பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 26 · 26 / 26

அத்தியாயம் 26

Chapter 26

மூல ஸ்கேன் 186–193

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

26

கண்ணைக் கசக்கியவாறு வீட்டுக்கு வந்த பொன்மணியைப் பார்த்துப் பூஞ்சோலை திடுக்கிட்டாள். ஐந்தாறு நாட்களாகவே அவள் வாட்டமாயிருப்பதைப் பூஞ்சோலை அறிந்திருந்தும் எதுவுமே அவளிடம் கேட்காமலிருந்துவிட்டாள். சந்தைக்குப்போன பெண் அழுதுகொண்டு வருவதற்குக் காரணம் எதுவாகயிருக்கும் என அறிவதிலே பூஞ்சோலைக்கு ஆவல் அதிகமாயிற்று.

"என்னம்மா இது; வருத்தமா வாரே? ஏன்—சந்தையிலே என்ன நடந்தது?"

பூஞ்சோலையின் கேள்விக்குப் பொன்மணியால் பதில் கூற இயலவில்லை. மெளனமாக இருந்தாள். அவளையும் மீறிக் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டிருந்தன.

"ஏன்? வழியில் பானைகளை உடைத்துவிட்டாயா? போனால் போகிறதே—அதற்காக அழுது என்ன பிரயோஜனம்?"

பூஞ்சோலை, அவளே ஒரு காரணத்தைக் கண்டு பிடித்துத் தேறுதலும் கூறினாள். அதுவல்ல காரணம் என்பதுபோல் பொன்மணி, பானை விற்ற காசுகளைத் தாயாரின் கையில் கொடுத்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்.

"சொல்லம்மா விஷயத்தை! என்ன நடந்துச்சு?"

"இன்னும் என்னம்மா நடக்க வேண்டும்? எல்லோரும் சேர்ந்து என் தலையில் கல்லைப் போடப் போகிறீர்களே!"

தாயாரைக் கட்டிக்கொண்டு செருமிச் செருமி அழத் தொடங்கினாள். பூஞ்சோலையின் கண்களும் கலங்கின. அவளால் மகளை எப்படி சமாதானப்படுத்த முடியும்?

"ஏம்மா—ரெண்டு பேரும் போட்டி போடுறாங்க! ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் உன்னை அன்பா வச்சுத்தான் குடித்தனம் நடத்தப் போறாங்க! இதுக்கு ஏன் கவலைப்படணும்?"

"இருவரையுமே எனக்குப் பிடிக்கவில்லையம்மா. அவர்களில் யாரோடு சேர்ந்து வாழ்க்கை நடத்தவும் நான் தயாராயில்லை வெற்றி பெற்றவன், வேண்டுமானால் என் பிணத்துக்குத்தான் தாலி கட்டவேண்டும்!"

"இது என்னம்மா சங்கடம்? இடி விழுந்து கிடக்கிற என் மனசிலே ஏதேதோ சொல்லி இன்னும் கலக்கத்தை அதிகப்படுத்துறியே கண்ணு! உனக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு இஷ்டம்? அதைத்தான் சொல்லேன்!"

"என் இஷ்டத்தைத் தெரிவித்தால் அப்படியே நடத்தி விடுவீர்களா?"

"உன் ஆசையைத்தான் சொல்லேன்!"

"நம் ஊருக்கு வந்திருக்கிறாரே ஆசிரியர்—அவரும் நானும் திருமணம் செய்து கொள்வதாகத் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறோம் அம்மா!"

இதைக் கூறிவிட்டுப் பூஞ்சோலையின் காலடிகளில் விழுந்து அழ ஆரம்பித்தாள் பொன்மணி.

"அய்யோ! அப்படியா என் தங்கமே! இந்த வம்புக்கு நான் என்ன செய்வேன்? அந்த அறவாழி அருமையான பையன் தான். உன் அழகுக்கு ஏற்றவன்தான். ஆனால் அந்தப் பிள்ளையாண்டானுக்கும் உனக்கும் கல்யாணம் செய்ய ஊர் ஒத்துக்கொள்ளாதே! ஊரார் தீர்மானத்துக்கு விரோதமாக நடந்தால் நம்மை அனாதைக் குடும்பமா ஒதுக்கி விடுவார்களே பொன்மணி!"

