கவிதை 16 / 58

சுளையில் ஒன்றியிருக்கும் சுவையாக!

As a Flavour United Within the Segment!

X
தரணியின் வரலாறு எழுத முன்வருவோர் யாராயினும்,தற்காலத் தேவையான தாளே இல்லாமல் எழுதலாம் ;
தரமான ஓலையில்லாமல் எழுதலாம் ; விஞ்ஞானத்திறம் காட்டும் கணினியின் தயவில்லாமல் எழுதலாம் –
ஆனால் ;தமிழகம் பற்றிய குறிப்பின்றி எழுத இயலுமா எனில் ;தலை நிமிர்த்தி அறைகூவல் விடுத்திடலாம் –
எழுதலாம் ; எழுதினால் அது –முழுமையாக இருக்காது, முறையாகத்தானிருக்கும்!
‘உரோமாபுரிப் பாண்டியன்’ எனத் தொடர ஓவியமாகஒரு வரலாற்றுப் புதினம் எழுதும் வாய்ப்புப் பெற்றேன் – அதனை
வெளியிட்டுப் பயன்மிக்க உரை வழங்கியவர்வீரத் தமிழ்ப் பேராசான்விழியின் ஒளி போன்றார் – விரிவான் அனையர்மொழிஞாயிறு தேவநேயப் பாவாணராவார்.
தகுதியெல்லாம் பெற்ற நீதியரசர்தக்கோர் போற்றும் நேர்மையாளர்அன்பு கமழ் அனந்த நாராயணன்அற்புத உரையாற்றி அகமகிழ்ந்தார்.
நூலின் முதற்படி பெற்றுக் கொண்டுபாவில் தேன் கலந்த பாராட்டு வழங்கியவர் –தோளில் கை போட்டுப் பழகிய தோழர் – தமிழர்க்குத்தொகை தொகையாய்க் கவிதை தந்த கண்ணதாசன்.
அந்நூலில் அறிமுக உரையெனும் பகுதியில்அடியேன் அளித்திருக்கும் ஆதாரங்கள் ;
இன்றைக்கு இந்தக் ‘காலப் பேழை’யில் என்றல்ல –என்னைக்கும் வரலாற்றுக் கணக்கில் வரவு வைக்க வேண்டியதே!
அன்று நான் எழுதி வெளிவந்தஅந்த நூலுக்கான அறிமுக உரையை ;
அப்போதிருந்த வடிவத்திலேயேஇப்போது தருகின்றேன் –
“உரோமாபுரியின் முதலாவது மன்னர் மன்னனாக மணிமகுடம் அணிந்து கொண்டான் ஆக்டேவியஸ்! “மகிமைபொருந்திய மகாவீரன்” என்ற வீர வாசகத்தின் சுருக்கமானபெயராக “அகஸ்டஸ்” என்ற பட்டத்தை உரோமாபுரிப்பாராளுமன்றம் ஆக்டேவியசுக்குப் பூரிப்போடு சூட்டி மகிழ்ந்தது.
அந்தக் காலத்திலேதான் நமது பழம் பெரும் தமிழகத்தின்முப்பேரரசுகளின் கொடி நிழலில் கொற்றம் தழைத்துக்கொண்டிருந்தது எனவும், சோழ மண்டலத்தில் திருமாவளவன்இரண்டாம் கரிகாற் பெருவளத்தான் ஆண்டு கொண்டிருந்தான்எனவும் வரலாற்றுப் பெரியவர்கள் வரையறுத்துள்ளார்கள். இந்தக்கரிகாலனின் காலம் கி.மு. 60 முதல், கி.மு. 10 வரை என்பதாகத்தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுகின்றனர்.
உரோமாபுரியிலே கோலோச்சிய அகஸ்டஸ் சீசரின்பால்பாண்டிய மன்னன் தனது தூதுவரை அனுப்பியிருந்தான் என்றும்,அது கி. மு. 20 என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அங்ஙனமாயின் அந்தத் தூதுவரை உரோமாபுரி அகஸ்டஸ்மன்னனிடம் அனுப்பி வைத்த பாண்டிய அரசன் யார்?
