிளக்கென
வாய்த்ததிரு கண்ணகியாம் பெண்ணரசு ; இம்மூவரின்வழித் தோன்றலாய் வந்துதித்த, வற்றாப் புகழ்
மொழிக்குல மங்கை நல்லாள் ; மன்பதையில் எவர்பழிப்புக்கும் இடம் தாராத பற்றற்ற துறவி மணிமேகலை -
இவர்களை இணைத்து ஒலிக்கும் சிலம்பும் மேகலையும்,இணையென ஒளிரும் சீவக சிந்தாமணியும்,
அருந்தமிழ் இலக்கியப் பனுவல் வளையாபதியும்,ஆணாதிக்கம் வீழ்த்திய ஆரணங்கு பற்றிய குண்டலகேசியும்,
சமணம், பெளத்தம், சைவம், வைணவமென்று - பெருஞ்சமர்கள் விளைந்த நிலையில் சங்கம் கண்ட புலவர்களும்
சகல கலை புணர் சான்றோர் ஆன்றோர்களும்சமத்துவம் போற்றிடக் காலம் தேவைப்பட்டதெனினும்
அதற்குள் ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டைஅந்தோ ; தமிழ் நிலம் இழந்தது விந்தையே!
‘வளையாபதி’ வளைந்தது எங்ஙனம் ?‘குண்டலகேசி’யின் வடிவு குலைந்தது எவ்விதம் ?
காலமெனும் கரையான தின்றதோ ; தமிழரின்கவனக் குறைவுதான் காரணமாய் நின்றதோ ?
அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் ;அடியேன் அயராது தேடித் திரிந்து -
அதன் பின்னர் அகப்பட்டது கிழிந்த ஏடொன்று - அதில்அரண்மனை குருநாதரின் ஆசை மகன் ஒருவன்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் அனைத்தும்கலையாக வாழ்வில் கொண்டு காலங் கழித்தவனைச்
சிறை பிடித்துக் காவலில் வைப்பதற்குக் கை கால்விலங்கிட்டு வீதியிலே இழுத்துச் சென்ற போது, கண்டாள் ;
குன்றிரண்டை மார்பில் சுமந்த மங்கைகுண்டலகேசி யெனும் குணவதி ‘பத்திரை’ யென்பாள்.
அவளை ; அவர் தந்தை அமைச்சர் பெருமான்அமுதம் என்றே அழைப்பார் அன்பு பொழிந்திட !
அந்த அமுதம், விஷத்தின் மீது விருப்பம் கொண்ட கதையாக ;விலங்கொடு சென்ற விலங்கின் அழகில் வீழ்ந்து தொலைத்தது.
தந்தையாம் அமைச்சரின் தாளைப் பணிந்து - அவர்தயவு பெற்று அரசனின் தண்டனையைத் தவிர்க்கச் செய்து ;
பாம்பின் பளபளப்பில் மனம் பறி கொடுத்த பத்திரை - அவன்பள்ளியறைப் பாவையாகி அள்ளிச் சுவைத்தார் ; இருவருமேஇன்பரச பானத்தை!
கட்டிலறை ஊடலில் ஒருநாள் கட்டித் தழுவியிருந்தவள் ;“கள்வன் தானே நீ!” என்று கடுமொழியல்ல ; காதல் மொழி தான்பேசினாள்.கருங்கோபம் கொண்டவன் அதனைக் காட்டிக் கொள்ளாமல் -அவளின்கனதனங்கள் அழுந்த அணைத்துக் கொண்டு ;
அன்பே வா ; அருகில் உள்ள மலையுச்சி கண்டு வரலாமென்றான்அழைத்தவுடன் அவளும் ஒட்டிக் கொண்டாள் ;
சிறகுத்துப் பறவை யிரண்டும்சிகரத்தை எட்டியவுடன் -
“சீ! சீ! நீ என்னைக் கள்வன் என இகழ்ந்தாய், அதனால் ;சிகரத்திலிருந்து தள்ளப் போகிறேன் - சிதறப் போகிறாய்”என்றான்.
சில நொடிகளிலே உண்மை புரிந்து கொண்ட அந்தசீதளப் பூ மாலை உள்ளத்தினாள் ;
வஞ்சகத்தை, சூழ்ச்சிதனை வாள் கொண்டல்ல ;வஞ்சகத்தாலேதான் வீழ்த்த வேண்டுமென -
“ஆருயிரே! அருமருந்தே! என் ஆவியினை நீஅகற்று முன்னர் ; கொழுநனைத் தொழுதெழ
கொஞ்ச நேரம் கொடு” எனக் கேட்டாள் -கொடுத்தான் அந்தக் கொள்ளைக்காரன் - குணக்கேடன்!
பற்றுக் கொண்டவள், பக்தி கொண்டவள், பதியின் மீது - எனும்பாசாங்கு நாடகத்தைத் திறமையுடன் நடித்துக் காட்டி
பாதி சுற்றி முடிந்தவுடன் ; அந்தப்பாவியின் ஆவி போக்கிடத் திட்டமிட்டு
மறு பாதி சுற்றுக்கு அவன் காத்திருந்த போது ;மலைப்பாறை உச்சியிலிருந்து தள்ளிவிட, அந்த
மாபாவி மடிந்து போனான் -மமதை கொண்ட ஆணாதிக்கத்திற்குப்
பெண்ணியத்தின் திண்மை சொன்னகுண்டலகேசி இலக்கியம் இன்றில்லை எனினும் ;
இலக்கணமாய் எஞ்சி இருக்கின்றாள் ;இந்தக் குண்டலகேசி - இவள்,
புத்தமதக் கொள்கையினைப் பரப்பஎத்தனையோ வாதங்களில் வென்று
பின்னர் ;முற்றுப் பெற்றாள் வாழ்க்கையிலே அன்று!