பூஞ்சோலை கதறினாள். பொன்மணி விம்மினாள். மகளின் மன வாட்டத்தைப் போக்க மார்க்க மறியாது தவித்தாள் அன்னை! அன்னையின் வேதனையை அதிகப்படுத்துகிறோமே யென்று தனக்குத் தானே நொந்து கொண்டு சுருண்டு கிடந்தாள் மகள்.

அப்போது சுருளிமலை வேகமாக உள்ளே நுழைந்தான். அவன் நடவடிக்கையில் அது வரையில் என்றுமே காணப்படாத சுறுசுறுப்பு அவனிடம் காணப்பட்டது. பேச்சிலும் விறுவிறுப்பு இருந்தது.

"ஏனம்மா கவலைப்படுறீங்க? உங்க கவலையும் அக்கா கவலையும் தீர ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன்" என்றான். இருவரும் அவனைப் பரபரப்பாகப் பார்த்தார்கள்.

"போட்டியில் இப்போது கலந்து கொள்கிறவர்கள் ரெண்டு பேர் அல்ல—மூணு பேர்!" என்றான்.

"மூன்றாவது ஆள் யார்?"

"அதுதான் அறவாழி!"

"யார் அவரா?"—பொன்மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது, அவ்வளவு முரட்டுக் காளையை அடக்குவதற்கு அவரால்முடியுமா என்ற பீதி அவளைத் திகிலடையச் செய்தது.

"நீ ஏனக்கா வருத்தப்படுறே? நீ அறவாழியையே கல்யாணம் பண்ணிக்கலாம்; அவ்வளவுதானே!" என்று கூறிவிட்டுச் சுருளிமலை வீட்டைவிட்டு வெளியேறினான்.

சுருளிமலை தந்த தகவல் பொன்மணிக்கு மிக அதிர்ச்சியாகி விட்டது. சாப்பாடுகூடத் தேவையில்லை யென்று கூறிவிட்டு பட்டினியாகவே தரையில் படுத்து கண்கள் களைத்துப் போகும் வரையில் அழுது தீர்த்தாள்.

பைத்தியக்கார மகன் மூலம் அறவாழி பொன்மணி சிநேகிதத்தைக் கேள்விப்பட்ட பஞ்சாயத்துக்காரரும் அதிக ஆத்திரமடைந்தார். அருகே யிருந்த கண்ணனும் இந்த ஆத்திரத்தை அதிகப்படுத்தினான். அறவாழியை எப்படியாவது தொலைத்துவிடத்தான் வேண்டுமென்று கங்கணம் கட்டிய அவர்கள் காதில், அறவாழியும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான் என்ற செய்தி எட்டியது.

"தொலைந்தான் பயல்!" என்றான் கண்ணன்.

பஞ்சாயத்தார் பரமசிவம், சிங்காரத்தையும் கண்ணனையும் சமாதானப்படுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகி, இப்போது இருவரையுமே மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் காட்சியைக் காணுகிற நெருக்கடிக்கு ஆளாகி சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தார். அந்த சங்கடத்தை சற்றுத் துடைப்பதுபோல் அறவாழி போட்டியில் கலந்து கொள்வது அவருக்கு சந்தோஷத்தை அளித்தது. ஏனெனில் அறவாழியின் கொள்கைகள் அவருக்கு உடன்பாடானவை அல்ல. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் மன எரிச்சல் அதிகமாகி விட்டது. கோயில் காளை சிவா, எப்படியும் அறவாழியைப் பதம் பார்த்துப் பாடம் கற்பித்து விடும் என்று அவர் நம்பினார். போட்டி நாளும் எல்லோருடைய ஆவலையும் தூண்டிக்கொண்டே நெருங்கிவிட்டது.