கரிகாலச் சோழனைப் பற்றிய புறப்பாட்டு ஒன்றைப் பாடியகாவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர்,அந்தப் பாட்டில் பாண்டிய மன்னன் ஒருவனையும் இணைத்துப்பாடியிருக்கிறார். அந்த மன்னனின் பெயர் பெருவழுதி.
“நீ அறந்தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனோ தமிழ்குலங்கும் மதுரையில் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்!நீ, தண்புனல் காவிரிக்கு உரியவன் ; இவனோ போரின்கண்மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியில் ஏறு போன்றவன் ; பொதிகைமலைச் சந்தனமும் திரை கடல் முத்தும் மும்முரசமும்கொண்டவன். நீவிர் இரு பெருந் தெய்வங்கள் ஒருங்குநின்றாற்போல் காட்சி தருகின்றீர்! இன்றுபோல் என்றும்நிலைத்திடுக நமது நட்பு! வென்று வென்று போர்க்களத்தில்மேம்படுக உமது வேல்! புலி, கயல் பொறித்து, உம் வெற்றியைப்பிற நாட்டுக் குன்றுகளில் செதுக்கிடுவீராக!”
புறம் ஐம்பத்தெட்டாவது பாடலில் இந்த அழகியகருத்தினைத் தந்து காரிக்கண்ணனார், சோழன் கரிகாலனையும்,பாண்டியன் பெருவழுதியையும் ஒரு சேர் வாழ்த்துகிறார்.
இதனைக் கொண்டு கரிகாலன் காலத்துப் பாண்டியன்,பெருவழுதியென்று முடிவு கட்டுகிறோம். கரிகாலன் காலமோகி.மு. 60 முதல் கி.மு. 10 வரையில்.
அந்தக் காலத்திலேதான் உரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர்ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறான். அதாவது கி.மு. 39முதல் கி.பி. 14 வரையில்.
இந்தக் காலக் கணக்கை ஆராய்வதிலிருந்து அகஸ்டஸ்சீசருடன் நட்புறவு கொண்டு தூதுவரை அனுப்பி வைத்தபாண்டியன் பெருவழுதியாகத் தான் இருக்க முடியும் என்றமுடிவுக்கே நாம் வர வேண்டியவர்களாகிறோம்.
கிரேக்கரையும், உரோமானியரையும் யவனர்கள் என்றபெயரால் அழைத்து, அந்த யவனர்களைத் தங்கள் அரண்மனைகளில் காவல் வீரர்களாக வைத்திருந்தனர் தமிழ் மன்னர்கள்என்பதற்கு இலக்கியங்கள் சாட்சி கூறுகின்றன. “கடிமதில்வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்” என்ற சிலப்பதிகாரப்பாட்டு தக்க எடுத்துக்காட்டாகும்.
நக்கீரனார் பாடிய ஐம்பத்தாறாவது புறப்பாட்டில் “யவனர்,நன் கலம் தந்த தண்கமழ் தேறல்” எனக் காணும் வரி, யவனர்கள்
தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர்என்பதை உணர்த்துவதாகும்.
தென்னகத்திலிருந்து ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டஉணவுப் பொருள்களில் மிக முக்கியமானது மிளகு. அலாரிக்என்பவன் ஒரு காலத்தில் ரோமை வெற்றி கண்டபோது, நஷ்டஈட்டுத் தொகையில் மூவாயிரம் பவுண்டு தமிழ்நாட்டு மிளகும்தரவேண்டுமென்று உடன்படிக்கை செய்து கொண்டானாம்.
பாண்டிய நாட்டுக் கொற்கைப் பெருந்துறைக்கு அருகில்முத்துக்களும், சங்குகளும் மிக அதிகமாகக் கிடைத்து,அவைகள் உலகில் எல்லாப் பகுதியினராலும் பாராட்டும் பெற்றன.
கொற்கை முத்துக்கு“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்கொற்கையும் பெருந்துறை முத்து”
என்ற அகப்பாட்டு அழகுற விளக்குகிறது.
முத்தும், நுண்ணிய பருத்தி ஆடைகளும், எலி மயிராலும்பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளும், உரோமாபுரி போன்றநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து குதிரைகளும் மதுவகைகளும், கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்துறையில் வந்து இறங்கிய வண்ணமிருந்தன.
