கவிதை 38 / 58

நன்றியுடையோர் நெஞ்சில் வாழ்வோன்!

He Who Lives in the Hearts of the Grateful!

X
“சோழநிலா” முத்தொளி பொழிந்து புகழ் பரப்பி ; பின்னர்பாடும் பல்குழுக்கள் பகை பெருகி ஒற்றுமை குலைந்து ;
தாழும் நிலை தோன்றி “இருள் நிலை”யை எதிர்கொள்வதற்கு முன்புஆளும் பொறுப்பேற்றுப் புகழ் பெற்றோர் இருவர் உண்டு!
அவ்விருவர் ஆட்சிக்குப் பின்னர் முறையாக ஒப்பிடுவதற்கு ;எவரொருவர் மாட்சியும் இல்லாத காரணத்தால்,
கோலேந்திக் குடிமக்கள் காத்திட்ட கோப்பெருஞ்சோழர்க்கிணையாக ;வேலேந்தி வீரப் போர் பல புரிந்த வேந்தன் கிள்ளிவளவன் பற்றிக்கூற - எழுது
கோலேந்துவதில் இன்பம் காணுகிறேன் ; துன்பத்தை நெஞ்சில்சுமந்தவாறு!குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனக் குறிப்பிடுவது ;
சோணையும், பாண்டியனையும் ஒரு சேர எதிர்த்துச் சென்று ;வீரனாக செரு முனையில் விழுப்புண் பெற்ற கிள்ளிவளவன் -
வீழ்ந்த இடத்தின் பெயரே ‘குளமுற்றம்’ என்பதாகும் - சோழவரலாற்றில்குளமுற்றத்தான், கோப்பெருஞ்சோழன் இருவர்க்கும் பிறகு ;
இருண்ட காலமாய் உருண்டது இடையில் அய்நூறுஆண்டுகளாம் ;இதற்குப் பிறகே பிற்காலச் சோழர்கள் வருகின்றார் வரலாற்றில்!
இங்கே இப்போது கிள்ளியாம் குளமுற்றத்துத் துஞ்சியவனைஇலக்கியத்தில் “வாழும் வரலாறாக” நிலைத்தவனைச்சந்திப்போம்.
★ ★ ★
புறநானூறுக் கருவூலத்தில் இவன் பெருமைகளைப் பாடுகின்றபுகழ்க் கவிதை பல உண்டு! பாடிய புலவர்களும் பலராவர்!
‘பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகளுக்கும்பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும்
பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்புஉண்டெனினும்பார் முழுதும் தலைகீழாய்த் திசை மாறிக் கவிழ்ந்தாலும்
பாதகாரம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வுபாழ்பட்டே நாசமாகு’ மென்று - அவன்பால்
பரிசு பெற்ற ஆலத்தூர்கிழார் எனும் பாவாணர்பரிவுடனே நன்றி கூறி நல்வாழ்த்துச் சொன்னார்.
கருவூரைக் கிள்ளி மன்னன் முற்றுகையிட்ட போது,‘காவல் மரங்கள் சாய்கின்ற ஒலி கேட்டு ;
அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டு அஞ்சி நடுங்கும்ஆண்மையற்ற கோழையினை வெற்றி கொளல்பெருமையாமோ ?” என
கிள்ளிவளவன் முன் சென்று அந்த ஆலத்தூர்கிழார்அள்ளிப் பொழிந்த அறிவுரைப் பாடல் கேட்டு
துள்ளி வந்த படையுடனே திரும்பிச் சென்றான் -கொள்ளி மீது வீழ்ந்த பூழு மீண்டது போல் மீண்டான் கருவூர்மன்னன்!
‘காலனும் காலம் பார்ப்பான், உயிர் கொண்டு செல்ல ;- சோழர் குலக்காவலனே! நீயோ ; களத்தில் பகைவர் உயிரை
நினைத்தவுடன் ஒரு கணத்தில் போக்குகிறாய்!” - என்றுவினை முடிக்கும் அவன் வீரத்தை வியந்துரைக்கும்கோவூர்க்கிழார் ;
‘விறகு வெட்டச் சென்றவற்குக் காட்டில் பொன்கிடைத்தாற்போல்வேந்தன் கிள்ளியிடம் வந்தோர்க்கு பரிசு கிட்டும் என்றுகூறுகின்றார்.