அன்றுதான் கடைசி ஞாயிற்றுக்கிழமை! சிற்றூரில் மாரியம்மன் கோயில் திடலில் ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள். உள்ளூர் வெளியூர் மக்கள் கட்டு சாதமூட்டை<!-- verified source join: scan 189→190 --> களுடன் திடலில் முகாமிட்டனர். பஞ்சாயத்தார் பரமசிவமும் வேறுசில முக்கிய பிரமுகர்களும் பிரதான இடத்தில் அமர்ந்து போட்டியைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

போட்டி தொடங்குவதற்குமுன் ஒரு சிறு ஐயப்பாடு எழுந்தது. மூவருமே காளையை அடக்கிவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அந்தக் கேள்வி! பைத்தியக்காரனாக இருந்தாலும் வேடிக்கையாக சிரஞ்சீவி கேட்ட கேள்வி அது! அது பெரும் பிரச்சினையாகி விட்டது. ஒவ்வொருவரும் காளையிடம் தனித் தனியே போரிடவேண்டும். மூவருமே காளையை அடக்கிவிட்டால், பிறகு மூவருக்குள்ளே வேறு ஒரு போட்டியை ஏற்படுத்தி அதில் ஜெயிப்பவர்களுக்குப் பொன்மணியைப் பரிசாகத் தருவது—என்று பேசி முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் காளையுடன் சுருளிமலை திடலுக்கு வந்து சேர்ந்தான். கண்ணன், சிங்காரம், அறவாழி மூவரும் ஒருவர்பின் ஒருவராகத் திடலுக்குள் நுழைந்தார்கள்.

கற்பூரத்தின் கண்கள், பெண்கள் கூட்டத்திலேயிருந்து திடலிலே கம்பீரமாக நிற்கும் கண்ணன்மீது பாய்ந்து அவனை சபித்துக் கொண்டிருந்தன.

முதலில் சிங்காரம் போட்டியில் குதிக்க வேண்டும் என்று குலுக்குச்சீட்டு விழுந்தது. சிங்காரம் போருக்குத் தயார் ஆனான். அவன் நெஞ்சு விம்மியது. கண்கள் அகலமாயின. சிறிது அதிகமாகவே அவன் அருந்தியிருந்த சாராய வாடை கூட்டத்தினர் மூக்கைத் துளைத்தபடி யிருந்தது. போட்டியில் தனக்கே வெற்றி யென்று அவன் நம்பினான். அவன் இதயத்திலே பேச்சொலி எழுந்தது.

"பொன்மணியை அடைவதற்காக இந்தப் போட்டி இல்லை! இல்லவே இல்லை! போட்டியில் பரிசாகக் கிடைக்கும் அவளை என் தங்கையாக பாவிப்பேன். அவளை அடையவேண்டியவன் அறவாழி. முதலில் எனக்கு வெற்றி! அடுத்தது கண்ணனது தோல்வி! மூன்றாவதாக அறவாழியைப் போட்டியில் குதிக்காமல்<!-- verified source join: scan 190→191 --> தடுப்பேன்! பொன்மணியை அவன் கையில் கொடுப்பேன். எனக்கு வேண்டியதெல்லாம் என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதுதான். அந்தக் கண்ணனுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதை ஊர்வலம் விடுவதுதான்! என் தந்தையை அவமானப் படுகுழியிலே தள்ளிய குடும்பத்தைப் பழிவாங்கிக் கொள்ள சரியான நேரம் வந்துவிட்டது! கண்ணனுடைய அப்பன் என் தாயின் கற்போடு விளையாட முயன்றானாம். அதைத் தடுத்து என் தாயைக் காப்பாற்ற முயன்ற தந்தையைச் செருப்பினால் அடித்தானாம். இந்தச் செய்தியைக் கூறிவிட்டல்லவா என் தந்தை உயிர் துறந்தார்! "உன்னை மட்டுமல்லடா—உன் மகனே—என் மகன் செருப்பால் அடிப்பான். உன் பேரனே என் பேரன் செருப்பால் அடிப்பான்!" என்று சபதம் செய்தானும் அந்தச் சண்டாளன்! அய்யோ; அவன் என் கையில் சிக்கவில்லை. இப்போது அவன் மகன்தான் சிக்கினான்!"