அழகான கப்பல்களில் தங்கத்தை ஏற்றிக் கொண்டுயவனர்கள் வருவார்களாம். பிறகு மிளகை ஏற்றிக் கொண்டுதிரும்புவார்களாம். முசிறித் துறை முழுவதும் அந்தக் கப்பல்களின்பேரொலி கேட்கும் என்று சங்க இலக்கியங்கள் பெருமைபேசுகின்றன.
புகார் துறைமுகத்தில் எல்லா நாடுகளைச் சேர்ந்தவணிகர்களும், மாலுமிகளும் வந்திறங்குவார்கள்; அவர்கள்எல்லாரும் ஒரே இனத்தவர் போல ஒற்றுமையாகப் பழகிவாழ்வார்கள் என்று தமிழிலக்கியம் கூறுகிறது. யவனர்கள் பலர்தமிழ் மன்னர்களின் மெய்க் காப்பாளர்களாகவும் இருந்திருக்கின்றனர்என்ற செய்தியொன்றே இரு சாராரிடையிருந்தநல்லெண்ணத்தை விளக்கும் கண்ணாடியாகும்.
இத்தகைய தொடர்புகளை இன்று மெய்ப்பித்துக் காட்டுவதுபோலப் புதுவை மாநகருக்குப் பக்கத்தில் “அரிக்கமேடு”என்னுமிடத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உரோமானியருக்குரியபலவகைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்திலே குவியல் குவியலாக ரோமர்நாணயங்கள் கிடைப்பதற்கு என்ன காரணம் என்றுஆராய்ந்தார்கள். கிழக்குக் கடற்கரையிலிருந்து உரோமாபுரிக்குமேற்கு கடற்கரை வழியாகப் பொருள்களை அனுப்பவேண்டுமானால் ஒன்று கன்னியாகுமரியைச் சுற்றிக் கொண்டுபோகவேண்டும் அல்லது கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத்தொடர்ச்சி மலையும் சந்தித்து வழி விட்டிருக்கும் குறுக்குப்பாதைவழியாகத்தான் செல்ல வேண்டும். இன்று அதிக அளவில் அந்தப்பகுதியில் காணப்படும் நாணயக் குவியல்களுக்கு அதையும் ஒருகாரணம் காட்டுவோரும் உளர்.
ரோம் நாட்டுத் தங்க நாணயங்கள் இந்தியா, பாகிஸ்தான்உட்பட்ட அறுபத்தெட்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தஅறுபத்தெட்டு இடங்களில் ஐம்பத்தேழு இடங்கள் விந்தியத்திற்குத் தெற்கே இருக்கின்றன என்பதைக் கேட்கும் போதுரோமுக்கும், தென்னகத்திற்கும் இருந்து வந்த பழைய தொடர்பைஎண்ணி எண்ணிப் பெரு மூச்செறிகிறோம் நாம்.
அந்தப் பெருமூச்சுத் தான் இன்னும் அடங்காமல்இந்தக் காலப் பேழையிலும் வெளிப்படுதல் காண்கின்றீர்.
அகழ்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றஅந்தக் கால வரலாற்றுச் சுவடுகள்,
இகழ்ந்து தள்ளுதற்குரியவைகளாய்இருட்டடிப்பு செய்வோர்க்குத் தெரியலாம் - அவை
புகழ்ந்து போற்றுதற்குரியவை மட்டுமல்ல;மகிழ்ந்து உலகமன்றில் கொலு வீற்றிட வேண்டியவை.
தவழ்ந்து தவழ்ந்து தட்டுத் தடுமாறிதாழ்வாரத்தில் தத்தித் தவித்திடும்
தமிழக வரலாறு எனும் குழந்தையைதாய்த் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும்,
காலம் வந்தால்தான் கணக்குச் சரியாகும்;பாலம் அமையும்; பல்வேறு தேசிய இனங்களுக்கிடையே!
‘உலக வரலாறு’ எனும் இனிய கனியின்உள்ளிருக்கும் சுவைகளில் ஒன்றாயிருப்பது, இந்திய வரலாறு;
அந்தச் சுவையில் சுவையாக ஒன்றியிருப்பது;இந்தத் தமிழக வரலாறு!

மூலமும் சான்றும்