‘தாய்ப்புலி, தன் குட்டிதனைக் காப்பது போல்தமிழ்க் குலம் காக்கின்ற வேந்தன் நீதான்!
கரும்பிடைத் தேனும் கடைமடை வாளை மீனும்,கன்னியர் பறித்து வரும் செங்கழுநீர்ப் பூவும்,
கழனியில் உழுவோர் கண்டெடுத்த ஆமையும்காவிரியின் நீர்ப் பெருக்கால்
திரும்பிய பக்கமெலாம் நெல்மணியும்திகழ்சோழ வளநாட்டை ஆளுகின்ற கோவே!” என்று
இடைக்காடனார் எனும் புலவர் ;ஏற்றிப் புகழுகின்றார் ; கிள்ளிவளவனையே!
“வெயிலுக்கு மறைக்கின்ற குடையல்ல ; வேந்தே - உந்தன் குடை;அது,வேதனையை விரட்டி நல்லாட்சி தருகின்ற வெண்கொற்றக்குடையாகும்
வெள்ளப் பாழ் வறட்சியினால் பாதிக்கப்பட்டாலும்உள்ளம் தளராமல் உழைக்கின்றார் வேளாண் குடியினர்
போர்முனையில் உன் வீரர் தீட்டுகின்ற வெற்றியெல்லாம்ஏர்முனையின் துணையின்றி நடவாது என்பதாலே ;
மழவர் குலம் வாழ வைக்கஉழவர் குலம் போற்றி வாழ்க!” என்று
வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர்வேந்தனுக்கு அறிவுரையும் வாழ்த்தும் சொன்னார்!
“இயற்கையின் சீற்றத்தால் இவ்வுலகே அழிய நேரிடினும்எதற்கு நாம் அஞ்ச வேண்டும் கிள்ளிமன்னன் இருக்கையிலே”என்று
எண்ணற்ற புகழ் முத்துக் கவியாரம் தொடுத்தார்;எருக்காட்டூர்ப் புலவர் தாயங்கண்ணனார்!.... அவர்
தஞ்சைக் குளிக்கரைக்கு அருகில் வாழ்ந்ததமிழ்ப் புலவரேறு எனக் கூறிடுவர் ஆய்வாளர்!
★ ★ ★
சிறுகுடி யெனும் சோழ நாட்டுச் சிற்றூரில்தருநிழல் போல ஒரு நண்பன் உண்டு கிள்ளிக்கு! அப்
பெருங்குடிக் கிழவன் பண்ணன் நிலத்தில்அறுவடையாகும் நெல்மணி யாவும் வறியோர்க்கு
அளித்தனன் நன்கொடையாக என அறிந்து கிள்ளி ஆங்குசென்றான்.அவனுக்குப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று பட்டமும் ஈந்தான்!
‘வான் போலக் கொடை வழங்கும் பண்ணனே - நீயான் வாழும் நாளும் சேர்த்து வாழியவே!’ என்று
புறப்பாடல் ஒன்றெழுதி அவன் கையில் கொடுத்துப்புறப்பட்டான்; தலைநகராம் உறையூரை நோக்கி!
மாற்றார் எப்படை கொண்டு வரினும்; இவனிடம்தோற்றார் என்றே வீர வரலாற்றைத் தீட்டிய வளவன்;
ஆவின் பாலொத்த அருள் வடிவும் முகத்தழகன்,காவின் பிடிதனிலே ஒரு நாள் சாய்ந்து விட்டான்செருக்களத்தில்
செய்தி கேட்டு செவிப்பறை கிழிந்தது போல்செந்தமிழ்ப் புலவர் கூட்டம் சிந்தியது கண்ணீர் அருவி!
‘இறந்தோரைப் புதைப்பதற்குத் தாழிதனைச் செய்வதிலேசிறந்தோரைக் கேட்கின்றேன்; எம்மன்னன்
கிள்ளியினை வைத்துப் புதைக்கின்ற தாழி யெனில்கீழ்த்திசை மேற்றிசை வானத்தை வளைத்து வைத்து
நிலவுலக முழுவதையும் குயவர் ஆழியாக அமைத்திடநிமிர்ந்து நிற்கும் மேருமலையை குழைத்தன்றோ தாழி செய்தல்வேண்டும்!
பூத உடல் புதைப்பதெனில் பொருந்தும் உம் தாழி - கிள்ளியின்புகழ் உடலை வைப்பதற்கு இந்தப் பூதலமே ஏற்ற தாழி’ - என்று
சோகமுடன் ஐயூர் முடவனார் இரங்கற்பா எழுதும்போதும்சோழனது கீர்த்திக்கு எல்லையில்லை என்று கண்டார்!

மூலமும் சான்றும்