சிங்காரம், கண்களில் கனல் பறக்கத் தோளைத் தட்டிக் கொண்டு காளையிடம் நெருங்கினான். வேக வேகமாகப் பொன்மணியும் அங்கு வந்து சேர்ந்தாள். அவளது மேனி நடுங்கிக் கொண்டிருந்தது. காளையைச் சுருளிமலை அவிழ்த்து விட்டான். அதன் முதுகிலே ஒரு தட்டு தட்டிவிட்டான். சிங்காரமும் காளையும் நெடுநேரம் போரிட்டார்கள். புழுதி பறந்தது திடலில். சிங்காரத்தின் உடம்பெல்லாம் காயம்! வெற்றி அவனுக்கா—அல்லது காளைக்கா—என்பதை யாருமே நிர்ணயிக்க முடியாமல் தவித்தனர். சிங்காரத்தின் உடல் வலிமைச் சிறிது சிறிதாகக் குறைந்தது. அதற்கு மாறாக உள்ளத்தின் வலிமை அதிகமாயிற்று. எப்படியும் ஜெயித்தே தீரவேண்டுமென்று காளையின்மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். காளை மிக லாவகமாக ஒதுங்கி தன் அழுத்தமான கொம்புகளால் அவன் தொடையைக் கிழித்து அவனைக் கீழே சாய்த்து விட்டது!

சிங்காரத்தினால் எழ முடியவில்லை. மண்ணில் குப்புறவீழ்ந்தான். சுருளிமலை ஓடிப்போய்க் காளையைப் பிடித்துக்கொண்டான். சிங்காரத்தை வைத்தியர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு சிகிச்சைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

"சிவாவுக்கு சிறிது நேரம் ஓய்வு வேண்டும்!" என்று கூறி சுருளிமலை காளையை ஓட்டிக் கொண்டு போனான்.

பிறகு பதினைந்து நிமிடம்கழித்துக் காளையுடன் சுருளிமலை திடலுக்கு வந்தான்.

இப்போது கண்ணன், போருக்குத் தயாராக நின்றான். சீட்டு அவன்பேருக்கு விழுந்தது. கண்ணனின் முதல் பாய்ச்சல் மிக முரட்டுப் பாய்ச்சலாக அமையவே, காளை சற்றுமிரண்டு கீழே விழுந்தது. ஆயினும் உடனே எழுந்து கண்ணன்மீது பாய்ந்தது. போட்டியைக் கண்ணுற்ற அனைவரும் வெற்றி கண்ணனுக்கே எனமுடிவு கட்டினார்கள். கற்பூரத்தின் நெஞ்சு நெருப்பாகியது. தீச்சட்டி சிங்காரத்தைவிட கண்ணன் வெகு தீவிரமாகக் காளையுடன் போரிட்டான்.

போரின் போக்கு கண்ட அறவாழி, பொன்மணி நின்ற பக்கம் திரும்பினான். அவள் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ சிந்தையை அலையவிட்டுக் கொண்டிருந்தாள்.

அக்காளையும் அறவாழியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்ற சுருளிமலை அக்காளிடம் சென்று, "அக்கா! கவலைப்படாதே! கண்ணன் தோற்றுவிடுவான்!" என்றான்.

"அவன் தோற்றால் எனக்கென்ன? அறவாழி ஜெயிக்க வேண்டுமே!" என்று அவள் சொல்லவில்லை. நினைத்துக் கொண்டாள்.

அதற்குள், கூட்டத்திலிருந்து பெருங்கூச்சல் கிளம்பியது. கோயில்காளை சிவாவின் காலடியிலே கண்ணன் ரத்தவெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தான் அவனது வயிற்றுப் புறத்தைக் காளையின் கொம்புகள் ருசி பார்த்துவிட்டன.

"உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை!" எனத்தைரியம்கூறி வைத்தியர்கள் அவனை அவசர அவசரமாகத் தூக்கிச்சென்றனர். அறவாழியை பொன்மணி பார்த்தாள். ஓடிவந்து அவன் காலிலே விழுந்து.

"என்னை மறந்துவிடுங்கள்—இந்தப் போட்டி உங்களுக்கு வேண்டாம்!" என்று கதறினாள்.

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்